ஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்

அன்பின் ஜெயமோகனுக்கு,
நலம். உங்கள் மனைவி குழந்தைகள் நலம்தானே?
 
எனக்குப் ப்ரியமான இரண்டு எழுத்தாளர்கள் கேள்விகளாகவும் பதில்களாகவும் உயிர்மைத் தளத்தின் சில பக்கங்களில் நிறைந்து கிடந்ததைக் காண்கையில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். மனம் திறந்து பாராட்டும் உன்னதமான மனம் கொண்ட என் நண்பர் அ.முத்துலிங்கம், காலத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளர் ஜெமோவை நேர்காணல் செய்தது மிகப் பொருத்தமே. அமுவின் கேள்விகளை ரசிக்கையில் ஜெமோவின் தெள்ளிய நீரோடை போன்ற பதில்கள் வாசிக்க சுகமாக இருந்தது. இக்கதையை முன்பு உயிர்மையில் வாசித்தே போது உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்தேன். புத்தகக் கண்காட்சியில் இத்தலைப்பை கண்டவுடன் வாங்கிவிட்டேன். ஊமைச் செந்நாயைப் பற்றி அமு குறிப்பிட்டவை எல்லாம் மிகச் சரியே. இத்தகைய ஒரு கதையை சமீபத்தில் நான் வாசித்ததில்லை.  வாசித்தபின் பல மணி நேரம் அக்கதை மனதை விட்டு அகலவில்லை.
 
உங்கள் உள்ளொளிப் பயணத்தின் பாதையில் நீங்கள் கண்டடைந்த சிலவற்றின் தொகுப்புத்தான் உங்கள் எழுத்தோ என நான் வியப்பதுண்டு. அமுவின் ஒரு கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் அதை தெளிவாக்கியது. ‘ஆழ்நதியைத்தேடி’ எனக்கு மிகப் பிடித்தமான தொகுதி…இம்முறை கண்காட்சியில் ‘நித்ய சைத்தன்ய யதி’ என்ற தலைப்பிட்ட புத்தகங்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி விட்டேன். எப்போது வாசிப்பேன் என்று எனக்கே தெரியாது. வாசிக்கவேண்டும்.
 
ஒரு எழுத்தாளரை எப்படி கொண்டாடவேண்டும் என இங்கு யாருக்கும் தெரிவதில்லை. அமு கனடாவில் அத்தகைய கொண்டாட்டங்களை நிறைய பார்த்திருப்பார். எத்தனை ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து அவர் எம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வருகிறார், ஆனால் இங்கிருக்கும் அன்பர்களோ வெறுப்பை மட்டுமே உமிழ்கிறார்கள். A.Muttulingam is a magnanimous and a gem of a person.
 
‘நான் கடவுள்’ நாளை செல்கிறேன். வெற்றிக்கான மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
 
அன்புடன்
உமா பார்வதி
 


ப்ரியமுடன்
உமா ஷக்தி
http://umashakthi.blogspot.com
000000000

 

 

 

 

எம்.ஏ.சுசீலா.
அன்பு ஜெ,எம்.குரு வணக்கம்.
ஏழாம் உலகம் படித்த உடனேயே தங்களுக்கு நான் விரிவான கடிதம் ஒன்றை‍‍
உங்களுக்கு எழுதி அனுப்பியிருந்தேன்.( 4 வருடம் முன்பு.அது வலைத்தள‌ங்கள் பரவலாகாத காலம் என்பது என்பது என் துர்ப்பாக்கியம்.)

