வெண்முரசும் அருண்மொழியும்- கடிதம்

அன்புநிறை ஜெ,

வெண்முரசு ஒரு நுழைவாயில் –  அருணா அக்காவின் காணொளிப் பேட்டி இரு பகுதியையும் பார்த்து ரசித்தேன். மிக அழகான பேச்சு.

வெண்முரசு வாசித்திராத  நண்பர்களுடன் அதுகுறித்து ஏதாவது பேசும்போது,  அவர்கள் “மகாபாரதக் கதைதானே, அதற்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாய்?” என்பது போலவோ அல்லது மிக எளிதாக “அப்படி என்ன இருக்கு வெண்முரசில்?” என்பது போலவோ ஒற்றைவரியில் கேட்கும்போது, ஒருபுறம் அதை எடுத்துச் சொல்லும் ஆவேசமும் மறுபுறம் இவர்களுக்கு எப்படி இதை உணர்த்துவது என்ற மலைப்பும் வழக்கமாக வரும். வெண்முரசை அறிமுகம் செய்யும் காணொளி என்றதுமே எப்படி என்ற ஆர்வம் எழுந்தது. இவ்வளவு அழகாக அமைந்தது மகிழ்வாக இருக்கிறது.

நிகழ்காலத்தில் கண்முன் மலர்ந்த பேரிலக்கியத்தை, என்றைக்கும் உலக இலக்கியங்களின் நிரையில் தமிழின் தாழாக் கொடியாக நிற்கப்போகும் மாபெரும் செவ்விலக்கியப் படைப்பை, வெண்முரசை, அதன் 26 நாவல்களை இந்தப் பேட்டியில்  அறிமுகப்படுத்தும் விதமாக, மின்னும் விழிகளோடு, கையசைப்பும் பாவனைகளுமாய், ஒவ்வொன்றாய் தொட்டுத் தொட்டுத் தொட்டுப் பேசிக் கொண்டே சென்று ஒரு எழுச்சியின் புள்ளியில் சிறிய புன்னகையோடு இதற்கு மேலே எப்படி சொல்வேன், வாசித்தே பாருங்கள் என்பதுபோல விழியொளியோடு அருணாக்கா பேசும்போது இதை இப்படித்தானே சொல்ல முடியுமெனத் தோன்றியது.

நவீன காலத்திற்கு மகாபாரதத்தை மறுஉருவாக்கம் செய்து எழுதுவதில் உள்ள சவால்கள் எனத் தொடங்கி தடைகளேதுமின்றி சரளமாக வெண்முரசின் களத்தை,  வரலாற்றுப் பின்புலத்தை, வணிக, சமூகவியல் ஊடுபாடுவுகளை, இதில் பேசப்படும் தத்துவ சிந்தனைகளை, ஒரு மாபெரும் செவ்விலக்கியப் படைப்பின் உருவெளிக்கோட்டுச் சித்திரத்தை தீர்க்கமாக அறிமுகம் செய்து செல்கிறது முதற்பகுதி பேச்சு.

இரண்டாம் பகுதியில் மேலும் மேலும் மெருகேறிவிடுகிறது நடை. முதலில் கிரேக்க புராணங்களோடு வெண்முரசின் பாத்திரங்களை, தருணங்களை நிகர் வைத்தும், வேற்றுமைகளைத் தொட்டும் தொடங்கும் பேச்சு பிறகு மனதுக்கு அணுக்கமான மற்றொரு பேரிலக்கியமான தல்ஸ்தாயின் போரும் அமைதியும் நாவலோடு அருகருகே வைத்துப் பேசும்போது வேறொரு தளத்துக்கு செல்கிறது.

அருணாக்கா தீவிரமான வாசகி என்பதும் ஆழமான வாசிப்புடையவர் என்பதும் தெரியுமென்றாலும் இந்தப் பேட்டி முழுவதிலும் மிக அழகாக, படிமங்களை, நிகர் இலக்கிய ஓப்பீடுகளை மிகையாகவோ வலுக்கட்டாயமாகவோ திணிக்காமல் எளிய நீரோடை போல அதே சமயம் ஆழமாக சொல்லிச் செல்கிறார்கள். உதாரணமாக போரும் அமைதியும் நாவலின் ப்ரின்ஸ் ஆண்டரூ மரணத்தருணத்தில் காணும் ஒரு கனவை “ஒரு கனவில் இறந்தேன், மற்றொரு கனவில் விழிக்கக்கூடும்” என்ற வரியை அழகாகத் தொட்டெடுத்து கசனின் இரண்டு வாழ்வுகள் குறித்த பகுதியை நிகர் வைத்து ஆச்சரியப்பட வைத்தார்கள்.

