வாசிப்பு, இலக்கியம், சில ஐயங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..

ஒரு வழியாக quarantine காலம் முடிந்து இயல்பு வாழ்வு திரும்புகிறது Fever நீடித்ததால் ஒரு வாரம் கூடுதல் ஓய்வு.

இந்த 20 நாளில் அண்மை காலங்களில் வேலை  பளுவால் படிக்காமல் வைத்திருந்த உங்களின்  பதிவுகளை வாசிக்க முடிந்தது ஒரு வரப்பிரசாதம்!. மிக உன்னத வாசிப்பு குமரத்துறைவி வாசித்தது தான். வாசித்த பல இடங்களில் தொண்டை அடைககத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். முடிவில் கண்ணீர் வழியும் கன்னங்களுடன்.

ஜூன் 4 சந்திப்பிற்கு முன் மனதில் 2 கேள்விகள் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். கடந்த 15 நாளில் மேலும் சில கேள்விகள் மனதில் வந்து ஒரு மாதிரி தொகுத்து கொள்ள முயன்று கீழே அனுப்புகிறேன்.

என் முந்தைய கடிதத்தில் சொன்னது போல், இந்த அருமையான வாய்ப்பை தவற விட மனதில்லை. உங்கள் சந்திப்புகள் இன்னும் நடக்கின்றனவா என்று தெரியவில்லை.  இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தால், எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்க முடியுமா?.  என் கேள்விகளை கூறிவிடுகிறேன்..

  • இலக்கிய வாசிப்பு தளத்தில், புனைவு வாசிப்பு, அபுனைவு வாசிப்பு இரண்டுக்கும் வாசகனின் ஆன்மீக , உணர்வு அனுபவத்தில் வேறுபாடு இருக்குமா?  இல்லை இந்த ஒப்பீடே தவறா?. என் கேள்வி என் வாசிப்பு அனுபவத்தில் இருந்து எழுந்தது. அபுனவு வாசிக்கும் போது மனதில் தோன்றும்   கற்பனை எண்ணங்கள் வாசிக்கும் போதே , தானாகவே எழும் அதே நேரத்தில், புனைவு வாசிக்கும் போது, வாசித்தபின், அந்த புனைவை பற்றி முனைப்பாக மீண்டும் யோசிக்கும் போது தான் கற்பனை சாத்தியங்கள் தோன்றுகின்றன. இது என் வாசிப்பில் குறையா?
  • என்னுடைய வாசிப்பு ஆர்வம் பல துறைகளில் உள்ளது, இலக்கியம், பரிணாமம், நரம்பியல், பண்பாடு, காந்தி, இயற்பியல், ஆன்மீகம், மரபியல் என்று.. இவை எதிலுமே அதிக ஞானம் என்று ஒன்றும் இல்லை. சமீப காலங்களில், எல்லாவற்றையும் வாசிக்க இயலாது,  ஒன்றையோ இரண்டயோ மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.. எப்படி தேர்ந்தெடுப்பது?. இது சரியான கேள்வியா என்று தெரியவில்லை.. இது போன்ற தேர்வு, வாசிப்பவனின் ஆர்வத்தை பொறுத்து தான் பெரும்பாலும் அமையும் என்றாலும், எப்போது நம் தேர்வுகளை குறுக்கி கொள்வது? ஒவ்வொரு புத்தகம் வாசித்து முடித்தவுடன், அடுத்து எதை எடுப்பது என்ற குழப்பம் எப்போதும் உள்ளது..
  • வாசிப்பு மட்டுமே செய்து கொண்டிருப்பது தவறா? இலக்கிய வாசகன் கண்டிப்பாக எழுதவும் வேண்டுமா?.. எனக்கு எழுத ( இப்போதைக்கு படித்த புத்தகங்களை பற்றிய என் எண்ணம்) பிடிக்கும் என்றாலும் , என் திருப்திக்கு எழுதி முடிக்க நேரம் நிறைய ஆகிறது. மேலும் எப்போதும் வாசிப்பதில் தான் ஆர்வம் அதிகமாக உள்ளது..
  • நீங்கள் ஒரு கட்டுரையில் குரு/ஆசிரியன் – சிஷ்யன் உறவு பற்றி பேசுகையில்,  ஒரு தளத்திற்கு மேல், சீடன், தன் சொந்த தர்க்கம், நம்பிக்கைகள், பகுத்தறிவு அனைத்தையும் கைவிட்டு விட்டு குரு சொல்வதை முற்றுமாக நம்ப வேண்டும் ( blind faith) என்று கூறி இருப்பீர்கள். குரு நித்யாவும் ஒரு காணொளியில் if you want to be a true Christian you must fully believe that Mary was a virgin when Jesus was born . Not just accept it but believe it as Truth. என்று கூறியிருப்பார். என் கேள்வி, இந்த நிலையை அடைய என்ன வழி?.

மீண்டும் ஒரு முறை, எனக்கு இன்னுமொரு வாய்ப்பு அளிக்க வேண்டுவதோடு இந்த கடிதத்தை முடிக்கிறேன். இந்த வாரம் பயணங்கள் இருப்பதால் July 2க்கு பின் எந்த நாள், நேரம் என்றாலும் மகிழ்ச்சி அடைவேன்.

