ஆசிரியருக்கு வணக்கம்
உங்களுக்கு என் முதல் கடிதம், திண்டுக்கல் காந்திகிராம நிகழ்வில் நேரில் பார்த்தேன் என்னுடைய வாழ்நாளில் மிக முக்கியமான நாள், உங்களை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மற்றும் சிவராஜ் அண்ணா எல்லோரையும் பார்த்தது மன நிறைவைத் தந்தது. கல்லெழும் விதை நிகழ்விற்கு நேரில் வர இயலவில்லை. காணொளியில் இன்று பார்த்தேன், பெருந்தொற்று, வெறுப்பரசியல், போன்றவற்றிற்கு மத்தியில் தன்மீட்சி மற்றும் உங்களுடைய உரைகள் என்னை போன்றவர்களை சரியான பாதையில் வழி நடத்துகிறது.
தன்மீட்சி படித்தபோது மிகுந்த தெளிவு கிடைத்தது. அதுபோல் உங்கள் உரையும் நேர்மறையாக சிந்திக்க வைத்து செயல் நோக்கி என்னை செலுத்துகிறது. உங்களை அருகில் வந்து பார்த்து பேசியதில்லை, நீங்கள் மேகத்தை அளக்கும் ராஜாளி, கீழிருந்து நான் ஆச்சர்யமாக அண்ணாந்து பார்க்கிறேன். நீங்கள் பார்ப்பதற்கு, பழகுவதற்கு எளிமையாக தெரிந்தாலும், உங்கள் எழுத்து எங்களை கவர்ந்துவிடுகிறது, வேறு எதையும் படிக்க முடியவில்லை, என் நண்பர் சொல்லுவார், நீங்க ஜெயமோகன் பைத்தியமா என்று. கஷ்டப்பட்டு கூட ஏழாம் உலகம் படிக்கப் பிடிக்கிறது, வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்க முடியவில்லை. உங்கள் எழுத்திற்கு அடிமையாகிவிட்டேனா தெரியவில்லை. படிப்பதற்கு கடினமானதை மனம் விரும்புகிறது.
நன்றி
விக்னேஷ்
***
அன்புள்ள விக்னேஷ்
ஓர் எழுத்து நம்மை ஆட்கொள்கிறது என்றால் அது நம்மை அடிமைப்படுத்தவில்லை, மாறாக நம் உள்ளே உறங்கும் எண்ணங்களையும் கனவுகளையும் முளைக்க வைக்கிறது என்றே பொருள். நமக்கு அது பெரும் அறைகூவலாக அமைகிறது. அந்த அறைகூவலை நாம் வென்று கடக்கலாம், தவிர்த்துச் செல்லமுடியாது. நம்மை ஆட்கொள்ளும், நம்மை எடுத்துச்செல்லும் படைப்பாளிகளையே நாம் உண்மையில் முழுமையாக ஆழ்ந்து வாசிக்கமுடியும்.
ஜெ
***
அன்புள்ள ஜெ,
‘கல்லெழும் விதை’ நிகழ்வில் நீங்கள் ஆற்றிய உரையின் காணொளி வடிவை கண்டுகேட்டேன். நிறைவளித்தது. பலரும் பயனற்ற எதிர்ச்செயல் வீணடிப்புகளிலிருந்து மீண்டு நேர்மறை செயலூக்கம் பெற உதவக்கூடிய உரை.
கருத்தியல்பற்று (Idealogical Dogma) மற்றும் இலட்சியவாதம்(Idealism) ஆகியவற்றுக்கு இடையேயான நுட்பமான வேறுபாடுகளை விளக்கியுள்ளீர்கள். உரையின் நடுப்பகுதியில் “இலட்சியவாதம் என்பது உங்களுடைய பங்களிப்பை (தன்னறத்தை) நேர்மறையான உள்ளத்துடன் செய்வதுதான். நீங்கள் செய்யும் பங்களிப்பு என்னவென்று உங்களுக்கு இப்போது தெரியாது. உங்கள் செயலுக்கான நீண்டகால விளைவு திட்டவட்டமாக அறிந்துவிடமுடியாதது. நீங்கள் இன்று செய்யும் சிறிய விஷயம் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமான விஷயமாக மாறியிருக்கலாம்.நீங்கள் இன்று செய்யும் மிகப்பெரிய விஷயம் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பொருட்படுத்துமளவு எந்த விளைவுகளையும் உருவாக்காமல் போகலாம்” என்று பேசியுள்ளீர்கள்.
இதைக் கேட்டபோது மின்னல்வெட்டென கீதையின் ஒரு ஸ்லோகம் மனதில் எழுந்தது.
