‘சொல்வளர்காடு’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 11ஆவது நாவல் ‘சொல்வளர்காடு’. என்னைப் பொருத்தவரை, அகத்தில் எழும் ஒற்றைச்சொல்; அகத்தேடலின் முதற்துளி; நெடும்பயணத்தின் முதற்காலடி ஆகியன ஒன்றிணைந்து, பெருகி வளர்ந்த புலமைக்காடுதான் ‘சொல்வளர்காடு’. பல்வேறு காடுகளில் அமைந்த, வெவ்வேறு இறுதி முடிவுகளை முன்வைக்கும் வேதக்கல்விக் குருகுலங்களின் பெருங்கூட்டமே ‘சொல்வளர்காடு’.

‘அறிதல்’ சார்ந்த சொல்லாடல்கள் மட்டுமே ஏற்றப்பட்ட பெரும்வண்டி இந்தச் ‘சொல்வளர்காடு’ நாவல். நம்முடைய வாழ்நாள் அறிதல்களையும் முன்முடிபுகளையும் ஒட்டு மொத்தமாகவே கவிழ்த்தி, நமக்குள் புதிய சிந்தனைகளையும் புதிய வகையான அறிதல் முறைமைகளையும் புதிய தத்துவத்தைக் கண்டடையத் தக்க உரையாடல்களையும் நமக்குள் அடுக்கும் பெரும்பணியை இந்த நாவல் செய்து முடித்துள்ளது. அதனாலேயே, இந்த நாவலைப் படித்து முடித்ததும் நம் உடல் முழுக்க  அறிவுசால் தத்துவக் கருத்துகளை அள்ளி அள்ளிப் பூசிக்கொண்டது போல ஓர் உளமயக்கு எழுகிறது.

‘வெண்முரசு’ நாவல் தொடரில் ‘நீலம்’ நாவலைப் படிக்க வாசகருக்குத் தனிவகையான வாசிப்பு மனநிலையும் தேர்ந்த சொற்பயிற்சியும் தேவை. அதேபோல, இந்த நாவலைப் படிக்கவும் தத்துவம் சார்ந்த, பல்வேறு அறிதல் முறைகள் சார்ந்த அடிப்படை புரிதல்களும் பயிற்சிகளும் நமக்குத் தேவையாக உள்ளன. அவை இல்லையெனில், இந்த நாவல் வெறும் சொற்குவியலாகத்தான் நமக்குத் தோன்றும். இருப்பினும் வேறொரு வழியும் உள்ளது.

இந்த நாவலில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள பின்வரும் பத்திகளை இணைத்து, வேதங்கள் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். பவமானன் தர்மனிடம் கூறும் சில கருத்துகள் பின்வருமாறு –

வேள்விகள் என்றுமிருந்தன. நாகர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் அரக்கர்களும்கூட வேதமோதி அவியிட்டனர். நால்வேதங்கள் என அவை எல்லையைக் கட்டப்பட்டபோது, அவை முறைப்படுத்தப்பட்டன. இன்று அதர்வவேதத்துடன் மட்டுமே நாகர்களும் கிராதர்களும் கொண்டிருந்த வேதஉறுப்புகள் இணைந்துள்ளன….

வேதவேள்விகளை பிராமணங்கள் வகுத்தன. வேதச்சொல்லை ஆரண்யகங்கள் விளக்கின. இன்று என்ன நிகழ்கிறது இக்கல்விநிலைகளில்? எந்த எரி எச்செயலுக்கு, எந்த வகை எரிகுளம், நோன்பென்ன, நெறியென்ன, ஏன் அவியென்ன விறகென்ன என்றுகூட முற்றாக வகுத்துவிட்டிருக்கின்றனர்.?…

ஒன்றில் வேதங்களைச் சொல்லெண்ணிக் கற்கிறார்கள். வேள்விச் சாலைகளைக் கூடுகட்டும் குளவிகளைப்போல அச்சு மாறாமல் கட்டுகிறார்கள். வேதத்தைக் காட்டுச்சீவிடுகளைப் போல ஒற்றையிசையாகப் பாடுகிறார்கள்….”

“இரண்டாவது எல்லையில், இவர்களை முற்றிலும் மறுத்து அமர்ந்திருக்கிறார்கள் சார்வாகர்கள். ‘வேதமில்லை, வேள்வி தேவையில்லை’ என்கிறார்கள். ‘இன்பமே விழுப்பொருள்; அதை அடையும் வழியே அறிவு; அதைக் காலஇடத்தருணத்தில் கண்டடைவது மட்டுமே கல்வி’ என்கிறார்கள்….

