நேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன்

இலக்கியத்தின் வகைமாதிரிகளில் ’வாழ்க்கை வரலாற்றெழுத்து’ தனித்தன்மை வாய்ந்தது. ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் தான் கையாளக்கூடியது உண்மையான வாழ்க்கை என்ற காரணத்தாலேயே நல்ல இலக்கியப்படைப்பாக ஆக வாய்ப்புள்ளது. ஆனால், ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் குறிப்பிடத்தக்க ஒரு ஆளுமையின் வாழ்க்கைப்பயணம் என்ற நிலைக்கு அப்பால் சென்று தன்னுடைய எழுத்துமுறையால் வசீகரத்தன்மையை எட்டும்போது மட்டுமே நல்ல இலக்கியப்படைப்பாக ஆகமுடியும்.

இந்த நிலை ஒரு சிக்கலை உருவாக்குகிறது. நல்ல வாழ்க்கை வரலாற்று நூலின் பேசுபொருளான அசல் வாழ்க்கைக்கும், வாழ்க்கை வரலாறு தன் கலைத்தன்மை வழியாக நமக்கு அளிக்கும் இலக்கிய அனுபவத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் மேதைமை உள்ள ஒரு எழுத்தாளனால் எப்படிப்பட்ட வாழ்க்கையையும் எடுத்துக்கொண்டு இலக்கியத்தரமான வாழ்க்கைவரலாற்றை எழுதவிட முடியுமா? சிக்கலும் நுண்மையும் நிறைந்தது இக்கேள்வி.

உலக இலக்கியத்தின் கலைப்பெட்டகத்தில் ப்ளூடார்க் (plutarch) எழுதிய வாழ்க்கை வரலாற்று தொகுதிகள் விலைமதிப்பற்றவை.  ப்ளூடார்க்கின் “parallel lives” என்ற 48 ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றுத்தொகுதி இன்றும்  நமக்கு ஒரு நிகரற்ற கலைப்படைப்பாக எஞ்சுகிறது. அதற்கு முக்கியமான காரணம் அலெக்ஸாண்டர், சீசர் போன்ற மிகப்புகழ்பெற்ற ஆளுமைகள் அந்த நூலில்  இடம்பெற்றிருப்பதுதான் என்று சொல்லிவிடமுடியுமா? அப்படிச்சொல்லமுடியாது என்று நினைக்கிறேன். “parallel lives” என்ற நூலில் என்றென்றைக்குமான புகழுடைய அலெக்ஸாண்டர், சீசர் போன்றவர்கள் மட்டுமல்லாது  சோலன்(Solon), சிசிரோ(Cicero) போன்ற உலக வரலாற்றில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாதவர்களின் வாழ்க்கை வரலாறும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இன்று நமக்கு அவர்கள் பொருட்படுத்தத்தக்க ஆளுமைகளாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அதற்குப் பிரதானமான காரணம்  ப்ளூடார்க் எழுதிய வாழ்க்கை வரலாறுதான்.

இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக்க நாம் நவீன கால உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். நெப்போலியனின் வாழ்க்கையை எந்தகாலத்திலும் சுவாரசியமற்ற, முக்கியத்துவமே இல்லாத ஒரு பேசுபொருள் என சொல்லிவிடவே முடியாது இல்லையா? John Stevens Cabot Abbott இன் “The History of Napoleon III, Emperor of the French ” என்ற நூலும்,  Emil Ludwig இன் “ life of napoleon” னும் வாழ்க்கை-வரலாற்று கிளாஸிக் நூல்கள். அவை கிளாஸிக்குக்குளாக இருப்பதற்கு நெப்போலியன் என்ற ஆளுமைதான் காரணமா?

அப்படிப்பார்த்தால், நெப்போலியனைப் பற்றி எழுதிக் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான  வாழ்க்கை-வரலாற்று நூல்கள் தோல்வியடைந்ததற்கு நாம் என்ன காரணத்தை சொல்லமுடியும்? டாக்டர் ஜான்சன் (Dr. Samuel Johnson) ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவ்வளவு பொருட்படுத்தக்கூடிய ஆளுமை அல்ல. ஆனால் ஜான்சனின் வாழ்க்கையைப் பற்றி போஸ்வெல்(James Boswell) எழுதிய “life of Johnson” என்ற நூல் ஒரு இலக்கியப் படைப்பிற்கு நிகரானது. இந்த உதாரணங்கள் வழியாக நாம் வாழ்க்கை வரலாற்றெழுத்து பற்றி சில அனுமானங்களை யோசித்துப் பார்க்கலாம்.

