இலக்கிய மேற்கோள்கள்

நித்யாவின் சொற்கள்

அன்புநிறை ஜெ,

“எழுதுவதற்கான முதன்மை நோக்கம் ஒன்றே, நம்மை வெளிப்படுத்துவது. இங்குள்ள ஒவ்வொரு உயிருக்கும் வெளிப்பாடு கொள்வதே உண்மையான இன்பமாக உள்ளது. ஏனென்றால் இருக்கிறேன் என்பதையே நாம்  வெளிப்பாடு என்கிறோம். நாம் எப்படி வெளிப்படுகிறோமோ அதுவே நம் இருப்பு.” – ஜெ

ஒரு வாக்கியத்தை அல்லது சில வாக்கியங்களை மேற்கோளென குறிப்பிடுகிறோம். நீங்கள் எழுதியவற்றுலிருந்து(நாவல்கள், கதைகள், கட்டுரைகள்) மட்டுமே 400க்கும் மேற்பட்ட மேற்கோள்களை தனியாக சேமித்திருக்கிறேன். அவை அனைத்திலும் உள்ள ஒரு பொது தன்மை ‘கவித்துவம்’. ஒரு கூற்றாக காலவெளியில் அவை நீண்ட காலம் நிற்கக்கூடும். நான் மேற்கோள்கள் வழியாக டால்ஸ்டாய், ஹியூகோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, டாஸ்டாவ்ஸ்க்கி ஆகியோர்களின் படைப்புகளில் நுழைந்தவன்.

நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ படைப்புகளில்(நாவல், கவிதை, கதை) மேற்கோள்களென குறிப்பிடும் படியான வாக்கியங்கள் அரிதாகவே காணப்படுகிறது. இங்கே தனிமனிதனாக ஒருவனின் எண்ணங்கள் வெளிப்படுவதால் பொதுவான ஒன்றை கவித்துவதுடன் கூற முடியவில்லையா? கதைசொல்லி பேர்மனம் கொள்ளுதல் அரிதாகிவிட்டது என நான் கருதுவது பிழையானதா? மனதை மின்தொடுகையென வருடும் மேற்கொள்கள் தற்கால தமிழ் படைப்புகளில் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. கற்பனைக்கே இடமளிக்காத தட்டையான சொற்களை இங்கு மேற்கோள்களாக கூறுகிறார்கள், இணையவெளி எங்கும் அத்தகைய வரிகளே நிறைந்துள்ளது.

நீங்கள் மேற்கோள்களுக்காக ஏதேனும் வரையை அல்லது சட்டகம் வைத்துள்ளீர்களா? இயற்கையை கூர்ந்து அவதானிக்கும் ஒருவராக இருப்பதினால்தான் இத்துணை ஆயிரம் கவிவரிகளை, தத்துவ சொற்றொடர்களை எழுத முடிந்ததா?

(16-05-2021, இன்று கதாநாயகி நாவலிலிருந்து:

மனிதர்கள் இங்கே வாழ்ந்து மறைகிறார்கள். முற்றாக மறைந்துபோக எவருக்குமே விருப்பம் இல்லை. அது இயல்பானதே. அது இயற்கையின் மிகப்பெரிய முரண்பாடு.  ஒவ்வொரு உயிரிலும் இயற்கை தங்கிவாழும் விழைவை நிறைத்து வைத்திருக்கிறது. அதுதான் அந்த உயிரை போராடி வாழச்செய்கிறது. சாவை அஞ்சவைக்கிறது. ஆனால் அதுவே அந்த உயிரை இறுதிமுடிவென்னும் இயற்கையின் நெறியை ஏற்கமுடியாமலாக்குகிறது.

எவ்வண்ணமேனும் எஞ்சிவிட விழைகிறார்கள் மனிதர்கள். எதையாவது செய்து, எதையாவது மிச்சம் வைத்து, எவர் நினைவிலாவது நீடித்து. பிள்ளைகள் அதற்கான இயற்கையான வழிகள். வாழ்ந்து முதிர்ந்த கிழடுகள் கூட பேரப்பிள்ளைகளை வருடி வருடி மகிழ்கின்றன. எஞ்சாமல் போய்விடுவோம் என எண்ணி திடுக்கிடாத மனிதர்கள் எவருமில்லை. 

(பிகு: ‘பேர்மனம்’, மு.தளையசிங்கத்தின் படைப்புக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.)

நன்றி
-ஆனந்த் குரு

அன்புள்ள் ஆனந்த் குரு,

மேற்கோள்கள் என்பவை ஒரு புனைவின் பரப்புக்குள் இருந்து வெளியே எடுத்தாலும் தனித்து நின்று பொருள்படும் வரிகள். இயற்கை, மனித வாழ்க்கை, மானுட உள்ளம் குறித்த அவதானிப்புகளுக்கு மேற்கோளாகும் தன்மை உள்ளது.தரிசனங்கள் வரிகளில் வெளிப்படும்போது மேற்கோளாகின்றன.

