சிறுமையின் ஆதங்கங்கள்
அன்புள்ள ஜெ
உங்கள் கடிதம் [சிறுமையின் ஆதங்கங்கள்] கண்டேன். நான் அந்த கடிதத்தை அனுப்ப முக்கியமான காரணம், உங்கள் படைப்பு நீலம் இதழில் வெளிவந்திருப்பதை ஒட்டிய பிலாக்க்காணம்தான்.
சமீபத்தில் இடதுசாரிகள் தலித்துக்களை வசைபாடிய இரண்டு சந்தர்ப்பங்களில் ஒன்று இது, உங்கள் படைப்பை அவர்கள் வெளியிட்டது இடதுசாரிகளை கொந்தளிக்க வைக்கிறது.
தலித் சிந்தனையாளர்கள் பிறருடன் தொடர்பு கொள்வதை ஒருவகை ‘சோரம்போதல்’ ஆகவே இவர்கள் சித்தரிக்கிறார்கள். இதன்வழியாக தலித் சிந்தனை இயக்கத்தையே இவர்கள் சிறுமை செய்கிறார்கள். இதை நம்சூழல் ஒருவகையில் கண்டும் காணாமலும் அங்கீகரிக்கிறது.
ஆர்.ராகவன்
***
அன்புள்ள ராகவன்,
முதலில் எனக்குள்ள ஓர் ஐயத்தைச் சொல்லிவிடுகிறேன். யமுனா ராஜேந்திரன் உள்ளிட்ட ‘சுதந்திர மார்க்ஸியர்’கள் ஏதோ அவர்களுக்குரிய ஒர் இடதுசாரி அரசியலை முன்வைக்கிறார்கள் என்று நான் நினைத்திருந்தேன். அவர்களின் வசைபாடலும் கொக்கரிப்பும் எல்லாம் புலம்பெயர்ந்தமையின் வெறுமை உருவாக்கும் உளவியல் சிக்கலின் விளைவு என்ற அளவிலேயே கருத்தில்கொண்டேன்
ஆனால் எனக்கு அணுக்கமான இடதுசாரி நண்பர்கள் அவரை ஓர் அன்னியராகவே பார்ப்பதையும் கண்டுவந்தேன். அவர்களிடம் அவ்வப்போது பேசுவதுண்டு.
சென்ற ஆண்டு ஓர் அரசியல் உரையாடல். என்னிடம் ஓர் இடதுசாரிக் கட்சி ஊழியர் சொன்னார். “அதிகாரபூர்வமாக கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவரை கட்சியினர் பொருட்படுத்தலாகாது. அவருடைய உண்மையான நோக்கம் நமக்குத் தெரியாது. அவருடைய பின்னணியும் தெரியாது. அவருக்குமேல் கட்சியமைப்புக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் அவருடைய கருத்துக்கள் கட்சியை பாதிக்க அனுமதிக்கவே மாட்டோம். அக்கருத்துக்கள் எங்கள் கட்சிக்கு எதிராக இருப்பவர்களின் கருத்துக்களைவிட அபாயகரமானவை.”
அது அறிவியக்கத்துக்கு எதிரான ஒரு மனநிலை என நான் வாதிட்டேன். ஆனால் அவர் சென்ற காலத்தில் இவ்வாறு கட்சிக்குமேல் நின்று கம்யூனிசம் பேசியவர்களின் பட்டியல் ஒன்றை அளித்தார். இளவேனில் போல பலர். அவர்களெல்லாமே காலப்போக்கில் திமுகவில் சென்று ஐக்கியமாயினர். கம்யூனிஸ்டுக் கட்சியை மட்டுமல்ல, கம்யூனிசத்தையே கடுமையாக நிராகரித்தனர். அவர்கள் உருவாக்கிய அழிவு மிகப்பெரியது என்றார்.
ஆனால் கம்யூனிசம் பேசியநாட்களில் அவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சியைவிட ‘புனிதமானவர்களாக’வும் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையைவிட ‘அறிவானவர்களாகவும்’ தங்களை காட்டிக்கொண்டனர். கட்சியின் ’சமரசங்களுக்காக’ கட்சியை கடுமையாக விமர்சித்தனர். இந்த ‘holier than thou’ மனநிலையை கட்சி நூறாண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது என்றார் தோழர்.
