அன்பு ஜெ,
”குறளினிது” என்ற உங்களின் உரை குறளைப் பற்றிய என் கண்டடைதல்களுக்கான சரியான வாசலாக அமைந்தது. அதற்கு முன்பு வரை கூட வெகு சில குறள்களில் வள்ளுவரை முரண்பட்டு அவரிடம் சண்டையிட்டிருக்கிறேன். நான் எங்கெல்லாம் முரண்பட்டேனோ இன்று அவற்றையெல்லாம் நீங்கள் விளங்கவைத்துவிட்டீர்கள். கவிஞனின்/எழுத்தாளனின் மையத்தை அவனின் ஆழத்தை மிகச் சரியாக அணுகும் ஒரு வாசகனை அவன் அகத்தில் அணைத்து இன்பத்தை நல்குவான். நீங்கள் வள்ளுவரை மிக அணுக்கமாக தழுவியிருந்தது உங்கள் உரையில் தெரிந்தது. நான் அந்த அணைப்பை அடைவதற்கான சாலையின் சரியான வாசலை இந்த உரையின் மூலம் காணித்திருக்கிறீர்கள்.
தமிழ் நாட்டின் சிறுவர்களைப் போலயே திருக்குறள் மனப்பாடப் போட்டியின் வாயிலாக தான் முதன் முதலில் குறள் பரிச்சயமாகியது எனக்கு. மனனம் செய்து ஒப்புவிக்கும் தன்மைக்கு ஏதுவாகவே குறள்கள் இருக்கின்றன. அதற்கான காரணம் வரலாற்றுப் பின்புலத்தை நீங்கள் இந்த உரையில் அளித்திருந்தீர்கள். சூத்ரா மற்றும் மந்த்ரா என்பதைப் பற்றிய சித்திரத்தை அளித்து குறள் எவ்வாறெல்லாம் ஒரு சரியான சூத்ரமாக உள்ளது என்பதை நிறுவியிருந்தீர்கள். ”ஒரே சொல் திரும்பத்திரும்ப வந்து ஒப்புவிக்கும் நேரத்தைக் குறைக்கும் குறள்கள்; அழுத்தங்களும் ஏற்ற இறக்கங்களும் கொடுத்து உச்சரிப்பை அழகாக்கும் குறள்கள்; சொல்விளையாட்டுக்கு பயன்படும் குறள்கள் என குறள்களின் புறத்தையே பலவாறு சிறுபிராயத்தில் அடைந்திருந்தேன். ஒன்றை கவனித்திருக்கிறேன, குறள் போட்டிகள் என்பதே சிறுவர்களுக்கானது என்பதே அதை பெரியவர்களிடமிருந்து விளக்கிவிடுகிறது. ஆனால் என் விடுதியில் மார்செலின் சிஸ்டர் வாடர்ன் ஆக இருந்த கால கட்டத்தில் பிரேயர் ஹாலில் பைபிள், பகவத் கீதை, திருக்குறள் மூன்று புத்தகங்களை வைத்திருப்பார். இவை மூன்றுமே ஒன்று தான் என்று அவர் கூறுவார். அவரிடம் உரையாட குறளின் விளக்கத்தை படிக்க ஆரம்பித்து சில தருணங்களில் நண்பர்களிடம், சூழ்நிலையில் சொல்லும் ஒரு பழமொழி போல குறள் மாறிப்போனது என் வாழ்வில். அப்படி சொல்லி ஒரு முறை திட்டும் பகையும் வாங்கிக் கொண்டேன். விடுதியில் தலைவியாய் இருந்த ஒரு அக்காவை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அதுவும் பெண்கள் பள்ளியில் படிப்பவர்களுக்கு காதல் என்பது இரண்டு வகையான அக்காக்களின் மேல் வரும். ஒன்று விளையாட்டில், இன்னொன்று படிப்பில் பேச்சில் எழுத்தில் முன் நிற்பவர். அப்படி தான் அந்த அக்காவை எனக்குப் பிடித்திருந்தது. எப்படியாவது ஒரு தருணத்தில் அவர்களை தோழியாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். ஒரு முறை படிப்பு அறையில் நானும் தோழியும் கத்திக் கொண்டிருந்தோம். இருவரையும் திட்டி படிக்கச் சொல்லிவிட்டு அவர் தன் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் அவர்களிடம் சென்று “அக்கா, சொல்லுதல் யார்க்கும் எளிய அறிவாம்; சொல்லிய வண்ணம் செயல்” என்று சொல்லிவிட்டு பாராட்டிற்காக காத்து நின்றேன். ஏனெனில் அவர் ஒரு அருமையான பேச்சாளர். குறளை எப்போதும் தன் பேச்சில் எடுத்தியம்புபவர். ஆனால் அன்று அவள் என்னை காட்டமாகத் திட்டிவிட்டு அன்றோடு என்னுடன் பேசாமலானாள். அதன் பின் சூழ்நிலைக்கு ஏற்ற குறள்கள் சொல்லுவதையே நான் விட்டுவிட்டேன்.