 “மூன்றாம் எல்லையில் அருமணிதேரும் வணிகனைப்போல வேதச் சொல்லை எடுத்து ஒளியில் நோக்கி ஆராய்கிறார்கள். அதன் ஒவ்வொரு பட்டையையும் கணக்கெடுக்கிறார்கள். அருமணிகளேதான். எவருக்கும் எப்பயனும் இல்லாத நுண்மைகள். ஒரு குவளை நீரோ ஒருபிடி உணவோ ஆகாத பேரழகுகள். பிரக்ஞையே பிரம்மம். ஆத்மாவே பிரம்மம். இவையனைத்திலும் உறைகிறது இறை. அது நீயே. எத்தனை பெருஞ்சொற்றொடர்கள்! எத்தனை ஊழ்கச்சொற்கள்! அவை இங்கே காட்டுக்குள் எவ்வுயிரும் அண்டாத மலையுச்சிச் சுனைபோல் ஊறி, நிறைந்து கொண்டிருக்கின்றன….

மூன்றுக்கும் அப்பால் ஒன்று இருக்கவேண்டும். இல்லையென்றால் உருவாகி வரவேண்டும்….”

“வேதமெய்நூல்களின் சிறப்பே அவை மாற்றற்கரிய உறுதிகொண்டவை என்பதுதான். அதனால்தான் அவை வென்று நின்றன. மானுடம் சிதறிப்பரவிய காடுகளிலிருந்து பாரதவர்ஷத்தைப் படைத்தெடுத்தன. அவற்றின் தீங்கும் அவ்வுறுதியே. வைதிகன் யானைமேல் செல்பவன் போல. அவன் எந்த வாயிலிலும் தாழ்ந்துசெல்ல முடியாது என்று சொல்லப்படுவதுண்டு. வேதத்தின் உறுதியுடன் காவியப்பாடல்களின் நெகிழ்வுடன் புதியவேதம் எழவேண்டும்.

பவமானன் தர்மனிடம் பேசும்போது வேதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். வேதம் சார்ந்த நடவடிக்கைகளை, வேதம் சார்ந்த செயல்வடிவங்களை, அவற்றின் பயன்களைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்.

இங்குச் சொல்லெண்ணி இவர்கள் கற்பது மாறாது இவற்றை நிலைபெறச்செய்யும் ஆணைகளை மட்டுமே. அவற்றை நாநுனியில் ஏற்றிக்கொண்டவன் பெருவைதிகனாக இங்கிருந்து புறப்பட்டு நகரங்களுக்குச் செல்கிறான். அரசவைகளிலும் ஊர்மையங்களிலும் அமைந்து நற்கொடை கொள்கிறான். வேதம் ஓதி வாழ்த்துரைக்கிறான். விதைப்புக்கும் அறுவடைக்கும் திருமணத்திற்கும் பிறப்புக்கும் தருணம் குறிக்கிறான். போருக்கு எழுபவர்களின் வாள்தொட்டு அருள்புரிகிறான். இவையே வேதமெய்யறிவு என்றால், வேதமில்லாப் பழங்காலத்துக்கு மீள்வதே உகந்ததாகும்.

தத்துவத்தை நோக்கிய தருக்க உரையாடல்களைப் பற்றித் தருமர் நகுலனிடம் கூறும் செய்திகள் மிக முக்கியமானவை.

“தத்துவத்துடன் முரண்பட்டு மோதாதவர்களைத் தத்துவம் தொடுவதே இல்லை. எந்தத் தத்துவக் கொள்கையையும் நன்னெறியென்றோ, மூத்தோர் சொல்லென்றோ எடுத்துக்கொண்டால், அது பொருளிழந்து, எளிய சொல்லாட்சியாக மாறி நின்றிருப்பதைக் காணலாம். அதை வியந்து வழிபடலாம்; கற்று நினைவில் நிறுத்தலாம்; சொல்லி உரை அளிக்கலாம். ஆனால், காற்று பாறைமேல் என அவை அவனைக் கடந்துசென்றுகொண்டிருக்கும். இளையோனே, எதிர்விசையால்தான் தத்துவம் தன் அனைத்து ஆற்றல்களையும் வெளியே எடுக்கிறது. முன்னின்று மோதும்போது மட்டுமே அதற்கு விழிகளும் பற்களும் உகிர்களும் சிறகுகளும் முளைக்கின்றன.

“ஒரு தத்துவக்கூற்றைக் கொலையாணையை எதிர்கொள்ளும் குற்றவாளி போல, காதலியின் குறியிடச் செய்திபோல ஒருவன் எதிர்கொள்கிறான் என்றால், அவன் மட்டுமே உண்மையில் தத்துவத்தை அறிகிறான். அவனுக்குத் தத்துவம் வெற்றுச்சொற்கள் அல்ல; பொருள்கூட்டி நாற்களமாடல் அல்ல; அது, அவனுக்கு வாழ்க்கையை விடவும் குருதியும் கண்ணீரும் சிரிப்பும் செறிந்தது. இவர்கள் காண்பவை கல்விழிகளுடன் அமர்ந்திருக்கும் தெய்வச்சிலைகளை மட்டுமே. அவன் அவற்றைக் குருதிபலி கேட்கும் கனிந்து அருளும் விண்நோக்கித் தூக்கிச் செல்லும் தெய்வங்களாகக் காண்கிறான். அவன் இக்கொலைக்களிற்றை வென்று மத்தகத்தின்மேல் ஏறிக்கொள்வான் அல்லது அதன் காலடியில் மடிவான்

தத்துவ விவாதத்தில் பங்கெடுத்து வெல்பவரின் தகுதியாக நாம் சாந்தீபனி முனிவர் கூறவதனைக் கொள்ளலாம்.