வெண்ணி

***

அன்புள்ள வெண்ணி,

நான் மீண்டும் பயணங்கள் தொடங்கிவிட்டேன். தனிப்பட்ட பயணங்கள், சினிமா வேலைகள். ஆகவே இனிமேல் சூம் சந்திப்பு இயல்வதல்ல. 160 பேருக்கு நாள் கொடுத்திருந்தேன். பத்துபேரிடம் பிறகு பேசுவதாகச் சொல்லிவிட்டு கிளம்பவேண்டியிருந்தது. இது இந்த ஊரடங்குக்காலத்திற்குரிய ஒரு நிகழ்வே ஒழிய தொடரமுடியாது. என் நேரம் மிகமிக செறிவாக திட்டமிடப்பட்டது. நான் பல தளங்களில் செயல்பட்டுவருபவன். பிறிதொருமுறை சந்திப்போம்.

புனைவிலக்கிய வாசிப்பும் அறிவுத்துறை வாசிப்பும் வேறுவேறானவை. புனைவிலக்கியம் முதன்மையாகக் கற்பனையால் வாசிக்கப்படுகிறது, அக்கற்பனையை நிகழ்த்தும் களமெனவே அறிவுத்தளம் செயல்படுகிறது. அறிவுத்துறை வாசிப்பு நம் தர்க்கத்தால் நிகழ்த்தப்படுகிறது. அதில் கற்பனை ஒரு துணைப்பொருள். அறிந்தவற்றை காட்சியாகவோ நிகழ்வாகவோ உருவகித்துக் கொள்வதற்கு உதவுவது.

ஒருவர் இயல்பில் கற்பனை நிறைந்தவர் என்றால் அவருக்குரியது இலக்கியம். தர்க்கபுத்தி ஓங்கியவர் என்றால் அறிவியக்க வாசிப்பு. இவை வேறுவேறு மூளைத்திறன்கள். இலக்கியத்தை நோக்கி தர்க்கபுத்தியை வைப்பவர் அதன் வெறும் கூடை மட்டுமே அடைகிறார். அறிவியக்கத்தை வெற்றுக் கற்பனையில் அணுகுபவர் மேலோட்டமான உணர்ச்சிகளை மட்டுமே அடைவார்.

இலக்கியவாசிப்பும் அறிவியக்க வாசிப்பும் ஒன்றையொன்று நிறைவுசெய்ய முடியும். ஆகவே வாசகன் இரண்டையும் வாசிக்கலாம். ஆனால் நீங்கள் எவர் என நீங்களே முடிவுசெய்யவேண்டும். உங்கள் வினாக்களை நிறைவுசெய்வது எது, மேலும் முன்கொண்டுசெல்வது எது? புனைவே என கண்டுகொண்டீர்கள் என்றால் நீங்கள் புனைவை வாசிக்கவேண்டியவர். புனைவை நிறைவுற வாசிக்கும் தேவைக்காக அறிவுத்துறை வாசிப்பை நிகழ்ந்த்துங்கள்.

புனைவை வாசிக்கும்போதே நிகழும் கற்பனை அப்புனைவை மெய்யனுபவமாக ‘நிகழ்த்திக்கொள்வதற்காக’. புனைவை வாசித்தபிறகே அதிலிருந்து பல திசைகளுக்கு நீளும் கற்பனைகள் எழவேண்டும். இரண்டுமே தேவைதான். இரண்டுமே சற்று கவனமாகப் பேணி வளர்க்கப்படவேண்டியவை. புனைவை காட்சிவடிவமாக ஆக்க அதை அவ்வாறுதான் வாசிக்கவேண்டுமென்ற புரிதல் நமக்கு இருந்தாலே போதும்.

வாசிப்புக்கு இரண்டு படிநிலைகள். முதல்படிநிலை ‘கண்டதை’ வாசிப்பது. வாசிப்பினூடாக அலைந்து திரிவது. அது தேவை, அப்போதுதான் நாம் நமக்குரியதை கண்டடைகிறோம். ஒரு கட்டத்தில் நாம் நம்முடைய வினாக்கள் தேடல்களுக்கு ஏற்ப வாசிப்பை குவித்துக் கொள்கிறோம். அது நம்மை ஒருங்கமையச் செய்கிறது. அந்த பரிணாமம் இயல்பாக நிகழவேண்டும். முதல் நூல் உருவாக்கும் மேலதிகக் கேள்வி அடுத்த நூலை நோக்கிக் கொண்டுசெல்வதே உகந்த வழி.

வாசிப்பவர் அனைவரும் எழுதியாகவேண்டும் என்பதில்லை. எழுத உந்துதல் உள்ளவர் மட்டும் எழுதினால்போதும். ஆனால் வாசித்தவற்றை தெளிவாக உள்ளத்தில் நிறுத்த நமக்காக மட்டும் எழுதிக்கொள்வது ஒரு நல்ல வழி. அது நம் சிந்தனைகளைச் சீர்ப்படுத்துவது. நம் அகமொழியை கூராக்குவது.

நித்யா சொல்வது ‘நம்பிக்கையே மெய்யறிவிற்கான வழி’ என்று அல்ல. அது குருசீட உறவிலுள்ள நம்பிக்கை. அதாவது ஒரு குருவை தெரிவுசெய்யும் வரை அவநம்பிக்கை இருக்கலாம், பரிசீலனை இருக்கலாம். தெரிவுசெய்தபின் அவரிடம் நம்மை முற்றளிக்காமல் எதையும் கற்கமுடியாது. விவாதித்து அறியும் தன்மை கொண்டவை அல்ல கலை, மெய்யறிதல் இரண்டும். அங்கே விவாதித்தால் நாம் நம்மை வந்தடைவனவற்றுக்கு எதிராக நம் ஆணவத்தையே முன்வைக்கிறோம்.அது அறியாமையையே அளிக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரையசோதை – அருண்மொழிநங்கை
அடுத்த கட்டுரை அந்தப் புன்னகை.