அன்புள்ள ஜெ,
கவிதையுலகின் நுழைவாசலில் நிற்பவன் நான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கவிதைகளை படிக்கிறேன். இதுவரை படித்த கவிஞர்களில் எனக்குப் பிடித்தவர் கலாப்ரியா. எந்த அளவுகோலின்படி ஒரு கவிதையை எனக்குப் பிடித்தது என்று கூறுகிறேன்? ஒரு கவிதை என்னை புன்னகக்க வைத்தால், வாழ்வின் ஒரு தருணத்திற்கு நான் யோசிக்காத ஒரு கோணத்தை காட்டினால், என் வாழ்வுடனோ அல்லது மனித வாழ்வுடனோ பொருத்திப் பார்க்க வைத்தால், அது எனக்குப் பிடித்த கவிதை ஆகிறது (என்று நினைக்கிறேன்).
என் கேள்வி : கவிதை பள்ளியின் துவக்க வகுப்பில் இருக்கும் என்னைப் போன்றோர் ஒரே கவிஞரை நிறைய படித்தல் சரியா? “பிடித்த” கவிஞரை நிறைய படித்து பிறகு வேறு கவிஞர்களுக்கு செல்லுவதுதான் சரியான வழியா? இல்லை கவிதையில் எப்போதும் பல கவிஞர்களை படிப்பதுதான் சரியா? கலாப்ரியா எழுதிய கவிதைகள் “கலாப்ரியா கவிதைகள்” என்ற பெயரில் இரு தொகுதிகளாக கிடைக்கின்றன. அவற்றை வாங்கலாம் என்று இருக்கிறேன். அதற்காகவே இந்தக் கேள்வி.
ஒரு எச்சரிக்கை : உங்களின் “கவிதைகள் – விமரிசகனின் சிபாரிசு” என்ற பட்டியலில் உள்ள கவிதைகளை மெல்ல படித்து வருகிறேன். ஓரு Google Document-டிலும் பதிந்து வருகிறேன். சில பிடித்திருக்கின்றன. சில மண்டை காய வைக்கின்றன. ஆகவே இன்னும் பல கேள்விகள் என்னிடமிருந்து வரலாம் என்று உங்களுக்கு தெரிவிப்பது என் கடமை!
கவிதை பற்றிய மின்னஞ்சலில் கவிதை இல்லாமல் இருக்கலாமா? எனக்குப் “பிடித்த” 3 கவிதைகள்.
உச்சி வெயிலில்
இரண்டு
வண்ணத்துப் பூச்சிகள்
கீழ் மேலாய்
மேல் கீழாய்
பறந்து
ஒன்றுகொன்று
நிழல் தந்து கொண்டு.
[கலாப்ரியா]
வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றையொன்று சுற்றி சுற்றி பறப்பதை பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று நிழல் தருகின்றன என்பது என்னை புன்னகைக்க வைத்தது. படித்த பல மாதங்களுக்குப் பிறகு என் அலுவலுகத்தின் நாலாம் தளத்தின் கண்ணாடிக்கு வெளியே இரு மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றையொன்று சுற்றி வந்தபோது இக்கவிதை நினைவுக்கு வந்தது.
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்…
இதெல்லாம் ஒரு காரணமா?
[முகுந்த நாகராஜன்]
இத்தனை வயது ஆனபிறகும் இந்தக் குழந்தை என்னுள் இன்னமும் இருக்கிறது. பயணத்தில் ஜன்னல் சீட் இன்னமும் பிடிக்கிறது. கிடைக்கவில்லயென்றால் வருத்தமாக உள்ளது. அலுவலகத்திலும் ஜன்னல் பக்கத்தில் உள்ள சீட் வேண்டுமென்று கேட்டுப் பெற்றிருக்கிறேன் பல முறை; மரங்களையும், பறவைகளயும், வானத்தையும், மேகங்களையும், தொடுவானத்தையும், விமானங்களையும் பார்ப்பதற்காக.
மூன்றாவது கவிதை இன்று காலை கண்ணில் பட்டது :
மரத்தில், கிளையில்,
மஞ்சரியில் பார்த்தாயிற்று.
கீழ்த் தூரில், மண்ணில்
கிடப்பதையும் ஆயிற்று.
வாய்க்க வேண்டும்
காம்பு கழன்ற பின்
தரை இறங்கு முன்
காற்றில் நழுவி வருமோர்
அந்தரப் பூ காணல்
[கல்யாண்ஜி]
காற்றில் நழுவி, சுழன்றபடி கீழிறங்கும் பூவை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு இக்கவிதை பிடித்த காரணம் எனக்கு இருக்கும் ஒரு, சற்றே கிறுக்குத்தனமான, விருப்பம். பலவிதமான மரங்களிலிருந்து விழும் இலைகளை, அவை தரையை தொடும் முன்பே பிடித்து ஒரு ஆல்பம் தயாரிக்க வேண்டுமென்று! ஆல்பத்தின் பெயர் : “விழுந்து கொண்டே இருக்கும் இலைகள்” அல்லது “விழுந்து முடியாத இலைகள்”! :-)
நன்றி
டி.கார்த்திகேயன்
***
அன்புள்ள கார்த்திகேயன்
கவிதை வாசிப்பின் ஒரே வழி வாசித்துக்கொண்டே இருப்பதுதான். இசைக்கும் இசையை கேட்டுக்கொண்டே இருப்பதுதான் உள்ளே நுழைய, தேர்ச்சி பெற ஒரே வழி. வாசிக்க வாசிக்க நம் ரசனைகள் நமக்கே தெளிவுறுகின்றன. கவிமொழியும் கவிதைகளின் குறிப்பொருளும் துலங்கி வருகின்றன. அத்துடன் நாம் கவிதை ரசனையில் நம்மையறியாமலேயே முன்னகர்ந்துகொண்டும் இருக்கிறோம்.
வாழ்த்துக்கள்
ஜெ
***