வாழ்க்கை வரலாற்றெழுத்தின் கச்சாப்பொருளான வாழ்க்கை மற்றும் வாழ்க்கை வரலாற்றெழுத்து என்ற கலை இவை இரண்டிற்குமான உறவு என்பது புகைப்படக்கலைஞரின் கலை, புகைப்படமாக ஆகக்கூடிய முகம் இவை இரண்டிற்குமான உறவிற்கு சமானமானது. அழகிய, உயிர்துடிப்புள்ள முகங்கள் புகைப்படத்தில் (அது எந்த புகைபடக்கலைஞர் எடுத்திருந்தாலும்) உயிரற்ற, வசீகரமற்ற வெறும் பிம்பங்களாக மட்டுமே பதிவாகியிருக்கும் விந்தையை நாம் எப்படி புரிந்துகொள்வது?  கண்முன்னே அப்பட்டமாக வெளிப்படும் உருவ அழகுகள் கூட நம் உடலுறுப்புகளின் இணைப்புகளில் உள்ள ஏதோ விளங்கிக்கொள்ளமுடியாத தனித்தன்மையால் புகைப்படத்தில் பதிவாவதில்லை. நேரில் பார்க்கும்போது அவ்வளவு அழகோ, வசீகரமோ அற்ற சில முகங்கள் ஃபோட்டோவில் பார்க்கும்போது மிக வசீகரமாக, ’அழகிய’ என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்பதுபோல பதிவாகியிருக்கும்.

இந்த விசித்திரத்தன்மையை  மிகச்சிறந்த வாழ்க்கையும், வாழ்க்கைவரலாற்றெழுத்து என்ற கலையும் இணையும்போதும் நம்மால் காணமுடியும். ஓர் ஆளுமையின் முக்கியத்துவம், புகழ் இவையெல்லாம்  எழுத்தாளருக்கு ஒரு கண்ணி மட்டும்தான். வாழ்க்கை என்ற முகமும் வாழ்க்கை வரலாற்றெழுத்து என்ற காமிராவும் முழுமையான ஒத்திசைவை அடையும்போது மட்டும்தான் கலைப்படைப்பாக ஆகும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் பிறக்கின்றன.\

பண்டிட் ஜவஹர்லால் நேரு வாழ்க்கைவரலாற்றை எழுதுபவர்களுக்கு ஒரு சவால் என்ற கருத்துக்கு அறிமுகமாகத்தான் மேலே குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வளவு நீளமான அறிமுகக்குறிப்பு இல்லையென்றால் இந்த கருதுகோளை தவறாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நேருவைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட எண்ணங்களுக்கும் இங்கே பேசப்போகும் விஷயத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை முதலிலேயே தெளிவாக்கிக்கொள்கிறேன்.

வாழ்க்கை வரலாற்றெழுத்து என்ற கலையால் ஏன் நேருவை வசப்படுத்த இயலவில்லை? இந்த கேள்வியை மட்டும்தான் இப்போதைக்கு நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்போகிறோம். பிரான்ஸ் அல்லது ஐரோப்பாவின் வரலாற்றில் கொஞ்சம்கூட ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட Emil Ludwig இன் “life of napoleon” நல்ல வாசிப்பின்பத்தை அளிக்கும் நூல். அந்த நூலை வாசிக்கும்போது நெப்போலியனின் வாழ்க்கையைப் பற்றிய நாம் அடையும் அறிதல் என்பது நமக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்தமான வாசிப்பின்பத்தின் ஒரு பகுதி மட்டும்தான். அந்த கலைப்படைப்பு நம்மை ஈர்க்கிறது. அது மட்டும்தான் நிதரிசனம்.

Stephan Zweig இன் “பால்ஸாக்(Balzac)” என்ற வாழ்க்கை வரலாற்று நூலை நாவலின் வரலாற்றைப் பற்றியோ, நாவலின் வடிவங்கள் பற்றியோ உங்களுக்கு எந்த அக்கறையும், புரிதலும் இல்லையென்றாலும் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடலாம். மேலே குறிப்பிட்ட Emil Ludwig இன் “life of napoleon” போல, Stephan Zweig இன் “பால்ஸாக்(Balzac)” போல சிறந்த வாழ்க்கை-வரலாற்று நூலை நேருவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுதிவிடமுடியுமா? முடியாது என்றுதான் தோன்றுகிறது.

