கி.ரா.உரை- கடிதம்.

அன்புள்ள ஜெ.

சமீப காலத்தில் கேட்ட மிகச் சிறந்த உரைகளுள் ஒன்று உங்களின் மிச்சக் கதைகள் வெளியீட்டு உரை.

கோவையில்தான் நைனாவை முதன்முதலில் பார்த்தேன்.. காந்திபுரத்தில் ஒரு விழாவில்.  அவருக்கும் அவர் மனைவிக்கும் விஜயா பதிப்பக வேலாயுதம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 1984 அல்லது 5.

அவர் கதைகளை அதுவரை படித்ததில்லை. அந்தக் கூட்டத்தில், வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில், அன்று கல்லூரி மாணவனாக இருந்த எனது பட்ஜெட்டுக்கேற்ற அளவில் சிறு புத்தகத்தை வாங்கினேன். பிஞ்சுகள். அன்றிரவே படித்தேன். இறுதியில், அதன் கதாநாயகனாகிய சிறுவன்,  தன் காக்கை, குருவி, ஈசல் என்னும் உலகை விட்டு, அருகிலுள்ள டவுணுக்குப் படிக்க, ரயிலில் போகிறான். அத்தோடு முடிகிறது. அந்த முடிவு சட்டென என் வாழ்க்கையுடன் ஒட்டிக் கொண்டது.  தளவாய்ப்பேட்டை நடுநிலைப் பள்ளியில்  5 ஆம் வகுப்பு முடித்து, மேலே படிக்க அம்மாயி வீட்டுக்குச் செல்ல வேண்டும். மாமா எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, 1976 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ஒரு நாள் அதிகாலையில், எங்கள் கருப்புசாமி தோட்ட வாசலில், ஈரோடு செல்லும் SRT பஸ்ஸில் ஏறிப் போனேன்.என் பயணமும், பிஞ்சுகள் கதையின் சிறுவனின் பயணமும் ஒருவழிப் பயணம் என அந்தக் கதையைப் படித்த அன்று உணர்ந்தேன்.நவீனத்துவம், தொழில்நுட்பம், வீரிய விதைகள், பூச்சி மருந்துகள் என, 70 களுக்கு முன்பிருந்த ஒரு உலகம் இனி வரமுடியாத ஒரு யுக மாற்றம் எனச் சொல்ல வேண்டும்.

அம்மை விழுந்து தனியே கிடந்த சிறுவனுக்கு, அம்மா இறந்து போன செய்தி சிலநாள் கழித்தே சொல்லப்படுகிறது.அன்று காலரா, அம்மை, பிரசவம் எனப் பல வழிகளில் மரணம் வீட்டருகில் இருந்த காலம்.எங்கள் பக்கத்துத் தோட்டத்துப் பெண் ஒருவர் பிரசவிக்க முடியாமல் அழுத ஓலமும், பின்னர் அவரது மரணமும், 7 வயதில் கேட்டது.

நைனாவின் எழுத்தின் அளகு (அவர் பாஷையில்), என்னவெனில்,அம்மை போட்டு முடிந்த குழந்தையை, வேப்பிலை நீர் கலந்த வெந்நீரில் குளிப்பாட்டுவார்கள். அவர் எளுதும் அழகில், வேப்பிலை கலந்த வெந்நீர் வாசனை எழுந்து வருவதுதான்.

35 ஆண்டுகளுக்குப் பின் இன்று மதிப்பிடச் சொன்னால், பிஞ்சுகள், ஒரு சூழலியல் செவ்வியல் கதை என்று சொல்வேன்.பாரதியின் பாஞ்சாலி சபதம் போன்ற ஒரு குறுங்காவியம்.பாரதி ஏன் பாஞ்சாலியின் சபதத்தோடு, தன் குறுங்காவியத்தை முடித்தான்? (1992 ஆம் ஆண்டு குடிமைப் பணித்தேர்வில், இது ஒரு கேள்வி.). இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை அத்துடன் பொருத்திப் பார்த்தால் புரியும்.  அது போல, நவீனத்துவம், வழமையான ஊரக வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஒரு விசையாக தனி வாழ்வில் உள்ளே நுழைந்து, அவனைத் திரும்ப முடியாத ஒரு உலகத்துக்குள் செலுத்தும் கணத்தோடு முடியும் அந்தக் கதையும் அபூர்வமான ஒன்றுதான்.

