அன்புள்ள ஜெ.,
தங்களுடைய கி.ரா.புத்தக வெளியீட்டு உரை கேட்டேன். மிகக் கச்சிதமான சிறந்த உரை. உங்கள் குரலும் வெல்லப்பாகுப் பதத்தில் இனிமையாய் ஒலித்தது. முதன்முதலாகக் கேட்பவர்களுக்கும் தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த பேச்சாளர் இவர் என்று மனதில் தோன்றும் அளவிற்கு சிறப்பான பேச்சு. உங்கள் உரைகளைத் தொடர்ச்சியாகக் கேட்கிறேன். மிக எளிதாகச் சொல்லலாம், பேச்சுக்கலையின் வடிவம் உங்கள் கைவசப் பட்டு விட்டது என்று. கி.ரா.விற்கு ஞானபீடம் கிடைக்காதது கூட வருத்தமில்லை. இப்பிடிப்பட்ட ஒரு எழுத்தாளருக்கு அவருடைய நூற்றாண்டு விழாவிலும் கூட, விருது கொடுத்து தன் மதிப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் வாய்ப்பை அந்த நிறுவனம் தவற விடுவதுதான் வருத்தமான விஷயம்.
உங்கள் உரை பல திறப்புக்களை அளித்தது. குறிப்பாக, நாட்டுப்புறக் கதையில் பாடபேதங்கள் இல்லாமல் இருப்பது. சொற்கள், எத்தனை ஆண்டுகள், எத்தனை காதுகள் மாறி, இன்றைய கதியை அடைந்திருக்கும். கர்நாடக சங்கீதப் பாடகர் அருணா சாய்ராம் பிருந்தாம்மா என்கிற அவருடைய குருவைப் பற்றிக் கூறுகிறார். அவர் பாடலை எழுதிக்கொள்ள அனுமதிக்க மாட்டாராம். அவர் பாடுவதைக் கேட்டு அப்படியே பாடவேண்டும். வேதங்களை ‘எழுதாக் கிளவி’ யாகச் செய்தவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆசிரியன் சொல்லுக்கிருக்கும் மதிப்பு அது. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடத்தப் பட்டிருக்கிறது. நானெல்லாம் பதினோராம் வகுப்பு படிக்கும்போது ‘வாழ்க்கையைப் படிக்கணும்னா ஜெயகாந்தனைப் படிங்கடா’ என்று ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னதினாலேயே அவரைப் படிக்க ஆரம்பித்தேன்.
நீங்கள் இதுவரை எழுத்தால் நிலைபெற்றுவிட்டீர்கள், நீங்கள் சொல்லாலும் நிலைபெறவேண்டும். உங்கள் குரல் ‘மொண்ணைச் சமுதாய’த்தின் உணர்கொம்புகளை உயிர்ப்பித்தெடுக்க (உங்களுக்குப் பிடிக்காத) கல்லூரிகள் தோறும் ஒலிக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள் தோறும் உங்கள் குரல் ஒலிக்கவேண்டும். கல்வி வியாபாரமாகி விட்ட இந்தக் காலத்திலும் ஆசிரியரின் சொல்லுக்கு ஒரு மதிப்பிருக்கிறது. நீங்கள் ஆசிரியர்களின் ஆசிரியர்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்