நேருவைப் பற்றி இதுவரை வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களில் ஒன்றுகூட வாசிப்பின்பம் அளிப்பவை அல்ல. நேருவின் வாழ்க்கையை வைத்து ஒரு நல்ல வாழ்க்கை வரலாற்று நூலை எழுத சாத்தியமேயில்லை என்ற முடிவுக்கு இந்த நேரடியான தரவு ஒன்று மட்டுமே போதுமானது. ஆனால், நேருவின் வாழ்க்கை வாழ்க்கை-வரலாற்றெழுத்திற்கு வசப்படாத ஒன்று என்ற முடிவை வேறு பல காரணிகளைக்கொண்டும் நம்மால் நிறுவ இயலும்.

நேருவைப்பற்றி இந்தியாவிற்குள்ளே மட்டும்  ஓரளவு அறியப்பட்ட, புகழ்பெற்ற வாழ்க்கை வரலாறுகள் இருக்கின்றன. மி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய வாழ்க்கை-வரலாறு நேருவிற்குக்கேகூட ஓரளவு ஏற்புடைய நூல். இந்திய அரசும், நேருவும் ஒத்துழைத்ததால் Michael Brecher என்ற அமெரிக்கர் எழுதிய “Nehru- A political Biography” என்ற நூல் வெளியானது. நேருவை பற்றி தன்னுடைய பார்வையை பல்வேறு முறை மாற்றியமைத்துக்கொண்ட Arthur Moore நேருவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். மலையாளம் உட்பட இந்தியாவின் பிராந்திய மொழிகள் அனைத்திலும் நேருவைப்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கை வரலாறுகள் இருக்கின்றன.

இதை தவிர்த்து நேருவின் குடும்ப அங்கத்தினர் பலரும் அவருடனான தங்களின் உறவை அடிப்படையாகக்கொண்டு நிறைய கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.  புருஷோத்தம் தாஸ் டண்டன் (Purushottam Das Tandon) நேருவின் வாழ்க்கை வரலாற்றையும் அவருடனான தன் அனுபவங்களையும் கலந்து எழுதிய “Nehru your neighbour” என்ற ஒரு நூலும் வெளியாகியிருக்கிறது.

மேற்கூறிய நூல்கள் எல்லாம் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு நல்ல வாழ்க்கை வரலாற்று நூலை வாசித்து நாம் அடையும் வாசிப்பின்பத்திற்கு நிகரான அனுபவத்தை அந்த நூல்கள் எவையுமே அளிக்கவில்லை. நேருவைப் பற்றி இனி வெளிவரப்போகும் எந்த வாழ்க்கை வரலாற்று நூலுக்கும் இன்றும், வருங்காலத்திலும் கண்டிப்பாக ஒரு முக்கியத்துவம் உருவாகும்.

இந்தியாவின் சுதந்திரப்போராட்ட வரலாறு, ஒரு தேசியமாக நாம் எழுந்துவந்த விதம் போன்ற நிகழ்வுகளுக்கு உலக வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு. இந்திய தேசிய உருவாக்கம், சுதந்திரப் போராட்டம் இவற்றை கூர்ந்து வாசிப்பவர்களுக்கும்  சமூகவியல், அரசியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் தவிர்க்கவே முடியாதவை. அப்படிப்பார்த்தால், எந்த ஆளுமையின் வாழ்க்கை வரலாற்று நூலை எடுத்துக்கொண்டாலும் அந்த தவிர்க்கமுடியாத தன்மை என்பது கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். பூமியின் குறிப்பிட்ட பிராந்தியத்தில், உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலகட்டத்தில், குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளைப் பற்றி மட்டும்தான் வாழ்க்கைவரலாற்று நூல்கள் எழுதப்படுகின்றன. அந்த பிரத்யேகமான பிராந்தியத்தில், காலகட்டத்தில், ஆர்வமுள்ளவர்களுக்கு அவற்றுடன் தொடர்புடைய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகள் முக்கியமான ஆய்வுப்பொருட்கள். அறிவியலின் வரலாற்றை எழுதுபவருக்கு ஐசக் நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய எந்த நூலாக இருந்தாலும், எழுதியது யாராக இருந்தாலும் அவை தவிர்க்கப்படவே முடியாதவை.