 “பிரம்மன் படைத்தவற்றில் பெரிய காளைக்களிறொன்று இருந்தது. அதன் ஒரு கொம்பிலிருந்து மறுகொம்பு வரைக்கும் ஆயிரம்கோடிக் காதம் தொலைவு. அப்படியென்றால், அதன் வலக்கொம்பிலிருந்து எழுந்து பறக்கும் செம்பருந்து எத்தனை காலம் கழித்து இடக்கொம்பைச் சென்றணையும்?” இங்கிருந்து அங்குவரை ஒற்றைச் சிறகடிப்பில் செல்லும் ஒரு பறவையால் மட்டுமே இங்கு எழும் அத்தனை எண்ணங்களையும் ஒன்றெனத் தொகுக்க முடியும்.

‘சொல்வளர்காடு’ நாவலுக்கு இரண்டு சிறப்புக் கூறுகள் உள்ளன.

ஒன்று – பொதுவாகவே ‘வெண்முரசு’ நாவல் தொடரில் சூதர்களும் பாணர்களும் நாவலின் கதையொழுக்குக்கு ஏற்ப தொல்கதையைக் கூறுவார்கள். இந்த நாவலில் முனிவர்களும் சில இடங்களில் எழுத்தாளரும் கதை கூறுகிறார்கள்.

இரண்டாவது – கதைப் பின்னல் சார்ந்தது. வழக்கமாக ‘வெண்முரசு’ நாவல் தொடரில் ‘திடீர்க்கதைப் பாய்ச்சல்’ நிகழும். இந்த நாவலில் பெண்களின் கூந்தல் ஜடைப்பின்னல் போல் மூன்று சரடுகள் (பாண்டவரின் வனவாசம், சூதாட்டத்திற்குப் பின்னர் அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை, இளைய யாதவரின் குருகுலக்கல்வியும் சூதாட்டத்தின் போது துவாரகையில் நடந்தவையும்) மாறி மாறி கதை நகர்த்தப் பட்டுள்ளது.

இளைய யாதவரின் குருகுலக்கல்வி மற்றும் துவாரகை சார்ந்தவை பெரும் இடைவெளிவிட்டு வந்தாலும் அஸ்தினபுரி நிகழ்வுகள் சார்ந்தவை பிறரின் கண்ணோட்டத்தில் தொகுத்துச் சொல்லப்படுவதாக மாறி மாறி அமைக்கப்பட்டுள்ளன. பாண்டவரின் ‘வனவாசம்’ ஒவ்வொரு காடாகச் சொற்களைத் தொகுத்துக்கொள்வதன் வழியாகவே நிகழ்கிறது. அவர்களின் பின்னாலேயே அலைந்துதிரியும் வாசகரின் மனத்துக்கு ‘அஸ்தினபுரியின் நிகழ்வுகள்’ ஒரு நிழற்தங்கலாகவே உள்ளன.

யாதவர்களின் குடிப் பூசல், துவாரகை சார்ந்த நிகழ்வுகள், யாதவர்களை ஒன்றிணைக்க இளைய யாதவர் செய்யும் பெருங்கொலைகள், அதன் வழியாகப் பலராமர் இளைய யாதவரின் மீது கொள்ளும் அகப்பகை ஆகிய  அனைத்துமே நமக்கு இளைய யாதவரின் மீது கருணையையும் இரக்கத்தையுமே குவியச் செய்கின்றன.

அஸ்தினபுரி சார்ந்த நிகழ்வுகளுள் பலவற்றைக் ‘காலன்’ என்பவரின் வழியாகவே காட்சிப்படுத்துகிறார் எழுத்தாளர். ‘காலன்’ தான் கண்டவற்றை, தனக்கு எதிர் நின்று உரையாடியவர்களின் உளவியல் சார்ந்த மெய்ப்பாடுகளோடும் அப்போது அங்கிருந்த புறச்சூழலோடும் கலந்தே பாண்டவர்களிடம் உரைக்கிறார். அவை அனைத்தும் மிக நுட்பமாக எழுதப்பட்டுள்ளன.

குறிப்பாகக் காலன் குந்திதேவியைச் சந்தித்துப் பேசியபோது, குந்திதேவியிடம் அவன் கண்டடைந்த உளவியல் சார்ந்த மெய்ப்பாடுகள் அனைத்துமே வாசகருக்குத் தங்களின் யதார்த்த வாழ்க்கையில் நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களின்போது பெரிதும் பயன்படத்தக்கவையே.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் அவ்வப்போது தனிப்பேச்சிலும் மேடைப் பேச்சிலும், “நகைச்சுவை இல்லாமல் தத்துவ விவாதம் நடைபெறலாகாது” என்றும் “அவ்வாறு நடந்தால் அங்குத் தத்துவம் கைநழுவியபடியே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

பாண்டவர்களுக்கு இடையில் நிகழும் தத்துவம் சார்ந்த உரையாடல்களுள் பீமனின் சொற்கள் மிக முக்கியமானவை. பீமனே நகைச்சுவையின் வழியாகவே தத்துவத்தின் மையத்தை எளிதில் அடையவல்லவர்.

