ஆலயம் எவருடையது? கடிதங்கள்-6

ஆலயம் எவருடையது?

ஆலயம் கடிதங்கள் – 1

ஆலயம் கடிதங்கள் – 2

ஆலயம் கடிதங்கள் – 3

ஆலயம் கடிதங்கள் – 4

ஜெமோ,

திமுக அரசு வந்ததுமே அதற்கு சாமரம் வீச ஆரம்பித்துவிட்டீர்கள். நீங்கள் எடுத்துக் கொடுக்க அவர்கள் அதை வைத்து மேலே செல்வார்கள். இதற்கெல்லாம் உங்களுக்கு என்னென்ன அளிக்கப்படும் என்று எங்களுக்கும் தெரியும்.

இந்த கட்டுரையில் பாமரர்கள் மேல் இருக்கும் காழ்ப்புதான் இருக்கிறது. கோயிலைப் பயன்படுத்த சாமானியர்களுக்கு தெரியாது, ஆகவே அவர்களை உள்ளே விடக்கூடாது, கோயிலை பணமுள்ளவர்கள் மட்டுமே தரிசனம் பண்ணவேண்டும், இந்துக்களுக்கு மட்டுமாக கோயில் இருக்கக் கூடாது, இந்து அல்லாதவர்களும் பணமிருந்தால் கோயிலில் வந்து கலைக்கூத்தாடலாம். இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்?

கிருஷ்

****

அன்புள்ள கிருஷ்,

யாரென்று தெரியவில்லை. ஆனால் நேற்றே நண்பர்கள் இந்தப் பேச்சுக்கள் உலாவருவதைச் சொல்லிவிட்டார்கள். ஒரு கட்டுரை 12 மணிக்கு வருகிறது. ஒரு மணிக்குள் அதைத் திரித்து பரப்பிவிடுகிறார்கள். அதை எவரும் திறந்த உள்ளத்துடன் படிக்க முடியாதபடிச் செய்துவிடுகிறார்கள். சாதாரண வாசகர்கள் எதையுமே உண்மையான உணர்ச்சிகளுடன் வாசிக்கமுடியாதபடி அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள்  திரித்துக்கொண்டே இருப்பதுதான் நம் காலகட்டத்தின் மிகப்பெரிய அறிவுலக நோய்.

இந்த அரசியல் உள்நோக்கம் கொண்ட கூட்டம் உண்மையில் வெறும் சுயநலவாதிகளால் ஆனது. அதிகாரம் அன்றி இலக்கே அற்றது. கலை, சிந்தனை, இறையுணர்வு, பொதுநலம் அனைத்துக்கும் எதிரானது. இடது வலது  என எல்லா அரசியல் தரப்பும் இதிலுண்டு. எல்லாருடைய வழியும் ஒன்றேதான். பொதுவாசகர்களுக்கு ஒன்றும்தெரியாது, நாங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள சூதுவாதுக்களை சொல்லித்தந்து அவர்களை கடைத்தேற்றுகிறோம் என்னும் பாவனை. உண்மையில் எளிய வாசகர்க்ளில் பலர் இத்தகைய முன்பேச்சுகளை கண்டு உளத்திரிபுகொண்ட பின்னரே வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களால் எதையுமே தாங்களாக வாசித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஒன்று, நான் இவ்விஷயங்களை பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அறிவுச்சூழலில் ஆலய அழிவைப்பற்றி நான் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆலயங்கள் அழிவதைக் கண்டுவந்தபின் சீற்றத்துடன் சொல்லியிருக்கிறேன். இக்கட்டுரையில் இன்னும் மென்மையாகவே அவற்றைச் சொல்கிறேன்.

என் கட்டுரையில் பாமரர்கள் ஆலயத்திற்குள் செல்லக்கூடாது என்று சொல்லவில்லை. செல்லும் எண்ணிக்கை பாமரரோ செல்வந்தரோ எவரானாலும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். ஆலயங்கள் இத்தகைய பெருந்திரளுக்குரிய கட்டுமானம் கொண்டவை அல்ல என்பதனாலும் அவற்றை இடித்தும் சிதைத்தும்தான் இத்தகைய பெருங்கூட்டங்களை கையாளமுடியும் என்பதனாலும்தான் அதைச் சொல்கிறேன். ஆலயங்களை சிற்ப, ஆகம முறைகளை கடந்து உருக்குலைத்தாலொழிய உள்ளே பெருங்கூட்டத்தை அனுமதிக்க முடியாது என்பதே நடைமுறை உண்மை.

பாமரர்கள் பாமரர்களாகவே நீடிக்கவேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். மரபின் பெருமையை, மதச்செல்வங்களின் அருமையை, அவற்றைக் காக்கவேண்டிய தேவையை, அதற்கான நடைமுறைநெறிகளை அவர்களுக்கு கற்பிக்கலாம். பாமரர் என உருகும் பாமரர் அல்லாத நீங்களேகூட அதையெல்லாம் செய்யலாம். அவர்களை கட்டணமில்லாமல் உள்ளே விடலாம். நீங்களேகூட அக்கட்டணங்களைச் செலுத்தலாம்.

நான் எழுதிக்கொண்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களுக்காக அல்ல. எதையுமே வம்பெனத் திருக்கும் அவல்வாயர்களுக்கும் அல்ல. பண்பாட்டின்மேல், மதத்தின்மேல், ஆன்மிகத்தின்மேல் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட சிலருக்காக மட்டுமே.

யார் என்ன சொன்னாலும் ஆலயங்களுக்குள் மக்களை கட்டின்றி அனுமதிப்பது இல்லாமல் ஆகத்தான்போகிறது. வேறு வழியே இல்லை. போக்குவரத்து கூடிவருகிறது. மக்களின் பொருளியல் மேம்பட்டு வருகிறது. அத்தனை சுற்றுலாமையங்களிலும் திணறத்திணறக் கூட்டம் நெரிபடுகிறது. ஆலயங்களும் அவ்வாறு நெரிசலாக ஆகிக்கொண்டிருக்கின்றன. ஆலயங்களை அழியவிட முடியாது.

ஜெ

***

முந்தைய கட்டுரை‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 
அடுத்த கட்டுரைமலைபூத்தபோது