அதன் பின் மீண்டும் குறளை கையில் எடுத்து சிலாகித்தது போட்டித் தேர்வின் போது பாடத்திட்டமாகத் தான். பள்ளியில் அறத்துப்பாலில் தான் பெரும்பான்மையாக குறள்கள் மனப்பாடம் செய்வோம் அது தவிரவும் சில பொருட்பால் அதிகாரங்கள் தான். இங்கு தேர்வின் போது பொருட்பாலிலுள்ள அரசியலும், அமைச்சியலும் கிட்டத்தட்ட முந்நூற்றி ஐம்பது படித்திருக்கிறேன். ஆனால் இம்முறை மனப்பாடமாக அல்ல. புரிந்து படித்தேன். ஒரு அரசாளுபவனுக்கான, அமைச்சனுக்கான, தலைமைப் பண்பு கொள்ள வேண்டுபவனுக்காக, நிதி அமைச்சனுக்காக, வெளியுறவுத்துறைத் தூதனுக்காக என பல தரப்பினருக்கான குணங்களையும், செயல்படும் முறைமைகளையும் கூறிக் கொண்டே வந்து அதன் நன்மை தீமைகளை எடுத்துக் கூறியிருப்பதை புரிந்தேன். பெரும்பாலும் பொருட்பாலில் வரும் குண நலன் சார்ந்த (எ.கா: காலமறிதல், அறிவுடைமை, செங்கோன்மை etc) குறள்களில் வள்ளுவரின் தொடர் வைப்பு முறைமைகளாக நாங்கள் சொல்லும் போது “தாத்தா முதலில் இன்ன குணம் என்பதைப் பற்றிச் சொல்லி, அதனால் வரும் நன்மை, கேடுகள் ஆகியவற்றை தலையைத்தடவி எடுத்துக் கூறி, இறுதியில் அதைக் கடைபிடிக்காத ஆட்களுக்கான சாபத்தை அல்லது திட்டை உதிர்த்து அடுத்த அதிகாரம் நோக்கி சாந்தமாகச் சென்று விடுவார்” என்று நகைச்சுவையாகக் கூறுவோம். ஒவ்வொரு ”பால்” –ம், அதிகாரம்” –ம் வைக்கப்பட்ட முறைமைகளைக் கூட ஆராய்ந்து தெளிந்திருக்கிறோம். ஆனா நீங்கள் சு.ரா -வின் அறிவுரைப்படி அசைச் சொற்களை 1330 குறளுக்கும் பட்டியலிட்டேன் எனும்போது இப்படியும் குறளைக் கண்டடையலாம என வியந்தேன்.
