அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஈழ எழுத்தாளர்களில் அவருடைய நடை வித்தியாசமானது. பல நாடுகளில் வேலை நிமித்தம் அவர் வசித்ததால் அந்த நாடுகளின் மண் சார்ந்தும் எழுதியிருக்கிறார்.

ஆனால் என் நண்பர்களில் சிலர் அவர் மீது ஒரு விமர்சனம் வைக்கின்றனர். ஈழப் பிரச்சினைகளில் அவர் மேம்போக்காக எழுதியிருக்கிறார் என்றும் தீவிர ஈழ எழுத்தாளர்களான ஷோபாசக்தி, வாசு முருகவேள், தமிழ்நதி போன்றவர்களை போல் போர் பற்றியும் ஈழ பிரச்சினை குறித்தும் தீவிரமாக எழுதவில்லை என்கின்றனர்.

என் கேள்வி ஒரு எழுத்தாளன் தன் மண் சார்ந்த பிரச்சினைகளை கட்டாயம் எழுதியே தீர வேண்டுமா? அவனுக்கான சுயத்தோடு எழுதவே கூடாதா? ஏனெனில் எனக்கு அ.முத்துலிங்கத்தை மிகவும் பிடிக்கும் ஆதலால் தான் கேட்கிறேன்.

அன்புள்ள

செல்வா

திசையெட்டும்தமிழ்.

அ.முத்துலிங்கம்

அன்புள்ள செல்வா,

அந்த நண்பர்களுக்கு வயது முப்பதுக்கு கீழே என்றால் இலக்கிய அறிமுகம் செய்து வையுங்கள். மேலே என்றால் அவர்களிடம் இலக்கியம் பேசாதீர்கள். மூச்சு விரயம்.

ஓர் எழுத்தாளன் எதை எழுதுகிறான் ஏன் எழுதுகிறான் என்பதை அவனே சொல்லிவிட முடியாது. அவனுடைய ஆழம் கொண்டிருக்கும் வினா அவனை இயக்குகிறது. அவனே கண்டடையும் சில அவன் ஆக்கங்களில் வெளிப்படுகிறது. அது புறவுலகில் எதை கருத்தில் கொள்கிறது என்பது அந்த வினாவைச் சார்ந்ததே ஒழிய சூழலின் அழுத்தமோ வாசகனின் தேவையோ அதில் எந்தப் பங்களிப்பையும் ஆற்றுவதில்லை.

இந்தியச் சுதந்திரப்போர் நடந்துகொண்டிருந்தபோது எழுதிய புதுமைப்பித்தன், குபரா எழுத்துக்களில் சுதந்திரப்போராட்டத்தின் சாயலே இல்லை. அவர்கள் அன்றாடம் கண்டுகொண்டிருந்த உலகம் அவர்களுக்குள் எந்தச் சலனத்தையும் உருவாக்கவில்லை. ஆனால் தொலைதூர இலங்கையில் தலித் மக்கள் பட்டுக்கொண்டிருந்த துயரம் புதுமைப்பித்தனை பாதித்தது. அவர் அவர்களைப் பற்றி எழுதினார். (துன்பக்கேணி)

ஆனால் புதுமைப்பித்தனை சுதந்திரப்போர் பெரிதும் பாதித்திருக்கிறது. அதில் கலந்துகொள்ள விரும்பியிருக்கிறார். அதை அவருடைய கடிதங்கள் காட்டுகின்றன. ஆனால் அப்புலத்தில் ஏன் கதைகள் எழுதவில்லை? அவருக்கு போர்மேல் உணர்வுரீதியான ஈடுபாடு இருந்தது, ஆனால் தத்துவச்சிக்கல் இல்லை, கேள்விகள் இல்லை. ஆகவே அது எழுதும்களமாக ஆகவில்லை.

அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் முதன்மையானவர். பிற எவரும் அவரைவிட பல படிகள் கீழேதான். ஈழப்போர் குறித்து இங்கே நிறையபேருக்கு செய்திகள் வழியாகத் தெரியும். ஒருவகை கவர்ச்சியும் அதிலுள்ளது. ஆகவே அதைப்பற்றிய கதைகளை விரும்பி வாசிக்கிறார்கள். அக்கதைகளில் அவர்களுக்கு பிடிகிடைக்கும் பலவிஷயங்கள் உள்ளன. ஆகவே கொஞ்சம் ரசனை குறைந்தவர்களும் அக்கதைகளை விரும்புகிறார்கள்.

