பத்து ஆசிரியர்கள் – கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் .நலம் அறிய ஆவல் .இன்றைய தினமலர் செய்தி ஒன்றை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன்

தங்களுடன்  மீண்டும் இலக்கிய நிகழ்வுகள் மூலமாக நேரடி சந்திப்புகள் நிகழும் நன்னாளை ஆவலுடன்

எதிர்பார்க்கிறேன் .
நன்றிகள்

தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்

எஸ்.எல்.ஃபைரப்பா

புகழ்பெற்ற 10 இந்திய இலக்கிய நூல்கள்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு பரிசளிப்பு

பெய்ஜிங்: ஜெயகாந்தனின் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுதப்பட்ட 10 புகழ்பெற்ற நவீன இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்.சி.ஓ.,) இந்தியா பரிசளித்துள்ளது.

ராஜேந்திரசிங் பேடி

ஜெயகாந்தனின் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’,

தாராசங்கர் பந்தோபாத்யாய எழுதிய ஆரோக்ய நிகேதன் (வங்க மொழி),

ராஜேந்திர சிங் பேடியின் ‘ஏக் சதர் மைலி ஸி’ (உருது),

ரச்சகொண்டா விஸ்வநாத சாஸ்திரியின் ‘இல்லு’ (தெலுங்கு),

தாராசங்கர் பானர்ஜி

நிர்மல் வர்மாவின் ‘கவ்வே ஒவுர் காலா பானி’ (ஹிந்தி),

மனோஜ் தாஸ் எழுதி ஒடியா சிறுகதைகள்,

குர்தயாள் சிங்கின் ‘மரீ த தீவா’ (பஞ்சாபி),

எஸ்.எல்.பைரப்பா எழுதிய ‘பர்வ’ (கன்னடம்)

மனோஜ்தாஸ்

ஜாவேர்சந்த் மேக்னானி எழுதிய ‘வேவிஷால்’ (குஜராத்தி),

சையத் அப்துல் மாலிக்கின் ‘சூா்ய முகீா் ஸ்வப்னா’ (அஸ்ஸாமி)

ஆகிய நூல்களின் சீன, ரஷிய, ஆங்கில மொழிபெயர்ப்புகள் பரிசளிக்கப்பட்டு உள்ளன.

ஜாவேர் சந்த் மேக்னானி

அன்புள்ள செந்தில்குமார்

இது ஒரு நல்ல முயற்சிதான். இந்தப்படைப்பாளிகள் பலவாறாக இங்கே பேசப்பட்டவர்கள். அனைவருமே குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள்தான். மனோஜ்தாஸ் நான் வாசித்தவரை அவ்வளவு ஆழமான படைப்பாளி அல்ல. விஸ்வநாத சாஸ்திரியின் நாவல்களும் மெல்லிய பகடிமட்டும் கொண்டவை. ஆயினும் இந்திய இலக்கியத்தின் ஒரு கீற்று இதன் வழியாக அறியப்படும்.

குர்தயாள் சிங்

இந்தவகையான நிகழ்வுகள் தொடர்ச்சியாக ராஜதந்திர அளவில் நிகழ்ந்து வருகின்றன. நினைக்கும் அளவுக்கு இவற்றால் பயன் இருப்பதில்லை. வெவ்வேறு நூலகங்களில் இவை உறங்கவே வாய்ப்பு. ஆனால் இந்திய இலக்கியம் பற்றி எவரேனும் நாலைந்து வரிகள் எழுதினால் இந்த பட்டியல் அப்படியே அதில் இருக்கும். அவ்வாறுதான் உலக இலக்கியம் தொகுக்கப்படுகிறது.

ஞானபீடம், சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளின் முக்கியத்துவம் இங்குதான். ஜெயகாந்தன் ஞானபீடப்பரிசு பெறுவது வரை இத்தகைய பட்டியல்களில் அகிலன்தான் இடம்பெற்றுவந்தார். இந்திய இலக்கியத்தை வாசிக்கும் அயலவருக்கு வேறு வழியில்லை. இந்தப்பட்டியலையே நம்பியாகவேண்டும்.

