அ.வெண்ணிலாவின் இந்திரநீலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

அ. வெண்ணிலாவின் எட்டு சிறுகதைகளைக்கொண்ட ‘’இந்திர நீலம்’’ வாசித்தேன். கதைகளின் வடிவம்தான் சிறியது ,அவற்றின் பேசுபொருளோ ஆகப்பெரியது. பெண்களின் மனப்பக்கங்கள் பல்லாயிரம் கதைகளாக எழுதப்பட்டுவிட்டன பலரால், ஆனால் இந்திரநீலம் காட்டுவது பெண்ணின் பேசப்படாத அந்தரங்கப் பக்கங்களை. இதை பெண்ணெழுத்தாளரான வெண்ணிலா எழுதியது இன்னும் சிறப்பு.

பாமா என்னும் சமகாலப்பெண், திரெளபதி, காரைக்காலம்மையான புனிதவதி,, கண்ணனின் கோபியர்கள், மாதவியின் மணிமேகலை, ஏசுவின் உடையை தொட்ட பாலியல் தொழில் செய்யும் பெண், கடவுளுக்கு தன்னை அளித்துவிட்ட நக்கன், கண்ணகி என 8 கதைகளும் காட்டும் பெண்கள், அவர்களின் வாழ்வு, மனக்குழப்பங்கள், உளக்கொப்பளிப்புக்கள், அந்தரங்கங்கள், காலம்காலமாக அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் தளைகள், தளைகளுக்கெதி்ரான அவர்களின் விழைவுகள், என இந்தக்கதைகள் என்னை வெகுதொலைவிற்கு அழைத்துச்சென்றன. எல்லாக்கதைகளிலுமான உள்ளடக்க சொல்லாடல் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது

இளமை இறங்குமுகத்திலிருக்கும் சமகாலப்பெண்ணொருத்தி, ஐவருக்கு மனைவியான திரெளபதி,  மாதவியிடமிருந்து மீண்டு வந்திருக்கும் கோவலனை எதிர்கொள்ளும் கண்ணகி, சிவனுண்ட அமுதினால் நஞ்சாகிய இல்வாழ்வினை இழந்த, கணவனால் தொழப்பட்ட புனிதவதி, காமம் கடந்த வாய்மையளாக காட்டப்படும் காதலனைத்தொழுத மணிமேகலை, கடவுளுக்கு சொந்தமானவளான நக்கன், ராசலீலைக்காரனான கண்ணனை மறக்கமுடியா கோபியர்கள், ஆன்மாவைக்கொல்லும் ஆயுதமான காமம் நிறைந்திருக்கையில் கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்டவளான நங்கை, பாலியல் தொழிலில் விற்கப்படும் தன்னுடலை,  பாவிகளின் பொருட்டு சிலுவை சுமக்கும், குருதி வடியும் கர்த்தரின் உடலுடன் ஒப்பிடும் மற்றுமொரு விவிலியம் காட்டும் பெண்  என இந்திரநீலம் காட்டும்  ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள், சுவாரஸ்யமானவர்கள்

’’தன்னுறு வேட்கை முற்கிளத்தல் கிழத்திக்கில்லை’’யென்றுதானே தொல்காப்பியக்காலத்திலிருந்தே தலைவியின் குணநலன்களாக காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.  இந்திரநீலம் சொல்லும் பெண்களின் அந்தரங்கமான உணர்வுகள் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டிருக்கவில்லை. வெண்ணிலா இதில் சொல்லியிருப்பவை தனக்குத்தானே கூட பெண்கள் நினைத்துக்கொள்ள நாணும், அஞ்சும், தயங்கும் காலம் காலமாக மரபென்னும் பேரில் கற்பென்னும் பேரில் தடைசெய்யப்பட்ட விஷயங்களை குறித்தென்பதால் இந்நூல் இக்காலத்தில்  மிக முக்கியத்துவம் பெற்றதென்று தோன்றுகிறது.

