அகம் புறம் சமன்செய்தல்

ஜெ,

யுவனின் பிறந்த நாள் பதிவு மற்றும் சில நாட்கள் முன்பு, மணிகண்டனின் பழைய பதிவிற்கு அளித்த பதிலும் [அள்ளிப் பதுக்கும் பண்பாடு] பற்றி யோசித்து கொள்கிறேன்.

வயிற்றுப்பாட்டு சூடு தீர்ந்தாலும் அதனின் ஓட்டம் சென்றபடி தான் உள்ளது. வேலை இருக்கும் வரை, பணம் சேரும் வாய்ப்பு இருக்கும் வரை, தொழில் ஓடும் வரை, உடல் ஓடும் வரை என ஓடி கொண்டு இருப்பது பஞ்சத்தின் பாதிப்பு மட்டுமல்ல என தோன்றுகிறது. அடிப்படை பற்றிய பய இறுக்கம் மாறி ஒன்றிரண்டு தலைமுறை ஆகி விட்டன. ஆனால் வீட்டு லோன், பின் அடுத்த முதலீடு, அடுத்ததின் விரிவாக்கம், என சென்றபடி இருக்கும். முதலில் ஒரு பைக், பின் ஒரு கார், நல்ல கார், அடுத்த வீடு, இடம், பிள்ளைகளுக்கு என செல்லுவது தான் இன்றைய பொருளாதார வேர் என படுகிறது. சுற்றி பார்த்தால் எத்தனை இருக்கிறது – வாங்கு வாங்கு என கடை விரித்து இருக்கும் உலகில். வாங்குவதால் உற்பத்தி ஆகி வளம் பெருகும் முன்னேற்ற மாடலில் உலகின் எல்லா நாடுகளும் எனும் போது, வாங்க முடியவில்லை எனில் கிடைக்கிறது கடன் எனும் போது, எவ்விதம் ஈட்டலின் ஒட்டமும் அளவும் குறையும்? நம்ம வாழ்க்கை இப்படியே போய்டுமா என்பது பெரிய கொக்கி இழுப்பு.

கடன் அடைத்தல் இல்லை எனும் போது, நாளை என்பதற்கு போதும் எனும் போது, என்னின் சார்பு சார்ந்த விஷயங்களில் கவனம் பெருகும். நம்மை கேட்டு பார்த்தல் தெரியும்.  உபரி என்பது மனநிலை சார்ந்தது அல்லவா. இது வரை சேர்ந்தவை போதும் என்று சொல்ல முடியுமா? இந்த பொருள் ஈட்டும் ஓட்டத்தில், வேறு என்ன சேர்த்து கொள்கிறோம் என்பதே. என்னின் பயணம் போன்ற தனிப்பட்ட தேடல் முதல் [தெரிந்து இருந்தால்] மற்றும் அடுத்த தலைமுறைக்கு கலை சார்ந்த சுயம் சார்ந்த தேடல் சார்ந்த துறை கண்டு அடைவதற்கு இந்த பின் புலம் உபயோகமாகுதா என்பதே.

மிக முக்கியாமாக, நாம் பேசுவது இருபதுகளில் இருந்து நான் ஒரு 50 வயது வரை சுமார் 30 வருடங்கள் செய்யும் செயல் பற்றியவை தான். அதாவது ஒரு நாளின் பெரும்பகுதி எதற்றில் செல்கிறது என்பது பற்றிய கேள்வி. எனக்கு முன் பெற்றோர் என பலர் ஒடியதால் தான், இந்த பெரும்பான்மை கூட்டம் ஒடியபடி இருப்பதால் தான், பல பேர்களின் ஈட்டலின் முதுகு பாலங்கள் மேல் ஏறி தான் இந்த இலக்கியம் படிக்கும், இயற்கை – கவிதை என ரசிக்கும் நுண்ணுணர்வும், கலை சார்வும் இருக்கும் இடம் ஒவ்வொருவரும் வந்து சேர்ந்து இருக்கிறோம். யாதெனின் யாதெனின் என்ற குறல் வழி இருத்தலும், மணம் ஆகும் போது ஆரம்பிக்கும் இந்த ஒட்டத்தின் முதல் கண்ணியை வெட்டி விட எல்லோராலும் முடியுமா?

