ஆலயம் ஆகமம் சிற்பம்

ஆலயம் எவருடையது?
ஆலயம் கடிதங்கள் – 1
ஆலயம் கடிதங்கள் – 2
ஆலயம் கடிதங்கள் – 3 
ஆலயம் கடிதங்கள் – 4
ஆலயம் கடிதங்கள் – 5

அன்புள்ள ஜெ அவர்களுக்கு

ஆலயம் கடிதம் பதிவில் ஒரு பதில் எழுதியுள்ளீர்கள். ஆலயத்தில் வேறு கட்டுமானங்கள் அமைப்பது பற்றி

“சிற்ப சாஸ்திரப்படி ஆலயம் என்பது ஓரு மானுட உடல். க்ஷேத்ரபுருஷன். ஆலயத்தில் சிற்பவரைமுறையை மீறி கட்டிடங்கள் கட்டுவதும் கம்பி வேலி கட்டுவதும் மனித உடலில் கூடுதலாக கைகளையும் கால்களையும் வைத்து தைப்பது போல. ஆலயம் அழிகிறது. ஆகம- சிற்பசாஸ்திர நெறிகள் மீறப்படுவதனால் ஆலயம் என எதை நம்பிச் செல்கிறார்களோ அந்த நுண்ணமைப்பே அழிகிறது. அதை பக்தர்கள் பக்திக்காகச் செய்கிறார்கள் என்றால் அது கேலிக்கூத்து”.

கிறிஸ்தவ ஆலயங்களுக்கு இந்த சாஸ்திரநெறி உண்டா என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் சிறுமிகளாய் இருக்கும்போது இருந்த ஆலயத்தில் இப்பொழுது நிறைய மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். என்னுடைய பங்கு கோவில் வீரமாமுனிவர் கட்டியது. மேற்கூரை வளைவுகள் கொண்டது. பெரிய கூடம், ஆல்டர், இரண்டு பக்கமும் சிறகுகள் கொண்டது. அதை நாங்கள் ரெக்கைபக்கம் என்று சொல்வோம். ரொம்ப பிரமாண்டமாய் பயமுறுத்தாமல், ஒரு பெரிய வீடு போல் இருக்கும். சுற்றிலும் மரங்கள் இருப்பதால் குளிர்ச்சியாய் இருக்கும். எந்த புறம் இருந்து பேசினாலும் நன்றாய் எல்லாருக்கும் கேட்கும். முதலில் தரையில் மார்பில் கல் பதித்தார்கள். பிறகு சாதரணமாய் இருந்த அழகிய உருண்டைத் தூண்களில் எவர்சில்வர் தகடுகள் கொண்டு மூடினார்கள். இப்பொழுது பழையதாய் இல்லாமலும் புதிது என்று சொல்ல முடியாமலும் கேவலமாய் இருக்கிறது. முன்பிருந்த அந்த presence இப்பொழுது இல்லை.

கதீட்ரல் ஆலயமும் அதேபோல் மிகப் பழமையானது. இன்னும் அதில் உட்புற மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் இருக்கும். ரத்த சாட்சியாய் மரித்த புனிதர்களின் கொலைகள் ஓவியமாய் வரையப்பட்டிருக்கும். சிறுவயதில் அதைப் பார்க்க பயமாய் இருக்கும். ஆனால் அதைபோல் இப்பொழுது வரைய முடியாது என்பதினால் அதுவும் ஒரு கலைச்சின்னம் என தோன்றுகிறது. இயற்கை வண்ணச் சாயங்கள் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள். அந்தக் கோவிலின் அருகில் மிக மிக பிரமாண்டமாய் ஒரு பெரிய ஆலயம் எழுப்பி ஒரே நாளில் பழைய கோவிலை இடித்துவிட்டார்கள். ஒரு ஞாயிறு பூசை பார்த்தோம். அடுத்த ஞாயிறு பூசைக்குப் போகும்போது ஆலயம் இருந்த அறிகுறியே இல்லை. உண்மையிலேயே மிகுந்த வருத்தமாய் இருந்தது.