பீமன் நகைச்சுவைக் குறும்பன்; தேர்ந்த ஞானி; பிரம்ம மாகிவந்தவன். அவனால் மட்டுமே அனைத்தையும் கேலியாகவும் உண்மையாகவும் எதிர்கொள்ள முடிகிறது. மனிதர்கள் அணியும் அக முகமூடிகளை அவ்வப்போது கிழித் தெறிபவனாகவும் பீமனே இருக்கிறார். குறிப்பாக அவர் பலமுறை தர்மனின் அகமுகமூடிகளைக் கிழிக்கிறார். அவருக்கு நிகரானவர் சகாதேவன். ஆனால், அனைத்தையும் சகித்துக்கொண்டு தன்னிலையில் உறைந்து நிற்கிறார். அதனால்தான் பெரும்பாலான இறுதி முடிவுகளைத் தர்மர் சகாதேவனைக் கேட்டே எடுக்கிறார். ஆனால், அதை தர்மர் பல நேரங்களில் முழுமையாகச் செயல்படுத்துவதில்லை என்பதுதான் அவரிடமிருக்கும் பெருங்குறை.

தர்மரிடம் நட்புக்கொள்ளும் ‘சூக்தன்’ என்ற குரங்குக்குட்டி இந்த நாவலில் ஒரு குறியீடாக இடம்பெற்றுள்ளது. அதுதான் ‘நாமறியாத நம் குழந்தைமையின் வெளிப்பாடோ?’ என்றுதான் என்னால் நினைக்க முடிகிறது.

அதை நாம் அடக்கிவைக்கும்போது, நாம் பிறராகித் தருக்கி நின்று, தடுமாறுகிறோம் (தருமர்). அதை அவிழத்துவிடும்போது நாம் நாமாகி, இயல்பாகவே நலமடைகிறோம் (பீமன்). ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘சூக்தன்’ இருக்கிறான். அதை அடக்கி வைக்கிறோமா அல்லது அவிழ்த்துவிடுகிறோமா என்பதில்தான் நமது புற அடையாளமும் நமது அகவிடுதலையும் இருக்கிறது.

இளைய யாதவர் தன் கூரிய நடுநிலையான சொற்களால் திரெளபதியின் உச்சந்தலையில் தட்டி (குட்டுவைத்து), அவளின் மனவெழுச்சியைச் சற்று அடங்கச் செய்துவிடுகிறார். மிக நுட்பமான சொல்லாடல் அது. பிறர் எதிர்பார்க்காத தளத்தில், கோணத்தில் அவர் சிந்தித்துப் பேசுகிறார். இந்தப் பகுதி எழுத்தாளரின் மிகச் சிறந்த நாவல் உரையாடல் அமைப்புக்குச் சான்று என்பேன்.

‘சூதாட்டத்தில் உன்னைப் பணையப்பொருளாக வைத்தார்கள், என்பதற்காகவே நீ வஞ்சினச் சூளுரைத்து, மிகப்பெரிய போரைத் தொடங்கி, அதில் எண்ணற்ற உயிர்களைப் பணையமாக வைத்துள்ளாய்’ என்ற கருத்தில் இளைய யாதவர் அவளிடம் பேசுகிறார்.

சூதாட்டக்களத்தில் அவமானப்படுத்தப்பட்ட திரௌபதியை எளிய பெண்ணாகவே கருதி, அவளின் மீது வாசகர்கள் பெரிதும் இரக்கம் காட்டி நிற்கும்போது (அதே இரக்கத்தைத்தான் திரௌபதியும் அங்கிருந்த எல்லோரிடமும் எதிர்பார்த்தாள்), இளைய யாதவர் அவளிடம் நீ ‘பேரரசி’ என்றும் அதனாலேயே நீ எளிய பெண் அல்லள் என்றும் கூறுகிறார்.

இளைய யாதவர் அவளிடம், அரசியல் சார்ந்து எத்தனையோ பேரரசர்கள் அவமானப்படுத்தப் பட்டுள்ளனர், எத்தனையோ அரசர்கள் தலை கொய்யப் பட்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்து, நீ அரசியலுக்குள் நிலைப்பட்ட பின்னர் ரத்தம் சிந்தவோ, அவமானப்படவோ ஏதும் இல்லை என்ற கோணத்திலும் இதில் ஆண், பெண் எனப் பிரித்து நோக்க வேண்டியதில்லை என்ற கருத்தாக்கத்திலும் அரசு, அரசியல் என்றே இதைப் பார்க்க வேண்டும் என்ற சிந்தனைத் தளத்திலும் உரையாடுகிறார்.

