கழுமாடன் கடிதம்

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் நகைச்சுவை பதிவுகள் எனது ஒவ்வொரு நாளையும் இனிமே மிக்கதாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. தங்களின் தனிமை குறித்த ஒரு வாசகக்கடிதக் கேள்விக்கான பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மிகப்பெரிய திறப்பை அளித்தது. சிந்தையை அடக்கி சும்மா இருப்பதை விட்டு தேவையில்லாமல் இலக்கிய வாசிப்பு மற்றும் உரையாடல்கள்  என எண்ண ஓட்டங்களில் மூழ்கிக் கிடக்கின்றேனோ என்ற ஐயம் அவ்வப்போது வரும். அந்த பதிலுக்காக உங்களுக்கு மிகவும் நன்றி. எனினும் கூட காலம் மட்டுமே இது குறித்த ஒரு நல்ல தெளிவை இனி வரும் நாட்களில் எனக்கு அளிக்கக் கூடும் என நம்புகின்றேன்.

ஒரு கேள்விக்கு உங்களின் கருத்தை கேட்டு இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.

இன்று சுக்கிரி இலக்கிய உரையாடல் குழுமத்தில் கழு மாடன் கதை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அந்தக் கதையின் நாயகன் கழு ஏறுவதற்கான முடிவை எடுத்ததில் ஓங்கி நிற்பது அவனது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான விடுதலைக்கான அறைகூவலே என்று ஒரு தரப்பும், தனக்கு பகவதி மற்றும் தேவகி இளையம்மை குடும்பத்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கும் தனிப்பட்ட வஞ்ச உணர்ச்சியே என்று ஒரு தரப்பும் தீவிரமாக விவாதித்தது. இவை இரண்டுமே காரணம் என்று அனைவரும் ஏற்றுக்கொண்ட போதிலும் எது மிக முக்கியமான காரணம் என்பதில் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் தீவிரமாக எடுத்துரைக்கப்பட்டன. ஒரு இலக்கிய படைப்பாளியாக தாங்கள் இந்தக் கதையை எழுதும்போது எந்தக் காரணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

பதினேழு குழந்தைகளில் மிஞ்சிய, அன்னைக்கு ஒரே மகனாக இருந்த போதும்,கரியாத்தன் கழு ஏறுவதற்கான முடிவை எடுப்பதற்கான எல்லா காரணங்களையும் பட்டியலிட்டுப் பார்ப்போமே.

1.செய்யாத தவறுக்காக தண்டிக்கப் படுவதால் எழுந்த அறச்சீற்றம்.

2.தேவகியின் நடத்தை மீதான வெறுப்பு

3.பகவதி பிள்ளையின் செய்கை மீதானா கோபம் மற்றும் வஞ்சம்

4.ஒடுக்கப்பட்டவனாக பிறந்து கொடுந்துயர் அனுபவிப்பதால் விளைந்த சமூக அமைப்பின் மீதான சீற்றம்

5.கழு மாடனாக நின்று பழி வாங்க வேண்டும் என்ற வெறி.

6.கழு மாடனாக நின்று ஒடுக்கப்பட்ட இனத்திற்கான முதல் விடுதலைக் குரல் எழுப்பும் ஆவல்.

7.அத்தனை சித்திரவதைகளையும் அனுபவித்து விட்ட பிறகு உயிர் வாழ்ந்து என்ன பயன் என்ற விரக்தி.

8.தொடவில்லை என்று சத்தியம் செய்துசொன்ன பிறகும் விடுதலை கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் இன்மை.

9.மீண்டும் தேவகி பிள்ளை தொல்லை தர மாட்டார் என என்ன நிச்சயம் என்ற எதிர்கால கேள்வி.

10.கழுவேற்றா விட்டாலும் வேறு ஏதோ வகையில் தன்னை பிறகு கொல்ல மாட்டார்களா என்ன? என்பதான உயிருக்கான உத்திரவாதம் இன்மை.

இவைகள் எனக்குத் தோன்றியவை. வேறு ஏதேனும் விட்டுப் போயிருந்தால் இணைத்து எழுதுங்கள்.

தங்களுக்கு நேரமிருப்பின் இதுகுறித்து தங்கள் மேலான கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

அன்புள்ள ஆனந்த் சுவாமி அவர்களுக்கு,

கதை எழுதப்பட்ட பின் நான் என்ன உத்தேசித்தேன் என்பதற்கு இடமில்லை. அதை நான் சொல்லவும் கூடாது. ஒரு கதை ஒரு வாழ்க்கையின் துண்டு. வாழ்க்கைநிகழ்வொன்றை சொல்லக்கேட்டால் நாம் எப்படி பலதரப்பட்ட முடிவுகளை அடைகிறோமோ அப்படித்தான் கதையிலும் அடைகிறோம். எல்லா வாசிப்புக்கும் இடமளிப்பதே நல்ல கதையின் இலக்கணம். இரண்டு வாசிப்புமே சரியானதுதான்

ஜெ

***

குமரித்துறைவி இரு கலைஞர்கள் வான் நெசவு
பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா
முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது
தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்
கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் உடையாள்
பத்து லட்சம் காலடிகள்

 

முந்தைய கட்டுரைஆரோக்யநிகேதனம் – படிமங்கள்
அடுத்த கட்டுரைதேர்வுசெய்யப்பட்டவர்கள் – கடிதம்