விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்- கடிதங்கள்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்

அன்பு ஜெ. வணக்கம்.

நலமாயிருக்கிறீர்களா? உங்கள் துணைவியாரின் உங்கள் மகாபாரதம் பற்றிய விரிவான விளக்கவுரைகளைக் கேட்டேன். ரொம்பவும் நிதானமும், பகுத்தாயும் திறனும், சொற்செட்டும் அவர்களுக்குக் கைவந்திருக்கிறது. மலேசியாவில் பேய்ச்சி நாவல் பற்றி அவர்கள் பேசும்பொழுதுகூட ஒரு சிறு பதட்டம் கூடவே வந்து கொண்டிருந்தது. இப்போது மிகுந்த நிதானமும், திடமான வார்த்தைகளுமாய் அவர்கள் விவரிக்கும் பாங்கு திருப்தியாய் இருந்தது. சகோதரிக்கு ஒரு நல்ல முகராசியிருக்கிறது. மங்கலமான ராசி அது. உங்களை விரும்பி ஏற்றவர்களில்லையா? எனவே அது பொலிகிறது முகத்தில். மனசுக்கு மிகுந்த மகிழ்ச்சி. நிற்க…சொல்ல வந்த விஷயம் வேறு.

ஏழு புத்தகங்கள் விஷ்ணுபரம் வெளியீடு என்று எம்.செந்தில்குமார் பதிவிட்டிருக்கிறார் முகநுலில். அதை அப்படியே வாங்கிப் படிக்க ஆவல். மொத்த விலை… வங்கி விபரம்… ஃபோன் எண். பதிப்பக முகவரி… தாருங்கள். விஷ்ணுபுரம் என்று பெயர் இருப்பதனால் உங்களது சொந்தமானதோ என்று நினைக்கிறேன். உடனே பணம் அனுப்புகிறேன். தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.

உங்களின்

உஷாதீபன்

***

அன்புள்ள உஷாதீபன்

என் நண்பர்கள் மூவரின் முயற்சி இது. நான் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் பங்கு உள்ளது. முதலில் புதிய மின்னூல்களை வெளியிடுவதுதான் திட்டம். பிறகு அச்சு நூல்கள். எதிர்காலத்தில் தேவையெழுமென்றால் என் எல்லா நூல்களும் ஒரே வெளியீட்டு நிலையத்தில் இருந்து வரவேண்டும் என்பது எண்ணம்.

பெரிய இலாபநோக்கமெல்லாம் இல்லை. இன்று அச்சுநூல்களை வாங்குவோர் குறைந்து பெரிய பதிப்பகங்களே அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. மின்னூல்களை உடனே நகலெடுத்து வினியோகம் செய்யும் கும்பலும் தீவிரமாக உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான என் தனிவாசகர்களை நம்பி இதை ஆரம்பித்திருக்கிறோம்

ஜெ

***

அன்புள்ள ஆசானுக்கு,

நலம் தானே? மென்பொருள் எழுதுவது எனக்குப் பிடித்திருந்தாலும் தற்போதுள்ள நவீன கார்ப்பரேட் உலகில் நீங்கள் சொல்வது போல் எந்தச் செயலையும் தொடக்கம் முதல் இறுதி வரை செய்து, அந்த முழுமை அளிக்கும் நிறைவு கிடைக்காது என்பது ஒரு சோர்வாகவே என்னுள் இருந்தது. சென்ற வருடம் கொரோனா ஆரம்பிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஓவியம் கற்றுத்தரும் வகுப்புகளில் சேர்ந்தேன். சில அடிப்படைகள் புரிந்தது. அதற்குள் கோவிட் காரணமாக வகுப்புகள் மூடப்பட்டன. மீண்டும் வகுப்புகள் தொடங்க காத்து கொண்டு இருக்கிறேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் கற்ற சில அடிப்படைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து வரைந்து கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் படித்த தங்களின் வண்ணம் சிறுகதை மற்றும் குமரித்துறைவி குறுநாவல் என் மனதில் எழுப்பிய காட்சிகளை வரைய முயற்சித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை. இத்துடன் படங்களை இணைத்துள்ளேன். இது ஆரம்பம் மட்டுமே, செல்ல வேண்டிய தூரம் அதிகம். நன்றி.

அன்புடன்,

மகேஸ்வரி

நியூஜெர்சி

***

அன்புள்ள மகேஸ்வரி

ஓவியம் நன்றாக உள்ளது. தொடர்ந்து வரையலாம். நிலக்காட்சிகளை இன்னும் தகவல்களுடன் வரையலாமென நினைக்கிறேன்.

ஜெ

 

[விளம்பர வடிவமைப்பு கீதா செந்தில்குமார்]

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள்
பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா
முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது
தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்

முந்தைய கட்டுரைஆன்மிகக் கட்டுரைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇறகிதழ் தொடுகை