தேர்வுசெய்யப்பட்டவர்கள் – கடிதம்

அன்பின் ஜெ,

வணக்கம்!.

காரைக்குடியில் கனரா வங்கியின் “நூற்றாண்டு அறக்கட்டளை” மூலம் நூறு சதவிகித நிதியுதவியுடன்  செயல்படும் கைவினைக் கலைஞர்கள் பயிற்சி மையத்தை,  சென்ற வார இறுதியில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

கற்றலில் ஆர்வமுடையவர்களுக்கு  18 மாத கால இலவச பயிற்சி அளிக்கிறார்கள். மற்ற மையங்களிலிருந்து இம்மையம் தனித்துவமாக தெரிய காரணம்,


அ) : குருகுல பயிற்சி முறை.

ஆ) : தமிழக அளவில் சிற்பக் கலைக்கெனெ பிரத்யோக பயிற்சி மையம்.

இ) : மாணவர்களுக்கு தங்குமிடம்,உணவு, சீருடை, சிற்பங்கள் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்திற்கான செலவீனங்களையும் முழுமையாக பயிற்சி மையமே ஏற்றுக்கொள்கிறது.

ஈ) : விற்கப்படும் சிற்பங்களின் வெகுமதியில் இருபத்தி அய்ந்து சதவிதம், சிற்பத்தை செய்த மாணவனுக்கு அளிக்கபடுகிறது.

நான்கு விதமான  [மரம்,சுதை,கல் மற்றும் உலோகம்]  சிற்பக்கலை பயிற்சிகளில், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற பிரிவை தெரிவு செய்துகொள்ளலாம்.

மிகச்சிறந்த கட்டமைப்பு, அனுசரணையான நிர்வாகம், அர்பணிப்போடு செயல்படும் பயிற்றுனர்கள், வருடம் முழுமைக்கும் எப்போதுவேண்டுமானாலும் பயிற்சியில் சேர்ந்துகொள்வதற்கு வாய்ப்பு.

சரி… இதை உங்களுக்கு இப்போது ஏன் எழுதுகிறேன்?

வார இறுதி இருநாட்கள் பயணத்தில் சென்ற பகுதிகள் அனைத்திலும், பெரும்பாலான இளைஞர்கள்  கைபேசியிலிருந்து கண் எடுக்காமல் தலை குனிந்தவண்ணம் இருக்க,

கையில் சிறு உளியோடும் முழு கவனக்குவிப்போடும் தலை குனிந்தமர்ந்திருக்கும் சிறு இளைஞர் குழுவை பயிற்சி மையத்தில் சந்தித்தபோது, உங்கள் எழுத்தின் மூலம் அறிமுகமாகிய தருணம் நினைவிற்கு வந்தது.

மனிதர்கள் எல்லோரும் சமம் அல்ல. இயற்கையில் சமம் என்ற கருத்துக்கே இடமில்லை. சிலர் பிறவியிலேயே அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களுக்கு தகுதியும் பொறுப்பும் உண்டு. ஆகவே அவர்கள் தியாகங்கள் செய்தாகவேண்டும். அறிஞர்களும் இலட்சியவாதிகளும் ரத்தமும் கண்ணீரும் சிந்தி உருவாக்கும் பண்பாட்டை சுவைத்து களித்து அதை அறியாமல் அதன் மேல் வாழ்வார்கள் பாமரர்கள். தேனீக்கூட்டை பாதுகாப்பதற்காக, தேன் சேகரிப்பதற்காக உயிர்விடுவதற்கென்றே ஒரு தேனீ பிரிவை இயற்கை உருவாக்கியிருக்கிறது. அவர்களைப்போன்றவர்களே இந்தச் சிறுபான்மையினரும். அவர்கள் ‘விதி சமைப்பவர்கள் ‘ (டெஸ்டினி மேக்கர்ஸ் ) என்றார் நித்யா.

தேர்வு செய்யப்பட்ட சிலர்

”விதி சமைப்பவர்கள்” வந்தவண்ணம் இருக்கிறார்கள்!

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

முந்தைய கட்டுரைகழுமாடன் கடிதம்
அடுத்த கட்டுரைநவீன இலக்கியம் வரையறை