மணிகண்டன் சொன்னதே தான். அது ஒரு ஆசிர்வாதம். கை தொட்டு என்னக்கூடிய சில கலை துறைகள் தான் கண் முன். அதில் ஒன்றை தான் பிடித்து கொள்ளுதல் அல்லது அது தன்னை எடுத்து கொள்ளுதல் என்பது ஒரு ஆசிர்வாதமே.  அதனால் மேகங்களில் இருந்தபடி, பொருள் ஈட்டுதலை ஒரு பரிதாப பாவனையில் அணுகுவதை தவிர்க்கலாம்.

இன்னமும் இந்தியாவின் பாதிக்கு மேல் கூட்டம் வறுமை கோட்டுக்கும் கீழ் தான் ஒட்டியபடி அல்லது ஓடியபடி தான். அதற்கு மேல் இருப்பதில் பெரும்பான்மை சற்று தேவலாம் என்பது தான் வித்யாசம்.  பதுக்கியவை போதும் என தோன்றுகையில் வாழ்வின் கொண்டாட்டங்கள் பார்போம். ஆனால் அடுத்த ஒரு பெருங்கூட்டம் அந்த 30,40 வருட வாழ்வின் பாதையில் இருந்தபடி தான் இருக்க போகிறது.

கூற்றுக்கு இரை என மாயும் பல கோடிகள் போல செத்து தான் தொலைப்போமே.

லிங்கராஜ்

***

அன்புள்ள லிங்கராஜ்,

சென்ற சில நாட்களாகவே நான் யோசித்துக் கொண்டிருப்பவை இரண்டு விஷயங்கள்.

என்னை சந்திக்கும் இளைஞர் பலர், நான் இணையவழி சந்தித்த ஏராளமான இளைஞர்கள், உச்சகட்ட இலக்குகள் கொண்டிருக்கிறார்கள். அதன்பொருட்டே வாழவேண்டும் என வெறி கொண்டிருக்கிறார்கள். ‘சாதிக்கணும்சார்’ என்று ஆவேசமாகச் சொல்கிறார்கள்.

இளமையில் அந்த வெறியும் தீவிரமான உழைப்பும் தேவை. அதுவே ஆளுமையை உருவாக்குகிறது. இலக்கில்லாதவர்கள் நுகர்வில் களியாட்டத்தில், சில்லறைப்பூசல்களில், உறவுச்சிக்கல்களில், உலகியல் அலைக்கழிதல்களில் வாழ்க்கையை வீணடிப்பார்கள்.

இன்று ஒவ்வொரு குழந்தைக்கும் இளைமையிலேயே ‘ஆம்பிஷன்’கள் தேவை என கற்பிக்கப்படுகிறது. உச்சகட்ட இலட்சியங்களை கொண்டிருக்கவேண்டும் என கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் சாதனையாளராக ஆகிவிடவேண்டும் என்ற கட்டாயம் வீட்டுச்சூழலில், கல்விச்சூழலில், சமூகச் சூழலில் உள்ளது.

அனைவரும் முதன்மையான சாதனையாளர்கள் ஆகமுடியாது என்பது ஓர் உண்மை. சாதனை என்பது முதன்மையாக திகழ்வது மட்டுமல்ல. அந்த படிநிலையில் எங்கிருந்தாலும் அது வெற்றியே. ஒருவர் அவருக்கான பங்களிப்பை சமூகத்திற்கு, மானுடத்திற்கு, உற்றாருக்கு வழங்கினாலே அது அவருடைய சாதனைதான். தன்னை முழுமையாக வெளிப்படுத்தல், வாழ்க்கையை முழுமையாக வாழ்தல் ஆகிய இரண்டும்தான் சாதனையே ஒழிய புகழ் அல்லது வெற்றி அல்ல.

புகழ் அல்லது வெற்றி வரலாம், வராமலும் போகலாம். மாபெருஞ்செயலை இயற்றி அதன் புகழும் செல்வமும் வருவதற்குள் மறைந்தவர்கள் உண்டு. மோனியர் வில்லியம்ஸ் போல. அவர்கள் தோல்வியுற்றவர்களா என்ன? அவர்கள் தங்கள் ஆளுமையின் முழுத்திறனையும் வெளிப்படுத்தினர், ஆகவே நிறைவுற வாழ்ந்தனர், ஆகவே அவர்கள் புகழோ சமூக வெற்றியோ அடையாவிட்டாலும் சாதனையாளர்கள்தான்.