ஆனால், அப்படி மட்டும்தான் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பது  நமக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நாம் எதிர்ப்பார்ப்பது ஆய்வுப்பொருளாக மட்டும் சுருக்கிவிடாத இயலாத நேருவை. காரணம், நாம் அறியும் நேரு என்ற ஆளுமை வெறும் சுதந்திரப்போராட்டத் தலைவர் மட்டுமல்ல. தேசியத்தின் தலைவர், பிரதமர் போன்ற நிலைகள் எல்லாம் நாம் அறிந்த நேருவின் ஒரு சிறிய பகுதி மட்டும்தான். நேரு பல முகங்கள் கொண்ட, பல திறமைகள் நிறைந்த ஒரு முழுமையான மனிதர். அதனால் நேருவைப் பற்றி எழுதப்படும் வாழ்க்கை-வரலாற்று நூல்கள் கண்டிப்பாக சிறந்த கலைப்படைப்புகளாகத்தான் இருக்கும் என நாம் எதிர்பார்ப்போம். தர்க்கப்பூர்வமாகப் பார்த்தால் இந்த எதிர்பார்ப்பு சரியானதுதான்.

ஆனால், நேருவை பற்றி இன்று உள்ள வாழ்க்கை-வரலாற்று நூல்களை கலாபூர்வமான அளவுகோல்களால் நாம் மதிப்பிட ஆரம்பித்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அவற்றில் பெரும்பாலானவை நேருவை ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே பரிசீலிக்கும் எல்லைக்குட்பட்ட தன்மை கொண்டவை. நேருவின் அரசியல் வாழ்க்கையை மட்டும்தான் பெரும்பாலான நூல்கள் பேசுபொருளாக எடுத்துக்கொள்கின்றன. இதற்கப்பால் சென்று எழுத ஒன்று எழுத்தாளர்களுக்கு தைரியம் இல்லை அல்லது அவரைப்பற்றி அப்படி எழுத சாத்தியமேயில்லை. இந்த சிந்தனையை நீட்டிக்குக்கொண்டு சென்றால் நேருவின் வாழ்க்கையிலுள்ள ஒரு போதாமையை நாம் கவனிப்போம்.

நேரு தனியாளுமையும்(private- personality) பொது ஆளுமையும்(public- personality) பிரிக்கமுடியாதபடி ஒன்றிணைந்த ஒரு மனிதர். இங்கிலாந்தில் படிப்பை முடித்துவிட்டு இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து  தொடங்கி நேருவின் தனியாளுமையும் பொதுஆளுமையும் ஒன்றாக ஆகும் செயல்பாடு தொடங்குகிறது. சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டபோதும் கொஞ்ச காலம் நேருவின் தனிஆளுமையின் சில சுவடுகள் எஞ்சியிருந்தன. அப்போதுகூட, அவரது தனிஆளுமை (மற்ற ஆளுமைகளுடன் அவரது உறவு, உரசல்கள் போன்றவை) ஈர்ப்புடையதாக இருப்பது அரசியல் பின்னணியில் வைத்துப்பார்க்கும்போது மட்டும்தான். தந்தை- மகன் உறவில் உருவாகும் கொந்தளிப்புகள், கணவன்-மனைவி உறவை இனிமையாக்கும் வேதனைகள் உட்பட நேருவின் தனியாளுமையின் ஒவ்வொரு இழையும் அரசியல் என்ற வெள்ளை கம்பளத்தை அழகுபடுத்தும் அலங்கார வேலைப்பாடுகள் மட்டும்தான்.

சுதந்திரப்போராட்டம் அதன் இறுதிகட்டத்தை எட்டும்போது நேருவின் தனியாளுமையின் எந்த சுவடும் எஞ்சயிருக்கவில்லை. கமலா நேருவின் மரணத்திற்கு முன்புள்ள வாழ்க்கையைப் பற்றி மட்டும் பேசும் நேருவின் Toward Freedom (1936)” என்ற சுயசரிதைக்கு இலக்கியத் தகுதி வந்ததற்குக் காரணம் பொது வாழ்க்கை மட்டுமே நிறைந்த பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு சமானமாகவே தனியாளுமையான நேருவும் அந்த நூலில் வெளிப்பட்டதால்தான். தன்னுடைய சுயசரிதையில் தொடர்ந்து வரும் காலகட்டத்தை நேரு எழுதியிருந்தால் மேலும் ஒரு இலக்கிய ஆக்கம் வெளிப்பட்டிருக்கலாம். அப்படியொரு நூலின் முக்கியத்துவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் இன்று  மதிப்பிடவே முடியாது.

