ஆலயம் எவருடையது? கடிதங்கள்-4

ஆலயம் எவருடையது?

ஆலயம் கடிதங்கள் – 1

ஆலயம் கடிதங்கள் – 2

ஆலயம் கடிதங்கள் – 3

இனிய ஜெயம்,

ஆலயம் எவருடயது? பதிவைக் கண்டேன். உண்மையை சொல்லி விடுகிறேன், இந்த உரையாடல் எனக்குள் மெல்லிய பதற்றத்தையே அளிக்கிறது, ஏதோ நிகழக் கூடாத ஒன்று அருகணைந்து கொண்டிருப்பது போல.

இந்த கோரிக்கையை ‘எழுப்பியதில்’ பக்தர்களின் பங்கு என உண்மையிலேயே ஒன்று இருக்கிறதா என்ன?  ஒட்டு மொத்த பக்கதர்களின் மனநிலைக்கு வாய் என்று எழுவதல்ல ஜக்கி அல்லது அவரை போன்றவர்கள் குரல், ஜக்கி அல்லது அவர் போன்றவர்கள் தனது குரல் வழியே தமிழக பக்தர்களின் மனநிலையை வடிவமைக்க முயல்கிறார்கள் என்பதே உண்மை.

வாலி சுக்ரீவன் சிலைக்கும், ஆஞ்சநேயர் சிலைக்கும் பேதம் அறியாமல் வெண்ணெயடிக்கும் அப்பாவி பக்தர்கள் வசமா இந்த நிர்வாகம் கைமாறும்? இத்தகு பக்தர்கள் அப்பாவிகள் என்றே சொல்வேன். இந்தியப் பொது மனதில் இன்றளவும் முகிழாத சிவில் சென்ஸ் குறைபாடு அவர்களிடமும் உண்டு. ஆனால் ‘சரியான அமைப்பு’  வழியே அவர்களை பழக்கி எடுக்க முடியும்.

இன்று எந்தப் பேராலயத்திலும் கற்பூரம் எரிவதில்லை. பெரும்பாலான விசேஷ தினங்களில் எண்ணெய் விளக்குகள் ப்ரகாரத்தில் தனி இடம் கண்டு எரிந்து கொண்டிருக்கிறது. எல்லாம் கடந்த ஐந்து வருடத்தின் மாற்றம். இப்படி பலவற்றை சொல்லமுடியும். சிலைக்கு மேலே வாலி சுக்ரீவன் என்ற பதாகையும், அந்த சிற்பம் பேணப்பட வேண்டிய சொத்து என்பதை சொல்ல ஒரு காவலாளியும், கோவில் வெளி ப்ரகாரத்தில் பக்தர்கள் வெண்ணெயாடிக்க வசதியாக ஒரு தனித்த ஆஞ்சநேயர் கோயிலும் போதும், அதே ஐந்து வருடத்தில் இந்த சிவில் ஒபிடியன்ஸுக்குள் பக்தர்கள் வந்து விடுவார்கள்.

இப்படி கோயில் பண்பாட்டின்  ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு கோவிலிலும் ஓதுவார் பணி போல ‘சொல்லிக்கொடுக்க’ ஒருவர் இருந்தால் போதும், பெரும்பாலான பக்தர்களை மாற்றி விட முடியும். சிவ ராத்திரி அன்று கோவிலில் குழுமி நிற்பவர்களில் 50 சதம் யுவன் யுவதிகள். இவர்களால் சிவ ராத்திரியை கண்டடைய முடியும் என்றால் சிவ வடிவங்களையும் கண்டடைய முடியும். கடற்கரையில் ஆமைக்குஞ்சை காப்பாற்றும் இவர்களை நமது கலை மேன்மைகள் மீதான போதத்தை எழுப்பி இவற்றை பேணச் செய்ய துணைக்கோட முடியாதா என்ன?