இலக்கும் அதற்கான உழைப்பும் மட்டுமே வாழ்க்கை அல்ல. இலக்குநோக்கிச் செல்லும்போது அந்த பயணமும் படைப்பூக்கம் கொண்டதாக, அதனாலேயே இன்பமானதாக இருக்கவேண்டும். உகந்ததைச் செய்வதன் கொண்டாட்டம் இருக்கவேண்டும். இல்லையேல் அச்செயல் சிறக்காது. மகிழ்ச்சி இல்லாமல் எதையுமே வெற்றிகரமாகச் செய்ய முடியாது.

இளமையிலேயே ஓர் இலக்கை குறித்துவிட்டு, விரைவிலேயே நம்பிக்கையிழந்து சோர்ந்துவிடுபவர்களாகவே இளைஞர் பலர் இருக்கிறார்கள். இளமையில் நம்மைப்பற்றி நமக்கு தெரியாது. நாம் நம்மைப்பற்றிக் கொண்டிருக்கும் பிம்பம் மிகையானதாகவே இருக்கும். சமூகம், உலகச்சூழல் பற்றிக் கொண்டிருக்கும் புரிதலும் மேலோட்டமானதாக இருக்கும். அப்போது எடுக்கும் வஞ்சினங்களும் இலக்குகளும் அப்படியே அடையத் தக்கவையாக இருக்க வாய்ப்பில்லை.

அந்த தெளிவு இல்லாததனால் ஒரு கட்டத்தில் சட்டென்று தன்னால் ‘உச்சத்தை’ அடையமுடியாது என எண்ணி, உளம்சலித்து செயலின்மைக்குச் சென்றுவிடுகிறார்கள். சோர்வில் மூழ்கிக்கிடக்கிறார்கள். ‘நான் என்னைப்பத்தி நெறைய நினைச்சிருந்தேன் சார். என் அம்மா அப்பால்லால் ஏகப்பட்ட கனவு வைச்சிருந்தாங்க. என்னாலே எதையுமே அடைய முடியாதுன்னு தோணுது’ என புலம்புகிறார்கள்.

இதை மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். இளமையின் துடிப்பில் எடுத்துக்கொள்ளும் மிகையான இலக்கு- அதைநோக்கிய திட்டமிட்ட தீவிரமான பயணம் இல்லாத சிதறல்- அதன்விளைவாக சோர்வு- ஆகவே செயலின்மை இதுவே இளைஞர் பலருடைய வாழ்க்கையாக உள்ளது.

இலக்கு வேண்டும். ஆனால் அதை பல உடனடி இலக்குகளாகப் பிரிக்க வேண்டும். எளிய இலக்குகளாக வென்றுகொண்டே முன்செல்லவேண்டும். மலையுச்சிக்குச் செல்பவன் பாதையை ஆயிரம் படிகளாக அமைத்துக் கொள்வதுபோல. சிறு சிறு வெற்றிகளே நமக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பவை. செயலுக்கு தூண்டுபவை.

நம் இலக்கு என்பது அன்றாடச்செயலில் வெளிப்படவேண்டும். ஒவ்வொருநாளும் அதற்கான பயணம் செய்யப்படவேண்டும். வாய்ப்பு வரும், அப்போது ஒரே கொத்தாகக் கொத்திவிடுவேன் என்பவர்கள் வெறும் பகற்கனவில் இருக்கிறார்கள்.

இலக்குகளை அடைந்தவர்கள் எவராயினும் அவர்கள் சீரான நெடுநாள் செயல் கொண்டவர்கள். நெடுநாட்கள் ஒரு செயலைச் செய்ய சில அடிப்படைகள் தேவை. அதை ஓர்அன்றாடப்பழக்கமாக கொள்ளவேண்டும். அதில் இருந்து விலகாத கவனம் வேண்டும். அவையிரண்டும் தேவை என்றால் அதை உவந்து செய்யவேண்டும். அதிலிருந்து நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கவேண்டும். அதாவது படிகளில் ஏறுவதையே முழுமூச்சாக ரசித்துச் செய்பவர்களே உச்சியை அடைகிறார்கள். வெறுமே உச்சியைக் கனவு காண்பவர்கள் அல்ல.

அவ்வண்ணம் செய்பவர்கள் உச்சியை அடைந்தால்தான் வெற்றி எனக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொருநாளுமே தங்களுக்கு அளிக்கப்பட்ட வெற்றி என்றே எண்ணுவார்கள். உச்சியில் இருக்கையிலும் அதை தங்கள் வழக்கமான நாட்களில் ஒன்றென்றே எண்னுவார்கள்.