ஆனால், ஒன்றுமட்டும் உறுதி.இன்று இருக்கும் நேருவின் சுயசரிதைக்கு இருக்கும் இலக்கியத்தரமும் ஒட்டுமொத்தமான வசீகரமும் மீதியுள்ள பாகங்கள் எழுதப்பட்டிருந்தால் அவற்றிற்கு உருவாகிவிட வாய்ப்பேயில்லை. ஏனெனில் 1947 முதல் நேரு தனியாளுமை கொஞ்சம்கூட இல்லாத ஒருவராக ஆகிவிட்டிருந்தார். தனி ஆளுமையின் சுவடுகளற்ற, நூறு சதவீதம் பொது வாழ்க்கை கொண்ட ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தனிஆளுமையின் வாழ்க்கை வரலாறு என்ற நிலையைத் துறந்து ஒரு நாட்டின், ஒரு சமூக இயக்கத்தின் வரலாறாக ஆகிவிடுகிறது. அவ்வகையான ஆளுமையின் வாழ்க்கை வரலாறு எழுத்தாளர்களுக்கு வசப்படக்கூடியதாகவோ, வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிக்கக்கூடிய வாசகர்களை கவரக்கூடியதாகவோ இருக்காது.

இதோடு தொடர்புடைய இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். நம்முடைய பாரம்பரியத்தில் அந்தரங்க வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க ’அந்தரங்கமான’ வாழ்க்கையே தான். ஒருபோதும் நாம் அதை எந்த வகையிலும் பதிவு செய்வதில்லை. நமது நாயகர்களின்  தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை என ஒன்றை குறிப்பிடுவதோ, பதிவு செய்யும் வழக்கமோ இங்கே இல்லவே இல்லை.

இந்தியாவின் பொதுவான பாரம்பரியப்படி நேருவின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் அவரது தனியாளுமையின் சுவடுகளே இல்லாததை புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதுமட்டுமல்ல. தன் தனிவாழ்க்கையில் எந்த அவதூறுகளோ பிழைகளோ இல்லாத, மறைக்கப்பட்ட அவசியமற்ற அந்தரங்க வாழ்க்கை கொண்ட ஒருவர்தான் நேரு. ஆண் பெண் உறவுச் சிக்கல்கள், பிளாட்டோனிக் காதல் (platonic- love), அதீத காமவிழைவு போன்ற  மனித வாழ்க்கையின் பிரதானமான அம்சங்கள் வாழ்க்கை வரலாற்று எழுத்திற்கு மிக முக்கியமான புழங்குதளம். நேருவின் வாழ்க்கையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை. அது நேருவின் பிழையில்லை. மனிதன் என்ற கோணத்தில் பார்க்கும்போது பிறிதொன்றில்லாத மேன்மை என்றுதான் அந்த நிலையைச் சொல்ல வேண்டும். ஆனால், இம்மாதிரியான வாழ்க்கை என்பது வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு மிகப்பெரிய துரதிஷ்டம்.

வாழ்க்கை வரலாற்று எழுத்திற்கு அவ்வளவாக வசப்படாத சில குறிப்பிடத்தக்க ஆளுமைகளின் வாழ்க்கையை பரிசோதித்தால் அவை சொல்லும் உண்மை ஒன்றுண்டு. சிந்தனையில் மூழ்கியிருக்கும் சாக்ரடீஸின் மனைவி அவரின் தலையில் சாணித் தண்ணீரை ஊற்றுவது அவ்வளவு நல்ல அனுபவமில்லை. ஆனால் சாக்ரடடீஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதத்துணிபவனுக்கு மண்மறைந்த அந்த மகத்தான ஆளுமையின் கதைக்கு இந்த சம்பவம் புதிய உயிர் கொடுக்க உதவும் ஒரு சஞ்சீவினி. விக்டர் ஹ்யூகோவின் மனைவி சாங்போ என்பவனுடன் காமத்தில் இருந்தவள். இது ஹ்யூகோவின் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் வேதனைக்குள்ளாக்கிய சம்பவம். ஆனால், வாழ்க்கை-வரலாற்றெழுத்து என்ற கலைக்கு  இந்த அவமான உணர்வை ஏற்படுத்தும் சம்பவங்களின் முக்கியத்துவம் வேறொன்றாகும். ஒரு ஆளுமையோ அவருடன் நெருக்கமானவர்களோ தீய நடத்தைகளிலோ ஆபாசமான செயல்பாடுகளிலோ ஈடுபட்டிருப்பது நல்ல வாழ்க்கை-வரலாற்று நூலுக்கு   அவசியம் என்று நான் சொல்ல வரவில்லை. வாழ்க்கை வரலாற்றை எழுதும் கலைஞனுக்கு அந்த வீழ்ச்சிகளும், துரதிஷ்டங்களும் அவற்றைப்பற்றி கிடைக்கும் உண்மையான ஆவணங்களும் விலைமதிக்கமுடியாத மதிப்பு கொண்டவை என்றுதான் நான் சொல்ல வருகிறேன்.

