நீர்வழிப்படூம்,நாகம்மாள் – கடிதம்

நாகம்மாள் வாங்க

நீர்வழிப்படூஉம் வாங்க

அன்புள்ள ஜெ,

சென்ற புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்களை அடுத்த சந்தைக்குள்ளாவது படித்து முடித்துவிடவேண்டும் என்று தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். தளத்தில் உங்கள் அறிமுகம் பார்த்தபிறகே வாங்கினேன். தேவிபாரதியின் ‘நீர்வழிப் படூஉம்’ – நாவிதர் வாழ்க்கைப்பின்னணியில் எழுதப்பட்ட நாவல்.

இன்றைக்கு பத்துக்குப் பத்து அடைப்புகளுக்குள் ‘பார்பர்’ ‘அம்பட்டன்’ போன்ற பெயர்களில் புழங்கும் நாவிதர் சமூகம்தான் நமக்குத் தெரியும். ஆனால் அன்று சமூகத்தில் ஓர் இடத்துடன் இருந்திருக்கிறார்கள். அன்றைக்கு குடிநாவிதர்கள் இல்லாமல் கல்யாணமோ, கருமாதியோ, பூப்புனித நீராட்டுவிழாவோ, வளைகாப்போ எந்த ஒரு காரியமும் நடந்துவிட முடியாது. எந்தெந்த விசேஷங்களுக்கு யார்யாரை, எப்படி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்களும் அவர்களே. இவ்வாறு பண்ணையக்காரர்களின், பண்ணையக்காரச்சிகளின் சமூக அடுக்குகளிடையே முக்கியமான கண்ணியாக இருந்திருக்கிறார்கள் குடிநாவிதர்கள். அவர்களுக்கு ‘மருத்துவர்’ என்றொரு பெயருமுண்டு. இன்றைக்கு இருக்கும் ‘∴பேமிலி டாக்டர்’ என்று சொல்லப்படுபவர்களின் ஆதிவடிவங்கள். வீட்டில் யார் யாருக்கு என்னென்ன நோக்காடு, அதற்கான மருத்துவ முறைகள். கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ நூலில் புதிதாகக் குடியேறிய கொங்கு வேளாளர்களுக்கு அந்த ஊர் நாவிதர்கள் வேலைசெய்ய மறுத்துவிட, தங்கள் சாதியிலிருந்தே குடிநாவிதர்களை உருவாக்கிக் கொண்டதை எழுதியிருப்பார்.

தங்கைகளுக்காக உயிர் கொடுக்கும் அண்ணனாய் இருந்து மணம் முடித்து, குழந்தைகளைப் பெற்று, பெண்டாட்டி பிள்ளைகள் உட்பட எல்லோரையும் தொலைத்துத் தேடி அலைந்து, நொந்து வலிப்பு நோயால் அவதியுற்று மரிக்கும் கதைசொல்லியின் காருமாமா. லிங்கநாவிதன் என்ற அந்த சமூகத்துப் பாணனின் இழவுப்பாட்டுக்களை தங்கச்சி பாட, ஊர்கூடிச் சிறப்பாக, காருமாமாவின் காடேத்தம் நடந்து முடிவதில்தான் கதையே தொடங்குகிறது.  திருப்பூருக்கருகில் உள்ள உடையாம்பாளையத்தில் உள்ள குடிநாவிதரான ஆறுமுகம் என்கிற காருமாமாவின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைசொல்லியின் பார்வையில் நினைவுகூறலாக விரிகிறது.  அவருடைய பிரிந்துபோன குடும்பம் அவருடைய இறப்பின்மூலமே ஒன்று சேர்கிறது.

கதைசொல்லிக்கும் அவர் அத்தை மகளுக்குமான காதல் அந்த இழவுச்சடங்குக்கு நடுவேயே இயல்பாக மலர்கிறது. பெரியவர்களெல்லாம் ஜெமினி கணேசன், சாவித்திரி என்று கிண்டலடிக்கிறார்கள். காருமாமாவின் தங்கைப் பாசமும் பாசமலர் சிவாஜி – சாவித்திரி என்றே கிண்டலடிக்கப்படுகிறது. எழுபது எண்பதுகளின் வாழ்வியலில் பிரிக்கமுடியாத ஆதிக்கம் செலுத்திய வானொலி, சினிமாவின் தாக்கங்கள்- குழந்தைகளை வேலைசெய்யும் இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்கள் கண்முன்னேயே பண்ணையக்காரச்சியின் அவமதிப்புக்குள்ளாகும் பெரியம்மா -சாயப்பட்டறையில் என்றைக்கோ செய்துகொள்ளப்போகும் தற்கொலைக்காக ஒளித்துவைக்கப்படும் சாயப்பொடிகள், அரசுவேலை அடித்தளச் சமூகத்தில் ஏற்படுத்திய மறுமலர்ச்சி என்று வாழ்க்கையின் பலமுகங்களைச் சித்தரிக்கும் ஆழமான பதிவு.