மறுபக்கம் நீங்கள் சொன்னதுபோல பொருளீட்டும் வேட்கை. இங்கே பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கையின் இலக்கு என இளைஞர்களுக்குச் சொல்லப்படுகிறது. “பையன் நல்ல வேலையிலே இருக்கான் சார், மாசம் ஒண்ணரை லட்சம் சம்பளம்” என்று சொல்லும் தந்தை அந்தப் பையனுக்கு அளித்த இலக்கு அதுவாகவே இருக்கும். அவர் தன் வெற்றியாக அதையே நினைக்கிறார். நம் சூழலில் எப்போதும் ஒலிக்கும் குரல்கள் அவையே.

அவற்றால் உருவாக்கப் பட்ட இளைஞர்கள் அவர்களின் ஆற்றலுக்கு மிஞ்சிய விசையில் ஓடும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். கடன்கள், மாதத்தவணைகள் என சிக்கிக் கொள்கிறார்கள். இளமையில் இருபதாண்டுகளை ஒரு பெரிய வீட்டை ஈட்டிக்கொள்வதற்காக ஒருவர் செலவழிக்கிறார். நவீன வீடுகள் முப்பதாண்டுகளில் பழையவையாக, மதிப்பற்றவையாக ஆகிவிடுகின்றன. அவர்களின் வாழ்க்கை முழுமையாக வீணடிக்கப்பட்டது என்றே பொருள்.

அந்த விசையில் சென்றுகொண்டே இருப்பவர்கள், பிறிதொரு அறிவார்ந்த தேடலோ நுண்ணுணர்வோ இல்லாதவர்கள், அவ்வாறே செல்லட்டும். அவர்களின் கடும் உழைப்பால் தேசப்பொருளியலுக்கு நன்மைதான். அவர்களிடம் இன்னொன்றை நான் சொல்லவே மாட்டேன். என்னிடம் அவ்வாறு ஒருவர் தன் ‘வெற்றி’களைச் சொல்ல வந்தால் பாராட்டி மகிழ்ச்சியை தெரிவிப்பேன்.

ஆனால் அதில் சிக்கிக்கொண்டு நடுவே அறிவுத்தேடலும் நுண்ணுணர்வும் நசுங்கிவிட நேரும் இளைஞர்களே என்னிடம் பேச வருகிறார்கள். அவர்கள் ஒரு கட்டத்தில் வெறுமையையும் சோர்வையும் உணர்கிறார்கள். வாழ்க்கையை இழந்துவிட்டதாக எண்ணுகிறார்கள்.

அவர்களில் ஒருசாரார் சோர்வில் விழுந்து அந்த பொருளியல் ஓட்டத்தையும் கையிலிருந்து நழுவவிட்டு விடுகிறார்கள். தங்கள் சொந்த அகவுலக வாழ்க்கையையும் வாழ்வதில்லை. வெறும் சலிப்பும் சோர்வுமாகவே ஆண்டுகளை கடத்திவிடுகிறார்கள்.

இன்னொரு சாரார் சட்டென்று ஒரு கற்பனாவாத முடிவை எடுக்கிறார்கள். உதறிவிட்டு மாற்றுவாழ்க்கை, தன் நெஞ்சைப் பின்தொடர்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள். மிகச்சீக்கிரத்திலேயே அந்த மாற்றுவாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாமல் சோர்வடைந்து பின்னகர்கிறார்கள். அதன் பின் ஏற்கனவே இருந்த கனவுகள்கூட இல்லாமல் வெறுமே சலிப்பு நிறைந்த உலகியல்வாதிகளாக ஆகிவிடுகிறார்கள்.

பொருளியல் தேடும் ஓட்டத்தை ஒருவர் தவிர்க்கக்கூடாது என்பதே என் ஆலோசனை. ஏனென்றால் அதுவே இங்கே சமூக அடையாளம், வாழ்தலின் வசதி. அதைத் துறந்தால் ஏற்படும் உறவுச்சிக்கல்களும் இழப்புகளும் பெரிது. அவற்றை எதிர்கொள்ள நம் அறிவையும் நுண்ணுணர்வையும் செலவழித்தால் நாம் அறிவையும் நுண்ணுணர்வையும் வீணடிக்கிறோம். அறிவின்பொருட்டு, நுண்ணுணர்வின் பொருட்டு பொருளியலை துறந்தவர்கள் பின்னர் பொருளியலின்பொருட்டு அறிவையும் நுண்ணுணர்வையும் துறக்க நேரிடும். அது ஒருவகை ஆன்மிகச்சாவு.