இந்த உரையாடலின் முடிவில் திரௌபதியின் அகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. வாசகரின் புரிதல் சார்ந்தும் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. இதுவரை வாசகர்கள் திரௌபதியின் மீது கொண்டிருந்த மிகப்பெரிய இரக்கம், தன்னளவில் சிறிது குறைந்துவிடுகிறது என்பதே உண்மை.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களம் ஓர் ‘ஆதூரசாலை’க்கு (மருத்துவமனை) நிகரானது. நாம் நமது அகத்தையும் புறத்தையும் அதற்கு ஒப்புக்கொடுத்துவிட்டாலே போதும். உடலும் உள்ளமும் புத்துணர்வுகொள்ளும். அங்கிருந்து நாம் திரும்பி வரும்போது, நாமறியாத ஒன்று நமக்குள் இருந்து எழுந்து, வெளியே வந்து, நாமாகி நிற்கும் நாம் அதுவாகியே வாழலாம்.

‘சொல்வளர்காடு’ நாவலின் மற்றொரு பெருஞ்சிறப்பு, ‘வேதக்கல்வியில்  பெண்களின் இடம்’ குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது என்பதே. திரௌபதி வைரோசனரிடம் கேட்கும் வினாவிலிருந்து, ‘வேதக்கல்வியின் பெண்களின் பங்களிப்பு’ குறித்து எழுத்தாளர் பேசத் தொடங்குகிறார். கார்க்கி, வதவா பிரதித்தேயி, அம்பை காத்யாயனி, சுலஃபை மைத்ரேயி எனத் தொடர்கிறது அவர்களின் வேதக்கல்வி. பெண்களுக்கான தனித்த வேதக்கல்விப் பாடசாலையை உருவாக்குகிறார்கள். அங்கு ஆண்களுக்கு இடமில்லை என்பதும் தனிச்சிறப்பு.

இந்த நாவலில் எண்ணற்ற காடுகள் வருகின்றன. ‘காடு’ என்பது, முல்லைத்திணை சார்ந்தது. அதன் உரிப்பொருள் ‘காத்திருத்தல்’. பாண்டவர் மேற்கொண்ட வனவாசமே மிக நெடிய காத்திருப்புதான் என்பதாலும் தருமன் தனக்கான மெய்யறிவைப் பெற, தன் உடன்பிறந்தவர்களோடும் மனைவியோடும் காடுகள் தோறும் அலைந்து அலைந்து திரிவதாலும் அதற்காகவே காத்திருப்பதாலும் இந்த நாவலில் முல்லைத்திணை சார்ந்த உரிப்பொருள் மிகவும் இயல்பாகவே பொருந்தியுள்ளது என்பேன்.

‘வெண்முரசு’ நாவல் தொடரை நாம் பல நிலைகளில் ‘கவிச்சக்கரவர்த்தி’கம்பரோடுதான் ஒப்பிட்டுக்கொள்ள இயலும். அந்த வகையில், மைத்ராயனியக் காட்டில் உள்ள அன்னசாலையில் பாண்டவர்கள் பணிபுரியும் காட்சி சார்ந்த விவரிப்பு பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

அங்கு நிகழும் விரைந்த செயற்பாடுகளைக் காட்டுவதற்காகவே எழுதப்பட்ட ‘சொல்லோட்டம்’ கொண்ட தொடர்கள் எழுத்தாளரின் எழுத்துநடைச் சிறப்புக்குச் சான்று என்பேன். ‘கவிச்சக்கரவர்த்தி’ கம்பர் தானெழுதிய ‘ராமகாதை’யில், பல இடங்களில் கதைமாந்தர்களின் மனவோட்டத்திற்கு ஏற்பவே சொற்களைச் தேர்ந்து, செய்யுட்களை யாத்திருப்பார். அதுபோலவே, இங்கு எழுத்தாளர் அன்னசாலையின் விரைவுச் சூழலைக் காட்சிப்படுத்த தொடர்களைத் தேர்ந்து, பத்திகளை அமைத்திருக்கிறார்.

இந்த நாவலில் இடம்பெற்றுள்ள அதிசிறப்பான காட்சிக்களங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