“களப்பணியாற்றும் கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை சொல்லவும் வழிநடத்தவும் இவர்களை எவர் நியமித்தனர்? அவர்களை வசைபாடவும் இழிவுசெய்யவும் இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றார்.
அன்று முதல் என் எண்ணம் சற்று மாறியது. யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் இன்று மொத்த இடதுசாரிகளுக்கும் மேலே ஒரு பீடத்தில் தங்களை அமர்த்திக்கொண்டு புலம்பெயர்ந்த லெனின் ஆக பாவனை செய்துகொண்டு எழுதுவதெல்லாம் வெறும் முகநூல்சலசலப்பு அல்ல. இவர்களுக்கு வேறேதோ உள்திட்டம் இருக்கிறது.
அவர்கள் அளிக்கப்படாத கம்யூனிசக் கருத்தியல் தலைமையை கையிலெடுத்துக்கொண்டு தாண்டவமாடுவது வெறும் தனிநபர் அகங்காரத்தால் அல்ல. கண்டிப்பாக அது கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்குச் சாதகமானது அல்ல. அதற்குப்பின் வேறுசில சக்திகள் இருக்கவே வாய்ப்பு. ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் கட்சியினர்தான்.
இந்தக் கும்பல் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும், தலித் களப்பணியாளர்களுக்கும் ‘ஆணைகளை’ இடுகிறது. அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. உடனே அவர்களின் நேர்மையை சந்தேகப்பட்டு வசைபாடுகிறது. அவர்களின் செயல்பாடுகளைக் கொச்சைப்படுத்துகிறது. பொதுவெளியில் அவர்களின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது. இளையோரில் ஒரு சிறுசாராரை அவர்களிடமிருந்து விலக்குகிறது. இவர்களின் செயல்திட்டம் இதுவே.
கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் தலித் அமைப்புகளுக்கும் சுயஅறிவும், நேர்மைத்தகுதியும் உண்டு. அவர்களுக்கான இலக்கும் செயல்திட்டங்களும் உண்டு. பொதுவாக ஒரு குறிப்பிட்ட சூழலில் அரசியலமைப்புக்கள் மிக அதிகமான நட்புச் சக்திகளை திரட்டிக் கொள்ளும். குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையிலேயேகூட நட்புச் சக்திகளை உருவாக்கிக் கொள்ளும். பிறிதொரு தருணத்தில் தேவையென்றால் தங்களை இறுக்கமான போராட்ட அமைப்பாகவும் ஆக்கிக் கொள்ளும்.
அரசியலமைப்புகள் எவரை அணுகவேண்டும், எவரை விலக்கவேண்டும் என்பதை அவற்றின் கொள்கைத் தலைமையே தீர்மானிக்கவேண்டும். சந்தேகத்திற்கிடமான பின்னணி கொண்டவர்கள் அல்ல. அவர்கள் இடும் ஆணைகளையும் அவர்களின் வசைகளையும் எப்படிக் கையாள்வதென கட்சி முடிவெடுக்கவேண்டும்.
இன்றைய சூழலில் தலித் தரப்பினர் எதிர்கொள்வது ’ஒதுக்கிவைத்தல்’ என்னும் எதிர்வியூகத்தை. அதை வெல்ல ’அத்தனை இடங்களிலும் பரவுதல்’ என்னும் போர்முறையை அவர்கள் கையிலெடுக்கிறார்கள்.
இன்று தலித் இயக்கங்கள் குறுங்குழுக்களாக, அரசியல்-சமூகவெளிக்கு வெளியே நின்று கூச்சலிடுபவர்களாக தங்களை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவ்வாறென்றால் மொத்த சூழலும் அவர்களை அப்படியே கடந்துசென்றுவிடும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
தலித் அமைப்பினர் இன்று அத்தனை அறிவுச்சூழல்களிலும் ஊடுருவ விரும்புகிறார்கள். அத்தனை பேரிடமும் விவாதிக்க விரும்புகிறார்கள். தங்கள் செயல்பாட்டில் சற்றேனும் ஆர்வம்கொண்ட அனைவரையும் உள்ளிழுத்துக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் போர்முறை இன்று அதுவாகவே உள்ளது.
