ஆலயம் எவருடையது? கடிதங்கள்-1

ஆலயம் எவருடையது?

அன்புள்ள திரு ஜெயமோகன்,

ஆலயங்களில் இப்போது ஏற்படும் சீரழிவுகள் பற்றி கான்கிரீட் போர்டிகோவில் ஆரம்பித்து நீங்கள் போட்டிருக்கும் பெரிய பட்டியலை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் பக்தர்களோ அறங்காவலர்களோ அல்ல. இன்றைய தேதியில் பெரும்பாலான தமிழக ஆலயங்களுக்கு அறங்காவலர்கள் கூட இல்லை. இத்தனை மரபு மீறல்களும் ஆலயங்களை நிர்வகித்துக் கொண்டிருக்கும் அறநிலையத் துறையால் தான் செய்யப்படுகிறது.

நிலைமை இப்படி இருக்கும்போது, அவர்கள் செய்யும் சீர்கேடுகளை எல்லாம் பட்டியலிட்டுவிட்டு, அந்தப் பழியை பக்தர்கள் மேல் போடுகிறீர்கள்.

அறங்காவலர்கள் பக்தர்கள் சொல்வதை எல்லாம் யாரும் கேட்டுக் கொண்டு திருப்பணி செய்வதில்லை. ஆதீனங்கள் தங்கள் நிர்வாகத்தில் உள்ள ஆலயங்களில் அவர்கள் பணத்தில் திருப்பணி செய்வதாக இருந்தாலும் கூட 5லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யவேண்டுமென்றால் அறநிலையத்துறை அங்கீகாரம் இல்லாமல் செய்ய முடியாது.

ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் அல்ல, பண்பாட்டு மையங்கள் என்கிறீர்கள். உண்மைதான். அதற்காக துளிகூட கடவுள் பக்தி இல்லாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆலய அறங்காவலர்களாக நியமிக்கப்பட கூடாது என்பதால்தான் பக்தர்கள் பராமரிப்பில் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

தஞ்சை நாகை மாவட்டங்களில் ஆலய நிர்வாகத்தின் பெரும்பகுதி ஆதீனங்களைச் சார்ந்தது. அறநிலையத்துறை அதில் ஓரளவு அதிகாரம் செலுத்துகிறது. அத்தகைய சமய நிறுவனங்கள் ஆலய நிர்வாகங்களில் முதன்மைப் படுத்தப்பட வேண்டும்.

இன்று இணையம் இருக்கிறது, ஒருநாளைக்கு காலையில் ஐந்நூறு, மாலையில் ஐந்நூறு என்று ஆயிரம் பேரை மட்டும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அனுமதிக்கலாம். அவர்களிடம் ஆயிரமோ இரண்டாயிரம கட்டணம் வாங்கலாம். ஒரு சினிமாவுக்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்பவர்கள் மெய்யான பக்தர்கள் என்றால் ஆலயத்திற்கும் செலவழிப்பார்கள்.

தமிழகத்தில் பல ஆயிரம் ஆலயங்கள் இருக்கின்றன. சில ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் குழுமும்போது சில ஆலயங்களில் ஆண்டுமுழுக்க எவருமே வருவதில்லை. அனைத்து ஆலயங்களுக்கும் இணையாக பக்தர்களை செல்ல வைப்பதற்கு, ஒவ்வொரு ஆலயத்திலும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதே சிறந்த வழி”

இதைவிட விசித்திரமான ஆலோசனையை யாரும் தரவே இயலாது. மெய்யான பக்தர்கள் என்பதை ஆயிரம் ரூபாய் கட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மாதமொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியாதவர்கள் கூட பக்தர்களாக இருப்பார்கள்.

ஆலயங்கள் எழுப்பிய அரசர்கள் கலைச் செல்வங்களை அங்கே வைத்ததன் காரணமே அவர்கள் கொண்ட பக்தியின் அடிப்படையில் தான். இல்லையென்றால் தனி அருங்காட்சியகம் அமைத்து வைத்திருப்பார்கள்.

எனவே ஆலயங்களில் முதல் உரிமையும் முழு உரிமையும் பக்தர்களுக்கே உண்டு.  இன்னார் மட்டும் இந்த தேதியில் வழிபடவேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.

மரபின் மைந்தன் முத்தையா

அன்புள்ள மரபின் மைந்தன்,

உங்கள் கடிதம்.

நான் என் தரப்பில் சொல்ல இரண்டு விஷயங்களே. ஆலயங்களின் ‘திருப்பணிகள்’ முழுக்கமுழுக்க அறநிலையத்துறையால் செய்யப்படுவதில்லை. பெரும்பாலும் பக்தர்களின் கொடையால், பக்தர்களின் அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன. கண்காணிப்பதே அறநிலையத்துறையின் வேலை. திருவட்டார் ஆலயத் திருப்பணி டிவிஎஸ் நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளது.

