களப்பிரர் ஆட்சியில் தமிழகம்- மயிலை சீனி வெங்கடசாமி
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
அன்பிற்குரிய ஜெ வணக்கம்,
எனக்கு சமீப காலமாக களப்பிரர் வரலாற்றை அறிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்டது தான் அதற்கு காரணம் என நினைக்கிறேன். ஜெ களப்பிரர் வரலாற்றை பற்றி விரிவாக எழுதப்பட்ட நூல்கள் ஏதானும் தமிழில் உள்ளதா? நான் தேடிய வரையில் திரு.மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் “களப்பிரர் கால தமிழகம்” என்னும் ஒரு நூல் கிடைத்தது. அதிலும் ஆசிரியருக்கு களப்பிரர் வரலாற்றை எழுத போதுமான தகவல்கள் இல்லை என்றே தோன்றுகிறது.
முன்னூறு ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த மரபில் மூன்று மன்னர்களின் பெயர்களை மட்டுமே (அச்சுத விக்கந்தன்,கூற்றுவன், அச்சுத களபாளன்) ஆசிரியர் அளிக்கிறார். திரு. கே. கே பிள்ளை அவர்களும் தனது தமிழகம் வரலாறும் பண்பாடும் நூலில் களப்பிரர் பற்றி மூன்று பக்க அளவில் சிறிய அறிமுகம் ஒன்றை மட்டுமே அளிக்கிறார் .இது தவிர களப்பிரர் கால அரசாட்சி, கலைகள், இலக்கியங்கள்,கல்வெட்டுக்கள் போன்றவற்றை விரிவாக விளக்கும் நூல்கள் உள்ளனவா?
அன்புடன்,
க.சுப்ரமணியன்
அன்புள்ள க.சுப்ரமணியம்,
களப்பிரர் காலம் பொற்காலம் என்ற பெயரில் க.ப.அறவாணன் அவர்கள் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதுவும் தரவுகள் குறைவான நூலே. ஆனால் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்னும் பழைய வரலாற்றெழுத்துக்கு மாறாக அது சமணர்களின் ஆட்சிக்காலம், தமிழகத்தில் கல்வியும் மருத்துவமும் வணிகமும் செழித்த காலம் என நிறுவுகிறார்.
இரண்டு விஷயங்களை கருத்தில்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். தமிழக வரலாற்றெழுத்தில் எழுபதுகளுக்குப்பின் பெருந்தேக்கம் உள்ளது. முதன்மை வரலாற்றாசிரியர்கள் எவருமில்லை. புதியதரவுகள் கண்டடைந்து எழுதப்படாத பகுதிகளை நிரப்பும் ஆய்வுகள் அனேகமாக ஏதுமில்லை.அடிப்படை ஆய்வுகள் கண்ணுக்குப் படவில்லை.
மாறாக இன்றிருப்பவை, இரண்டு வகை வரலாற்றாய்வுகள். ஒன்று, சாதியவரலாறுகள். ஒவ்வொரு சாதியும் தங்களுக்குரிய வரலாற்றைக் கற்பனைசெய்து எழுதிக்கொள்கிறது. அதனடிப்படையில் களப்பிரர்களைப் பற்றி ஏராளமாக பேசி வைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகள் அவ்வாய்வுகளை குப்பைகள் என்று புறந்தள்ளலாம்
இரண்டு, மேலைநாட்டுப் பல்கலைகளில் இருந்து பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கிளம்பிவரும் கொள்கைகளின் அடிப்படையில் ஏற்கனவே எழுதப்பட்ட வரலாற்றை பிய்த்துப்போட்டு மறுபடி எழுதுவது.
ஆழமான வரலாற்றுப்பார்வையோ சமநிலையோ இல்லாமல் அன்றாடக் காழ்ப்பரசியலின்மேல் நின்றுகொண்டு வரலாற்றைப் பேசும் குரல்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. அவற்றுக்குச் செவிகொடுத்தால் நம்மால் வரலாற்றை அறியவே முடியாது.
களப்பிரர் காலத்தைப் பற்றி கே.கே.பிள்ளை காலத்திற்குப் பின் புதிய தரவுகளோ ஆய்வுகளோ இல்லை. அவ்வண்ணம் ஒர் ஆய்வு நிகழவேண்டும் என்றால் அன்றையதமிழகத்தின் மதமாக இருந்த சமணத்தின் மொழியாகிய பிராகிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர்கள் வேண்டும். சமணத் தொல்நூல்களை விரிவாக ஆராயவேண்டும்.
அன்றைய தமிழகம் என்பது சமணமதத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் தலைமையகம் என்பது சிரவணபெளகொளா, கும்சா ஆகிய ஊர்களில் இருந்தது. ஆகவே ஆய்வை தமிழக எல்லைக்குள் நிறுத்திவிடாமல் ஒட்டுமொத்த தென்னகத்தையே கருத்தில்கொண்டு ஆராயவேண்டும்.
அவ்வாறான ஓர் ஆய்வுக்கு இங்கே தடையாக இருப்பவை முதன்மையாக மொழியறிவுக் குறைப்பாடு. பன்மொழி அறிஞர்கள் என எவரும் இன்றில்லை. சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம்,தமிழ் அறிந்த ஓர் ஆய்வாளரைச் சுட்டிக்காட்ட முடியவில்லை. அத்துடன் தமிழ்ப்பெருமிதத்தை அக்குளில் வைத்துக்கொண்டு செய்யும் ஆய்வுகள். அவர்களால் தமிழ் எல்லையைக் கடந்துபோக முடியாமல் செய்வது அந்த பெருமிதம். அதற்குள் இருப்பது வெற்றுச்சாதிப்பெருமிதம்.
களப்பிரர்கள் அன்றைய சாதவாகனப்பேரரசின் கீழே இருந்த குறுநிலமன்னர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தச் சாதவாகனப்பேரரசின் பெருஞ்சித்திரம் உருவாக்கப்பட்டு அதன் பகுதியாக களப்பிரர் காலம் ஆராயப்படவேண்டும். தென்னகத்தில் சாதவாகனப் பேரரசைப் பற்றி ஆராய்பவர்கள் அனைவரும் கூடும் சில கருத்தரங்குகள் நடத்தப்பட்டால் ஒரு தொடக்கம் நிகழலாம்.
ஆனால் துரதிருஷ்டவசமாக சென்ற முப்பதாண்டுகளாக வரலாற்றாய்வுக்கு இந்திய அரசு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை. இன்றைய கல்விமுறையில் வரலாற்றாய்வு புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இன்றைய கல்விமுறை பயனுறுகல்விக்கே முதன்மையிடம் அளிக்கிறது.
ஜெ