சொற்கள்- கடிதம்

அன்பு ஜெ,

“பொதுவாக சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவைதான் உணர்ச்சிகளையே உருவாக்குகின்றன. நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத்தொடங்குகிறோம். அதைச் சொல்லிவிட்டதனாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம். பெரும்பாலான பகைமைகளும் சினங்களும் சொல்லிவிட்ட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.” –(வெண்முரசு – மழைப்பாடல்).

இதை மதாரிடம் பகிர்ந்தபோது, தான் காலையில் படித்த அறிவியல்-கவிதை புத்தகமான “ஹோலுப் கவிதைகள்” என்ற புத்தகத்தின் வரிகள் நினைவிற்கு வந்ததாய்ச் சொன்னார். அந்தப் பக்கத்தை எனக்கு அனுப்பினார். நான் அதை வாசித்தபோது ‘அட!  இரண்டுமே ஒரே மூலத்தையே சென்றடைகின்றன.  ஆனால் சென்றடைந்த பாதை வேறு.’ என்று சொன்னேன். அதையே மதாரும் உணர்ந்ததாகச் சொன்னார். ஆனால் உங்களின் வரிகளைக் கொண்டே அந்தக் கவிதையை சரியாகப் புரிந்து கொண்டதாகச் சொன்னார்.

ஹோலுப்பின் அந்த வரிகள்:

” Poetry is very important , only I don’t know what for .” வார்த்தை அவருக்கு மிகப் பிரதானமானதாய் ஆகியிருந்தது. வார்தை இல்லாமலிருந்தால் அறிவியல் கட்டுரைகள் எழுதவியலாது. வலியைப் பொறுத்துக் கொள்ளவும் கூட வார்த்தை வேண்டிருக்கிறது என்ற கருத்தை முன் வைக்கும் ஹோலுபின் கவிதை : “வலி என்ற வார்த்தை பற்றி சுருக்கமான சிந்தனைகள் விட்கென்ஸ்டீன் சொல்கிறார் : ‘அது வலிக்கிறது’ என்ற சொற்கள் வலியின் அழுகையையும் கண்ணீரையும் பதிலீடு செய்துவிடுகின்றன வலி எனும் சொல் வலியின் வெளிப்பாட்டினை விவரிப்பதற்குப் பதிலாய் பதிலீடு செய்துவிடுகிறது . இங்ஙனம் அது ஒரு புதிய நடத்தை வகையை உருவாக்கிவிடுகிறது வலியைப் பொறுத்தவரை , அந்த சொல் நமக்கும் வலி என்பதற்குமிடையில் நுழைந்துவிடுகிறது மௌனத்தின் பாசாங்கு போல் . அது மௌனப்படுத்துவது . ரத்தத்திற்கும் களிமண்ணுக்கும் இடையிலான தையலை பிரித்து அகற்றும் ஒரு ஊசி . ஒருவர் தன்னிலிருந்து விடுதலை பெறுவதிலான முதல் அடியெடுப்பு அந்த சொல் . ஒரு வேளை பிற(வும்)ரும் வந்திருந்தால்” என்று விட்கென்ஸ்டீன் பற்றிய ஒரு கவிதையில் சொல்கிறார் . ஏதோ ஒரு விஷயத்திலிருந்து விடுதலை பெற அலறலை விட வார்த்தை சாலச்சிறந்தது . அலறல் பல விஷயங்களை சொல்லக்கூடியது. ஒரு நுண்மையான வழியில் வலிக்கிறது என்று சொல்வதால் வலியிலிருந்து தப்பிக்கிறோம் என்கிறார் ஹோலுப்: கவிதை பிரத்யேகமாய் அதன் மிக ஆழ்ந்த வேர்களில் மரணம் மற்றும் வலிக்கு எதிரான நலிந்த, குழந்தைத்தனமான அடி வைப்புகளாய் அமைகிறது. ”

இங்கு நீங்கள் ஒரு எதிர்மறைத் தருணத்தைச் சொல்லவும், ஹோலுப்போ நேர்மறைத் தருணத்தைச் சொல்லவும் ஒரு மூலத்தைப் பயன்படுத்தியிருப்பதாய் நினைத்தேன். இது வரை உங்கள் சிந்தனைகள் எப்படி என்னை ஆழமாக ஊடுருவி அன்றாடம் நான் பார்க்கும் விடயங்களை நானறியாத ஒரு கோணத்தில் அடைந்து என்னை வேறொன்றாக மாற்றுகிறது என்று நினைத்திருக்கிறேன். இதைவிட ஒருபடி மேலே போய் ஒரு நரம்பியல் சார் அறிவியல் பின்புலம் கொண்ட வாசகர் சமீபத்தில் உங்கள் சிந்தனைகளை சிலாகித்து தான் அறியாத ஒன்றை உங்கள் வெண்முரசின் எழுத்துக்களின் மூலம் கண்டதாகச் சொன்னது நினைவிற்கு வந்தது.  இப்படி அறிவியலும் தத்துவமும் சந்திக்கும் புள்ளியை நீங்கள் தொட்டுவிடுகிறீர்கள். நீங்கள் சொல்லும் தத்துவங்களை ஒவ்வொரு அறிவியல் ஆராய்ச்சியாளனும் அவன் பாதையில் கண்டடையலாம் ஆனால் அவனுக்கு அதன் மேல் சிரத்தை இருக்க வேண்டும். அப்படி ஒரே சமயத்தில் அறியலாளனாகவும் தத்துவவாதியாகவும் இருக்கும் அறிஞர்களின் கருத்துக்களைப் படிப்பதில் பல அன்றாடக் கண்டடைதல்கள் இருக்கும்.