இந்த நூற்றாண்டிலும் சேனிடரி நாப்கின்களை செய்தித்தாளில் சுற்றி மறைவாக ஏதோ குற்றம் செய்ததுபோல் வாங்கிக்கொண்டு வீடு வருவதும் இங்குதான். பூப்புநன்னீராட்டு  விழாவிற்கு உச்ச நடிகர்கள் ஆசிவழங்கும் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டுவதும் இங்குதான். பெண்மை வாழ்கவென்று கூத்திடும் நாட்டில்தான் ஒராயிரம் அகக்கணக்குகள் வழியேவும் கணவனிடம் அந்தரங்க ஆசையை தெரிவிக்க முடியாமல்  தத்தளிக்கும் மனைவியரும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரபல வார இதழொன்றில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு சேனிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கும் இயந்திரமொன்றைக் குறித்த பதிவில் பள்ளி வளாகத்தில் நேப்கின்களை இயந்திரங்களிலிருந்து எடுக்கும் மாணவிகளின் முகத்தை மறைத்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். பெண்களின் மாதவிலக்கென்னும் உயிரியல் நிகழ்வையே இந்த நூற்றாண்டிலும் மறைக்கப்படவேண்டியதொன்றாகவே நம்பும்  சமூகத்தில் இந்திரநீலத்தின் பெண் காமம் செப்பும் சிறுகதைகள் புதிய கதவுகளை திறந்து வைக்கின்றன.

உடலைக்கடத்தலென்னும் ஒரு கடிதத்திற்கு பதிலாக நீங்கள் சமீபத்தில் யோகமரபு சொல்லும் மானுட இருப்பின் ஐந்து வகைகளைக்குறித்து சொல்லியிருந்தீர்கள்.என் அறிவுக்கு எட்டியவரையில் எனக்கு இந்திர நீலத்தின் 8 நாயகிகளும் அந்த ஐந்திற்குள் பொருந்துவதாக தோன்றியது.

உடலென்னும் அடிப்படையான கீழ்நிலை இருப்பில் உடலின்பத்தையும் துன்பத்தையும் பெரிதாக நினைக்கும், பால்யத்திலிருந்தே உடலைக்குறித்த குற்றவுணர்வுடன், ஆர்வத்துடன்  வளர்ந்த , அசர்ந்தப்பமாக வந்திருப்பதாக அவள் நினைக்கும்  காமத்துடன் பாமா,அசுத்தமனோமய இருப்பு என்னும்  உடல்சார்ந்த உணர்வுகளால் ஆன இருப்பில்  திரெளபதியும், கண்ணகியும்.உடல்சார் உணர்வுகளுக்கு அப்பால் சென்று  தூயநிலையில் உவகையையும் துயரையும் அடையும் சுத்த மனோமய இருப்பில் கண்ணனின் கோபியர்கள். உடலில்லா உள்ளத்துடனான  இப்பெண்களின் உடல் குறியீடுகளாக மட்டுமே இருக்கின்றது.

மனோமய நிலைக்கு அப்பாலுள்ள ஆழ்ந்த இருப்புநிலையான ஞானத்தாலான விக்ஞானமய இருப்பில் புனிதவதியும், காமத்தை சந்தித்து உடன் அதை கடந்துவிடும் மணிமேகலையும்.

உடலில் இருந்து மேலும் நுண்ணிய இருப்புகளை நோக்கிச் செல்லும், மெய்மையால், நிறைவாலான ஆனந்தமய இருப்பில் நக்கனும், விவிலியம் காட்டும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணும்.