விரைவிலேயே இன்று அவர்கள் நுழையாத பல களங்களில் அவர்களின் ஊடுருவல் நிகழலாம். சிற்பக்கலை, ஆலயக்கட்டுமானக்கலை, இந்து வழிபாட்டுமுறைகள், சிந்தனைமுறைகள் உட்பட பலவற்றில் ஆழ்ந்த தலித் பார்வைகள் உருவாகலாம். அது பெரிய கொந்தளிப்பையும் மாற்றங்களையும் உருவாக்கலாம்.
ஓர் உதாரணம், பேரா.டி.தர்மராஜ். அவருக்கும் பிற தலித் அறிவியக்கவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அவர் தலித் சிந்தனைச்சூழலை நோக்கிப் பேசவில்லை. தலித்துக்களுக்கு சிந்தனையில் இடம்கோரி எழுதவில்லை. அவர் தமிழ்ச்சூழலை நோக்கிப் பேசுகிறார். ஒட்டுமொத்தமாக அதை வழிநடத்த முயல்கிறார்.
ஆகவே அவர் என்னுடன் பேசியே ஆகவேண்டும். தமிழில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களையும் கருத்தில் கொண்டபடியே பேசவும் எழுதவும் வேண்டும். அவர் அடுத்த தலைமுறையின் தலித் சிந்தனையாளர். உண்மையில் நான் தர்மராஜைப் பற்றி தலித் அரசியல்- கலாச்சாரம் சார்ந்து யோசிப்பதே இல்லை. என்னுடைய புனைவெழுத்தின் சிக்கல்களில்தான் அவரை இணைத்துக்கொண்டு யோசிக்கிறேன்.
நீலம் முன்னெடுப்பது இந்த அரசியலைத்தான். தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் போன்று இந்த உரையாடலை உருவாக்கி முன்னெடுக்கும் தலித் அறிவுஜீவிகள்மேல் மட்டும் குறிவைத்து அவதூறு செய்யப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அவர்களின் நம்பகத்தன்மை சிதைக்கப்படுகிறது.
இந்த அவதூறாளர்கள் தமிழ்ச்சிந்தனையில் ஒரு ’சேரி’யை உருவாக்கி தலிதியர்களுக்கு அளிக்கிறார்கள், அங்கிருந்து அவர்கள் வெளியேறலாகாது என வற்புறுத்துகிறார்கள், வெளியேறினால் வசைபாடுகிறார்கள். ‘நாங்கள் சிந்திக்கிறோம், வழிகாட்டுகிறோம், எங்களுக்குப்பின்னால் கொடிபிடித்து கோஷமிட்டு வாருங்கள், உங்களுக்கு வேறென்ன தகுதி?’ என்கிறார்கள்.
இங்கே தலித் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தானாக சிந்தித்தால், தனிவழி கண்டால் கொந்தளிக்கிறார்கள். மிகமிக மெல்ல தங்களை விமர்சித்தால் இழிவுசெய்து அவதூறுசெய்து வசைபாடி கொப்பளிக்கிறார்கள். “நாங்கள் போட்ட பிச்சை, எங்களுக்கு நன்றியுடன் இருங்கள்” என்கிறார்கள். எனில் தலைமைகொள்ளும் சிந்தனையாளர்களை இவர்கள் எப்படி சகிப்பார்கள்?
கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரின் பங்களிப்பையும் அவர்களை வசைபாடுபவர்களின் அறிவுத்தகுதியையும். அவர்கள் இருவரும் இன்று தமிழ்ச்சூழலையே பாதிக்கும் சிந்தனையாளர்கள். அந்த அளவுக்கு அடிப்படை ஆய்வுகள் செய்தவர்கள். இவர்கள் எந்த அடிப்படையில் தங்களை அவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்?
உருவாகி மேலெழுந்து வரும் ஒரு சிந்தனைமரபில், தங்கள் சாதியினரால் ஒடுக்கப்பட்டவர்களின் அறிவியக்கத்தில் எந்தத் தகுதியும் இல்லாமலேயே ஊடுருவி அவர்களுக்கு ஆணையிட இவர்களுக்கு கூச்சமே இல்லை என்பதை பாருங்கள். அவர்களால் சொந்தமாகச் சிந்திக்க முடியாது, அவர்கள் சில்லறைக்குச் சோரம்போவார்கள் என எப்படி இயல்பாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று பாருங்கள். வேறொன்றுமில்லை, சாதிமேட்டிமைத்தனம். அதைத்தான் முற்போக்குக் கொள்கையென மாயம் காட்டி முன்வைக்கிறார்கள்.
