புகழ்- ஒரு கேள்வி

அன்பு ஜெ,

“ உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்,
அன்ன மாட்சி அனைய ராகித்
தனக்குஎன முயலா நோந்தாள்
பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே”

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய இந்த புறநானூற்றுப் பாடலில் “புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்” என்ற இந்த வரிகளை அப்படியே எடுத்துக் கொண்டல் ஒரு அர்த்தம் வருகிறது ஜெ. அந்த அர்த்தத்தை அப்படியே எடுத்துக் கொள்ளும் போது “புகழ் விரும்பிகளாக” இருந்தார்களோ என்று ஒரு அர்த்தத்தை எடுத்துக் கொண்டேன்.

வள்ளுவரும் கூட புகழைப் பற்றிய ஒரு அதிகாரத்தையே எழுதியிருக்கிறார். தத்துவத்திலோ/ மெய்ஞானத்திலோ/ஆன்மீகத்திலோ எடுத்தோமேயானால் புகழை விரும்புவதை அறப் பிறழ்வாக அல்லது நிலையாத் தன்மையாகச் சொல்கிறார்கள் (அல்லது நான் அப்படி நினைத்தேன்).

பொருண்மொழிக்காஞ்சி எனும் முனிவர்கள்/சான்றோர்கள் ஆராய்ந்து கண்ட ஒன்றில் புகழை விரும்புவது என்பது எனக்கு முதலில் இடித்தது. இந்த வரிக்கு வேறு எவ்வகையேனும் பொருள் கொள்ளலாமா? அல்லது புகழை விரும்புவது என்பதை எவ்வகையிலெள்ளாம் சரியான ஒன்றாக எடுத்துக் கொள்வது? எந்த எல்லை வரை அது தகும்? புகழ் என்ற சொல்லுக்கு சங்கத்தில் எதுவெல்லாம் பொருளாகக் கொள்ளலாம்? என்பதை உங்கள் வரிகளில் கேட்டுத் தெளிவுற அவா.

இரம்யா.

***

அன்புள்ள இரம்யா,

சொற்களுக்கு எப்போதும் ஒரே பொருள் அல்ல. சில சொற்கள் காலப்போக்கில் சுட்டுபொருளிலேயே மாறுதலடைகின்றன. உதாரணமாக காதல். ‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாக் காதல் நோயாளன் போல’ என்பது குலசேகர ஆழ்வார் பாட்டு. வாளால் அறுத்துச் சுட்டாலும் மருத்துவன்மேல் மாளாத காதல் கொண்ட நோயாளிபோல என்று பொருள். இங்கே காதலென்பது பேரன்பு என்றே பொருள் தருகிறது. இன்றுள்ள பொருளில் அல்ல.

இன்னொருவகை பொருள்மாறுபாடு சூழலில் வரும் மாற்றத்தால் உருவாவது. சூழல்பொருள் மாறுவது நாம் அச்சொல்லைக் கையாளும் தன்மையிலுள்ள மாற்றத்தால். சென்ற இருநூறாண்டுகளாகவே நமக்கு ஜனநாயகம் அறிமுகமாகியிருக்கிறது. ஜனநாயக அரசியலில் புகழ் என்பது நேரடியாகவே அதிகாரமாகவும் பணமாகவும் ஆகக்கூடியது. அதாவது புகழ் என்பது ஓர் உலகியல் நன்மை. புகழுக்காக முயல்வதென்பது உலகியல்சார்ந்த ஒன்றுக்காக முயல்வது. பணத்துக்காக, அதிகாரத்துக்காகச் செயல்படுவது.

இன்றைய ஜனநாயக அரசியல் சூழலில் புகழ் என்பது அதிகாரமும் பணமும் ஆகையால் அது குறுக்குவழியில் ஈட்டப்படுகிறது. சிறுசெயல் பெரும்புகழை அளிப்பதாக ஆக்கப்படுகிறது. விளம்பரங்கள் வழியாக செயற்கையாக புகழ் கட்டமைக்கப்படுகிறது. புகழுக்கு நாம் அளிக்கும் எதிர்மறை அழுத்தம் முழுக்க இன்றைய ஜனநாயகச் சூழலில் உருவாவதுதான்.

ஆகவேதான் இன்று புகழ்வேண்டாதவர் என்றால் உலகியலில் பற்றற்றவர் என்று பொருள் வருகிறது.அது ஓர் உயர்ந்த பண்பாக கருதப்படுகிறது. ஒரு நற்செயலைச் செய்தபின் அதன் புகழை ஒருவர் நாடுவாரென்றால் அது செய்த நற்செயலுக்கு உலகியல் பிரதிபலனை தேடிச்செல்வதாகப் பொருள்படுகிறது.

ஆனால் சென்ற நிலவுடைமைச் சமூகத்தில் அப்படி அல்ல. புகழ் என்பது உருவாக்கப்படுவது அல்ல, தேடிவருவது. அன்றைய சூழலில் ஆன்றோரிடமும் மூதாதையரிடமும் சுற்றத்தோரிடமும் எளியோரிடமும் விண்ணுலகிலுள்ள தேவர்களிடமும் பெறப்படும் நற்பெயர்தான் புகழ். புகழால் எவருக்கும் உலகியல்நன்மை ஏதுமில்லை. அது முழுக்கமுழுக்க ஒரு ஆன்மிகச்செல்வம்தான். இன்று புண்ணியம் என்கிறோமே அதைப்போல.

அன்றைய விழுமியங்களின்படி இவ்வுலகில் ஈட்டவேண்டியது புகழ். மறுவுலகில் வீடுபேறு. இங்கு புகழை ஈட்டியவன் அங்கே வீடுபேறை அடைவான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான். உலகியல்புகழ் என்பது வீரம், கொடை, நோன்பு, கடமை, நெறிநிற்றல் ஆகியவற்றால் அடையப்படுவது.

புகழ் விரும்பப்பட்டதுபோலவே இழிபெயர் நரகத்திற்கு இணையாக அஞ்சப்பட்டது. வஞ்சினம் உரைப்பவர்கள் ‘என்னை புலவர் பாடாது ஒழிக’ என்று சொல்வதையும் நாம் பழைய பாடல்களில் பார்க்கிறோம். பெண்கொலைபுரிந்த நன்னன் என்பவனை புலவர் இழிபெயராக வரலாற்றில் நிறுத்திவிட்டதையும் காண்கிறோம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஆலயங்கள் சமூகக்கூடங்கள்
அடுத்த கட்டுரைஆனையில்லா!