பொதுவாகச் செவ்வியல் படைப்புகளிலேயே அவ்வாறு நேரடியாக ஒரு பார்வை ஆசிரியர் கூற்றாகவோ, கதைமாந்தர் கூற்றாகவோ வெளிப்படுகிறது. செவ்வியலின் அழகியலே அதுதான். அதை கற்பிக்கும்தன்மை [didactic] தன்மை என விமர்சனத்தில் குறிப்பிடுகிறார்கள்.

செவ்வியல்தன்மை கொண்ட தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி,செகாவ், ரோமென் ரோலந்து, விக்டர் ஹ்யூகோ, தாமஸ் மன், ஹெர்மன் மெல்வில், நிகாஸ் கஸண்ட்ஸகிஸ், ஹெர்மன் ஹெஸ் போன்றவர்களின் ஆக்கங்களில் இருந்தெல்லாம் அத்தகைய மேற்கோள் வரிகள் ஏராளமாக உள்ளன.

இது ஏன் என்றால்

அ. செவ்வியல் படைப்பு அடிப்படையான விவாதத்தை தன் வடிவத்திற்குள் நிகழ்த்துகிறது

ஆ. தன் மொழியுடல் முழுக்கவே அந்த விவாதம் பரவியிருக்கச் செய்கிறது

இ. விவாதத்திற்குரிய மொழியை அது கைக்கொள்கிறது

என்பதனால்தான். இத்தன்மை இல்லாத செவ்வியல்படைப்பு இல்லை. செவ்வியல் படைப்பின் அடிப்படையே இதுதான் என்று சொல்லும் விமர்சகர்களும் உண்டு.

செவ்வியலுக்கு எதிராக எழுந்தது என்பதனாலேயே நவீனத்துவம் நேரடியான விவாதங்களை தவிர்த்தது. உரையாடல்களை எளிமையாகவும், அன்றாடத்தன்மை கொண்டதாகவும் அமைத்தது. ஆசிரியரின் இடையீடே இல்லாமல் புனைவை அமைத்துக் கொண்டது. மேற்கோள் காட்டும்படி புனைவுக்குள் இருந்து வரிகள் எழுந்துவிடலாகாது என்றே கவனம் கொண்டது. அதை புனைவின் வடிவ ஒருமையை மீறும் செயலாக கண்டது.

ஆனால் அதையும் மீறி நவீனத்துவப் படைப்புகளில் இருந்தே ஏராளமான மேற்கோள்கள் உருவாகி நிலைகொண்டன. உதாரணம், ‘நரகம் என்பது பிறர்தான்’ என்பது போன்றவரிகள். சார்த்ரின் நோ எக்ஸிட் [தமிழில் -மீளமுடியுமா?] என்னும் நாடகத்திலுள்ள வசனம் அது. ஃபாக்னர், சாமுவேல் பெக்கெட், காஃப்கா, காம்யூ போன்றவர்களின் புனைவுகளிலிருந்து பல வரிகள் மேற்கோள்களாக மட்டுமே நினைவுகூரப்படுகின்றன.

இது எப்படி நிகழ்கிறது என்றால் என்னதான் தனிவரியாக நிலைநிற்காதபடி எழுதப்பட்டாலும் அந்த மூலப்புனைவை நினைவுகூர்ந்து அர்த்தம் கொள்ளும்படி ஆனால் அவ்வரியை மேற்கோளாக்கிக் கொள்ளமுடியும் என்பதனால்தான்.

பின்நவீனத்துவம் உருவானபோது அது நவீனத்துவத்திற்கு எதிரான எல்லா பண்புகளையும் முன்வைத்தது. நவீனத்துவம் ஐயத்துடன் விலக்கிய உன்னதமாக்கல் [sublime] கற்பித்தல்தன்மை [didactic] ஆகிய இரண்டும் பின்நவீனத்துவத்தால் முன்வைக்கப்பட்டன. ஆகவே பின்நவீனத்துவப் படைப்புகளில் அந்த நேரடி விவாதத்தன்மையும் மேற்கோளாகும் தன்மையும் இருந்தன.

மிலன் குந்தேரா, உம்பர்ட்டோ எக்கோ, இடாலோ கால்வினோ போன்றவர்களின் ஆக்கங்களில் இருந்து பல வரிகள் மேற்கோளாக ஆகியிருக்கின்றன. அப்படைப்புகளின் கட்டமைப்புக்குள் இருந்து அவை மேலெழுந்து அர்த்தமளிக்கின்றன.

ஆனால் பின்நவீனத்துவப் படைப்புகள் எவையும் இன்னும் மிகப்பரவலாக மக்களால் வாசிக்கப்படவில்லை. அவை கல்வித்துறை வாசிப்பையே பெரும்பாலும் பெற்றுள்ளன. ஆகவே அவற்றிலிருந்து மேற்கோள்கள் குறைவாகவே எழுந்து புழக்கத்தில் உள்ளன.