மேலும் அரசியல், சமூகம் சார்ந்த பொதுப்பிரச்சனைகளின் விஷயத்தில்கூட  அப்பிரச்சனைகளைப் பற்றிய தன்னுடைய அபிப்பிராயங்களை நேரு யாரிடமும் பகிர்ந்துகொண்டிருப்பதற்கான தடையங்கள் இல்லை. சர்ச்சிலின் விஷயத்தில் அவரது தனி அபிப்பிராயங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. நேரு விஷயத்தில் அதுவும் இல்லை. பொது ஆளுமைக்கு ஒரு நிழல்(shade) என்பதுபோல தனிப்பட்ட எண்ணங்களை, அபிப்பிராயங்களை நேரு எழுதி வைத்திருக்கவுமில்லை. அன்பின் அடையாளமான நேருவிற்கு உயிர் நண்பர்கள் இல்லவே இல்லை. தன் தனிவாழ்க்கையின் அந்தரங்கங்களை பகிர்ந்துகொள்ள, குறைந்தபட்சம் பொதுவான சமூக,அரசியல் சார்ந்த பிரச்சனைகளில் தன் தனிப்பட்ட அபிப்பிராயங்களை வெளிப்படுத்தும் அளவுக்கூட நெருங்கிய நண்பர்கள் நேருவிற்கு இருக்கவில்லை என்ற உண்மை நேருவிற்கும் வாழ்க்கைவரலாற்றெழுத்து என்ற கலைக்கும் நடுவில் கருங்கல் சுவர் போல உயர்ந்து நிற்கிறது.

முதன்மையான ஒரு கலைப்படைப்பாக ஆக வாய்ப்பற்றது என்றாலும் அரசியல்மட்டுமே கொண்ட ஒரு சிறந்த வாழ்க்கை என்பது நல்ல வாழ்க்கைவரலாற்று நூலுக்குப் போதுமானது. அப்படி ஏராளமான உதாரணங்கள் இருகின்றன. எப்படிப்பார்த்தாலும், ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமையின் பொது வாழ்க்கையை நாம் ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்த்தால் அதில் தவிர்க்கமுடியாதபடி ”நாடகீயம்” என்பது பிரதானமாக இருக்கும். தன்னளவில் உண்மையான நாடகீயத் தருணங்கள் இல்லையென்றாலும் நாடகீயமாக ஆக சாத்தியமுள்ள பகுதிகள் அதில் இருக்கும். ஆனால், நேருவின் பொதுவாழ்க்கையின் வரைபடத்தை பரிசோதனை செய்தால் அதில் எதிர்ப்பாராத சம்பவங்கள் , பரபரப்பான நிகழ்வுகள் என எதுவுமே இல்லை. தன் பதவியின் விஷயத்தில் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியமே அதிருஷ்டசாலியான நேருவின் வாழ்க்கையில் உண்டாகவே இல்லை எனச் சொல்லலாம். அரசியலில் எதிரிகளே இல்லாத ஒருவர் அவர்.

ஆரோக்கியமான ஒரு விதையை விதைத்து சரியான சமயங்களில் உரம் இட்டு, தண்ணீர் பாய்ச்சி, ஒருமுறைகூட கண்ணேறு படாமல், மண்வெட்டியால் ஒரு சின்ன வெட்டுகூட ஏற்படாமல் பேணி வளர்க்கப்பட்டு நல்ல பெருமரமாக வளர்ந்து பூத்து நிறைந்து எல்லாவருக்கும் நிழல்கொடுத்து அது நிலைநின்றது. மகான் மோத்திலால் நேருவின் மகன்  இங்கிலாந்தில் கல்வி முடித்தபின் இந்தியாவிற்கு வந்தார். இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினாரகவும் செயல்படத் தொடங்கினார். மோத்தில்லால் நேருவின் மகன் மகாத்மா காந்தியின் நேரடி வழிகாட்டுதலில், பாதுகாப்பில்  அரசியல்தலைவராக களமிறங்கும்போது அங்கு நேருவின் அங்கீகாரம் பற்றிய பிரச்சனையோ, அவரது இடத்தைப்பற்றிய கேள்வியோ இல்லவே இல்லை. நேரு தனது பதவியையோ, அவரது அதிகார அமைப்பு உட்பூசல்களால் சவாலுக்குள்ளான சந்தர்ப்பத்தையோ ஒருமுறைகூட எதிர்கொள்ள நேர்ந்ததில்லை என்று சொல்லலாம்.