 1. சுஃபர கௌசிகர் என்ற ‘ஆசுர வேள்வி’ செய்யும் அந்தணர் பற்றிய காட்சி. ‘தனக்கென ஒன்றும் பெறாது தன்னை இழப்பது வேள்வியின் உச்சம்’ என்ற கருத்துக்குச் சான்றாகவே அவரின் வேள்வி நிறைவுகொள்கிறது. அரணிக்கட்டைகளைத் தேடிச்செல்லும் பாண்டவர்கள் மாண்டு (தருமனைத் தவிர), மீண்டும் உயிர்ப்பெறுதல். மூத்த யட்சர் மணிபத்மரைத் தம் மூதாதையர்களுள் ஒருவராக ஏற்றல்.
 2. இந்த நாவலுக்குள் உபகதையாக விரியும் அரசர் சோமகன் பற்றிய செய்தி. சோமகன் என்ற அரசன் பெற்றெடுத்த ‘ஜந்து’ என்ற சௌமதத்தன். குழந்தைகள் மீது தந்தைகொள்ளும் பெரு விழைவுகளைக் காட்டும் காட்சிச் சித்தரிப்பு. ஒருவகையில் அந்தச் சோமகன் வடிவில், நான் திருதராஷ்டிரரைத்தான் பார்த்தேன். எனக்கு அவர்களுக்கிடையே இருந்த ஒற்றுமைகளாக நூறு மகன்கள், பிள்ளைப்பித்து ஆகியன தெரிந்தன.
 3. பிதாமகர் பீஷ்மர் சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய ஆயுதசாலையில் துரியோதனனை அடித்துச் சிதைக்கும் காட்சி. உடன்பிறந்தார் மீது எல்லை மீறிச் செயல்படும் ஒவ்வொரு தருணத்திலும் துரியோதனனை யாராவது அடித்துச் சிதைக்கவே விழைகிறார்கள். முன்பு திருதராஷ்டிரர், இப்போது பீஷ்மர். ஆனால், ஒருபோதும் துரியோதனன் அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதில்லை. இயலாது என்பதால் மட்டுமல்ல; அவர்களின் மீது தன்னுள்ளத்தின் ஆழத்தில் கொண்ட பெரும்பற்றின் காரணமாகவும்தான். அதே அளவு பேரன்பினைத்தான் துரியோதனன் மீதும் திருதராஷ்டிரரும் பிதாமகர் பீஷ்மரும் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், இவ்விருவருமே இறுதியில் தன்னுடைய ஆதரவினைத் துரியோதனனுக்கு நல்குகிறார்கள்.
 4. அஸ்தினபுரியைவிட்டுச் செல்லும் விதுரரின் மனவோட்டம் பற்றிய காட்சிச்சித்திரம். யாருக்கும் தெரியாமல் தனித்தலையும் விதுரர் இறுதியில், அஸ்தினபுரிக்கே திரும்புகிறார். கர்ணன் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும்கூட துரியோதனன் விதுரரையே மீண்டும் அஸ்தினபுரியின் பேரமைச்சராக்குகிறார். துரியோதனனின் உளப்பாங்கினைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. அதனாலேயே வாசகர் உள்ளம் எப்போதும் துரியோதனனுக்கும் சிறிதளவு இடத்தை ஒதுக்கியே வைத்துள்ளது போலும்!.
 5. துரியோதனன் பாண்டவர்களை அஸ்தினபுரியின் தொழும்பர்களாக்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விதுரர் கணிகரைச் சந்திக்கும் சூழல். சகுனி சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய பகடைகளை எரித்துவிடுவதும் இனிச் சூதாடுவதில்லை என்று முடிவு செய்வதும் சிறப்பான தருணங்கள். கணிகர் விதுரரிடம் பாண்டவர்களை அஸ்தினபுரியின் தொழும்பர்களாக்காமல் இருப்பதற்கு மாற்றுத் தண்டனையாக ‘வனவாசம்’ குறித்துப் பேசும் உரையாடல்கள் மிக நேர்த்தியானவை.
 6. யாதவர் குலப் பூசல் சார்ந்து பலராமருக்கும் இளைய யாதவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் சார்ந்த காட்சி.
 7. வனவாசத்தில் திரௌபதி தருமரிடம் சினந்து பேசும் சூழல். கணவன்-மனைவிக்குள் எழும் உச்சகட்ட சண்டைக்கு நிகரானது அது. திரௌபதியை மிகத்துணிந்த பெண்ணாகவும் கொற்றவையாகவும் வாசகர் அறியும் தருணம் அது.
 8. விதுரர் தன் முற்பிறப்பினை அறியும் காட்சி. அதன் இணைவாகவே பீஷ்மரின இறுதியும் அவருக்கு அறிவிக்கப்படுகிறது.
 9. மைத்ரேயர் துரியோதனனின் முக்காலத்தையும் அறிந்து பகரும் காட்சி. அப்போது துரியோதனன், ‘நான் வெகுதூரம் சென்றுவிட்டேன். இனித் திரும்பி வருவதற்கு இல்லை’ என்று கூறுகிறான். அந்தத் தருணத்தில் வாசகரின் உள்ளம் துரியோதனனின் பிடிவாதத்தின் மீது வெறுப்புக்கொள்கிறது. அதற்குக் கர்ணன் உடந்தையாக இருக்கிறான் என்பதும் நமக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. இருப்பினும் இருளில் நிற்பவர்களை நம்மால் பார்க்க முடியாது. அது போலவே அறத்துக்கு வெளியே நிற்பவர்களையும் நம்மால் பார்க்க முடியாதுதான். அதனால், அவ்விருவர் மீதும் வாசகர் இரக்கமே கொள்ளவே நேர்கிறது.
 10. கோபானர் தருமருக்கு ஹரிசந்திரன் வாழ்க்கையைக் கூறும் காட்சி.
 11. கிரிஷ்மன் மூன்று தந்தையர் கதையைக் கூறும் நிகழ்வு.
 12. மிதிலையில் அரசமுனிவர் ஜனகர் தன்னுடைய அமைச்சர் அஸ்வலனரின் ஆலோசனையின்படி, ‘பகுதட்சிணைப் பெருவேள்வி’யை நடத்தும் காட்சி. அதில் பங்கேற்றும் யாக்ஞவல்கியர் தன்னுடைய மெய்யியல் சிந்தனைகளால் கார்க்கி உள்பட அனைவரையும் வெற்றிகொண்டு, ‘பாரதவர்ஷத்தின் அந்தண முதல்வர்’ என்று அறியப்படும் தருணம்.
 13. யுவனாஸ்வன் மாந்தாஸ்யதியைப் பெற்றெடுத்து, தாயுமானவனாக மாறும் நிகழ்வு.
 14. பாண்டவர்களின் இருப்பினைக் கௌரவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காகவே குந்திதேவி அஸ்தினபுரியிலேயே தங்கிவிடும் காட்சி.
 15. வனவாசத்திற்குப் புறப்படும் முன்பாகத் திரௌபதி தம் பிள்ளைகளைத் துரியோதனனின் மனைவி பானுமதியிடம் ஒப்படைக்கும் தருணம்.
 16. இளைய யாதவருக்கும் சால்வனுக்கும் இடையே நடக்கும் போரில் இளைய யாதவரின் படையினர் இளைய யாதவருக்குத் துரோகம் செய்யும் சூழல். அந்தச் சூழ்ச்சியையும் இளைய யாதவர் வெற்றிகொண்டு, சால்வனை வெற்றிகொள்ளுதல்.

