கண்ணனும் காந்தியும் – கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு

முதலில் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் உங்களை கண்டு கொண்டேன், கண்டு கொண்ட நாளில் இருந்து உங்கள் எழுத்தை வாசிக்காத நாள் இல்லை. உங்கள் படைப்பை, உங்கள் பேருரையை கண்டுகொண்டது முதல் என் வாழ்வில் எழுந்துள்ள நாள்பட்ட கேள்விகளுக்கு விடையை கண்டு கொள்ள பேருதவி புரிந்து இருக்கிறது. அதற்க்கு கோடானகோடி நன்றிகள்.

நான்  உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புவது, கண்ணனை குருவாகவோ/கடவுளாகவோ/அவதாரமாகவோ  ஏற்ற்கும் நீங்கள் காந்திஜியை அப்படி ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் .

என் தமிழில் உள்ள பிழையை ஜல்பனை துரியோதனன் நடத்தியது போல் தயைகூர்ந்து மன்னிக்கவும்.

நன்றி

உங்கள் வாசகன்
வெங்கடேஷ்
மான்செஸ்டர்
ஐக்கிய ராஜ்ஜியம்

அன்புள்ள வெங்கடேஷ்,

கண்ணனுக்கு இரண்டு முகங்கள். வரலாற்று மனிதன், மெய்ஞானி, தத்துவசிந்தனையாளன் என ஒரு முகம். ஒரு குறியீடு, ஒரு படிமம் என இன்னொரு முகம். நாம் அந்த வரலாற்று மனிதனை வரலாற்றினூடாகவும், மெய்ஞானியை மெய்ஞான வழிகளினூடாகவும், தத்துவசிந்தனையாளனை தத்துவம் வழியாகவும் அறிய முயல்கிறோம். வெண்முரசு அப்படித்தான் அவனை அறிய முயல்கிறது.

இன்னொரு முகம் கண்ணன் என்னும் உருவகம் அல்லது குறியீடு அல்லது படிமம். அது சென்ற மூவாயிரமாண்டுகளாக பல்லாயிரம் ஞானிகளாலும் கவிஞர்களாலும் திரட்டி எடுக்கப்பட்ட ஒன்று. நாம் அதைத்தான் தெய்வமென வழிபடுகிறோம். அது நம் உருவகம். இப்பிரபஞ்சத்தை படைத்தாளும் பெருவிசை ஒன்றின் அடையாளமாக அந்தப் படிமத்தை ஆக்கிக்கொள்பவர்கள் நாமே.

காந்திக்கு வரலாற்று மனிதன், தத்துவசிந்தனையாளன் என்னும் இருமுகங்களே உள்ளன. ஆகவே அவரை வரலாற்றில் வைத்தும் தத்துவத்தினூடாகவும் மட்டுமே அறியமுடியும். அவர் அகிம்சை போன்று அவர் முன்வைத்த சில விழுமியங்களின் அடையாளம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். இன்று அவர் ஒரு படிமம் அல்ல. ஒருவேளை இன்னும் ஆயிரம் ஆண்டுகளிலும் அவரும் இறையுருவமாக ஆகக்கூடும். பல தலைமுறைக்காலம் மனிதர்கள் அந்த அடையாளத்தின்மீது தங்கள் கற்பனைகளையும் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் ஏற்றிக்கொள்வதன் வழியாகவே அது நிகழும், அதுவரை அவர் மனிதரே. இதுதான் வேறுபாடு

ஜெ

முந்தைய கட்டுரைகாவியங்களை வாசித்தல்
அடுத்த கட்டுரைமழைப்பயணம் – கடிதங்கள்