‘வெண்முரசு’ நாவல் தொடரில் 15 ஆவது நாவல் ‘எழுதழல்’. இது வஞ்சத்தின் தழல். ‘எழுதழல்’ என்ற சொல் தமிழ் இலக்கண அடிப்படையில், முக்காலத்தைக் குறிக்கும் ‘வினைத்தொகை’யில் அமைந்துள்ளது. குந்தி-பாண்டு, திரௌபதி-பாண்டவர்கள், உத்தரை-அபிமன்யூ ஆகிய மூன்று இணைகளை நாம் மூன்று காலங்களாகக் கொண்டால், இது, ‘மூன்று தலைமுறையினரின் அடங்காச் சினத்தின் தழல்’ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
உப பாண்டவர்கள் ஒன்பதுபேர், உப கௌரவர்கள் ஏறத்தாழ 1000 பேர், உப யாதவர்கள் 80 பேர், கர்ணனின் மகன்கள் 10 பேர் என இளைய தலைமுறையினரின் எழுச்சியை இந்த நாவல் வெளிப்படுத்தியுள்ளது.
குந்தியின் வஞ்சம் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து, திரௌபதியிடம் அது கனல்கொண்டு, உச்சம்பெற்று, உப பாண்டவர்களின் உள்ளத்தில் தோன்றா நெருப்பாகித் தழலாகி, நீட்சிப்பெற்று, நின்றாடுகிறது. உப யாதவர்களிடம் குலம், குடி, முடி சார்ந்த பூசல் பெருந்தழலாகித் தாண்டவமாடுகிறது. இந்த இரண்டு தழல்களின் எழுச்சி பற்றியதே இந்த நாவல்.
அஸ்வத்தாமன் அர்சுணனின் மூத்த மகன் சுருதகீர்த்தியிடம்,
“இளமைந்தரைப் பார்க்கையில் எல்லாம் நெஞ்சு பதைக்கிறது. நாங்கள் வாழ்ந்துவிட்டோம். செல்வதெனில்கூட இப்புவியில் பெரிதாக எதுவும் எஞ்சவில்லை. ஆனால் அஸ்தினபுரியின் நூற்றுவரோ இந்திரப்பிரஸ்தத்தின் ஐவரோ போர் தொடுப்பது ஒருவரோடொருவர் அல்ல. இளந்தளிர்களென எழுந்துவந்திருக்கும் இக்குடியின் இளையோரிடம். ஆம், தளிர்பொசுக்கும் காட்டெரி இன்று மூள்வது.”
என்று கூறுகிறார். உண்மையிலேயே இங்கு எழுந்துள்ள இந்தத் தழல் இளந்தலைமுறையைச் சுட்டெரிக்கும் தழல்தான்.
இளைய யாதவர் எல்லோராலும் தனித்துவிடப்படுகிறார். துரியோதனன் தான் அளித்த வாக்கைத் தவறிவிட்டார். பாண்டவர்களின் குரலுக்குச் செவிசாய்க்க யாருமே இல்லை. ஷத்ரியர்கள் அனைவரும் இளைய யாதவரின் புதிய வேதத்தை எதிர்ப்பதற்கும் பாண்டவர்கள் தமக்குரிய நிலத்தைப் பெறுவதற்கும் ‘போர்’ ஒன்றே தீர்வு என்ற நிலை ஏற்படுகிறது. பாரதவர்ஷமே இரண்டு அணியாகத் திரளவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. நடக்க உள்ள பெரும்போரில், ‘யாருக்கு யார் துணை?’ என்ற வினாவே இந்த நாவலுக்கு அடிப்படையாகிறது.
‘பட்ட காலிலே படும் கெட்டகுடியே கெடும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, பாண்டவர்களின் 13 ஆண்டுகாலக் கடும்வாழ்வுக்குப் பின்னரும் அவர்களுக்கு நல்லது என ஏதும் நிகழவே இல்லை. அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களின் எழுச்சியைத் தடுக்கும் தடையாகவே அமைந்துவிடுகின்றன. ஒவ்வொருவரும் போர் வேண்டாம் என்று மனத்தளவில் நினைத்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அவர்களைப் போரை நோக்கியே இழுத்துச் செல்கின்றது.
