மதப்பெருமை பேசுதல்

அன்புள்ள ஜெ

இந்திய மரபில் இருந்து தவிர்க்க முடியாத தத்துவம் “சிவம்”. அவன் தத்துவமே. இதிகாசங்களிலும் சிவம் இன்றி முடிவு இல்லை.  பாரதத்தில் அவனை நோக்கியே தவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இராமகாதையில் ஜனகனால் தவம் செய்து பெறப்படும் சிவதனுசு உடைக்கப்படுகிறது. இராவணன் சொல்லவே வேண்டாம், சிவபக்தன். அதில் அவனே இலக்குவனுக்கும்.  இவை மிகச்சில உதாரணங்களே. இதன் பட்டியல் இன்னும் அதிகம்

ஆக யுகம் தோறும் முடிவிலா பிரணவம் அவன். இவை அனைத்தும் இடைச்செருகல்கள் என புலம்பிப் புறம் தள்ளுவோரும் ஏற்கக் கூடிய பரம் “சிவம்”. பண்பாட்டுத்தளத்தில் அவன் லிங்கமாக இருப்பைப் பெற்று விட்டான். அந்த விரிசடை பித்தனே, நாட்டார் வழக்கிலும் வெவ்வேறு உருக்கொண்டு நடம் புரிகிறான்.(சுடலையாடி, தாண்டவகோன்).

வேதங்களில் கூறம்படும் பரத்தின் பொருள் வடிவமாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளான். Cult எனப்படும் வழிபாட்டு அல்லது வாழ்வியல் முறை  வரை ஆக்கிரமித்து பலவகையாக உள்ளவன். இன்றைய ஆதியோகி வரை.  அவன் ஏகன். (The Ultimate/Ultimaum). இதன் பின்னும் பல உருவங்களை எப்படியேனும் கொள்வான்.

இத்தகைய தத்துவ உருமாற்றம்/உள்வாங்கல் என்பது வேறு ஏதும் பண்பாட்டினில் உள்ளதா? சுருக்கமாக ஒரே தத்துவம் பல கோணங்களில் பரிணமிக்கும் பண்பாடு/ வாழ்வியல் உலகத்தின் வேறு பகுதிகளில் உள்ளதா? இது குறித்து நாம் அடையவேண்டிய இறுதி தரிசனம் என்ன?

நாராயணன்

திருநெல்வேலி

***

உங்கள் கடிதத்தின் சுவாரசியமான முரண் முதலில் எனக்கு தெரிகிறது- நாராயணன் என்ற பெயருடன் சிவன் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

முதலில் நான் அறிய விரும்புவது ஒன்று உண்டு. நீங்கள் சிவம் மீது கொள்ளும் பற்றி எதற்காக? நீங்கள் ஒரு பக்தராக, சைவராக அணுகுகிறீர்கள் என்றால் சிவவுருவங்கள் எப்படி எழுந்தன எவ்வண்ணம் பரவின என்னும் ஆய்வுநோக்கே தேவையில்லாதது. அது திசைதிருப்புவதும், ஒன்றுவதை தடுக்கும் தர்க்கமும் ஆகும்.

எங்குமில்லாதது என் தத்துவம் என்னும் பெருமையில் என்ன இருக்கிறது? என் தத்துவமே எங்குமுள்ளது என்பது இன்னும் பெரிய தன்னுணர்வு அல்லவா? இங்குள்ள எல்லாமே சிவன் என உணர்வதற்கு என்றால் இந்தத் தர்க்கங்கள் எதற்கு? இந்த வரலாற்றாய்வு எதற்கு? பற்றுக, போற்றுக, ஊழ்கம் கொள்க. அதுவல்லவா சைவத்தின் பாதை?

சரி, ஆய்வாளராக ஆவதுதான் இலக்கு என்றால் அதற்கு இந்தப் பற்று மிகமிக எதிரானது. பற்றுள்ள ஆய்வுக்குப் பயனில்லை, அது ஆய்வே அல்ல. சைவம் உங்களுக்கு ஆய்வுப்பொருள் மட்டுமே. அதன் பெருமையில் உங்களுக்கு மகிழ்வேதும் இருக்கலாகாது.

அவ்வண்ணம் ஆய்வுசெய்வதாக இருந்தால் வரலாற்று நோக்கில் வேதங்களின் ருத்ரம் முதல் சைவக்கருத்து எவ்வண்ணமெல்லாம் விரிந்திருக்கிறது என ஆய்வுசெய்து எழுதியவர்களின் நூல்கள் உள்ளன. மலைவழிபாடு, குறிவழிபாடு, அனல்வழிபாடு என பலவகை வழிபாடுகளின் தொகை சிவருத்ர வழிபாட்டுடன் இணைந்ததை விளக்கும் நூல்கள் உள்ளன

குறியீடுகளையும் படிமங்களையும் பொருள்கொள்வதற்குரிய முறைமைகள் பல உண்டு. வரலாற்றிலிருந்து பண்பாட்டுப் பரிணாமத்தை உய்த்தறியவேண்டிய வழிமுறைகளும் உண்டு. அவற்றை பயிலலாம். ஆனந்தக்குமாரசாமி முதல் பல்வேறு ஆய்வாளர்களை கருத்தில்கொள்ளலாம்.

அவர்கள் சொன்னவற்றை பயின்றபின், அவற்றுக்கு மேலதிகமாகச் சொல்ல உங்கள் கண்டுபிடிப்பு உண்டென்றால் ஆய்வாளர்களுக்குரிய மேடையில் அதை முன்வைக்கலாம். தர்க்கபூர்வமாக நிலைநாட்டலாம். என்னைப் போன்றவர்கள் அந்த ஆய்வுக்களத்தில் இருந்து, அங்கே நிறுவப்பட்ட உண்மைகளை எடுத்துக் கொள்வோம்.

இருவகைப் பாதையிலும் நீங்கள் இப்போது கொள்ளும் இந்த உணர்ச்சிக்கு பொருளேதுமில்லை. இது மிக எளிதாக மதப்பெருமிதம் நோக்கிக் கொண்டுசெல்லும். அது மதச்சழக்காளராக ஆக்கும். மதச்சழக்கே மதத்தில் இருந்து நாம் அடையும் முதன்மைத் தீங்கு.

ஜெ

முந்தைய கட்டுரைசாதியும் நீட்சேவும்
அடுத்த கட்டுரைஅட்டன்பரோவின் ‘லைஃப்!”