அறிவியலில் WIND -ஐப் பற்றிச் சொல்லும்போது “THE MOVEMENT OF AIR FROM HIGH PRESSURE TO LOW PRESSURE AREA IS CALLED WIND” என்கிறார்கள். தமிழில் AIR என்பதைக் காற்று எனவும், WIND என்பதை வீசும் காற்று எனவும் கூறுகிறார்கள். காற்று வீசினால் தான் நம்மால் அதை உணர முடியும். அப்படி அது வீசுவதற்கு அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு வகையான அழுத்த/ வெப்ப மாறுபாடுகளால் மட்டுமே காற்று வீசுகிறது. இந்த வீசும் காற்றே பூமியைச் சுற்றி ஒரு அழுத்த பெல்ட்டை உருவாக்கி அதை ஓர் உயிருள்ள கோளமாக மாற்றுகிறது.

இங்கிருந்து ஒரு சிந்தனையை அடைந்தேன். இந்த உலகம் ஒரு சமமின்மையால் தான் உயிர்ப்புடன் இருக்கிறதோ என்ற எண்ணம் வந்தது. ஒரு வேளை அனைத்துமே சமமாக இருந்து எந்த ஒரு சலனமுமற்ற ஒரு இடத்தில் எதுவும் வீச வாய்ப்பில்லை. அதனால் பெரும் அனுபவமும் மானுடத்திற்கு இல்லை. நான் இங்கு சமத்துவம் என்று சொல்வது பணத்தையோ வசதி வாய்ப்புகளையோ அல்ல. அதையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நான் ஞானத்தை நினைத்தேன். ஞானம் இல்லை என்று உணர்ந்தாலொழிய ஞானத்தை அடையும் மார்க்கத்தை நாம் உணர முடியாது. அடைந்துவிட்ட/அதிகமிருக்கும் ஒரு இடத்திலிருப்பவனும் குறைவாயிருக்கும் இடம் நோக்கி சென்றடைந்து கொண்டே இருந்தாலொழிய இந்த இயக்கம் நடைபெறாது. இயக்கம் இல்லாமல் ஒரு STILL AIR போல இருந்தோமானால் சாக்கடையாய் துர்நாற்றமடிக்க வேண்டியிருக்கும்.

இந்த சமமின்மை எல்லை மீறும்போது வீசும் காற்றானது புயலாக மாறும் அதுபோலவே எப்பொழுதெல்லாம் மானுடத்தின் இந்த சமமின்மை எல்லை மீறுகிறதோ அப்பொழுதே அந்தக் காலம் முடிவுக்கு வந்து விடுகிறது. கரு சிறுகதையிலும், சிவம் சிறுகதையிலும் ஒரு யுகமுடிவென்பது அதீத வளர்ச்சியினால் வரும் என்ற ஒரு கருத்தும், விஷ்ணுபுரம் என்னும் புனைவு நகரத்தின் அழிவும்,வெண்முரசின் இறுதிப் போரும் கூட அத்தகைய முடிவுகள் தான். பின்னும் நம் இந்திய வரலாற்றில் மிகப் பெரும் சாம்ராஜ்ஜியங்கள் அழிந்ததும் இத்தகைய அதீத சமமின்மையால் தான். குறளினிது உரையில் நீங்கள் சொல்வது போல “அழுதாற்றித் தொழுத கண்ணீரால்” அழிந்த சோவியத்தையும் இந்தப் பட்டியலில் பொருத்தலாம்.

உடனே மீண்டும் உங்களின் இந்த வரிகள் நினைவிற்கு வந்தது “ஒரு போதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக”. இந்த உலகத்திலுள்ள அனைத்து இயக்கங்களுமே, தான் ஒரு போதும் சென்றடையவில்லை என்றே சென்றுகொண்டே இருக்கின்றன, பூமியின் அலையும், வீசும் காற்றும், நிலவு பூமியைச் சுற்றுவதும், பூமி சூரியனைச் சுற்றுவதும் என முடிவிலியில் யாவும் சென்று கொண்டே இருக்கும் தத்துவத்தையே பின்பற்றுகின்றன என்று கண்டேன். இன்னும் எண்ணங்கள் இது சார்ந்து சுழன்று கொண்டே இருந்தன… எனக்கு நீங்கள் தங்கப் புத்தகம் சிறுகதையில் சொன்ன வரிகள் மீண்டொலித்தது. “பாட், ஒரு வேளை எல்லா மூல நூல்களும் இப்படித்தானா? கார்ல் மார்க்ஸ் –ன் மூல நூலும் கூட?” ஆம். அனைத்து மிகப் பெரிய சிந்தனையாளர்களும் அடையும் மூலம் என்பது ஒன்றே.  இன்னும் மிகச் சரியாக இந்த வரிகளை இன்று கண்டடைந்தேன்.

அன்புடன்

இரம்யா.

முந்தைய கட்டுரைமதக்காழ்ப்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருவெள்ளறை – கடிதங்கள்