கேரள கம்யூனிசமும் தலித்துக்களும்

சிறுமையின் ஆதங்கங்கள்

இலக்கியம் இடதுசாரியினர் தலித்தியர்

அன்புள்ள ஜெ

நீண்ட விவாதம் என்றாலும் ஒரு கேள்வியையும் கேட்டுக்கொள்கிறேன். நீலம் அமைப்பு கேரள இடதுசாரி அரசில் தலித் பிரதிநிதித்துவம் குறைந்திருப்பதை ஒட்டி சொல்லிய கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதை ஒட்டி தோழர்கள் தலித் அரசியலையே திட்டித் தீர்த்தார்கள். நீலசங்கி என்னும் வார்த்தை இன்றைக்கு ஓரு வசைச்சொல்லாக ஆக்கப்பட்டு சுதந்திரமாகச் சிந்திக்கும் அத்தனை தலித் சிந்தனையாளர்கள் மீதும் சுமத்தப்படுகிறது. தலித் சிந்தனையாளர்களின் நேர்மையை, நம்பகத்தன்மையைச் சிதைப்பதற்கான திட்டமிட்ட முயற்சி என்றே நான் இதை கருதுகிறேன்

ஆர்.ராகவன்

அன்புள்ள ராகவன்,

இத்தகைய விவாதங்களில் கட்சிக்காரர்கள் நடந்துகொள்வது ஒருவகையில் நடைமுறைசார்ந்த நிதானத்துடன் உள்ளது. இணையத்தில் கூச்சலிடுபவர்கள் சமூக ஊடக மனநோயாளிகளே ஒழிய இடதுசாரிகள் அல்ல. கூடவே சந்தேகத்திற்கிடமான பின்னணியும் நோக்கங்களும் கொண்ட போலி இடதுசாரிகளும் கலந்துகொண்டு மிகையாக சேற்றைக் கலக்குகிறார்கள். அதற்குள் நுழைய விரும்பவில்லை.

இதன் நடைமுறை அரசியல் சூழலைப் பற்றி மட்டும் சொல்கிறேன். கேரளத்தில் 1956 முதல் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில், அல்லது ஆட்சிக்கான போராட்டத்தில் உள்ளது. முக்கால்நூற்றாண்டுக் கால அதிகார அரசியலில் இருக்கும் ஒரு கட்சி வெறும் இலட்சியவாதக் கூச்சல்களை போட்டுக்கொண்டிருக்காது. அதற்கு நடைமுறைத் திட்டங்கள் இருக்கும். அது சார்ந்த சமரசங்கள் இருக்கும்.

கேரளத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி இன்று ஒரு போராட்டக் கட்சி அல்ல. ஜனநாயகத்தில் அதிகாரத்தை கையாளும் ஒரு கட்சி. ஜனநாயக அரசு என்பது சமூகத்திலுள்ள பல்வேறு அதிகார விசைகளுக்கு நடுவே ஒரு சமரசப்புள்ளியாக அமைவதேயாகும். அத்தனை தரப்புகளுக்கும் அவற்றின் சமூக அதிகாரத்திற்கும் பொருளியல் அதிகாரத்திற்கும் ஏற்ப இடமளிக்கவும், அவற்றுக்கிடையேயான சமன்பாட்டை உருவாக்கவும் கட்சி முயன்றாகவேண்டும்.

எங்கும்போலவே கேரளத்திலும் சாதியே அரசியலைத் தீர்மானிக்கிறது. மதமும் சாதிபோலவே செயல்படுகிறது. கேரளத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியின் அடித்தளம் ஈழவர்களும் நாயர்களும்தான். ஈழவர்கள் பெரும்பாலும் அனைவருமே கம்யூனிஸ்டுக் கட்சியினர். எஸ்.என்.டி.பி. யோகம் என்னும் ஈழவ அமைப்பின் தலைமையில் மிகச்சிறுபான்மையினரான ஈழவர்கள் காங்கிரஸை ஆதரிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சிறுமுதலாளிகள்.

அதைப்போல நாயர்களில் நிலவுடைமையாளர்களான மிகச்சிலர் என்.எஸ்.எஸ் என்னும் நாயர் அமைப்பால் தொகுக்கப்பட்டு காங்கிரஸ் ஆதரவு நிலைபாடு எடுக்கிறார்கள். ஆனால் படித்த, வேலைபார்க்கிற நாயர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள். குறிப்பாக வடகேரள நாயர், நம்பியார்கள் முழுக்கமுழுக்க கம்யூனிஸ்டுகள். தெற்கேதான் நாயர்களிலேயே வலதுசாரி ஆதரவாளர்கள் உள்ளனர். இவர்கள் இன்று கொஞ்சம் பாரதிய ஜனதாப்பக்கம் சாய்வுகொண்டிருக்கிறார்கள்.