முத்துலிங்கம் எழுதுவது முதன்மையாகப் பண்பாடுகளுக்கு இடையேயான முரண்பாட்டை. புலம்பெயர்ந்தவர்கள் அங்கிருக்கும் பண்பாடுகளுடன் கொள்ளும் அணுக்கமும் விலக்கமும் அதன் சிக்கல்களுமே அவர் கதைகளில் உள்ளன. உண்மையில் ஈழத்தவர் வாழ்க்கையில் போரைவிட பலமடங்கு பிரம்மாண்டமானது புலம்பெயர்வு. அதை எழுதுபவர் அ.முத்துலிங்கம்.

பொதுவாக இரு பண்பாடுகள் உரசிக்கொள்ளும் முனைகள் இலக்கியத்திற்கு முக்கியமானவை. ஏனென்றால் விழுமியங்கள், மனித ஆளுமை ஆகியவை பெரும்பாலும் கலாச்சார உருவகங்கள். அவற்றை அக்கலாச்சாரத்திற்குள் வைத்து மதிப்பிடுவது சற்று கடினம். இன்னொரு கலாச்சாரத்திற்கு அருகே வைத்து மதிப்பிடுகையில் அவை எளிதில் துலங்குகின்றன.

விழுமியங்களையும் ஆளுமைகளையும் கலாச்சாரத்திற்குள் வைத்து மதிப்பிடுகையிலேயே கூட நாம் ஒரு கலாச்சாரக் கூற்றுடன் முரண்படும் இன்னொரு கலாச்சாரக் கூற்றுடன் ஒப்பிட்டே அந்த அளவீடுகளைச் செய்கிறோம். நேற்றை இன்றுடன் ஒப்பிடுகிறோம். நகரத்தை கிராமத்துடன் ஒப்பிடுகிறோம்.  தந்தையை மைந்தருடன் ஒப்பிடுகிறோம்.

கலாச்சாரங்களின் முரண்புள்ளிகளை கொண்டு மனிதநிலைகளை, மதிப்பீடுகளை புரிந்துகொள்ளும் முயற்சி பேரிலக்கியங்கள் அனைத்திலும் நிகழ்வது. அ.முத்துலிங்கம் செய்வது அதையே. கீழைப்பண்பாட்டுக்கும் ஐரோப்பியப் பண்பாட்டுக்குமான முரண்பாடு, ஆப்ரிக்கப் பண்பாட்டுக்கும் ஆசியப் பண்பாட்டுக்குமான முரண்பாடே அவருடைய பேசுபொருள்.

ஆனால் அவர் அதை எளிய வேடிக்கையாக ஆக்குவதில்லை. தீர்ப்புகளை சொல்வதில்லை. அனைத்துக்கும் மேலாக தன் பண்பாட்டுப்புலம் பற்றிய பெருமிதமும் அவரிடம் இல்லை. அவர் அந்த களத்தில் வைத்து மனிதர்களையும் அவர்களின் விழுமியங்களையும் புரிந்துகொள்ள மட்டுமே முயல்கிறார்.

ஆனால் அந்த உசாவல் நேரடியான தர்க்கங்களாக அவர் கதைகளில் வெளிப்படவில்லை. விவாதமே இல்லை. முடிவுகளும் சொல்லப்படுவதில்லை. அவர் கதைகள் எளிமையான, மென்மையான நிகழ்வுச்சித்தரிப்புகள். அவற்றினூடாக வாசகன் சென்றடையவேண்டிய இடமாகவே அந்த கலாச்சார உரையாடற்களம் உள்ளது. நவீனக்கவிதையின் அழகியலைக் கொண்டே அ.முத்துலிங்கத்தை புரிந்துகொள்ள முடியும். தமிழில் அ.முத்துலிங்கத்தின் புனைவுலகுக்கு அணுக்கமானது கவிஞர் இசையின் உலகுதான்.

அ.முத்துலிங்கத்தின் புனைவுலகம் நேரடியான அரசியலோ அப்பட்டமான பகடியோ நையாண்டிகளோ கொந்தளிப்புகளோ கூச்சல்களோ கொண்டது அல்ல. அது நுட்மான வாசகர்களுக்கு, கதையில் இருந்து நுண்ணிய படிமங்களை எடுத்துக்கொள்ளும் கவித்துவ அழகியலில் பயிற்சி கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது.

ஜெ  

அ.முத்துலிங்கம் இணையதளம்

பழைய கட்டுரைகள்

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து
அ.முத்துலிங்கம் நேர்காணல்
முந்தைய கட்டுரைநீர்வழிப்படூம்,நாகம்மாள் – கடிதம்
அடுத்த கட்டுரைஜீன் ட்ரெஸ்- கடிதங்கள்