தலித் அழகியல் பற்றி பேசும்போது நண்பர் சொன்னார். “நாங்கள் தமிழிலக்கியத்தில் ஒரு தலித் தரப்பை உருவாக்க முயலவில்லை. அது ஏற்கனவே உருவாகிவிட்டது. ஒட்டுமொத்த தமிழிலக்கியப் பார்வையை எங்கள் நோக்கில் திருப்பியமைக்க விரும்புகிறோம். இமையம் தலித் இலக்கியம் எழுதுவது அல்ல எங்கள் நோக்கம். ஒரு பிராமண எழுத்தாளர் எழுதினாலும் அதில் தலித் பார்வை ஊடுருவி இருக்கவேண்டும் என்பதுதான்.” அந்த வியூகமே நவீன இலக்கியத்தின் அத்தனை படைப்பாளிகளை நோக்கியும் அவர்களை திருப்புகிறது. அவர்களிடம் விவாதிக்க விரும்புகிறது.
“இனி நாங்கள் இலக்கிய அரங்குகளில் இடம் கோரமாட்டோம். அத்தனை கலைஞர்களும் எங்கள் அரங்குகளில் வந்து பேசவைப்போம். இருபதாண்டுகளில் அது நிகழும்” என்று சொல்லும் ஒரு குரல் இன்று எழுகிறது. ஈகலிட்டேரியன் போன்ற அமைப்பில், அறிவுச்சமூகம் போன்ற அமைப்பில் அவ்வாறுதான் அத்தனை பேரும் வந்து பேசுகிறார்கள். கவனியுங்கள் இந்த அவதூறாளர்கள் மிகச்சரியாக இந்த வியூகத்தையே குறிவைத்து தாக்கி இழிவுசெய்கிறார்கள்.
கருத்தியல் களத்தில் மெய்யாகவே செயல்படும் எவருக்கும் இலக்கியவாதி அவனுடைய படைப்புகளால்தான் பொருள்படுகிறான். நானோ சுந்தர ராமசாமியோ க.நா.சுவோ அதற்குமுன் புதுமைப்பித்தனோ அப்படித்தான் அணுகப்படுகிறோம். அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டனர். புதுமைப்பித்தன் இடதுசாரிகளால் நசிவிலக்கியவாதி, நச்சிலக்கியவாதி என விமர்சிக்கப்பட்டதுண்டு. ஒரு கட்டத்திற்குப் பின் அவர் படைப்புகளில் அவர்களுக்கு ஏற்புடையவை கண்டறியப்பட்டன. ஒரு நட்பு முரண் உறவு இது.
ஒரு சிறு ஐயத்திற்கிடமான பின்னணி கொண்ட குழு அளிக்கும் முத்திரைகளை சூழல் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. இலக்கியவாதியை காழ்ப்பு ஒன்றுமே செய்யாது. மேலோட்டமான சில வாசகர்களை அவனிடமிருந்து அது விலக்கும். அதனால் பெரிய இழப்பும் இல்லை. அவனுடைய ஆக்கங்களே அவனுக்காகப் பேசுவன. அவை என்றுமிருக்கும்.
அது இந்த காழ்ப்பாளர்களுக்கு புரிவதில்லை. நாலு காழ்ப்பை கொட்டிவிட்டதுமே ஒரு படைப்பிலக்கியவாதியை ஒழித்துவிட்டோம் என கற்பனை செய்கிறார்கள். சூழல் அதை கால்தூசுக்குக் கூட பொருட்படுத்தவில்லை என்று கண்டால் குமுறுகிறார்கள். இது என்றும் இவ்வாறே. இவர்களிடம் எவரும் பேசமுடியாது.
மிகவிரிந்த ஒரு புனைவுலகை நான் உருவாக்கியிருக்கிறேன். வரலாற்றை மீட்டெழுதியிருக்கிறேன். மெய்யான இடதுசாரிகளும் தலித்சிந்தனையாளர்களும் அதைநோக்கி வந்துகொண்டேதான் இருப்பார்கள். அதை ஏற்றும் மறுத்தும் ஆராய்வார்கள். இன்னும் சிலநூறாண்டுகளுக்கு.
ஜெ
***