சந்திக்காதவர்கள்,சந்தித்தவர்கள்…

அன்புள்ள ஜெ.,

சச்சின் டெண்டுல்கரை சந்திப்பது[இன்ஃபெர்னோ]சாதாரணமனிதனுக்கு ஒரு வாழ்நாள்த் தருணம். நீங்களோ அவரை ஒரே அறையில் இருந்தபோதும் சென்றுபேசாமல் வந்ததைப்பற்றி எழுதியிருந்தீர்கள். இதுபோல வாய்ப்பிருந்தும் நீங்கள் காணத்தவறவிட்ட(தற்காக இன்றும் வருத்தப்படும்) ஆளுமைகள் யாரும் உண்டா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்னன் சங்கரன்,

நான் தொடர்பயணி. அத்துடன் கேரள இலக்கியவாதிகள் வழியாக, மலையாள வாசகர்கள் வழியாக, தமிழ் சினிமா வழியாக பல உயர்தளங்களிலும் ஓரளவு அறிமுகம் உடையவன். ஆகவே இங்கே பேசப்படும் பெரும்பாலான  பிரபலங்களை நான் சந்தித்திருக்கிறேன். தேசிய அளவிலேயே.

உண்மையிலேயே ஆளுமைத்திறனும், பிறரை ஈர்க்கும் தனித்தன்மையும், பெருந்திறன்களும் கொண்டவர்கள் அவர்களில் சிலர். உதாரணம் முன்னாள் மத்திய அமைச்சர்களான கே.நட்வர் சிங், ஸ்ரீகாந்த் வர்மா. இருவரிடமும் மிகச்சில நிமிடங்களிலேயே வெளிப்பட்ட அபாரமான வாசிப்பும் நகைச்சுவைத்திறனும் என்னை பெருமதிப்பு கொள்ளச் செய்தன.

ஆனால் அரசியல், கிரிக்கெட் சினிமாப் பிரபலங்கள் மேல் எனக்கு பெரிய ஈடுபாடில்லை. ஒருவகை வரலாற்று ஆர்வம் உண்டே ஒழிய தனிப்பட்ட முறையில் நான் அவர்களை உள்ளம் கொள்வதில்லை. ஒருவரை அவர் புகழ்பெற்றவர் என்பதனாலேயே நான் முக்கியமானவராக எண்ணுவதில்லை.ஆகவே சென்று அவர்களிடம் அறிமுகம் செய்துகொள்வதில்லை.

சச்சினுக்கு எவ்வளவு இலக்கியம் தெரியுமோ அவ்வளவுதான் எனக்கு கிரிக்கெட் தெரியும். நான் கிரிக்கெட் மாட்சே பார்த்ததில்லை. எனக்கு அவர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வந்து கம்மிய குரலில் பேசும் ஒரு முகம், அவ்வளவுதான்.

நான் ஓடிச்சென்று அறிமுகம் செய்துகொண்டவர்கள் சிலர் உண்டு. மகாராஜபுரம் சந்தானம், லால்குடி ஜெயராமன், டி.என்.சேஷகோபாலன், பண்டிட் ஜஸ்ராஜ், பீம்சேன் ஜோஷி போல. சந்திப்பதற்கென்றே கிளம்பிச் சென்ற ஆளுமைகள் உண்டு. அதீன் பந்தியோபாத்யாய, சிவராம காரந்த், வைக்கம் முகமது பஷீர், கேளுசரண் மகாபாத்ரா போல.

சந்தித்திருக்கலாமோ என எண்ணிய ஆளுமைகள் பல உண்டு. ஒருமுறை குந்தர் கிராஸ் எனக்கு மிக அருகே ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சென்று அறிமுகம் செய்துகொள்ள முடியவில்லை. ஒருமுறை கிரிராஜ் கிஷோரை அருகே சந்தித்திருக்கிறேன். அவரிடம் ஒரு வார்த்தை கூட பேச வாய்க்கவில்லை. அப்படி பல பெயர்கள்.

ஆனால் விஐபி என மக்கள் எவரை நினைக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது. மும்பைக்கு திரைவேலையாகச் சென்றபோது விடுதியில் என்னுடன் ஒரு நடிகை லிஃப்டில் ஏறினார். அவரை அத்தனை பேரும் அரசி போல போற்றி வணக்கம் சொல்வதைக் கண்டேன். அவரும் ஆசியளிப்பதுபோல புன்னகையும் வணக்கமும் அளித்துக்கொண்டு சென்றார். பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அனைவர் முகத்திலும் பக்திப்பரவசம். அவர் சென்றபிறகே ஒருவர் சொன்னார், அது சன்னி லியோன்.