தனிப்பட்ட முறையில் வெண்முரசு வாசிப்பு தனக்களித்தது என்ன என்று சொல்லும்போது அதன் மிக சாராம்சமான புள்ளியை சொன்னார்கள். இமயச்சிகரம் போல, பிரபஞ்சவெளி போல ஒரு பேரிருப்பின் முன்னர் நமது சிற்றிடத்தை உணர்தல். அதிலும் ‘எனது தர்க்கம் என்னும் சிறு கரண்டி எவ்வளவு அள்ளிக்கொள்ளுமோ அவ்வளவு உண்மையைத்தானே என்னால் அள்ளிக்கொள்ள முடியும்!” என்ற திகைப்பு, அதையேதானே நானும் அடைந்திருக்கிறேன் என எண்ணிக்கொண்டேன்.  வெண்முரசுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய சில  அறிதல்களை, அது அவரவர் வாழ்வில் நிகழ்த்திக்கொண்டே இருக்கும் அகத்திறப்புகளை உண்மையான மாற்றங்களை எழுத்தில் புறவயமாக்குதல் இயலாதெனத் தோன்றுகிறது.

உரையைப் பார்த்து முடித்ததும் மீண்டும் மீண்டும் ‘அழகான’ என்ற வார்த்தைதான் மனதில் தோன்றியது. அழகிய பெரிய கண்களில் ஒளியுடன், மிக இயல்பான “நான் என்ன சொல்றேன்னு புரியுதா” என்ற உறுதிபடுத்திக்கொள்ளுதலுடன், மாறாத சிரிப்புடன், தலையை சாய்த்து நினைவுபடுத்திக் கொள்ளுதலும் கையசைவுகளுமாக அவ்வளவு அழகான பேட்டி இது. அது  வைரத்தில் ஒளியைப் பாய்ச்சி நீரோட்டம் காண்பது போல பேரிலக்கியங்களின் வாசிப்பின் ஒளியில் வெண்முரசை  ஆழமான வாசிப்பு செய்ததன் பயனாய் எழுந்துவரும் அழகும்கூட.

“பெண்கள் அணிகளாலோ ஆடைகளாலோ தன்னை முன்னிறுத்தக்கூடாது என்றெண்ணினாலும் நகை அணியும்போது, அணி செய்து கொள்ளும்போது ஒரு பெண்ணென உணரும் மகிழ்ச்சியை என்ன சொல்வது? அதை வெண்முரசே எனக்கு உணர்த்தியது” எனக்கேட்டு சிரிப்பது, ஆங்காங்கே உள்ளம் நிறைந்த உவகையோடு “இயற்கை வர்ணனை என்றால் ஜெயனுக்கு அல்வா சாப்பிடுவது போல”, “பிற எழுத்தாளர்கள் பாதுகாப்பாக கடந்து போக முற்படும் களங்களில் குதித்து இறங்கி அடித்து விளையாடுவார்” போன்ற வரிகளில் முகத்தில் விரியும் பெருமிதமான மலர்ச்சி.

நிறைவாக தல்ஸ்தாயோடு நிகர் வைப்பதன் முன்னர் “சரி போனால் போகட்டும் வாய்விட்டு சொல்லிடறேன்” என்பது போல ஒரு பெரிய சிரிப்போடு, போர்ப் பகுதியைச் சொல்லும் வெண்முரசின் 5 நாவல்கள் மட்டும்தானே போரும் அமைதியும் நாவல்,  இன்னும் நாலு தல்ஸ்தோயை வெண்முரசில் உள்ளே வைக்கலாமே என்று சொல்லி ஒரு பெரிய அழகான சிரிப்புடன் நிறைவு செய்தது என இனிமை இனிமை.

மிக்க அன்புடன்,

சுபா

அருண்மொழிநங்கை- கொஞ்சம் இசை, கொஞ்சம் இலக்கியம்

முந்தைய கட்டுரைஆலயம் எவருடையது? கடிதங்கள்-1
அடுத்த கட்டுரைமாடத்தி – கடிதங்கள்