சையத் அப்துல் மாலிக்

ஓர் இலக்கிய வாசகர் எந்த மொழியிலானாலும் அகிலனை வாசித்ததுமே தமிழில் நவீன இலக்கியம் இல்லை என்று சொல்லிவிடுவார். பல மேடைகளில் அவ்வாறுபல அறிஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 1986ல் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் மொழியாக்கம் செய்யப்படும்  வரை மலையாள இலக்கிய கட்டுரைகளில் தமிழில் நவீன இலக்கியமே உருவாகவில்லை என்றுதான் ஆய்வாளர் எழுதிவந்தனர்.

இப்போது நாம் விஸ்வநாத சாஸ்திரியை வைத்து தெலுங்கிலும் மனோஜ்தாஸை வைத்து ஒரியமொழியிலும் நவீன இலக்கியம் இல்லை என நினைக்கக்கூடும். அங்கே இன்னும் மேலான படைப்பாளிகள் இருக்க எல்லா வாய்ப்பும் உண்டு.

நிர்மல் வர்மா

ரச்சகொண்ட விஸ்வநாத சாஸ்திரியின் அற்பஜீவி என்னும் நாவல் ஏற்கனவே தமிழுக்கு வந்துள்ளது. அவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றவர். அவருடைய படைப்புகளை உலகில் எங்குள்ள இலக்கிவாதி வாசித்தாலும் தெலுங்கு ஓர் அற்பமொழி என்னும் எண்ணத்தையே வந்தடைவார்.

ஆகவேதான் சிலவிருதுகள் தகுதியற்றவர்களுக்குச் செல்லும்போது கடுமையான கண்டனத்தைஇலக்கிய விமர்சனத் தளத்தில் இருந்து தெரிவிக்கிறோம். சாதி, மதம், கட்சி, சிபாரிசுகள் சார்ந்து விருதுகள் அளிக்கப்படலாகாது. அது நம் முகத்தில் நாமே கரிபூசிக்கொள்வதுதான்.

ரச்சகொண்ட விஸ்வநாத சாஸ்திரி

தினத்தந்தி ஆதித்தனார் விருதோ, கலைஞர் கருணாநிதி விருதோ எவருக்கு அளிக்கப்பட்டாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேசிய அளவில் மதிப்புறு விருதுகள் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் தேசியச்சூழலில், உலக அளவில் தமிழிலக்கியத்தின் மதிப்பையே அழிக்கிறார்கள்.

இங்கே ஒவ்வொருமுறை அத்தகைய இலக்கியவிமர்சனம் சார்ந்த எதிர்ப்புகள் வரும்போதும் பாமரக்கும்பல் ஒன்று ‘ஒருத்தருக்கு பரிசு கிடைச்சா மத்தவனுக வயிறெரிஞ்சு எதிர்க்கிறானுக’ என பேச ஆரம்பிக்கும். இலக்கியத் தகுதியில்லாத சில்லறை எழுத்தாளர்கள் இலக்கியத் தகுதி என்பதையே மறுத்து, இலக்கியமதிப்பீடு என்பதே மோசடியானது என சலம்புவார்கள். சிலர் கட்சிக்கோட்பாடு, சாதிக்கோட்பாடுகளை முன்வைப்பார்கள்.

பண்பாட்டின்மேல் உண்மையான அக்கறை கொண்டவர்கள் எவரை முன்னிறுத்துவது என தங்கள் தன்முனைப்பை, தன்னலத்தை கடந்து ஒரு பார்வை கொண்டிருக்கவேண்டும். பாமரரின் வசைகளை வாங்கிக்கொண்டு சிலர் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇருத்தலியல் ஒரு கேள்வி