பின்னர் இதுவா அதுவா என பிரிக்க முடியாத இணைப் படைப்புக்கள் – கோபல்ல கிராமம் மற்றும் கிராமத்து மக்கள். கிராமம்  போன்ற குறுங்குழுக்களுக்குள் ஆயிரம் போட்டி பொறாமை.அதை நைனா எழுதும்போது, அதைப் பற்றிய முன்முடிவுகளும், மனச்சாய்வுகளும் மறைந்து, அது அச்சமூகத்தின் குணம் என அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொள்ள வைக்கிறது. சிங்கப்பூர் நாய்க்கரைக் கண்டால், சீனி நாய்க்கருக்கு பூளுல மொளகாயத் தடவின மாதிரி எரியும் என்பது, வைரமுத்துவின் பாஷையில் சொன்னால், கம்பன் பாடாத சிந்தனை

பல நாட்களில், தொடர்பே இல்லாத இடங்களிலும், எதிர்கொள்ளும் நிகழ்வுகளிலும், நைனா வின் நினைவு வரும்.சமீபத்தில் ஒரு நாள் மாலை மங்கிய பொழுதில், கடற்கரையினில் உயர்தர ரஷ்யச் சாராயம் மாந்திக் கொண்டிருக்கையில், ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி க்ளிப் ஒன்று வந்தது.

அது அமெரிக்க டாய்லெட்களைப் பற்றியது.தில் பேசும் தமிழ்ப்பெண்  சொல்கிறார்.. “அமெரிக்கா என்னங்க வல்லரசு நாடு.என்ன வல்லரசு நாடு? டேய் மொதல்ல ஒரு டாய்லட் கதவ முழுசாக் கட்டுங்கடா.அப்பறமா மெக்சிகோவுக்கு குறுக்கால செவுரு வச்சிக் கட்டலாம்…” வெடித்துச் சிரித்ததில், கையில் இருந்த பாதிக் கோப்பை மது சிதறிவிட்டது.

கோப்பையை மீண்டும் நிரப்பிக் கொள்ளும் போது நினைத்துக் கொண்டேன். ரோமியோ ஜுலியட் என்னங்க  பெரிய காதல் ஜோடி? என்ன பெரிய காதல் ஜோடி?? எங்க கிட்டப்பன் – அச்சிந்திலுவுக்கு இணையாகுமா ந்னு என்னை நானே கேட்டுக் கொண்டேன்…

ஒரு வீம்புக்காகப் பிரிதல் என்பது கிராமத்தில் மிக எளிதாக எவரும் காண்பதுதான்.ஆனால், அந்த வீம்புக்கு பின் உயிர்த்திருக்கும் காதலை எழுத நைனாவால் மட்டும்தான் முடியும்.இரவில்,  சிறுநீர் கழிக்க பின்புறம் வரும் அச்சிந்திலு, அவர்கள் வீட்டு மாடு சினைக்கான பருவத்தில் இருப்பதும், அதைத் தணிக்க காளை, சுவற்றைத் தாண்டி வந்து, மாட்டைப் புணர்தலும் – அதை அச்சிந்திலு கண்டு மோகிக்கும் கணமும், அச்சு அசல் சங்க காலப் பாடலின் தொடர்ச்சி.குறுந்தொகையில் இப்படி ஒரு பாட்டு இருந்தது என எவரேனும் கதைவிட்டால், உலகம் கேள்வி கேட்காமல் நம்பிவிடும்.

அதே போல, கரிசல் காட்டில், கிட்டப்பன், பிசின் வழியும் மரத்தின் முன் அச்சிந்திலுவின் நினைவில் ஏங்கி, மயங்கிச் சரிதலும் எனக் காமத்தைச் சூழலுடன் மிகச் சரியாகப் பொருத்தி எழுதியவர் என் சிற்றறிவில்  எவருமில்லை.இத்துடன் ஒப்பிடுகையில், பலமான எதிர்பார்ப்போடு வாசித்த Lady Chatterlie’s lover பெருத்த ஏமாற்றத்தை அளித்தது என்றே சொல்ல வேண்டும்.. தி.ஜா மூணாப்பு ஃபெயில்!  நம்முலகில்,  நைனா போல இதை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்தவர் யாருமில்லை.

இறுதியில் கண்ணம்மா – கன்னிமையில் வரும் நாச்சியார்… பாரதியின் கண்ணம்மாவை விட உயிர்ப்பானவள்.

”ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து ‘கடித்துக்’ கொள்ள கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின் காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் ‘கொண்டா கொண்டா’ என்று சொல்லுமாம்!

இரவில் அவர்களுக்கு வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமா பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.

அவள் அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்தது வீடு நிறைந்திருந்தது. தீபம்போல் வீடு நிறைஒளி விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள்.

மார்கழி மாசம் பிறந்துவிட்டால் வீட்டினுள்ளும் தெருவாசல் முற்றத்திலும் தினமும் வகை வகையான கோலங்கள் போட்டு அழகுபடுத்துவாள். அதிகாலையில் எழுந்து நீராடி திவ்யப்பிரபந்தம் பாடுவாள். இப்பொழுதும் பல திருப்பாவைப் பாடல்களை என்னால் பாராமல் ஒப்புவிக்கமுடியும். சிறுவயசில் அவளால் பிரபந்தப் பாடல்களைப் பாடக் கேட்டுக்கேட்டு எங்கள் எல்லோர்க்கும் அது மனப்பாடம் ஆகிவிட்டது”.

வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மா என்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப் படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு தேவ திருப்தி”.

எனக்கு கொய்யாக்காய் மிகவும் பிடிக்கும். பூ காயாகத் துவங்கி, கனியும் முன்பு திரண்டு நிற்கும்.அதைச் செங்காய் எனச் சொல்வார்கள்.அதற்கென ஒரு அபூர்வ குணமும் ருசியும் இருக்கும்.குடும்பம் என்னும் பாரம் நுகத்தில் ஏற்றும் முன்பு, எந்த எடையும் இல்லாமல், உலகின் இன்பமே என் இன்பம் என வாழும் சிறு காலம். பணி நிமித்தம், பல ஊர்களில் சுற்றும் போதெல்லாம், இந்தப் பருவத்துப் பெண்களைக் காண்கிறேன்.. அதில் சுடரும் ஒரு அபூர்வமான ஒளியை, பாரதியை விட நைனா கச்சிதமாகச் சித்தரித்திருக்கிறார் என்றே சொல்வேன்.இப்படி துள்ளித் திரியும் பெண்களைக் காணும் பொழுதெலாம் நைனாதான் நினைவுக்கு வருகிறார்.

மண் சார்ந்த படைப்பு எனப் பலரைச் சொல்வார்கள்.அப்படித்தான் நான் ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாளை வாசித்தேன்.அதில் கொங்கு மொழி இருந்தது. கவுண்டர்களுக்கே உரித்தான பங்காளிச் சண்டை இருந்தது.ஆனால், கொங்கு நிலப்பரப்பின் செம்மண்ணும், மணமும் இல்லை.இன்றுவரை, அந்தக் கதையின் நிலப்பரப்பு நினைவில் இல்லை.நீங்கள் உங்கள் உரையில் சொன்னது போல், நவீனத்துவம் என நினைத்து எழுத வந்தவர்கள், சூழலை ஒரு backdrop என மட்டுமே உபயோகித்தார்களோ என சந்தேகிக்கிறேன்.

நான் ஒரு சாதாரண வாசகன்.எனது உலகில், பிடித்தவற்றை வாசிக்கும் ஒரு pedestrian reader என்றுதான் என்னைச் சொல்லிக் கொள்வேன்.உலகின் உன்னதமான கதைகளையோ, காவியங்களையோ படித்தவனில்லை.இன்றிருக்கும் மனநிலையில் இனிமேல் படிப்பேனா என்றும் தெரியவில்லை.

ஆனால், கதை படிக்கும் ஆர்வமிருந்த காலத்தில் ஒரு நாள் நைனா என்னை ஆட்கொண்டார்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

அப்படீங்கற மாதிரி, ஒரு காலத்தில் அவர் பெயர் கேட்டு, பின்னர் அவர் கதை கேட்டு, அவருக்கே பித்தான கதை என் கதை.

ஏன் என யோசித்துப் பார்க்கிறேன் –

சிறு வயதில் ஒரு நாள், என் அம்மாயி, ஒரு வேலையாக அவர் சொந்த ஊரான கன்னடியன் பாளையத்துக்கு என்னை எடுத்துச் சென்றார்.. ஒரு உறவினர் வீட்டில், ஏதோ காரணத்துக்காக, என்னை உறங்க வைத்து விட்டு, இன்னொரு உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்..  மரத்தடியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த என்னை விட்டு விட்டு, அவர்கள் அனைவரும் கடலைக் கொடி பிடுங்கச் சென்று விட்டனர். மாலை மங்கும் நேரத்தில், விழித்துப் பார்த்தேன்.. யாருமில்லை.தன்னிரக்கத்தில் வீறிட்டு அழத்துவங்கிய என்னை, அந்த வீட்டின் வெள்ளச் சீலக் கார ஆயா ஓடி வந்து தூக்கிக் கொண்டார்.

‘ஏஞ்சாமி.. பயந்துட்டியா கண்ணூ’, என அணைத்துக் கொண்ட அவரின் வெற்றிலை வாசனை இன்றும் நினைவிருக்கிறது… தேம்பிக் கொண்டிருந்த என்னைத் தேற்றி, சுடுதண்ணியில் குளிக்க வைத்து, துணி மாற்றித் தன் மடியிலேயே வைத்து அணைத்துக் கொண்டார். வேகவைத்த கடலைக்காயை உரித்து எனக்கு ஊட்டிக் கொண்டேயிருந்தார். நைனா அப்படி ஒரு அன்னை.

அன்புடன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி

முந்தைய கட்டுரைவெண்முரசின் உணவுகள்- கடிதம்
அடுத்த கட்டுரைஅறஞ்செயவிரும்பு- கடிதம்