அதைச் சொன்னபோது ஒரு நண்பர் பரவசமடைந்துவிட்டார். ஒரு ஹலோ கூட நான் சொல்லவில்லை என்பதற்காக என்னைப் பற்றி எண்ணி எண்ணி வருந்தினார். “ச்சே எவ்ளவு பெரிய சான்ஸ்…அவங்க யாரு தெரியுமா? சரியானவர்களுக்குச் சரியான வாய்ப்பை தெய்வம் தருவதில்லை” என்றார்.

என்னை தமிழகத்தில் மிகப்பெரும்பாலும் எவரும் அடையாளம் கண்டுகொண்டதில்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள் எவரும். தமிழகத்தின் புகழ்பெற்ற விஐபிக்களில் நான் அறிமுகப்படுத்தப்படும்போது என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசியவர்கள் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மட்டுமே. மாற்றுமொழி எழுத்தாளர்களுக்கு என்னை அறிமுகம் இருப்பதில்லை. தமிழ் எழுத்தாளர்களிலேயே சில மூத்த எழுத்தாளர்கள் என் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்று கண்டிருக்கிறேன்.

நான் என்னை பொதுவாக எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதுமில்லை. என் அலுவலகத்தில் எவருக்குமே எழுத்தாளனாக என்னை தெரியாது. அப்படியே ஓய்வும் பெற்றுவிட்டேன். உள்ளூரில் அப்படி எவருடனும் அறிமுகம் இல்லை. என்னுடன் இருபதாண்டுகளாகப் பழகிவரும் ஒரு தமிழக அரசு உயரதிகாரி சென்ற வாரம்தான் நான் எழுத்தாளன் என அவர் மகன் சொல்லி அறிந்துகொண்டார். “ஏன் சொல்லலை?” என்று கேட்டார். “சொல்லிக்கிடறதில்லை” என்று நானும் பதில் சொன்னேன்.

எழுத்து என்பது இங்கே ஓர் அந்தரங்கமான செயல்பாடு. ஆகவே எழுத்தாளன் விஐபி அல்ல. ஆகவும்கூடாது. அக்காரணத்தால்தான் நான் சினிமா ’பிரமோ’க்களை தவிர்க்கிறேன். ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு டிவி நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டால் போதும், இங்கே ஒரு குட்டி விஐபி ஆகிவிடுவேன். அது எனக்குச் சுமை. வாசகர்கள் அன்றி எவரும் எழுத்தாளனை அறிந்திருக்கவேண்டியதில்லை.

நாம் விஐபி இல்லை என்றால் மற்ற விஐபிகளை அறிந்து வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை. அது ஓரு விடுதலை. நாம் நமக்கு உவப்பானவர்களை மட்டும் அறிந்திருந்தால் போதுமானது. அவர்களைச் சந்திப்பதற்கான எந்த வாய்ப்பையும் நாம் தவறவிட்டுவிடக் கூடாது. அச்சந்திப்புகள் நமக்குப் பெரும் செல்வம். நான் சந்தித்த ஆளுமைகளின் முகங்கள் நினைவில் எழும்போதெல்லாம் பயனுற வாழ்ந்துள்ளேன் என்னும் நிறைவை அடைகிறேன்.

அப்படிச் சென்று சந்திக்க நம் ஆணவம் தடையாக இருக்கலாகாது. நாம் பெரும்பாலானவர்களைச் சந்திப்பதற்குத் தடையாக இருப்பது நம்முடைய ‘அடக்கம்’ என சொல்லிக்கொள்வோம். ‘நாம ஒண்ணுமே இல்ல சார். எப்டி சார் போய் சந்திக்கிறது?’ என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது அடக்கமோ தாழ்வுணர்ச்சியோ அல்ல, முட்டாக்கு போட்டுக்கொண்ட ஆணவம்தான். நாம் ‘ஒரு ஆளாக’ இருந்தால்தான் அவர்களைச் சந்திக்கவேண்டுமா என்ன?

ஆளுமைச்சிறப்பு கொண்டவர்களை நாம் சந்திக்கும்போது அவர்கள் நம்மையும் சந்திக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அவர்கள் நம்மை நினைவுகூரவேண்டும், நம்மை மதிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அப்படி முக்கியமான ஆளுமைகள் முன் நாமும் முக்கியமானவர்களாக நிற்கவேண்டும் என்ற எண்ணமும் அதன் விளைவான தயக்கமும்தான் நம்மை பேராளுமைகளைச் சந்திக்க விடாமல் தடுக்கின்றன. நாம் கடக்கவேண்டியது அந்த அற்பத்தனத்தைத்தான்.