ஆனால் அங்கே இழுக்கமுடிவதற்குமேல் எடையை இழுக்க முயலக்கூடாது. தன் ஆற்றலுக்குள் நிற்கும்படியே சவால்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். எளிதில் எய்தத் தக்க இலக்குகளையே கொள்ளவேண்டும். நம் வாழ்க்கை முழுக்கமுழுக்க இந்த உலகியல்தளத்தில் நிகழ்வது அல்ல என்னும் தெளிவிருந்தால் அந்த தற்கட்டுப்பாடு இயல்வதுதான்.

நானும் கடன்வாங்கி வீடுகட்டினேன். உலகியல் கடமைகளை எல்லாம் செய்கிறேன். ஆனால் என்னால் இயலும் எல்லைக்குள், எளிதாக என்னால் செய்யக்கூடும் செயல்களை மட்டுமே செய்கிறேன். பெருஞ்சுமைகளை ஏற்றிக்கொள்வதில்லை

பெருஞ்சுமைகளை ஏற்றிக்கொள்வது பெரும்பாலும் நம் அகந்தையால், ஆடம்பரத்தால், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு மிகையாகச் செவிகொடுத்து அவர்கள் நம்மை வழிநடத்த அனுமதிப்பதனால். அந்த உணர்வுகளைக் கடந்தாலே போதுமானது.நாம் நம் எல்லைக்குள் அமையமுடியும்.

பொருளியலை நம் எல்லைக்குள், நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் எந்நிலையிலும் நம்மால் நமக்கான அகவுலகை உருவாக்கிக் கொள்ளமுடியும். நம் அறிவுத்தேடலை, நம் நுண்ணுணர்வின் பரிணாமத்தை நிகழ்த்திக் கொள்ளமுடியும். சிறுவிரிசலிலேயே மரங்கள் முளைத்துவிடுகின்றன.

நம் அகத்தை புறவுலகச் செயல்பாடுகள், அகவுலகச் செயல்பாடுகள் என பிரித்துக்கொள்வதும் ஒன்று இன்னொன்றை பாதிக்காமல் செயல்படுவதும் எளிய கவனத்தாலேயே செய்துகொள்ளக்கூடியவைதான். நம் ஆளுகைக்குள் உள்ள பொருளியல் நம் அகவுலகச் செயல்பாடுகளுக்கான பீடமாகவும் ஊர்தியாகவும் அமையும். நம் அகச்செயல்பாடுகளால் கிடைக்கும் விலக்கமும் நிதானமும் நம் புறச்செயல்பாடுகளை வெற்றிகரமாக இயற்றச் செய்யும். அவை ஒன்றையொன்று ஊக்கப்படுத்தும்.

நான் ஆலோசனை சொல்வது அந்த வகையான சமநிலையான வாழ்க்கையையே. அப்பயணத்தில் ஒருவர் ஒரு அகவாழ்க்கையை மெல்ல மெல்ல வளர்த்தெடுத்து அதை மட்டுமே வாழமுடியும் என்னும் நிலையை அடைந்தால் அவர் தன் புறவாழ்க்கையை துறந்து அகவாழ்க்கைக்குள் செல்லலாம். இலக்கியம், கலை, இயற்கைவாழ்க்கை என அவருக்கு உகந்ததை தெரிவுசெய்யலாம். ஆனால் அதற்கு முன் அந்த அகவாழ்க்கையை முழுக்க தன்னுடையதாக ஆக்கிக்கொண்டிருக்கவேண்டும். அதில் பழகியிருக்கவேண்டும். அதன் எல்லைகள், அதன் சவால்கள் அனைத்தையும் ஓரளவேனும் அறிந்திருக்கவேண்டும்

உள்ளமிருந்தால் சீசருக்கு உரியதை சீசருக்கும் தேவனுக்குரியதை தேவனுக்கும் அளிக்க முடியும். அவை முரண்படும் உலகங்கள் அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைஉருமாற்றங்கள்
அடுத்த கட்டுரையானைப்பாதையில் பாட்டில்கள்