தமிழகம் தழுவியதொரு செயல்திட்டமாக ஒவ்வொரு வீட்டிலும், குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதி அகரம் பதிப்பகம்  வெளியிட்ட கலை ரசனைக் கட்டுரைகள் நூலை கொண்டு சேர்த்து, அது போல ஒரு ஐந்து நூல்கள் கொண்டு ஒரு விரிவான அறிமுக உரையாடல்களை துவங்கினால், இப்படி பல ஒருங்கிணைந்த தொடர் செயல்பாடுகள் வழியே 10 வருடத்தில் கோவில் பண்பாடு நமது சொத்து எனும் போதத்தை இளம் மனங்களில் கொண்டு வந்து விட முடியும்.

விஷயம் இது சார்ந்தது அல்ல, அப்பாவி பக்தர்களை ‘அப்பாவிகளாகவே’ நீடிக்க வைத்து இந்த பக்தர்கள் வசம் கோவில் நிர்வாகம் வர வேண்டும் என்பதே இப்போது எழும் குரல் பின்னுள்ள நிலை. அப்படி வந்தால்? நிச்சயம் பல நல்லது நடக்கும். கூடவே,  எவன் பண பலமும், சாதி பலமும், அரசியல் பலமும் கொண்ட சுமடனோ, அவன் கையில் ஒவ்வொரு ஊரின் பிரதான கோயிலும் சென்று சேரும். வைகாசி திருவிழாவில் அந்த பிரதான ஆண்டான் சாதி முன்னிலை வகிக்கும். அடிமை சாதி எல்லாம் செருப்பு இல்லாமல் சொக்காயை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு ரத வீதியில் நடக்க வேண்டும் என்று நியதி உருவாகும்.

ஒரே ஒரு பேராலயம். உதாரணமாக நெல்லையப்பர் கோவில். ஒரே ஒரு வருடம் அதன் அனைத்து விழாக்களையும் நெல்லை சமுதாய சமண தொழிலதிபர்கள் வசம் கொடுத்துப் பாருங்களேன். இந்தியாவே திருப்பி பார்க்கும் வண்ணம் அத் திருவிழாக்களை பொலியச் செய்ய அவர்களால் இயலும். (அந்த ஆவல் கொண்ட எத்தனையோ சமண தொழில் அதிபர்கள் எல்லா ஊரிலும் உண்டு) . சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறேன். இதை நோக்கிய ஒரே ஒரு நகர்வு போதும் பிறகு பாருங்கள் நமது கோவில் பண்பாட்டு மீட்சிக்கான பேரிகைகளின் கூப்பாட்டை. உண்மையில் இந்த சாதி, மதம் சாராத அப்பாவி பக்தர்கள் எவருக்கும் எவர் கோவிலின் அடித்தளங்களில் ஒருவரோ அவருக்கு இந்த ‘கோவில் மீட்பு’  போன்ற எந்த விஷயங்களும் அர்த்தமாகாது. அவர்களின் சார்பாக என்று சொல்லி குளிர் காய எழுந்து வர போவது சாதி சுமடர்களும், ஆசாரவாத மூடர்களும்தான்.

மூன்றாவது மிக முக்கிய ஆபத்தான கண்ணி அரசியல். மேற்சொன்ன இரண்டும் கோவில் மேல் படியப்போகும் ஆக்சிஜனும் பெட்ரோலும் என்றால், அதில் வந்து விழப்போகும் தீ, அரசியல். எத்தனையோ வருங்கால அரசியல் சூழல்களை அடுத்த கட்ட சதுரங்க காய் நகர்த்தல்களை  போல திட்டமிட்டு உருவாக்கப்பட்டது நமது அரசியல் சாசனம். அத்தனை சதுரங்க நகர்விலும் இருக்கும் பிழை சாத்தியங்களை கண்டறிந்து அதிலேயே அடித்து அடித்து வந்து அமர்ந்துருப்பது இன்றைய மத்திய அரசு. கட்டுப்பாட்டுகளே இன்றி இப்படி ஒரு மைய அரசு அமைய இயலும் என்று மைய அரசியல் அமைப்பை விரும்பிய ஆசிரியர் அம்பேத்கார் யூகித்திருக்கவே மாட்டார்.