சூதாட்டம் தந்த பெருந்துயருடன் பாண்டவர்கள் சௌனக வேதமையத்தின் பன்னிரண்டாவது காத்யாயரைச் சந்திக்கின்றனர். அப்போது அவர் தருமரிடம் கூறுவது அனைத்து மானுடருக்கு ஏற்ற ஒன்றே.

“ஊழின் வழிகளைப் பற்றி ஒருபோதும் உள்ளி உள்ளிச் சொல்லாடலாகாது என்பதே மூதாதையர் கூற்றுஎன்றார். அங்கு நிகழ்ந்தவை வேறுமுறையில் நிகழமுடியாதவை என்று உணரும் அடக்கம் இருந்தால் மட்டுமே அவை அளித்த துயரத்தைக் கடக்கமுடியும். ஒரு சிறு இறகு காற்றில் பறந்தலைவதைக் காணுங்கள். அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் முடிவிலா விசும்பால் முடிவுசெய்யப்படுபவை என்று அறிவீர்களா?”

இந்தத் தெளிவு நம் ஒவ்வொருவருக்குள் இருந்தால், எத்தகைய பெருந்துயரையும் எளிதில் கடந்து செல்லலாம்.

தருமன் வனவாசத்தைத் தொடரலாமா? வேண்டாமா? என்ற குழப்பமான தருணத்தை அடையும் போது, அவருக்குச் சகாதேவன் கூறும் அறிவுரை மிகச் சிறப்பானது.

“மூத்தவரே! படைகொண்டு முடியை அடைந்தால் படைகொண்டே இறுதிவரை அரியணையைக் காக்கவேண்டும். சொல்காத்து அவ்வறத்தின் வல்லமையால் எழுந்து வந்து அவர் முடிகொண்டால், அதன்பின் அந்த அறமே அவருக்குப் படைக்கலமாக ஆகும். விழைவுமுந்தி வென்று பின் நூறாண்டுகாலம் படைக்கலம் கொண்டு காக்கவேண்டிய அரசைப் பதின்மூன்றாண்டுகாலம் பொறுத்து, வென்று, தெய்வங்கள் காவலாக நிற்க ஆள்வதுதான் நன்று.

‘வெண்முரசு’ நாவல் தொடரில் பல இடங்களில் கதையில் அல்லது உபகதையில் வரும் அரசர்கள் பலர் குழந்தைப்பேறு அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் பலவகையான யாகங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை இரண்டு தேவைக்காகவே ‘தங்களுக்குக் குழந்தை வேண்டும்; அதுவும் ஆண்குழந்தை வேண்டும்’ என்று விரும்புகிறார்கள். ஒன்று – தனக்கு நீர்த்தார்கடன் செய்ய. மற்றொன்று – தனக்குப் பின்னர் இந்த நாட்டை ஆள்வதற்கு.