பலருக்கும் ஒரு பிழையான புரிதல் இருக்கிறது, சுபாஷ் சந்திரபோஸ் நேருவின் தலைமைக்கு சவால் என்று. இது ஒரு மேலோட்டமான புரிதல்தான். போஸ் சவால்விட்டதும் எதிர்வினையாற்றியதும் காந்திய சிந்தனை, காந்தியின் தலைமை என்பதற்கப்பால் வேறு எதனோடும் அல்ல. அவர் தோல்விடைந்தது காந்தியிடம், காந்தியத்திடம். சுபாஷ் சந்திரபோஸின் போராட்டங்கள் நேரு என்ற தனியாளுமையின் பதவிக்கு சவாலாக இருந்ததில்லை.

சுதந்திரம் கிடைத்தபிறகு காங்கிரஸிலும் அமைச்சரவையிலும் இருந்த நேரு- பட்டேல் உரசல்கள் இன்று புகழ்பெற்றவை. பட்டேல் எதிர்பாராத விதமாக இறக்காமல் இருந்திருந்தால் நேருவின் நிலை மிக கடினமானதாக ஆகியிருக்கும் என நம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். இதுவும் பிழையான, மேலோட்டமான புரிதல் என்றுதான் தோன்றுகிறது. ஆங்கிலேயார் இந்தியாவை விட்டு சென்றதும் உருவான தேசப் பிரிவினை, அதன் விளைவான வன்முறைகள், பின்னர் உருவான கம்யூனிஸ்ட் கட்சிகளின் புரட்சி நடவடிக்கைகள் போன்றவற்றால் சின்னாபின்னமான நிலையிலிருந்த  இருந்த இந்தியாவில் நேருவை அப்படியே அகற்றிவிட்டு மிக எளிதாக தலைமை அதிகாரத்தில் பாதுகாப்பாக இருக்க பட்டேலால் இயலுமா என்ன? இந்நிலையை கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் புரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் இந்த விஷயத்தை கண்டுகொண்டார்களோ இல்லையோ சர்தார் வல்லபாய் பட்டேல் இதை நன்கு உணர்ந்திருந்தார் என்பது உறுதி.

வேண்டுமென்றால், நேருவின் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கும் ஒரு சாத்தியத்தைப் பற்றி நாம் ஊகித்துப் பார்க்கலாம். பாகிஸ்தான் உருவாகி வந்ததை நேருவைவிட வலுவாக எதிர்த்தவர், அவரைவிட வருந்தியவர் என எந்தத் தலைவரையும் நம்மால் காண இயலாது. பிளவுபடாத ஒரு இந்தியா என நமக்கு சுதந்திரம் கிடைத்திருந்தது என்றால் ஜின்னாவின் தலைமையிலுள்ள முஸ்லீம் லீக் அரசியல் தரப்பில் மிக வலுவாக இருந்திருந்திருக்கும். அந்நிலையில் நேருவின் கேள்விக்கு இடமில்லாத பதவியும் மரியாதையையும் நிலை நின்றிருக்குமா என்பது பொருட்படுத்தத்தகுந்த ஒரு கேள்வி. சொந்த அதிகாரத்திற்கு எதிராக உள்ள அந்த கண்ணுக்குப் புலப்படாத சவாலை நேரு எப்படி எதிர்கொண்டிருப்பார், எவ்வளவு தூரம் தாக்குப்பிடித்திருப்பார் போன்ற கேள்விகளை நாம் இன்று கேட்டுக்கொள்வது ஒரு அறிவுசார்ந்த விளையாட்டு மட்டும்தான். ஆனால் இந்த விஷயத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியொரு இடையூறைக்கூட நேரு எதிர்கொள்ள நேரவில்லை. ஒட்டுமொத்தமாக, மகத்தான அந்த வாழ்க்கைக்கு ”நாடகீயம்” என்ற அம்சமே இல்லை என்றுதான் நான் சொல்ல வருகிறேன்.