உங்கள் வாசகர் ஒருவர் குறிப்பிட்டிருப்பதைப்போல,எனக்கும் கூட உங்கள் நாவல் வரிசையில் மிகவும் பிடித்த படைப்புக்கள் ,ஏழாம் உலகமும்,காடும்தான்.படித்த உடன் நிலைகுலையச்செய்து தூக்கமிழ‌ந்து
தவிக்க வைத்த ‘ஏழாம் உலகம்’பற்றி,நான் இலேசாகத் தோழியரிடம்
பேச்செடுத்த மாத்திரத்திலேயே ‘அதைப்படிக்கும் மன தைரியம் என்னிடமில்லை’ எனறு புறங்காட்டி ஓடியே போய் விட்டவர்களின் எண்ணிக்கைதான்  மிகுதி. அந்த நாவலைப்படித்துப்பேசும் தளத்தில் யாரும் சிக்காத எனக்கு உங்கள் வலை வாசகர்கள் விருந்து படைக்கிறார்கள்.

கஷ்டங்களை‍ ‍‍துன்பங்களை ஏறெடுத்துப்பார்க்கக்கூட,அவை பற்றி சற்றே அசைபோடக்கூடத்தயங்கும் மானுடக்கூட்டமே மிகுதியாக உள்ள சூழ‌லில்,உங்கள் படைப்பு இந்த அளவுக்காவது வரவேற்புப்பெறுவது ஆறுதல் அளிக்கிறது.

மதுரை திரைஅரங்குகளில் ஒரு வேடிக்கையான காட்சியை முன்பெல்லாம் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.(இப்பொழுதும் அது நடக்கக்கூடும். அங்கிருந்து வந்து விட்டதால் தெரியவில்லை.)’பம்பாய்’ படம் பார்க்க வரும் கூட்டம் மிகச்சரியாக அரவிந்தசாமிக்குக்குழ‌ந்தைகள் பிறந்ததும் எழுந்துபோய்விடும்.அதே போல ‘சேது’ படத்தில் விக்ரமுக்கு மூளைக்கோளாறு வந்ததும் இடத்தைக்காலி செய்து விடும்.தொடர்ந்து வரும் துயர சம்பவங்கள், தங்களைப்பாதிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை.

 திரைப்படங்களின் நிலையே அப்படி என்றால்….இலக்கியத்தில்…..?

ஜனரஞ்சக‌ இத‌ழ்கள் கொடிகட்டிப்பற‌ப்பது  மக்களின் இந்த உணர்வைப்புரிந்து வைத்திருப்பதனால்தானே? இப்பொழுதும் கூட ‘நான் கடவுள்’தான் பரவலான வாசகர் கூட்டத்தை உங்கள் ஏழாம் உலகம் நோக்கித்திருப்பியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.எப்படியோ…நல்ல இல‌க்கியங்களின் பக்கம் மக்கள் வருவது நல்லதுதானே?
நன்றி,எம்.ஏ.சுசீலா       


எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை

 

8888

அன்புள்ள ஜெயமோகன்,

திடீரென்று ஏழாம் உலகம் பற்றி எல்லாருமே பேசுகிறார்கள். காரணம் பாலாவின் ‘நான் கடவுள்’ படம்தான் என்று நினைக்கிறேன். அது ஒரு நல்ல விஷயம்தான். சினிமாவினால் அப்படி ஒரு நல்ல காரியமானவ்து நடக்கட்டுமே என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏழாம் உலகத்தில் உள்ள அருமையான உரையாடல்கள்தான் அந்த நாவலின் பலமே. அதில் உள்ள நக்கல் ஆழமான ஆன்மீக விசாரமாக மெல்லமெல்ல மாறுகிறது பல இடங்களில். நான் அப்படி மனம் விட்டு சிரித்து பிறகு நிறைய சிந்தனைசெய்த இடம் என்றால் அது ‘நூறுகோடி ரூபாயாம்..பூ’ என்று அகமது சொல்லுவதுதான். பேப்பரில் சத்யம் ஊழல் ஆயிரம் கோடி பங்குச்சந்தை வீழ்ச்சி ஆயிரம்கோடி என்று வாசிக்கும் நம்மைப்போன்ற நடுத்தவர்க்க கழுதைகள் யோசிக்க வேண்டிய இடம் அது

சுந்தர்

 

முந்தைய கட்டுரை‘வெண்ணிலை’,’காவல்கோட்டம்’—விருதுகள்
அடுத்த கட்டுரைமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6