இப்பொழுது உள்ள ஆலயம் ரோம் பாணியில் அதே போல் டூம் வைத்துக் கட்டப்பட்டு இருக்கிறது. எல்லாமே கற்பனைக்கு எட்டாத அளவு பெரியது. தூண்கள், அலங்கார விளக்குகள், மிகப்பெரிய வாசல் கதவுகள், அழகிய விசிறி போன்ற படிக்கட்டுகள் எல்லாமே. பழைய ஓவியங்களின் சாயல்கள் கண்ணாடியில் நவீன முறையில் வரையப்பட்டு மிக உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும்.  மூன்று வரிசை பெஞ்ச் போடப்பட்டு இருக்கும். உட்கூரை மிகுந்த உயரமாய் இருப்பதால் சீலிங் பேன் போடமுடியாததில் இரண்டு ஓரங்களிலும் பெரிய மின்விசிறிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் யாருக்கும் காற்று வராது. தலை கீழாய் நின்று பார்க்கிறார்கள். சவுண்ட் சிஸ்டம் சரியாகவில்லை. ஆல்டரில் இருந்து பேசும்போது ஒரே எதிரொலியாய் இருக்கும். (பூசைக்குப் போகிற ஒவ்வொருவரிடமும் ஒரு ஸ்பீக்கர்தான் கொடுக்கவில்லை). எல்லா இடங்களிலும் ஸ்பீக்கர் வைத்துப் பார்த்துவிட்டார்கள். ஒன்றும் வேலைக்காகவில்லை.

சிறுவயதில் இருந்தே பழகிய மந்திரங்கள் என்பதால் அரை தூக்கத்தில் இருந்துகொண்டே பதில் சொல்லி விடுவோம். ஒரே ஆறுதல் காக்கைகளும், புறாக்களும் சுதந்திரமாய் உள்ளே பறந்து கொண்டிருக்கும். மிக உயர்ந்த உட்கூரை என்பதால் மனிதர் இருப்பதை சட்டை செய்யாமல் மேலே உயரத்தில் பறந்து விளையாடிக் கொண்டிருக்கும். பிரசங்க நேரத்தில் ஏறக்குறைய எல்லாரும் அதைதான் பார்த்துக்கொண்டு இருப்போம். அந்தப் பழைய ஆலயங்களில் இருந்த ஒரு சமாதானம், மன நிம்மதி இந்த பிரமாண்டத்தில் இல்லை. பழைய ஆலயத்தில் இருந்து எடுத்த கல்தூண்கள் தோட்டத்தில் நடப்பட்டு அதன் மேல் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். எனக்கு அந்தத் தூண் பக்கத்தில் நின்றுவிட்டு வந்தால்தான் கோவிலுக்குப் போன ஒரு திருப்தி இருக்கும். சாதரணமாய் கட்டப்பட்ட ஆலயத்திலேயே இப்படி சான்னித்தியம் கெட்டுப் போனால், மிகுந்த சிரத்தையுடன் சிற்பசாஸ்திர நெறிகள் மீறாமல் கட்டப்பட்ட ஆலயத்தில் நாம் செய்யும் அலங்கோலங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கும்?

நன்றி

டெய்ஸி பிரிஸ்பேன்

அன்புள்ள டெய்ஸி,

நான் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் மகத்தான கிறித்தவ தேவாலயங்களை தேடிச்ச்சென்று பார்த்திருக்கிறேன். ரோமாபுரியின் ஆலயங்கள் உட்பட, அவற்றின் சிற்ப அமைப்பின்மேல் பெரும் பித்து உண்டு.அவற்றை ஐரோப்பாவில் அவர்கள் பேணுவதிலுள்ள நேர்த்தியும் ஒழுங்கும் பிரமிப்பை ஊட்டுவது. அதைப்போல நம் பண்பாட்டு பெருமிதச் சின்னங்களும் பேணப்படும் நாளை எண்ணி ஏங்குவேன்.

தமிழகத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றால் அங்கே பக்தர்கள் சுற்றிவரும்பொருட்டு கட்டப்பட்ட கான்கிரீட்டால் ஆன வராந்தாக்கள், மஞ்சள் டிஸ்டெம்பர் கட்டிடங்கள் ஆகியவை கூசவைக்கும். கூட்டம் நெரிசல் கூச்சல் அழுக்கு ஆகியவை மனம் கோணச் செய்யும். அப்படியே தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் சென்றால் திகைக்கவைக்கும் அளவுக்கு தூய்மையையும் ஒழுங்கையும் அமைதியையும் காணமுடியும்.

அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முதன்மைக் காரணம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பது. ஆனால் சமீப காலமாக அங்கும் கூட்டம் பெருகிவருகிறது. அவர்களுக்காக பேராலயங்களை ஒட்டி தகரக்கூரையிட்ட மண்டபங்களை பிரம்மாண்டமாகக் கட்டுகிறார்கள். பழமையை அழித்து திருப்பணியும் செய்கிறார்கள். இவை கிறித்தவ ஆலயங்களின் சிற்ப ஒழுங்கையும் அழகையும் குலைக்கின்றன. அதைப் பற்றிய விழிப்புணர்வு கிறிஸ்தவர்களிடையே உருவாகவேண்டும்.

இந்து ஆலயங்கள் பற்றியே எனக்கு தெரியும். இந்து ஆலயங்கள் சிற்பநூல், ஆகமநூல் மரபின்படி கட்டப்பட்டவை. அவை இரண்டும் இணைத்து ஒற்றை சாஸ்திரமாக கருதப்படத்தக்கவை. ஒரு பொதுவாசகருக்கு, விளங்கும்படிச் சொல்லவேண்டுமென்றால் இப்படி விளக்குகிறேன். ஆலயத்தை ஒரு கவிதை என்றால் சிற்பநூல் என்பது இலக்கணம் போல. ஆகமம் என்பது அணிநூல் [அலங்கார சாஸ்திரம்] போல. எப்படி அமையவேண்டும் என சிற்பநூல் சொல்கிறது. ஏன் என்று ஆகமம் சொல்கிறது.

அவையிரண்டின்படி அமைந்த ஒரு கவிதையே ஆலயம். ஓர் உருவகம், ஒரு பெரும் படிமம் என்று கொள்ளுங்கள். அது கல்லால் கட்டப்பட்ட மாபெரும் குறியீடு. ஒரு கவிதையை அப்படியே சிற்பமாகச் செதுக்கியிருக்கிறார்கள் என்று கொள்ளுங்கள். கோயில் என்பது ஒற்றைச் சிற்பம். அதிலுள்ள பிராகாரங்கள், கருவறைகள், மண்டபங்கள், கோபுரங்கள் எல்லாம் சேர்ந்து ஒரே சிற்பம் அது. நாம் கண்ணால் பார்ப்பது கல்லால் ஆன ஒரு வடிவத்தை. அது குறிப்பால் நமது ஆழுள்ளத்துக்கு உணர்த்துவது அந்தக் கவிதையை. அக்கவிதை உணர்த்துவது அது முன்வைக்கும் பேசுபொருளை. ஆலயம் கண்ணால் கண்டு கருத்தால் உணர்ந்து நுண்ணுணர்வால் உள்வாங்கிக் கொள்ளவேண்டிய ஒரு தரிசனம்.

ஆகவே அது வெறும் கட்டிடம் அல்ல. வழிபாட்டிடம் அல்ல. அதை பக்தர்கள் தங்கள் வசதிக்காக மாற்றிக் கட்டக்கூடாது. அதன் ஒவ்வொரு பகுதியும் முறையான ஆகம-சிற்ப ஆலோசனைப்படியே பழுதுபார்க்கவோ விரிவாக்கம் செய்யவோ வேண்டும்.அதில் வேண்டிய வண்ணங்களைப் பூசக்கூடாது. ஏனென்றால் வண்ணங்களுக்கே தெளிவான பொருள் உண்டு. உதாரணமாக நீலம் சனீஸ்வரனின் நிறம். தமோகுணம். நீலத்தை எங்கே எப்படி பூசுவதென கணக்குகள் உண்டு. கல் ஆலயத்தின் தரையில் சலவைக்கல் பதிக்கக்கூடாது. சலவைக்கல் ஆலயத்திற்குள் எங்குமே அனுமதிக்கப்படுவது அல்ல. இப்படி பல நெறிகள் உள்ளன.

அவற்றை மீறும்போது சிற்ப ஒருமை அழிகிறது. ஆலயத்தின் நுண்பொருள் சிதைகிறது. ஆலயம் வெறும் கற்கட்டிடமாக மாறிவிடுகிறது. பக்தி என்கிறார்கள், இந்த அடிப்படை விஷயத்தைக் கூட புரிந்துகொள்ள மூர்க்கமாக மறுக்கிறார்கள். தங்கள் அதிகாரம், ஆதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது மட்டும் ஆகமமுறை பற்றிப் பேசுகிறார்கள். வழிபாடுகள் உட்பட அனைத்திலும் ஆகமங்களை தள்ளிவிடுகிறார்கள்

ஜெ

ஆலயம் அமைத்தல்

முந்தைய கட்டுரைஐந்து நெருப்பு
அடுத்த கட்டுரைகேரள கம்யூனிசமும் தலித்துக்களும்