அங்கே தலித்துக்களின் எண்ணிக்கை குறைவு. பத்துசதவீதம்தான். அவர்கள் கேரளம் முழுக்கவே பரவியிருக்கிறார்கள். கேரள தலித்துக்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்துக்கள். இன்று அவர்கள் இருபிரிவாக பிரிந்துள்ளனர்.மையக் கேரளத்தைச் சார்ந்த தலித்துக்கள் காங்கிரஸையும் வடபகுதி தலித்துக்கள் கம்யூனிஸ்டுகளையும் ஆதரிக்கிறார்கள்.

இதிலுள்ள அரசியல் வெளிப்படையானது. ஈழவர்களுக்கும் தலித்துகளுக்கும்தான் பூசல் எப்போதும் உள்ளது, இங்கே வன்னியர்- தலித் பூசல்போல. ஆகவே ஈழவர்கள் அதிகமிருக்கும் இடங்களில் தலித்துக்கள் காங்கிரசை ஆதரிக்கிறார்கள். சமீபகாலமாக தலித் மக்களில் ஒருசாரார் இருதரப்பையும் விட்டு பாரதிய ஜனதா ஆதரவாளர்களாகவும் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

கேரளத்தில் காங்கிரஸின் வாக்கு அடித்தளமே கிறிஸ்தவர்கள்தான். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். முதல் கேரள கம்யூனிஸ்டு அரசுக்கு எதிராக விமோசன சமரம் என்ற பெயரில் ஒருங்கிணைந்த போராட்டத்தை கிறிஸ்தவ திருச்சபைகள் முன்னெடுத்த காலம் முதலே காங்கிரசின் தலைமை கிறிஸ்தவர்களின் கையில்தான். அடுத்தபடியாக இஸ்லாமிய வாக்கு. உயர்குடி நாயர்கள், ஈழவர்களின் ஓட்டு கொஞ்சம். இதுவே அங்குள்ள அரசியல்சமநிலை.

நெடுங்காலமாக ஈழவர்களே கம்யூனிச அரசின் அடித்தளம் என்றாலும் ஈழவர்கள் முதல்வர்களாக ஆனதில்லை. நாயரான ஈ.கே.நாயனார்தான் முதல்வராக நீடித்தார். அதற்கு அவருடைய ஆளுமை முதன்மைக் காரணம். கம்யூனிஸ்டுக்கட்சிக்கு கூடுதலான இடங்கள் கிடைப்பது நாயனாரின் வடகேரளத்தில் என்பது இன்னொரு காரணம். ஈழவரான கே.ஆர்.கௌரியம்மா முதல்வருக்கு இணையான பதவிகளில் அமர்வார்.அதுவே பங்கீடு.

ஆனால் இ.கே.நாயனார் இருக்கும் வரை கே.ஆர்.கௌரியம்மா முதல்வராக ஆக முடியவில்லை. அந்த கசப்பில் அவர் கட்சிமாறி காங்கிரஸ் பக்கம் சென்றார். ஈழவ ஓட்டை விரும்பிய காங்கிரஸ் அவரைச் சேர்ந்த்துக்கொண்டது. அது பயனும் அளித்தது.

நாயனாருக்குப் பின் ஈழவரான வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வரானார்.அது ஒரு விந்தையான அரசியல். ஈழவரான பிணராய் விஜயன் நாயனாரால் வளர்க்கப்பட்டவர். அச்சுதானந்தனுக்கு எதிராக நிறுத்தப்பட்டவர். அச்சுதானந்தன் முதல்வரானபோது கட்சியில் அவருக்கு எதிராக நின்ற பிணராய் விஜயன் நாயனார் தரப்பின் ஆதரவுடன் அசைக்கமுடியாத முதல்வரானார். இன்று அவருக்கு நாயர்களின் முழு ஆதரவு உள்ளது.

இந்த அதிகாரக் களத்தில் தலித்துகள் வகிக்கும் பங்கென அனேகமாக ஏதுமில்லை. அவர்கள் கேரளம் முழுக்க பரவியிருக்கிறார்கள். எந்த தொகுதியிலும் வெற்றிவாய்ப்பை அவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர்கள் தேர்தலில் வெல்லவேண்டும் என்றால் மற்றவர்களின் வாக்கு இன்றியமையாதது. தனித்தொகுதியாக இருந்தாலும்கூட.

