வெண்முரசு ஆவணப்படம் வாஷிங்டன் டி.சி திரையிடல் நிகழ்வு

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன்,

வெண்முரசு ஆவணப்படம் ஜூன் 12, 2021, வாஷிங்டன் டி.சி மெட்ரோ பகுதியில் உள்ள ஃபேர்பாக்ஸ் நகரத்தில் திரையிடப்பட்டது.  இலக்கிய வாசகர்கள் பலர் ஆவணப்படத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் வந்திருந்தார்கள். படத்திற்கு இசையமைத்த ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பெருந்தொற்றுக் காலத்தில் நேரில் சந்திக்க இயலாமல் போன நண்பர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக் கவசம் அணிய விலக்கம் அளிக்கப்பட்டிருப்பதால் பலரும் நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

திரையரங்கின் நுழைவில்வெண்முரசு நூல்கள், ஷண்முகவேல் ஓவியம் மற்றும் பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு மேசை ஒன்றை அமைத்தோம்.  அங்கு வைத்திருந்த, ஆயிரம் பக்கங்கள் கொண்ட நான்கு வெண்முரசு நூல்களை பார்த்து இதேப்போல 26 நூல்களா? என்று பலர் ஆச்சரியப்பட்டார்கள். மொத்தமாக 25000 பக்கங்களுடன் வெண்முரசு உலக இலக்கியத்தின் மிகப்பெரும் படைப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதே பலருக்கும் வியப்பளித்தது.

நேர்த்தியான இசையுடம் ஆவணப்படம் துவங்கியது. இசைஞானி இளையராஜாவின் ஆசியுடன் அவரை குரு ஸ்தானத்தில் வைத்து  வெண்முரசு முதற்கனல் நாவலை ஏழு ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுத தொடங்கியதை இளையராஜா அவர்கள்  சொல்ல தொடங்கியவுடன் அரங்கம் நிமிர்ந்து கொண்டது.

நீலம் திருப்பல்லாண்டு பகுதியில் வரும் பாடலை பத்மஶ்ரீ கமல்ஹாசன் “கண்ணானாய் காண்பதானாய்..” என்று உருக்கமாக பாட, ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி தொடர்ந்து முழுப் பாடலையும் இனிமையாகப் பாடினார்கள். ரிஷப் சர்மாவின் சிதார் இசை மேலும் பரவசத்தை அளித்தது.

ஆவணப்படத்தில் இலக்கியவாதிகள் தொடர்ந்து பேசுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இனிய அதிர்ச்சியாக பாடல் அமைந்தது. “அமைக இப்புவிமேல்! அமைக காப்பென்று அமைக!” என்ற வரிகள் மந்திரம் போல் மனதில் நீண்ட நேரம் ஒலித்ததுகொண்டிருந்தது.

வெண்முரசை எழுதுவதற்கு தவமாக தொடர்ந்து ஏழு ஆண்டுகள் முழுமையாக நீங்கள் அர்ப்பணம் செய்ததை உங்கள் வாசகர்கள் அறிவார்கள். அந்த தவத்தை புதியவர்கள் உணர்ந்து கொள்ள, அவர்களையும் வெண்முரசை வாசிக்க துண்டுவதற்கு இந்த ஆவணப்படம் மிகவும் உதவியாக இருக்கும்.

முக்கிய தமிழ் இலக்கிய ஆளுமைகள், ஆ.முத்துலிங்கம், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புமிக்க மூத்த எழுத்தாளர்கள் வெண்முரசின் சிறப்பை விவரித்து பாராட்டினார்கள். பல வாசகர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

உங்களுடைய சிறப்பு உரையை கேட்க ஆவலாக இருந்தோம். படைப்பை முடித்த பிறகு முற்றிலும் அதிலிருந்து விலகியது போல் இருந்தது உங்கள் பேச்சு. மிகவும் மெண்மையாக உங்கள் ஏழாண்டு தவத்தை சொல்லி, பல வகையான தவத்தில் இதுவும் ஒருவகையான தவம் என்றது வாசகர்களுக்கு புதிதாக ஒன்றை உணர்த்தியிருக்கும். இனி தாங்கள் ஈடுபடும் பணிகளில் முழுதளித்து,  அர்ப்பணிப்போடு செயலாற்றும் மன உறுதியை பெற்றிருப்பார்கள். படம் முடிந்தபின் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள்.

வாஷிங்டன் பகுதியின் தமிழிசை ஆய்வாளர் பாபு விநாயகம் இசையமைப்பாளர் ராஜனுக்கு பூங்கொத்து வழங்கி  கௌரவித்தார்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில்படத்தை தயாரித்த ஆஸ்டின் சௌந்தரையும், இசையமைப்பாளர் ராஜனையும் அனைவரும்  வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த சீரிய வாசகர் வட்டம் தகுதியான நபர்களைக் கொண்டு உங்கள் படைப்புகளை மொழிப்பெயர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அரங்கை விட்டு வெளியேறிய பின்பும் நண்பர்கள் சிறுகுழுக்களாக கூடி நீண்டநேரம் வெண்முரசைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

இனிய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மகிழ்ச்சியில் நிறைவாக வீடு திரும்பினோம்.

நன்றி

விஜய் சத்தியா

வாஷிங்டன் டி.சி

முந்தைய கட்டுரைஎழுதும்போது…
அடுத்த கட்டுரைஜெ.சைதன்யா- ஒரு கடிதம்