இப்படி குறளை சிலாகித்தாலும் ஒரு ஒவ்வாமையாக எனக்கு அமைந்தது பரிமேலழகர்” உரை தான். அதற்கான காரணம் பலரும் அறிந்ததே. ஆனால் அறிவார்ந்த வட்டாரம் என்று காணிக்க விளையும் பலர் அதை மிக உயர்த்திப் பேசி மற்ற உரைகளை தாழ்த்தி வள்ளுவரை வேதியராக்கும்போதே முதல் விலக்கத்தை இளமையில் அடைகிறோம். பின்னும் திராவிட கால கட்டதில் எழுதப்பட்ட உரைகள் (சாலமன் பாப்பையா, கலைஞர்) வள்ளுவருக்குள் செல்லாமல் தங்கள் கொள்கைகளை முன் நிறுத்தி வள்ளுவரை அந்த வலையத்திற்குள் தள்ளிவிடுவது அவரின் கவிதைத் தருணங்களை கண்டடையாதபடிக்கும், தத்துவார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாதபடிக்கும் அமைந்துவிடுகிறது. மத அடிப்படைவாத்களும், திராவிடவாதிகளும் எழுப்பிய இந்த மிகப் பெரிய அரண் என்றைக்குமே தகர்க்கமுடியாதபடிக்கு ஒரு நவீன வாசகன் உள் நுழையாதபடிக்கு சிலையாகவும், குறள் விளக்கமாகவும், பேச்சாகவும் உலவிக் கொண்டிருக்கிறது. மேலும் மக்களாட்சியில் இங்கு நான் நின்று கொண்டு ஐயன் முடியாட்சியை அதன் பெருமைகளை எடுத்துச் சொல்வதையும் விலக்கியிருந்தேன். இது தவிரவும் ஒவ்வொரு நவீன வாசகனும் எந்தெந்த காரணத்தினால் குறளிலிருந்து விலகியிருக்கிறானோ அவற்றையெல்லாம் நீங்கள் பட்டியலிட்டு அதற்கான சரியான விளக்கத்தை இந்த உரையில் அளித்திருந்தீர்கள். உங்கள் உரையைக் கேட்டபின் தான் என் ஒவ்வாமையின் காரணத்தையே முழுதறிந்து அதை அகற்றினேன்.
குறளில் உள் நுழைய ஏதுவாக ஒரு பகுத்தறிவான வரலாற்றுப் பின் புலத்தை அளித்து. ஒரு சமணரால் ஆனால் தமிழ் சமுதாயத்தை நோக்கி எழுதப்பட்ட ஒரு அற நூலாக, தொகுப்பு நூலாக, முதன்மை நூலாக அதை நிறுவி, எவ்வெவற்றாலெல்லாம் அது ஒரு மூல, தொல், மாறாத் தன்மையதான நூலாக சித்தரிக்ககூடாது என்பதை புரிய வைத்திருந்தீர்கள். சமணம் தமிழில், தமிழ்ச் சமுதாயத்தில் செய்த மாற்றத்தை, அதன் வரலாற்றை எடுத்தியம்பியபோது அது மேலும் திறப்பாயிருந்தது. குறளை ஒரு ஞான நூலாக எவ்வகையில் பாவிப்பது, அதனினின்று ஒரு ஆப்த வாக்கியமாக எப்படி மாற்றி பொருள் கொள்வது என்பதையும் கூறி, அதை சொல்லாக எண்ணி, அந்த ஒவ்வொரு சொல்லுக்கு இருக்கும் அத்தனை பொருளுக்கும் அர்த்தமறிந்து ஆராய்ந்து தெளிதல் பற்றி கூறி கற்க வேண்டிய முறையை எனக்கு விளங்கவைத்துள்ளீர்கள். அதன் பின் தனிப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குறள் தருணங்களைக் கண்டடைதலை இறுதியாகச் சொல்லி உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த பல குறள் தருணங்களைச் சொன்னபோது ஒரு ஆகச் சிறந்த கதை சொல்லியின் முன் அமர்ந்து கேட்பது போன்ற உணர்வு வந்தது. நீங்கள் சொன்ன குறள் தருணங்கள் சில சிலிர்ப்பாகவும், சில கண்கலங்க வைப்பதாயும், திறப்பைத் தருவதாயும், வள்ளுவரின் ஆன்மாவைத் தழுவுவதற்க்கான பாதையை நோக்கி உந்திவிடுவதாயும் அமைந்தது. இனி நீங்கள் அமைத்துக் கொடுத்த அறிவார்ந்த பாதையில் பயணித்து எனக்கான குறள் தருணங்களைக் கண்டடைந்து உங்களுக்கு எழுதுவதே அடுத்து நான் செய்ய வேண்டியது. அறிவார்ந்த இந்த ”குறளினிது” உரைக்காக நன்றியும் அன்பும்.
இரம்யா