உப பாண்டவர்கள் ஒன்பதுபேரும் ‘இளமைசூடிய பாண்டவர்களே!’ என்று எண்ண வைத்துவிடுகிறார் எழுத்தாளர். தர்மரின் மகன்கள் பிரதிவிந்தியனும் யௌதேயனும் பீமனின் மகன்கள் சுதசோமனும் சர்வதரும் அர்சுணனின் மகன்கள் சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் நகுலனின் மகன்கள் நிர்மித்ரனும் சதானீகனும் சகதேவனின் மகன் சுருதவர்மனும் அவரவர் தந்தையின் இளம்வடிவாகவே அகத்திலும் புறத்திலும் திகழ்கின்றனர்.
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் சொல்லாளுமைக்கு ஒரு சான்றாகச் ‘சோரி’ என்ற சொல்லைக் குறிப்பிட விரும்புகிறேன்.
துரியோதனன் சல்லியரிடம் கூறும்போது,
“இது போர்வஞ்சினம் அல்ல. நாம் நம் குலமாளும் சொல்லான வேதத்திற்கு அளிக்கும் சோரியுறுதி.”
என்றான்.
‘சோரி’ என்றால் ‘குருதி’ என்று பொருள். இந்தச் சொல்லைக் கம்பர் கம்பராமாயணத்தில் ஏறத்தாழ 16 இடங்களில் கையாண்டுள்ளார்.
எழுத்தாளர் நாவல் கதைமாந்தரை வர்ணிக்கும் தொடரமைப்புச் சிறப்புக்கு ஒரு சான்றினைக் கூற விரும்புகிறேன்.
இளைய யாதவர் 14 ஆண்டுகளுக்குப் பின்பு அவைபுகுகிறார். அப்போது அவரை வர்ணிக்கும் எழுத்தாளர்,
“செம்பட்டு சுழற்றி அதன்மேல் முத்தாரம் சுற்றி வைரமலர்கள் பதித்து இப்புவியின் முதன்மைப் பெருஞ்செல்வம் என்று அமைத்த மூன்றடுக்கு மணிமுடியின் மீது வானிலிருந்து மிதந்து வந்து விழுந்து மெல்ல தைத்து நிற்பதுபோல் மயிற்பீலி காற்றில் அசைந்தது. பொன்னென்றும் மணியென்றும் அணியென்றும் ஆடையென்றும் குலமென்றும் குடியென்றும் அரசென்றும் அறமென்றும் அவரை இங்கிருக்க வைக்கும் அனைத்துக்கும் அப்பால் சிறகு என எழுந்து அவரை வானில் எடுத்துச்செல்லும் ஓர் அழைப்பு அது.”
என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுதழலுக்கு முந்தைய நாவல்களில், ‘அபிமன்யூ’ வெறும் சொல்லாகவே மட்டுமே வாசகருக்கு அறிமுகமாகிவந்தான். இந்த நாவலில் அவனின் அகத்தையும் புறத்தையும் அழகுறக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.
இளமைக்கே உரிய துள்ளலும் துடிப்பும் மூத்தோர் சொல் மீறலும் தொலைநோக்கற்ற எளிய திட்டமிடல்களும் தனக்கான பாதையைத் தானே வகுத்தலும் தேர்ந்தெடுத்தலும் ஆகிய அனைத்தும் அவனிடம் உள்ளன. இவற்றோடு, புகழுக்காக உயிரைக் காணிக்கையிடத் தயங்கா மனநிலையும் அவனிடம் உள்ளது.
தன்னுடைய இலக்கற்ற பெருவிழைவுகளால் தனக்கென வெற்றிகளையும் (குறிப்பாக, சிருங்கபிந்து எனும் ஊரைக் கைப்பற்றுதல்) தோல்விகளையும் (குறிப்பாக, பாணாசுரனிடம் நேருக்கு நேர் போர்புரிந்து தோற்றல்) சேர்த்துக் கொள்கிறான்.
சாத்யகி அபிமன்யூவிடம் கூறுவதை இங்கு இணைத்து நோக்கலாம்.