அவர்களுக்கும்  பொதுவாகவே குழந்தையற்றவர்களுக்காகவும் ஓர் அறிவுரையாகப் பின்வரும் பத்தியை எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ஓர் அரசனை நோக்கி வருண தேவர் கூறுவதாக இடம் பெறும் பகுதி இது –

 “அரசே! நீர் அள்ளி அளிக்க குருதிமைந்தன் வேண்டுமென்பதில்லை. ‘மைந்தன்’ என ஏற்கப்பட்ட எவருக்கும் அவ்வுரிமை உண்டு. ‘மைந்தரில்லை’ என்பவர் குருதிமுளைக்காதவர் அல்லர்; உள்ளம் விரியாதவர் மட்டுமே. வெளியே எத்தனை இளமைந்தர்!. எத்தனை ஒளிரும் விழிகள்!. எத்தனை பாற்புன்னகைகள்!. உளமிருந்தால், பல்லாயிரம் மைந்தருக்குத் தந்தையாகலாம். நூறு பிறவிகளில் அவர்கள் இறைக்கும் நீரால், அங்கொரு கங்கையை ஓடச்செய்யலாம்

இந்தப் பத்தியைக் கடக்கும்போது நான், மக்கள் சேவைக்காகவே திருமணம் செய்துகொள்ளாதவர்களையும் குடும்ப வாழ்வில் குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களையும் இயலாதவர்களையும் நினைத்துக்கொண்டேன். அவர்களுக்கு உள்ளம் விரிவுகொண்டால், அவர்களைத் தவிர பிற மானுடர் அனைவருமே அவர்களுக்குக் குழந்தைகள்தானே!

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களால் எதையும் சொல்மேல் சொல்லடுக்கி, விரித்துப் பெருக்கிச் சில ஆயிரம் பக்கங்களிலும் எதையும் பொருளுக்குள் பொருள் புதைத்து, மடக்கிச் சுருக்கி ஒரேயொரு பத்தியிலும் கூற முடியும். அதற்குச் சிறந்த சான்றாக, இளைய யாதவர் தன் அண்ணன் பலராமரிடம் யாதவ குலத்தைப் பற்றியும் துவாரகையின் எழுச்சி பற்றியும் மிகச் சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும் கூறுவதைக் குறிப்பிடலாம்.

காலந்தோறும் அடிமைப்பட்டுக் கிடந்த குலம், மூத்தவரே. இன்று காலம் ஒரு பீடத்தை நமக்கு காட்டுகிறது. இது ஒரு தற்செயல். நீரொழுக்கில் செல்பவன்மேல் வந்து முட்டும் தெப்பம்போன்றது. நம்மைவிடத் தகுதியான குலங்கள் பல இங்கிருக்கலாம். நமக்கு இது அமைந்தது. புதுநிலங்களைத் தேடிச்சென்ற நம் குடி பெருகியதனால்; நம் குடிகளை இணைக்கும் வணிகப்பாதைகள் உருவாகி வந்தமையால்; நம்மை வெல்லும் படைவல்லமை கொண்ட ஷத்ரியப் பேரரசுகள் இன்மையால்; ஷத்ரியப் பேரரசுகளின் உட்பூசல்களால்; கலங்கள் கட்டும் கலை வளர்ந்து கடல்வணிகம் பெருகியமையால். ஆயிரம் உட்சரடுகள். அவை பின்னிய வலையில் நாம் மையம் கொண்டிருக்கிறோம்.”

‘சொல்வளர்காடு’ நாவலில், தத்துவத்தை நோக்கிய சொற்களைத் தவிர வேறு என்னவெல்லாம் வளர்கின்றன? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிக்கொண்டால், அதற்கு விடைகளாகத் தனிநபர் கழிவிரக்கம், பகை, வஞ்சம், ஆணவம், பிடிவாதம், புதிய சிந்தனை மரபு, அறிதல் நிலைகள், புதியன கற்றல் ஆகியன கிடைக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யறத்தைத் தருமர் பெறுவது இங்குதான். அவர் இறுதியில் பிரபஞ்சப் பெருநெருப்பினை எதிர்கொண்டு, அதற்குத் தன்னையே உவந்தளித்து, அகத்திலும் புறத்திலும் எரிந்து, புடம்போடப்பட்ட தங்கமாக மீண்டு வருகிறார்.

 

இளைய யாதவர் தன்னுடைய இயல்பைப் பற்றித் தருமரிடம் கூறும் போது,

 “என்னால் ஒன்றை பேசத்தொடங்கினால் நிறுத்தமுடியாது. நான் எவர் செவிக்காகவும் பேசுபவன் அல்ல. என்னுள் எழும் ஒரு சித்திரத்தைத்தான் பேசிப் பேசி முழுமையாக்கிக் கொள்வேன். தொடுத்துச்செல்வது முழுமையடையாமல் என்னால் நிறுத்தமுடியாது

என்பார். எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் இயல்பும் இதுவே என்பது என்னுடைய உளச்சான்று. அதனால்தான், அவரால் வெண்முரசினை 25,000 பக்கங்களில் எழுதி நிறைவுசெய்ய இயன்றுள்ளது. குறிப்பாகச் ‘சொல்வளர்காடு’ நாவலை அறிவார்ந்த சொல்லாடல்களால் மட்டுமே எழுதி எழுதி முழுமையாக்க முடிந்துள்ளது. ‘இந்த நூற்றாண்டு தமிழ் இலக்கியத்துக்கும் இந்திய மெய்யியலுக்கும் அளித்துள்ள பெருங்கொடை இவரே’ என்பேன்.

முனைவர் . சரவணன், மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைஇலக்கிய மேற்கோள்கள்
அடுத்த கட்டுரைஆலயம் எவருடையது? கடிதங்கள்-2