நிகழ்ந்த இந்த வரலாற்று பிழைக்கு மூல காரணம் ராம ஜென்ம பூமி. பிரச்சனையை பேசி பேசி பெரிதாக்கி வெறும் கால் நூற்றாண்டில் இன்று இந்தியாவை வலதுசாரி சர்வாதிகாரத்துக்குள் கொண்டு வந்து விட்டது அரசியல். தமிழ் நாட்டில் இப்படி ஒரு வெற்றிகரமான முன் மாதிரியை முயர்சித்து பார்க்க அருமையான களம் இந்த கோயில் மீட்பு எனும் விஷ விதை. 60 வருட திராவிட ஆட்சியில் அந்த ஆட்சியாளர்கள் வசம் சிக்கி சீரழிந்து விட்ட ‘நமது பண்பாட்டின்’ மைய்யமான கோயில்களை மீட்போம். இந்த கோஷமும் ராம ஜென்ம பூமி கோஷமும் வேறு வேறா என்ன?  இந்த உரையாடல் எங்கே துவங்கி எங்கே நகர்ந்தாலும் இறுதியில் அது வளர்ந்து இந்துத்துவ அரசியல் புற்றுக் கட்டியாகவே வெளிப்படும். இதுவே கண் முன் உள்ள நேற்றைய வரலாறு நமக்கு அளித்தது.

கோவில் பண்பாடு மருமலர்ச்சி காண வேண்டும் அதற்கு நிர்வாகம் கைமாற வேண்டும் என்றால், நம் முன் உள்ள எளிய கேள்வி, கோவில்கள் இப்போது உள்ள நிலையிலேயே அவைகளின் மீட்சிக்காக அதன் ஆர்வலர்கள் கூடி, கடந்த 10 ஆண்டுகளில் முயன்று பார்த்தவைகள் என்னென்ன?

பதில் மௌனம். நாம் எதையுமே முயன்று பார்க்கவில்லை என்பதே மெய். உதாரணமாக  ஜக்கி அவர்களின் குழுக்கள் ஊருக்கு ஊர் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் முக்கிய கோவிலில் ஒரு ஐந்து பேர் நாளொன்றுக்கு  மூன்று மணிநேரம் செலவிட்டால் போதும், குறைந்த பட்ச போதம் ஒன்றை பொது மனதில் கடந்த பத்து வருடத்தில் கொண்டு வந்திருக்க முடியும். எதையுமே செய்து பார்க்காமல், எல்லா சரிவுக்கும் அறநிலைய துறைதான் காரணம் அதிலிருந்து கோவில்களை ‘மீட்டால்தான்’ எதையாவது செய்ய முடியும் என்பது, அரசியல்வாதிகள் பேச்சு.

அடுத்த பத்து வருடத்துக்கு நடக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான், ஆக்கப்பூர்வமான நேர்நிலை  செயல்பாடுகள். அதுவண்றி கோயில் மீட்போம் கோஷம் வழியே (தமிழ்நாட்டில் நோய் பரவாதிருக்க இளம் தலைமுறை எப்படி சமுக இடைவெளியை கடைபிடிக்கிறதோ அப்படி) நெருங்கி வரும் எவரையும் விட்டு இளம் தலைமுறை விலகி நிற்க வேண்டியதே கோவில் பண்பாட்டின் மறுமலர்ச்சிக்கு செய்யக் கூடிய சிறந்த பங்களிப்பு.

கடலூர் சீனு

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

முந்தைய கட்டுரைவல்லினம் சிங்கைச் சிறப்பிதழ் 
அடுத்த கட்டுரைஆயிரம் ஊற்றுகள்