நேருவின் அக வாழ்க்கைக்கும் இதே பிரச்சனை இருக்கிறது. கொந்தளிப்பான, சாகசம் நிறைந்த பெரிய சம்பவங்கள் தொடவே தொடாத வாழ்க்கை கொண்டவர்களுக்குக்கூட நல்ல வாழ்க்கை வரலாற்று நூல்கள் இருக்கின்றன. காரணம், தீவிரமான அகவாழ்க்கை மட்டும் கொண்டவர்களின் சாகசம் என்பது புற வாழ்க்கையில் உள்ள சாகசமின்மையை சமன்செய்யக்கூடியது. சிலசமயம் அது புறவுலகின் கொந்தளிப்பைக்கூட விஞ்சக்கூடியது. அவ்வகையில் அகவாழ்க்கையின் சாகசம், தீவிரம் என்பது  மிகமிக வசீகரமானதுகூட. Heskath pearson எழுதிய ” George Bernard Shaw: his life and personality ” புகழ்பெற்ற வாழ்க்கை வரலற்று நூல். அந்த நூலின் ஈர்ப்பை யாராலும் மறுக்க முடியாது.

ஷாவை எடுத்துக்கொண்டால் அவர் வீட்டைவிட்டு வெளியே செல்லும் வழக்கமே இல்லாதவர். ஆனால், அக வாழ்க்கையில் கொஞ்சம்கூட தொய்வே இல்லாத  தீவிரமும், சாகசமும் அதை வெளிப்படுத்தும் உண்மையான குறிப்புகளும் பியர்சனின் பெர்னாட்ஷா – வாழ்வும் ஆளுமையும் என்ற நூலின் வெற்றிக்குக் காரணம். ஆனால், கருத்துலகின் கண்களில் பார்த்தால்  நேருவின் கருத்துப்புலமும் அவர் புழங்கிய சிந்தனைத்தளமும் கோபம், கசப்பு, கொந்தளிப்புகள், நிலைப்பாடு மாற்றங்கள் போன்ற எதன் தடையமும் இல்லாமல் இருக்கிறது.

1930ல் வெளிவந்த நேருவின் ‘Wither india’ என்ற  நூல் அவரது கருத்துலகை, அவர் கனவு கண்ட இந்தியாவை அறிந்துகொள்ள மிக முக்கியமான நூல். நேருவின் முதல் அரசியல் பிரவேசம் என்றுகூட அந்த நூலைச் சொல்லலாம். அந்த நூல்வழியாக நமக்கு முன் துலங்கும் லட்சியவாதியான நேரு தன் வாழ்க்கையின் இறுதிவரை கருத்தியல் ரீதியாக தனது லட்சியவாதத்திலிருந்து கொஞ்சம்கூட விலகவில்லை. நேரு இந்த ஒளிகுன்றாத லட்சியவாத அகவுலகை தனியாகப்பார்த்தால், அதில் பல மகத்துவங்களை நாம் காண இயலும். ஆனால் அந்த வாழ்க்கையில் ”நாடகீயம்” தீண்டவேயில்லை. இது நேருவின் ஒரு போதாமை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், நாடகீயம் அற்ற அகவுலக வாழ்க்கை என்பது  வாழ்க்கைவரலாற்றை எழுதுபவனுக்கு ஏமாற்றத்தை மட்டும்தான் அளிக்கும்.

நேருவைப்பற்றி இன்று வரையுள்ள வாழ்க்கை வரலாறுகள் சுவாரஸியமற்ற நூல்களாக இருப்பதற்குக் காரணம் அதை எழுதியவர்கள் வாழ்க்கை வரலாற்றெழுத்தில் மேதைமை இல்லாதவர்களாக இருந்தார்கள் என்பதாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒரு செவ்வியல் வாழ்க்கை வரலாற்று நூல் பண்டிட்ஜீயின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு வெளிவரும் என்று தோன்றவில்லை. வருத்தமளிக்கக்கூடிய இந்த உண்மையை இந்தியர்களாகிய நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான், வேறு வழியில்லை.

[தமிழில் அழகிய மணவாளன்]


யாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை
கதகளி அனுபவம்- கடிதம் – அழகிய மணவாளன்

நேரு – ஒரு கடிதம்

நேருவின் பொருளியல்கொள்கை பற்றி…

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

நேரு -குகா

நேரு பட்டேல் விவாதம்

எம் ஓ மத்தாயின் நேரு நினைவுகள்

சங்குக்குள் கடல்

முந்தைய கட்டுரைஆயிரம் ஊற்றுகள்
அடுத்த கட்டுரைவான்நெசவு