“ஆழமறியா நீர்நிலையில் தலைகீழாகப் பாய்வதற்குப் பெயர் வீரமாக இருக்கலாம், அறிவுடைமை என்று இருக்க வாய்ப்பில்லை”.
இந்த அறிவுரை காலந்தோறும் பெரும்பாலும் மூத்தோரால் இளையோருக்குச் சொல்லப்படுபவைதான். ஆனாலும் ‘இளங்கன்று பயமறியாது’ என்பதை ஒவ்வொரு முறையும் இளையோர் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அபிமன்யூவால் உப கௌரவர்களிடமும் உப யாதவர்களிடமும் எளிதாகத் தன்னை இணைத்துக்கொள்ள முடிகிறது. அதைவிட, அனைத்து மூத்தோரிடமும் எந்த நிலையிலும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு, அவர்களின் மனத்தில் குடியேறிவிட முடிகிறது. இளைய யாதவரின் அகத்தையும் அர்சுணனின் புறத்தையும் கொண்டவனாக அபிமன்யூவைப் படைத்திருக்கிறார் எழுத்தாளர். அதை அவர்,
“அர்ஜுணனும் இளைய யாதவரும் அன்றி எவரும் அபிமன்யூவுக்கு ஒரு பொருட்டே அல்ல எனப் பிரலம்பன் உணர்ந்தான். இளைய யாதவருடன் அவன் பேசுகையில் அவ்விழிகளை நோக்கினால் அக்கணமே பாய்ந்து அவரை அவன் தழுவிக்கொள்ளப் போகிறான் என்று தோன்றும். ஒரு சொல்லுக்காகக் காப்பவன் போல. அர்ஜுணனின் கதைகளைக் கேட்கையில் மட்டும் அவன் முகம் பிறிதொன்றென்று ஆகும். அவன் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் மாறி மாறி அகம்நடித்துக் கொண்டிருப்பவன். அவனுள் இருக்கும் அந்தப் பிறிதொருவன் பிறரை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளாதவன். அனைவருக்கும் மேல் எழுந்து நின்று குனிந்து நோக்கும் பேருருவன்.”
என்று கூறுவதிலிருந்து உய்த்துணர முடிகிறது.
பாணாசுரன் – அபிமன்யூ போர் குறிப்பிடத்தக்க ஒன்று. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இளைய யாதவர் தன்னுடைய இருளுக்குள் இருந்து வெளியே வருகிறார். பாணாசுரனைக் களத்தில் வென்றாலும் தன்னுடைய புதிய வேதத்தை ஏற்கச் செய்ய, அவர் அவனிடம் தனிமையில் உரையாட வேண்டியிருக்கிறது. அவனைக் குகைக்கு அழைத்துச் சென்று, பேருண்மையை விளக்குகிறார்.
இதேபோலத்தான் மகத மன்னன் ஜராசந்தனை வீழ்த்துவதற்காகப் பீமன், அர்சுணன் ஆகியோரை அழைத்துச் சென்ற இளைய யாதவர் இறுதியில், தோட்டத்தில் ஜராசந்தனைத் தனிமையில் சந்தித்து உரையாடுகிறார். அதன் பின்பே ஜராசந்தன் உயிர்விடுகிறான்.
இளைய யாதவர் தன்னுடைய எதிரிகளை அவர்களின் இறுதிக்கணத்துக்குச் சற்று முந்தி தனித்துச் சந்திப்பதை வழக்கமாகக் கொள்கிறார் என்றே கருதமுடிகிறது. அவர்களின் ஆன்மாவுடன் உரையாடி, மெய்மையை உரைக்கிறார் போலும். ஆனால், அவர் சிசுபாலனிடம் அவ்வாறு செய்யவில்லை. சிசுபாலனுக்குத்தான் நூறுமுறை மன்னிப்புக்கொடுத்துவிட்டாரே! அதற்கு மேலுமா தனிச் சந்திப்புத் தேவை? என்றும் எண்ணத்தோன்றுகிறது.