“கர்மணி ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசந
க்ஷ மா கர்ம பலஹேது:பூ:மா தே ஸங்க:அஸ்து அகர்மணி
(சாங்கியயோகம்,47வது ஸ்லோகம்)
இந்த ஸ்லோகத்திற்கு உயர்மெய்மையின் தளத்தில் ஆழ்ந்தகன்ற பொருள் இருப்பினும் சாமான்ய தளத்தில் இவ்வாறாக எளிய பொருள் கொள்கிறேன் “ஒருவன் செயலின்பத்திற்காகவே செயலாற்ற வேண்டும். அச்செயலின் எண்ணற்ற விளைவுச் சாத்தியங்கள் அறியத்தக்கவை அல்ல. செயலின் விளைவு முடிவிலியின் மடியில் இருப்பதை உணர்ந்து விளைவுபற்றி திட்டவட்டமான உறுதியான நம்பிக்கைகளை தவிர்த்துவிட்டு அச்செயல்தரும் நிறைவுக்காக மட்டுமே செயலாற்றவேண்டும்.”
விளைவுகள் உறுதியானவையல்ல என்று அறிந்தவன் செயல்படதயங்கி ‘ஏன் செயலாற்றாவேண்டும்?’ என்று கேட்கக்கூடும். அவனிடம் கூறவேண்டியது “நண்பா! இலக்கடைதல் மட்டுமல்ல, பயணமும் இன்பமே. ஆகவே செயலின்பத்திற்காக செயல்புரிக!” என்பதுதான். நீங்கள் உங்கள் உரையில் உணர்த்துவதும் அதையே என நினைக்கிறேன்.
வீரபத்ரன்
***
அன்புள்ள வீரபத்ரன்
சரியாகவே சொல்கிறீர்கள். நான் மிகுந்த விசையுடன் கூறுவது ஓர் எச்சரிக்கையை. இன்றைய சூழலில் அதை மீளமீளச் சொல்லவேண்டியிருக்கிறது. இன்று ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் பெரும் இலக்குகளை அளிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ‘ஆம்பிஷன்’ பற்றிய பேச்சாகவே இருக்கிறது. ’உன்னால் முடியும் தம்பி’ என அறைகூவிக்கொண்டே இருக்கிறார்கள். வரலாற்றில் எந்தக்காலத்திலும் இப்படி ஒவ்வொருவரும் சாதனையாளராக இருந்தாகவேண்டுமென்ற கட்டாயம் இருந்ததில்லை என நினைக்கிறேன்.
ஓர் எல்லைவரை இந்த ஊக்கம், இந்த இலக்கு தேவைதான். ஆகவே அதை நான் மறுக்கவும் மாட்டேன். இலக்குநோக்கிய விசையே செயலுக்கு அடிப்படை. ஆனால் இலக்கு மட்டுமே என்னும்போது பெரும்பாலானவர்களை அது சோர்வில் தள்ளுகிறது. ஒருவர் சாதிக்க ஆயிரம்பேர் ஏமாற்றத்திலும் கழிவிரக்கத்திலும் மூழ்கச் செய்கிறது. அத்துடன் ஒவ்வொருவரும் அவர்களின் இளமையில் அவர்களைப் பற்றிய மிகையான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அந்த மிகையான எண்ணத்திலிருந்து மிகையான இலக்கை மேற்கொள்கிறார்கள். அதை அடையமுடியாதபோது வாழ்நாளெல்லாம் கழிவிரக்கத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.
நான் செயல் என்பதிலுள்ள இந்த நஞ்சைப் பற்றியே சொல்கிறேன். செயல் ஒருவனை நம்பிக்கையிழப்புக்கும் சோர்வுக்கும் தள்ளக்கூடும். செயலில் உள்ள தோல்விகளும், செயலின் விளைவுகள் தெரியாமலிருப்பதும் அச்சோர்வுக்கான காரணங்கள். செயலை விசையுடன் செய்வதனால் காழ்ப்பும், வெறுப்பும், சினமும் கொண்டவர்களாக நாம் ஆகக்கூடும். நம் ஆளுமையே எதிர்மறைத்தன்மை கொண்டதாக ஆகக்கூடும்.
அவ்வாறு ஆகாமலிருப்பதற்கான வழியையே சொல்கிறேன். நேர்நிலைப் பார்வை கொண்டசெயல். செயலின் இன்பத்தையும் நிறைவையும் மட்டுமே அதன் பெறுபயனாகக் கொண்ட செயல், தன்னை வெளிப்படுத்தவும் தன்னை முழுமைப்படுத்தவும் தன்னியல்பாகச் செய்யப்படும் செயலே அந்த நஞ்சிலிருந்து நம்மைக் காப்பது. விளைவை எண்ணிச் செய்யப்படும் செயல் சோர்வை அளிக்கும், ஆணவத்தையும் காழ்ப்பையும் வளர்க்கும்.
ஜெ
***