ஆரோக்யநிகேதனம் – படிமங்கள்

ஆரோக்கிய நிகேதனம் அறிமுகம்

இனிய ஜெயமோகன் அவர்களுக்கு,

அன்புள்ள ஜெயமோகன்

‘ஆரோக்கிய நிகேதனம் ‘ நாவலை உங்களின் பரிந்தரையால் இரு மாதங்களுக்கு முன் வாசித்தேன்.சில சமயம் அதை பற்றிய சிந்தனை வரும்,ஜீவன் மஷாய் நடந்து வருவது போல்,தோற்செருப்பின் ஒலியுடன்.இன்று காலை முதல்  ஒருவித நகர்தலை மனதில் உணர்ந்தேன்.

அதை நினைக்கும் போதெல்லாம்.வாசிக்கும் போது என்னை அதன் கூறுமுறை வெகுவாய் கவர்ந்தது‌.அதிர்வில்லாத ஆனால் பெரும் உளமாற்றத்தை அவ்வபோது உருவாக்கி கொண்டு இருந்தது.எனக்கது செயற்கையோ என தோன்றிற்று.நீங்கள் வெகுவாய் உயர்த்தி பேசியதால் உண்டான உணர்வோ என்று!

ஆனால் மலையை எந்த தடங்கலும் இன்றி கூர்ந்து அவதானித்தால் வருமே,ஆளில்லா ஆற்றில் தனியாய் அலாதியாய் வெகு நேரம் நீராடி அதன் அகண்டு விரிந்த உருவை பார்த்தால் வருமே,அதெல்லாம் போல ஒரு பிரம்மாண்ட நகர்வு மனதுள்.நகர்வென்னும் வார்த்தை நியாயமானதா என தெரியவில்லை.காலத்தின் பேருருவை மஞ்சரியின் வசீகர சரிவு எனக்கு உணர்த்துகிறது.கனவு போல் இருக்கிறது.இதோரு விந்தையான அனுபவம்.வாசிப்பின் ஆரம்ப படிகளில் இருப்பதால் எனக்கு இதொரு நிமர்வை அளித்தாலும்,வார்த்தைகள் இன்றி குழப்பம் கொள்கிறேன்.

மண்வாசத்தின்,இருண்ட மழை வானின் நெருக்கத்தை அளிக்கறது.இயற்கையின் ஒரு உருவாக என் அகத்துள் நிறைகிறது ஏனோ.நெகிழ்வென கூறவா,உயிர்ப்பென கூறவா,ஐயுறுகிறேன்.ஆனால் ஒருவித பாதிப்பு.

இவ்வளவு நாட்களழித்து ஏன் இந்த உணர்வு?இது மெய்யாகவே வாசிப்பில் நான் வளர்ந்து வருவதற்கான அறிகுறியா?ஆரோக்ய நிகேதனம் என் அகத்தில் கரைய தொடங்கிவிட்டதா?விறுவிறுப்பு கண்டடைதல் எல்லாவற்றையும் மீறி இது வேறொரு உணர்வென மட்டுமே தற்போதைக்கு புரிகிறது.மேலும் தெளிவுற ஆவல்.விளக்கம் தந்தால் என் வாசிப்பை சிறப்பாய் மேம்படுத்துவேன்.

அன்புடன்

பாலா

***

அன்புள்ள பாலா

பேரிலக்கியங்களில் மூன்று கூறுகள் உள்ளன. கதைத்தருணங்கள், சிந்தனைகள், படிமங்கள். கதைத்தருணங்கள்தான் உடனடியாக ஆழமான பாதிப்பை உருவாக்குகின்றன.ஏனென்றால் அவை உணர்ச்சிகரமானவையாக இருக்கும். தீவிரமான மோதல்களை அளிக்கும். கதைமாந்தரின் ஆளுமை நம்மை கவரும். சிந்தனைகள் முதலில் தடையென தோன்றும். ஆனால் வாசித்து முடிக்கையில் நம்மில் நிறைந்திருக்கும். நாம் மேலே யோசிக்கவைக்கும்.

படிமங்கள் நம் அறிதலுக்கு எதையும் அளிப்பதில்லை. சிலசமயம் நீங்கள் சொன்னதுபோல அவை வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்றும் படும். ஆனால் அவை நம் ஆழுள்ளத்துக்கு நேரடியாகச் சென்றுவிடுகின்றன. அங்கிருந்து நம் கனவை ஆள்கின்றன. நம்மில் வளர்கின்றன. நம்மை மாற்றுகின்றன. உங்களுக்கு நிகழ்ந்தது அதுதான்

ஜெ

ஆரோக்ய நிகேதனம்- கடிதம்

ஆரோக்யநிகேதனம்- சௌந்தர்

முந்தைய கட்டுரை’எடிட்டர்’- கடிதம்
அடுத்த கட்டுரைகழுமாடன் கடிதம்