பலராமரின் மனநிலையை இந்த நாவலில்தான் நம்மால் மிகச் சரியாக உய்த்துணர முடிகிறது. அவரிடம் எப்போதும் ‘செயல்படுதல்’ என்பது மட்டுமே முனைப்புடன் இருக்கிறது. ‘திட்டமிடுதல்’ என்பது, அவரிடம் இல்லவே இல்லை. ‘சினத்தோடு எழுபவர் இழப்போடு அமர்கிறார்’ என்பர். அது முற்றிலும் பலராமருக்கே பொருந்தும். அதனாலேயே அவர் அஸ்தினபுரியுடன் இணைகிறார், பின்னர் தன்னிலத்தையும் விட்டுக் காடேகுகிறார்.
‘ஆசிரியர்-மாணவர் உறவு’ என்பது, எவ்வளவு உறுதியான பிணைப்புடையது என்பதைப் பலராமர்-துரியோதனன் உறவிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. தன் மாணவரிடம் தனக்கென எதையும் கோரத் தயங்கும் ஆசிரியர். தன் ஆசிரியருக்காக எல்லாவற்றையும் கொடுக்கத் துணியும் மாணவர். லட்சிய ஆசிரியர்; லட்சிய மாணவர்.
இளைய யாதவரும் கணிகரும் நிகழ்த்தும் அறிவார்ந்த சூழ்ச்சிகள் வாசகரை வியப்பிலாழ்த்துகின்றன. அபிமன்யூவின் மணநிகழ்வுக்காக வரும் சல்லியரை அஸ்வத்தாமனைக் கொண்டு வழிமறித்து, துரியோதனனைச் சந்திக்க வைக்கும் கணிகர் அதிசூழ்ச்சி. இதனை உய்த்துணர்ந்து, உப பாண்டவர் இருவரைத் துரியோதனனிடம் தூதனுப்பும் இளைய யாதவரின மறுசூழ்ச்சி. சல்லியருடனான தன்னுடைய சந்திப்பினை உப பாண்டவர்களின் முன்னிலையிலேயே நிகழ்த்தும் துரியோதனனின் உளவிரிவு.
இந்த நாவலில், சிறு சிறு சூழ்ச்சிகளும் நெடுந்தொலைவுத் தூதுகளும் சிறு போர்களும் உப பாண்டவர்கள், உப யாதவர்கள், கர்ணனின் மகன்கள் ஆகியோரைக் கொண்டே நிகழ்த்தப் பட்டுள்ளன. அந்த வகையில், அடுத்த தலைமுறையினரும் மகாபாரதப்போருக்குள் நுழையும் அணிவாயிலாக இந்த நாவல் அமைந்துள்ளது எனலாம்.
குந்திதேவி மகாபாரதப்போர் நிகழ எவ்வகையில் முக்கியமோ அதே வகையில் தேவகி அந்தப் போரின் அழிவைத் தளர்த்துவதற்கு முக்கியமானவராகிறார். யாதவர்கள் தங்களுக்குள் போரிடக்கூடாது என்றும் யாதவர்களுக்கு எதிராக இளைய யாதவர் போரிடக்கூடாது என்றும் சத்தியம் பெற்றுக்கொள்கிறாள். குந்தியும் தேவகியும் யாதவர் குலத்தவர்களே என்பதை நாம் இங்கு மறக்க வேண்டியதில்லை.
வெண்முரசு தொடர் நாவல்களில் பெரும்பாலும் ஏதாவது ஒன்று குறியீடாக வந்தே தீரும். இந்த நாவலில் கழுதைப் புலி குஹ்யசிரேயஸ் இடம்பெறுகிறது. அது உப பாண்டவர்களிடம் உரையாடுகிறது. அது அவர்களிடம் குருதிப் பசி குறித்துக் குறிப்புணர்த்தி மீள்கிறது.
இளைய யாதவரின் மனைவிமார்களுக்கு இடையில் நிகழும் குல, குடி, முடி சார்ந்த பூசல்களே, பின்னாளில் அவர்களின் மகன்கள் மத்தியிலும் விரிவாக்கம் கொள்கின்றன. இளைய யாதவரின் எட்டு மனைவியரும் மனத்தளவில் ஒருவருக்கொருவர் முரண்பட்டு எட்டுத் திசையில் நின்றாலும் இளைய யாதவர் நேரில் இருக்கும்போது, அவர்கள் அனைவரும் அவரின்பொருட்டே, அவருக்காகவே ஒரே மனநிலையினைக் கொள்கின்றனர். எட்டு மனைவியருக்கும் அவரே நடுநாயகமாக, திசைநடுவே நின்று, அவர்களை இணைக்கிறார். அவர் இருக்கும்போது மட்டுமே அவர்கள் எண்வரும் ஓர்மைகொள்கின்றனர். எட்டுப்பேரும் இணைந்து ஒரு ராதை என்பதுபோல.