பெண்களின் உடல்சார்ந்த, உணர்வு சார்ந்த, காமம்சார்ந்த, காதல் சார்ந்த, அகப்போராட்டங்களை, அகச்சிக்கல்களை, ஒழுக்கக்குறைபாடென்று சமுகம் அவர்களுக்கு கற்பித்தவற்றை, நூற்றாண்டுகளாக இங்கு ஊறியிருக்கும் கற்பையும், இல்லறத்தையும் குறித்தான, கற்பிதங்களை என்று பலவற்றை சொல்லும் இந்த எட்டுக்கதைகளிலும் வரும் பெண்களில் பலர் இதை வாசிப்பவர்களும், அக்கம் பக்கம் சந்திப்பவர்களும், என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்தான், எனவே கதை நாயகிகளை என்னால் அணுக்கமாக புரிந்துகொள்ள முடிந்தது.

இந்திரநீலம் குறித்த ஒரு இணைய வழிகூடுகையில் பிரபல திரைக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு மூத்தபெண்மணி சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணவனுக்கு தான்  தாயாகவும் இருந்ததை பகிர்ந்து கொண்டார். வாசிக்கும் பெண்களில் பலர் இந்திர நீலக் கதைகளில் அவரவர்களையும்  அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

பிற வளர்ந்த நாடுகளில் இருக்கும் பாலுறவு மற்றும் பாலுணர்வு சுதந்திரம் இல்லவே இல்லாத இச்சமூகத்தின் பல்லாயிரம்பெண்களின் குரலாகவே எனக்கு இந்திரநீலம் ஒலித்தது…

என் அமெரிக்க தோழி தன் முதற்காதலையும், அது முறிந்ததையும், பிறகுவந்த இன்னொரு காதலையும், அவர்களுடனான காமத்தையும் ஒரு சிறு பாறைக்குன்றின் மீதமர்ந்தபடி இருபாலருமாயிருந்த நானுள்ளிட்ட நண்பர் குழுவிற்கு விவரித்து உண்ர்வெழுச்சியுடன் ஒரு கதையைபோல சொல்லிக்கொண்டிருந்ததை இந்திர நீலம் வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்.   இந்திரநீலம் என்னும் பெண்களின் அந்தரங்கத்தை குறித்து பேசும் கதைகள் இப்போது வந்திருக்கிறது, இந்த சுதந்திரம் நம் பெண்களுக்கு வர பலநூறாண்டுகளாகலாம். ஒருவேளை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கலாமாயிருக்கும், ஆனால் நான் பிறந்து வளர்ந்து  வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த சமூகத்தில் பாமாவை, நக்கனை, புனிதவதியை  பார்த்துக்கொண்டெதான் இருக்கிறேன் எனவே இந்திர நீலம் என்னை வெகுவாக பாதித்தது.

ஹாஸ்டலிலிருந்து வீடுவரும் மகள்களின் மாதாந்திர விலக்கு நாட்களை துப்பறியும் அம்மாக்களும்,  பாத்ரூமில் அதிகநேரம் குளிக்கக்கூட விடாத குடும்பங்களும், பெண்ணுடலே பாவமென்று சொல்லி சொல்லி வளர்ககப்ட்ட பெண்களும் நிறைந்துள்ள சமூகத்தில் இந்திர நீலம் வந்திருப்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது.

லோகமாதேவி

நுண்மையான அகச்சிக்கல்களும், நேரிடையான காமமும்  சொல்லப்படாத விழைவுகளும் துயர்களுமாக இருக்கும் இந்த எட்டுக்கதைகளுக்கு தலைப்பாக விழைவின் வடிவாகிய இந்திரனையும், காமத்தின், காதலின், நஞ்சின் நிறமாகிய நீலத்தையும் இணைத்து வைத்திருப்பது மிகப்பொருத்தமாயிருக்கின்றது. அனைத்து பெண்களுக்கும் பெண்களைக் குறித்த அறிதெலென்பதே இல்லாத ஆண்களுக்குமான கதைகள் இவை.

அன்புடன்

லோகமாதேவி

அ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்

முந்தைய கட்டுரைமாடத்தி கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைமண்ணில் உப்பானவர்கள் – உரையாடல்