நாவலில் ‘தாயரக்கட்டம்’ முக்கியமான படிமமாக உள்ளது. கதாபாத்திரங்களே சுழட்டிப்போட்ட தாயக்கட்டைகள்தான் என்கிற நிலையில், இழவு வீட்டில் அவர்கள் கட்சி கட்டிக்கொண்டு ஆடுகிற ‘தாயரக்கட்டம்’ ஒரு முக்கியமான நிகழ்ச்சியை முடித்துவைக்கக் காத்திருக்கிறது. நான் படித்த நாவல்களில் மிகவும் பரபரப்பான கட்டத்தில் முடிந்த சமூக நாவல் இதுதான்.

அதேபோல்  கோவை வட்டார வழக்கு இவ்வளவு விஸ்தாரமாக ஆவணப்படுத்தப் பட்டிருப்பது இந்த நாவலில்தான். அந்த வட்டார வழக்கு அறிமுகமாகாத பொதுவாசகனுக்கு அதுவே பெரியதடையும் கூட. அதேபோல நாவலில் ஆங்காங்கே காணப்படும்  ஒரு பாரா அளவுக்கேயான மிகநீண்ட வாக்கியங்கள்.  இந்த நாவலைத் தொடர்ந்து நான் படித்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ நாவலும் இதே கோவை வட்டாரப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்தான். வட்டார வழக்கை உபயோகப்படுத்திய வகையில் முன்னோடி நாவல். ஆனால் பொதுவாசகனைக் கருத்தில்கொண்டோ என்னவோ, வட்டார வழக்கை மிகக் குறைந்த அளவே உபயோகப்படுத்தியிருப்பார் ஆசிரியர்.

‘நாகம்மா’ளின் சிக்கல்கள் வேறு. ‘நீர்வழிப் படூஉம்’ அடித்தட்டு மக்களின்   அவலவாழ்வைப் பற்றிப் பேசுகையில் ‘நாகம்மாள்’ ஆண்டைகளின் அவலவாழ்வைப் பற்றிப் பேசுகிறது. இங்கு முதலாளிகளும் கடும் உழைப்பாளிகளே. நாள் முழுதும் நிலத்தில் வேலைசெய்கிறார்கள். நிலம் அவர்களுடையது என்பதைத் தவிர, வாழ்க்கைத் தரத்தில் தொழிலாளிகளுக்கும் அவர்களுக்கும் பெரும் வேறுபாடு இல்லை.

நாகம்மாள் இளம் விதவை. ஒரு பெண் குழந்தையின் தாய். கணவனை இழந்தபின், அவனுடைய தம்பி சின்னப்பன் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறாள்.  அவள் கணவனின் பங்கு நிலமும் இப்போது கொழுந்தனின் கையில் இருக்கிறது. இவளாகப் பங்கு கேட்க சமூகக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல தடைகள். ‘எதுக்காகக் கேக்கோணும்? இப்பிடியே இருந்து கொண்டு, பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக்குடுத்துட்டு, இம்ம்புட்டுக் கஞ்சியைக் குடிச்சுப்போட்டு போய்ச்சேர வேண்டியதுதானே’ என்ற முனைக்கும்  ‘என்னோட பங்க ஏன் கேக்காம இருக்கோணும்?’ என்னும் இன்னொரு முனைக்குமான நாகம்மாளின் அல்லாட்டமே கதை. அவனிடமிருந்து நிலத்தை மீட்பதற்காகவே  அந்த ஊர் முரடன் கெட்டியப்பனுடன் ‘தொடர்பு’ வைத்துக் கொள்கிறாள். ஊர் பலவாறாகப் பேசுகிறது. சின்னப்பனுக்கும் தெரியாமலில்லை.

கடைசியில் கெட்டியப்பனுடனான தகராற்றில் சின்னப்பன் கொலை செய்யப்படுகிறான்.  நாகம்மாளும் காருமாமாவைப்போல ஒரு நீர்வழிப் படூஉம் புணைதான். ஆறுகள் வெவ்வேறு. வேகமும் சுழிப்புகளும் பாதிப்புகளும் அவ்வாறே. இன்றைக்கும் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நிலம் தொடர்பான தகராறுகள் கொலையில் முடிவது சாதாரணமாக இருக்கிறது. பேசினால் அரைமணியில் தீரக்கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் அந்தப் பேச்சுதான் நடப்பதே இல்லை. இந்த நாவலிலும் அதேதான்.  ஆனால் இப்பிடிப் பேசித்தீர்ப்பதாக இருந்தால் நமக்கு பல நாவல்கள் கிடைக்காமலேயே போயிருக்குமோ?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன் 

மல்லைப் பேரியாற்றில் அலைவுறும் புணை- அந்தியூர் மணி

நீர்வழிப்படுவன

நீர்வழிப்படூம்- தேவகாந்தன்

முந்தைய கட்டுரைஞானி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கமும் ஈழப்போரும்