இளைய யாதவர் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் அவைபுகும் காட்சி மிகச் சிறப்பானது. தன் மகன்கள் உள்ளிட்ட அனைவரும் அவைக்கு வர மறுத்துவிட்ட நிலையில், அவர் தன்னுடைய மாற்றுத்திறனாளியான மகன் முரளியை மட்டும் விரும்பி அழைத்துக் கொள்வது உருக்கமான காட்சி.
யாருமே அவைக்கு வராத சூழலில், மாடுகளை மாலைநேரத்தில் ஒன்றுதிரட்டுவதற்காக இசைக்கப்படும் குழலிசையைத் தன் மகள் மயூரியைக் (ராதை) கொண்டு இசைக்கச் செய்து, மக்களை அவைக்குத் திரட்டும் இளைய யாதவரின் மதிநுட்பம் வியக்கச் செய்கிறது. ஆம்! அவரே சிறந்த மேய்ப்பர்.
ஏன் இளைய யாதவராலும் யாதவர்குலங்களை இணைக்க இயலவில்லை?. அவர் தோற்கும் புள்ளி அதுவாகத்தானே இருக்கிறது? இந்த வினாவுக்குரிய விடையாக ஸ்ரீதமர் அபிமன்யூவிடம்,
“செங்கோல் ஏந்துவதும் மணிமுடி சூடுவதும் அரியணை அமர்வதும் எளிது. அறத்தின் கோலேந்தி, புகழ் முடி சூடி, காலத்தில் அமர்வது மிகக் கடினம். பேரரசர்கள் அவ்வாறுதான் உருவாகிறார்கள். ஒரு சிற்றரசைப் படைவல்லமையால் ஆளலாம். ஆணை சென்றுசேர ஒரு மாதம் எடுக்கும் பெருநிலப்பரப்பை ஆள புகழ்வல்லமை மட்டுமே உதவும். ஆயிரம் குலங்களை இணைக்க அறம் ஒன்றாலேயே முடியும்.”
எனக் கூறுவதனைக் கொள்ளலாம்.
ஆம்! அந்த அறத்தின் மானுட வடிவாகவே பாண்டவர்கள் இருப்பதாலும் அந்த அறத்தின் இறைவடிவமாக இளைய யாதவர் இருப்பதாலும்தான் பாண்டவர்களுக்கும் இளைய யாதவருக்கும் நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டுள்ளது. அறம் இறைவனாக வந்தாலும் ஆயிரம் குலங்களை இணைக்க ‘ஊழ்’ இடம்கொடுக்க வேண்டும்.
உண்மையில், நாம் அனைவருமே ஊழைப் பின்தொடர்பவர்களாகத்தான் இருக்கிறோம். இதனைப் பிரலம்பன் சுபாலரிடம்,
“ஊழ் உறுதியான காலடிகளுடன் முன்செல்கிறது. நாம் அதன்மேல் அமர்ந்திருக்கிறோம். அக்காலடிகளை நம்புவோம்.”
என்று கூறுவதைக் கொண்டு உணரலாம்.
இந்த நாவல் முழுக்கவே ஒருவித ‘துள்ளல்’ நடையில்தான் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்ல, காட்சிகளின் நகர்விலும் கதைமாந்தர்களின் உரையாடல்களிலும் ஒருவித விரைவுத் தன்மையைக் காணமுடிகிறது. இதற்குக் காரணம், இந்த நாவல் முழுக்க முழுக்க அடுத்த தலைமுறையினரைப் பற்றியது (குறிப்பாக உப பாண்டவர்கள், உப யாதவர்கள்) என்பதால்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.
– முனைவர் ப. சரவணன், மதுரை
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்