அறநிலையத்துறைக்கு ஆலயம் பற்றி ஒன்றும் தெரியாது, அது வெறும் அதிகார- நிர்வாக அமைப்பு. பக்தர்களுக்கு ஆலயம் அழிவதைப் பற்றி அக்கறையே இல்லை, ஏனென்றால் அதன் அருமை அவர்களுக்கு தெரியாது. அது அவர்களுக்கு வெறும் வழிபாட்டுக் கட்டிடம்தான். நான் சுட்டிக்காட்டியது அதையே. அதை பல ஆண்டுகளாக சொல்லிவருகிறேன். அக்கட்டுரைக்குக் கீழே உள்ள கட்டுரைகளைச் சொடுக்கிப் பாருங்கள்.

பக்தர்களோ பண்பாட்டு ஆர்வலர்களோ எவரானாலும் ஆலயங்களின் தொன்மை, அடையாளம் ஆகியவற்றின்மேல் மதிப்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும். அவ்வளவே நான் சொல்வது. பக்தர்கள் என்பதனால் மட்டும் அவர்கள் ஆலயக் காவலர்கள் என நினைப்பது மாபெரும் பிழை என்பது கண்கூடு. நாத்திகர்களானாலும் தமிழ்ப்பண்பாட்டின்மேல் பெருமிதம் கொண்டவராக இருந்தால் ஆலயங்கள் காக்கப்படும்.

நம் ஆலயங்களின் கட்டமைப்பு பல்லாயிரம்பேர் புழங்குவதற்குரியது அல்ல. புழங்கினால் ஆலயங்கள் அழிவதை தடுக்க முடியாது. அதைத்தடுக்கும் வழி ஒன்றைச் சொல்கிறேன். உள்ளே செல்பவர்களை கட்டுப்படுத்தவேண்டும். சரி, பணம் தேவையில்லை என்றால் கட்டணமில்லாமல் நன்கொடை மட்டும் பெறலாம். இலவசமாக அனுமதிக்கலாம். நான் சொல்லவருவது அது அல்ல. எண்ணிக்கை பற்றி மட்டுமே.

பக்தர்களை வேறெவரோ கட்டுப்படுத்தவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பக்தர்கள் தங்களை வரைமுறைப் படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறேன்.

ஆலயங்கள் ஒரே நேரத்தில்பல்லாயிரம் பேர் வந்து வழிபட்டுச் செல்வதற்குரியவை அல்ல என்பதனால்தான் தெய்வம் திருச்சுற்று வருவது, வெளிமண்டபங்களில் கோயில்கொண்டு காட்சியளிப்பது, பலவகை திருவிழாக்கள் போன்ற பல முறைகளை முன்னோர் உருவாக்கினார்கள். அவற்றை மேலும் கூட்டலாம். ஆகம முறை அதற்கு அனுமதிக்கிறது.

இதையெல்லாம் சொல்லவேண்டியவர்கள் உண்மையில் பக்தர்கள்தான். பல்லாயிரம் பேர் வந்துசெல்லும் வசதிக்காக ஆலயங்களுக்குள் கட்டப்பட்ட கம்பித்தடுப்புகள், உபரி கட்டுமானங்கள் எல்லாமே ஆகமவிரோதமானவை. சிற்ப அமைப்புக்கு எதிரானவை. ஓர் ஆலயம் மாற்றியமைக்கப் படுவது ஒரு மந்திரம் சொற்சிதைவு செய்யப்படுவதேதான். அது நலம்தருவதற்குப் பதில் தீங்கும் தரலாகும். இதை பத்தாண்டுகளுக்கு முன் அறிதலாகச் சொல்லிவந்தேன். இன்று அதற்கப்பால் ஓர் இடத்தில் இருந்து உறுதியாகச் சொல்கிறேன்.

சிற்ப சாஸ்திரப்படி ஆலயம் என்பது ஓரு மானுட உடல். க்ஷேத்ரபுருஷன். ஆலயத்தில் சிற்பவரைமுறையை மீறி கட்டிடங்கள் கட்டுவதும் கம்பி வேலி கட்டுவதும் மனித உடலில் கூடுதலாக கைகளையும் கால்களையும் வைத்து தைப்பது போல. ஆலயம் அழிகிறது. ஆகம- சிற்பசாஸ்திர நெறிகள் மீறப்படுவதனால் ஆலயம் என எதை நம்பிச் செல்கிறார்களோ அந்த நுண்ணமைப்பே அழிகிறது. அதை பக்தர்கள் பக்திக்காகச் செய்கிறார்கள் என்றால் அது கேலிக்கூத்து.

ஆலயத்தில் முதலுரிமை பக்தர்களுக்கு என்றால் அதில் மறுப்பில்லை. முழுஉரிமை பக்தர்களுக்கு என்றால் அது மிகையான உரிமைகோரல். ஏற்கத்தக்கது அல்ல. அது அனுமதிக்கப்பட வாய்ப்பும் இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம்- விர்ஜீனியா
அடுத்த கட்டுரைவெண்முரசும் அருண்மொழியும்- கடிதம்