ஜனநாயகத்தில் வாக்குபலம் மட்டுமே அளவுகோல் என்னும் நிலையில் தலித்துக்களுக்கு அதிகாரத்திற்காகப் பேரம்பேசும் இடமே இல்லை என்பதே உண்மை.ஆனால் கம்யூனிஸ்டுக் கட்சி கொள்கை அடிப்படையில் தலித்துக்களுக்கு எப்போதும் இடமளிக்கிறது. ஒப்புநோக்க அதேயளவு எண்ணிக்கை வல்லமை கொண்ட இந்து மீனவச் சாதியினரான தீவரர்களுக்கு அந்த இடம் அளிக்கப்படுவதில்லை.

கேரளத்தில் கம்யூனிஸ்டு ஆட்சி தலித்துக்களுக்கு இந்தியாவில் வேறெந்த பகுதியிலும் எந்த அரசும் செய்யாத பணிகளைச் செய்திருக்கிறது. நிலச்சீர்திருத்தம் உண்மையாகவே செய்யப்பட்டது. ஆகவே அனேகமாக எல்லா தலித்துக்களுமே குடியிருக்க இடம்பெற்றனர். இ.எம்.எஸ் மற்றும் கே.ஆர்.கௌரியம்மா அதற்கு பொறுப்பானவர்கள். சி.அச்சுத மேனனின் லட்சம் வீடு திட்டம் அவர்களுக்கு இல்லங்களை அளித்தது. அத்திட்டமே பின்னர் பல இடங்களில் நகலெடுக்கப்பட்டது.

தலித்துக்களின் பொதுவான பொருளியல்நிலைமை இந்தியாவிலேயே கேரளத்தில்தான் சிறப்பாக உள்ளது. முக்கியமாக அவர்கள் விவசாயக்கூலிகள் என்னும் நிலையில் இருந்து அனேகமாக முழுமையாகவே வெளியேறிவிட்டனர். அவர்களின் வாழ்க்கைத்தரமே அதனால் மாற்றமடைந்தது.அங்கே தலித்துக்கள் நடுவே மதமாற்றம் கிட்ட்டத்தட்ட இல்லாமலானதும் இதனால்தான்.

ஆனால் அதன் அடுத்த கட்டம் என்பது அதிகாரத்தில் பங்கு கோருவதே. இன்று தலித்துக்கள் வாகனம் ஓட்டிகள், அரசூழியர்கள் என பல பணிகளை ஆற்றுகிறார்கள். வைதிக இந்து ஆலயங்களிலேயே ஆலயப் பூசாரிகளாகவும் உள்ளனர். ஆனால் தொழில், வணிகத்துறையில் அவர்கள் கிறிஸ்தவர்கள் ஈழவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுடன் போட்டியிட்டு வரவேண்டுமென்றால் அதிகாரம் தேவை.ஆகவே அரசில் இடம்கோருகிறார்கள். அதை வாக்குவல்லமையால் வெல்லும் சூழலும் இல்லை. ஆகவே உள்ளிருந்து போராடுகிறார்கள். கட்சியின் கொள்கைசார்ந்த தார்மீகத்தை சீண்டி உரிமைகோருகிறார்கள்.

தலித்துக்கள்தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ள முயல்கிறார்கள். அதன்பொருட்டு அதிகாரத்தில் பங்கிற்காக பொதுக்குரல் எழுப்புகிறார்கள். அது ஒரு வகை போராட்டம். ஜனநாயகபூர்வமானது. இனி அவர்கள் தங்கள் வாக்குவல்லமையை வைத்து காங்கிரஸ், இடதுசாரிகள் இரு சாராரிடமும் பேரம் பேசலாம். அதுவே ஜனநாயகத்தில் இயல்பான வழி.அவர்கள் அதில் வென்றால் மேலும் இடம் பெறுவார்கள்.

கேரள தலித்துக்கள் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஒருங்கிணைய முயல்வதன் வெளிப்பாடு அக்குரல் என்று மட்டுமே நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது ஒடுக்குமுறைக்கு அல்லது புறக்கணிப்புக்கு எதிரானது அல்ல. அக்குரலை இங்கே உள்ள அதிகாரமே இல்லாத தலித்துக்கள் அங்கே கம்யூனிசத்தால் தலித்துக்கள் ஒடுக்கப்படுவதாக புரிந்துகொள்வதுதான் சிக்கல். அந்தக் குரல் மிகையுணர்ச்சி கொண்டது. அதைச் சுட்டிக்காட்டவேண்டியதே கம்யூனிஸ்டுகளின் பணி.

ஜெ

தலித் பூசகர்கள், மேலுமிரு கேள்விகள்
கேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள்
கேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்
கேரள தலித் அர்ச்சகர் நியமனம்
முந்தைய கட்டுரைஆலயம் ஆகமம் சிற்பம்
அடுத்த கட்டுரைமுகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு