பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு ,
இந்த கொரோனா காலகட்டத்தில் மீண்டும் ஒருமுறை திசைகளின் நடுவே , மண் முதல் நூறு கதைகள் வரை ஒரு மீள்வாசிப்பு . பெரும்பான்மையான கதைகளில் என்னுடைய எளிமையான வாசிப்பில் நான் கண்ட recurring theme , நீங்கள் மரபு உரையில் சொன்னது போல “சாதாரணர்களுக்கு மலையில் பிடித்து ஏற மரபின் வேர்கள் தேவை , பறவைகளாகப்பட்டவர்க்கு அல்ல ” .
வெண்முரசு வார்த்தைகளில் “பராசரா, உன்னிலிருப்பது ஞானம். அது மரங்களை மடித்து உண்டு காடதிர காலெடுத்து நடந்துசெல்லும் மதகரி.. கவிதையோ இசையென்னும் சிறகு முளைத்த பறவை. அது விண்ணில் நீந்தும், மலர்களில் தேனுண்ணும்.. மதகரியைப் படைத்த நியதியே பறவையையும் படைத்தது என்று உணர்க” ; கிரிதரன் , குட்டப்பன் ; பிராஞ்சி,கண்டன்காணி ; X , ஹோவர்ட் சொமெர்வெல் ; பாண்டியன் , கிம் ; அஜிதன் , பித்தன்,etc என நீளும் பறக்க எத்தனிக்கும் ஒரு மதகரியின் வேட்கையும் /வீழ்ச்சியும் .வெண்முரசிற்கு பிந்தைய படைப்புகளில் , பசுமையின் இருட்டு இல்லை , உயரப்பறக்கும் பறவையின்யின் மேல் எதன் நிழல் விழும்? பெரு நிம்மதியுடன் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். மண்டையோடு சிதற முட்டி திறக்கும் வாசல்கள் கொண்டு செல்லும் இலக்குகளை காண்பித்துவிட்டீர்கள்.Thank you for showing us ,the path of salvation through relentless pursuit of excellence.
உங்களை படிக்க ஆரம்பித்த பன்னிரண்டு வருடங்களில் பெரிதாக எதையும் பேசியதில்லை , ஆனால் ஒரு நாள் கூட உங்களுடன் உரையாடல் இல்லாமல் இருந்ததில்லை. இப்பொழுதும் கேட்டு தெரிந்து கொள்ள எல்லாம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் தேடினால் பதிலை எங்காவது எழுதி வைத்திருப்பீர்கள். ஒரு நன்றி மடல் எழுத வேண்டும் என்று இன்று ஒரு உந்துதல். முன்பொரு நாள் வாழ்க்கையில் உங்களால் ஈட்டிய அனைத்திற்கும் கூறிய நன்றியை ஏற்க மறுத்துவிட்டிர்கள். நித்தியாவிடம் இருந்து உங்களுக்கு கிடைத்தது, அவர் குரு பீடத்தில் இருந்து அவருக்கு கிடைத்தது , யாருக்கும் உரிமை இல்லாதது என்று சொல்லிவிட்டடீர்கள். ஆனால் உங்களால் அமைந்த நட்பு வட்டத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு. அந்த இனிமையான குழுமம் வாழ்க்கையின் கொண்டாட்டங்களை மேம்படுத்தும் , வீழ்ச்சிககளில் தாங்கிப்பிடிக்கும் , ஆன்மிக பயணங்களில் துணை நிற்கும் ஒரு உன்னத சங்கம். மீண்டும் நன்றிகள்.
நீங்கள் புது இடத்தில் அமைந்தபின் வந்து மரியாதைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்.
அன்புடன் ,
ரவிக்குமார் ,
திருச்செந்தூர்.
***
அன்புள்ள ரவிக்குமார்,
இப்போது அமைந்திருக்கும் இடம் இங்கிருந்து எங்கும் செல்லவும், எதையும் அடையவும் தூண்டுவது அல்ல. இதை வந்தடைவேன் என்று நினைத்ததும் இல்லை. குமரித்துறைவி எழுதி முடித்தபோது அதை உணர்ந்தேன், எதுவுமே எஞ்சவில்லை என்று. எந்த எழுத்தும் எழுதி முடித்தபின் உருவாகும் நிறைவின்மையை அது அளிக்கவில்லை.
பெரும்படைப்புக்கள் முடிந்த பின் ஒரு மங்கலப்பாடல் வரும். சில சமயம் பெரும்படைப்புக்களுக்குப் பின் தனியாக ஒரு மங்கலப்பாடல் வரும். அத்தகைய ஒன்று குமரித்துறைவி
ஜெ
***