ஒருவர் புகழ்பெற்றவர் என்பதற்காகவே அவரை நாம் சந்திக்கலாகாது. அவர் நமக்கு எவ்வகையிலோ முக்கியமானவராக இருக்கவேண்டும். அவர் நமக்கு முன்னுதாரணமாக, நம் சிந்தனைக்கும் உணர்வுநிலைக்கும் ஆன்மிகநிலைக்கும் கொடையளித்தவராக இருக்கவேண்டும். அவரிடம் நம்மை நேர்மையாக முன்வைத்தாலே போதும். எளிமையாகவோ பெருமையாகவோ காட்டிக்கொள்ளாமல் எப்படி இருக்கிறோமோ அப்படி இருந்தால் போதும்.

அவர்கள் நம்மை அறிந்திருக்கவேண்டியதில்லை, அவர்கள் நம்மை மதிக்கவேண்டியதுமில்லை. சந்திப்பின் அனுபவக் கொள்முதல் நமக்கே. நான் சந்தித்த தமிழக இசைக்கலைஞர்கள் எவருக்குமே நான் எழுத்தாளன் என்று தெரியாது. புல்லாங்குழல் ரமணி மட்டுமே விதிவிலக்கு. அவர் ஜெயகாந்தனின் வாடாபோடா நண்பர்.நான் சி.சு.செல்லப்பாவையும் க.நா.சுவையும் சந்திக்கையில் அவர்கள் என்னை கேள்விப்பட்டதே இல்லை. அது எனக்குப் பிரச்சினையாகவும் இருக்கவில்லை.

ஓர் எழுத்தாளனை பொதுச்சூழல் அறிந்திருப்பதில் ஒரு கலாச்சாரப் பின்புலம் உள்ளது. சென்ற முப்பதாண்டுகளில் கேரளத்தை ஆட்சி செய்த எந்த முதல்வரிடமும் நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளத் தேவை இருக்கவில்லை. ஏனென்றால் அங்கே இலக்கியம் சமூகப் பொதுப்பண்பாட்டின் ஒரு பகுதி. அதை அவ்வண்ணம் ஆக்கியவை நாராயணகுருவின் இயக்கமும் இடதுசாரி இயக்கமும். இலக்கியம், இலக்கியவாதிகள் மீது இயல்பான மதிப்பு அச்சூழலில் உள்ளது.

தமிழகத்தில் பொதுச்சூழலில் அந்த மதிப்பை நான் கண்டதில்லை. ஏனென்றால் இங்கே சினிமா,கிரிக்கெட்,அரசியல் ஆகியவை பொதுப்பண்பாட்டின் பகுதிகள். இலக்கியத்துக்கும் பொதுப்பண்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை. அத்துடன்  இலக்கியம் பற்றிய கசப்புகளையும் இளக்காரத்தையுமே தமிழகப் பொதுச்சூழல் எப்போதும் வெளிப்படுத்துகிறது. இணையச்சூழலிலேயே அதைக் காணலாம். எந்த எழுத்தாளரையும் அது விட்டுவைப்பதில்லை. கருத்துசொல்லும் எழுத்தாளன் கருத்து சொல்லாத எழுத்தாளன் எவருக்குமே விதிவிலக்கு கிடையாது.

அந்தக் காழ்ப்புக்கு அரசியலோ வேறேதோ காரணமில்லை. அப்படி பல பாவனைகளை மேற்கொண்டு தன்னுள் என்றுமுள்ள கசப்பையும் இளக்காரத்தையும் நம் சூழல் முன்வைக்கிறது அவ்வளவுதான். அந்தக் காழ்ப்புக்கு கலாச்சாரக் காரணங்கள் உள்ளன. அவை ஒரு சில தலைமுறைகளில் மறைவன அல்ல. ஆகவே இங்கே எழுத்தாளன் முகம்தெரியாதவனாக இருப்பதே நல்லது.

இன்றும் நான் விரும்பும் ஆளுமைகளை அடையாளமில்லாதவனாக இயல்பாகச் சென்று சந்திக்கவே விரும்புகிறேன். அப்படிப் பலரைச் சந்தித்ததுண்டு. சந்திக்க எண்ணி விடுபட்டுப் போனவர்களின் பட்டியல் மிக நீளம். மிகச்சமீபத்தைய உதாரணம், சார்வாகன்.

ஜெ

எழுத்தாளரைச் சந்திப்பது…
உரையாடுதல்
எழுத்தாளரைச் சந்திக்கையில்…
முந்தைய கட்டுரைபகலா அந்தியா அழகி?
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்கள்,2021