செவ்வியல் படைப்புகளின் மேற்கோள்களுக்கும் பின்நவீனத்துவ மேற்கோள்களுக்கும் என்ன வேறுபாடு? செவ்வியல் படைப்புகளின் மேற்கோள்கள் ஒட்டுமொத்தப்பார்வையை முன்வைப்பவையாக, பொதுவான விழுமியங்களையோ கருத்துக்களையோ கூறுபவையாக இருக்கும். பின்நவீனத்துவ நூல்களின் மேற்கோள்கள் ஒருபக்கப் பார்வையை முன்வைப்பவையாக இருக்கும்,அதன் மறுபக்கம் அந்நூலில் இருக்கும். அல்லது திரிபுபட்ட பார்வையை கூறுவனவாக இருக்கும்.

ஆனால் செவ்வியல் நாவல்களில் இருந்து எடுக்கும் மேற்கோள்களே கூட உண்மையில் ஒருபக்கப் பார்வையை முன்வைப்பவையாக, மறுபக்கம் நாவலில் கூறப்பட்டவையாகத்தான்  இருக்கும். கரமஸோவ் சகோதரர்களில் இவான் கூறும் ஒரு வரியை அருகிலேயே அல்யோஷா கூறும் இன்னொரு வரி நிகர்செய்திருக்கும்.

அப்படியென்றால் இலக்கியப் படைப்புக்களில் இருந்து காட்டப்படும் மேற்கோள்களை எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?

அ.அவற்றை அந்த ஆசிரியரின் கருத்துக்களாக கொள்ளக் கூடாது. அவை அந்த இலக்கிய ஆக்கத்திலுள்ளவை மட்டுமே. அந்த இலக்கியப்படைப்பு உருவாக்கும் சொற்களனுக்குள் மட்டும் நிலைகொள்பவை

ஆ. அவற்றை அறுதி உண்மைகளாகக் கொள்ளக்கூடாது. சிந்தனையைத் தூண்டும் வரிகளாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். அவை அளிக்கும் சீண்டல், தொடக்கம் மட்டுமே முக்கியமானது

இ. அவற்றை அந்தப் படைப்பின் சுவையை, இயல்பை, பேசுபொருளைக் காட்டும் ‘சாம்பிள்’ துளிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

ஈ. அந்த ஆசிரியரின் நடை, அழகியல் ஆகியவற்றைக் காட்டும் உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம்

 

பொதுவாகச் செவ்வியல் நாவல்களில் இருந்தே மேற்கோள்கள் மிகுதியாக உள்ளன. நவீனத்துவ, பின்நவீனத்துவ நாவல்களில் எவை புகழ்பெற்றுள்ளனவோ அவற்றிலிருந்தே மேற்கோள்கள் உருவாகியிருக்கின்றன. ஏனென்றால் மேற்கோள்களை அறிஞர்கள், விமர்சகர்கள் உருவாக்குவதில்லை. வாசகர்கள் உருவாக்குகிறார்கள். அவர்களே அவற்றை பரப்பி நிலைநிறுத்துகிறார்கள்.

மேற்கோள்கள் உருவாகவேண்டுமென்றால் ஒரு படைப்பு அதிகமானவர்களால் வாசிக்கப்படவேண்டும், அந்த வாசகர்கள் கூர்ந்த இலக்கிய வாசகர்களாக இருக்கவேண்டும், அவர்களை அப்படைப்பு பாதிக்கவேண்டும், அதைப்பற்றி அவர்கள் பேசவேண்டும், அதைப்பற்றிப் பேசும்பொருட்டு அதிலுள்ள வரிகளை அவர்கள் மேற்கோள் காட்டவேண்டும், அந்த மேற்கோள்கள் மேலும் பலருக்கு பிடித்தமானதாக ஆகி மேற்கோள்களாகவே பலரால் கூறப்படவேண்டும், அவை ஒரு தலைமுறைக்குமேல் கடந்துசெல்லவேண்டும்.

செவ்வியல் படைப்புகளுக்கே அவ்வாய்ப்பு அதிகம். அதிகம் பேசப்பட்ட படைப்புகளுக்கும் அவ்வாய்ப்புண்டு. கணிசமான நவீனத்துவ, பின்நவீனத்துவ நாவல்கள் குறைந்த வட்டத்திற்குள் வாசிக்கப்படுபவை. அவற்றை கல்வித்துறையிலும் இலக்கிய ஆர்வலர்வட்டத்திலும் மட்டுமே வாசிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்பால் அவை வாசிக்கப்படுவதே இல்லை.ஆகவே அவற்றிலிருந்து மேற்கோள்கள் உருவாவதில்லை.

மேற்கோள்கள் எப்போதுமே கருத்து ஆக இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு படைப்பு கூர்ந்து வாசிக்கப்படுகையில் எல்லா வரிகளுமே மேற்கோளாகும் வாய்ப்பு கொண்டவையாக உள்ளன. “பேசுபவர் பேச்சில் ஆழ்ந்த உறுதியுடன் அதை முழுக்க முழுக்க நம்பிப் பேசினால் நம்மால் அச்சொற்களில் இருந்து கவனத்தை விலக்க முடிவதில்லை” என்ற வரி இரவு நாவலில் இருந்து மேற்கோளாக சமூக ஊடகங்களில் சுற்றிவந்தது. இது ஓர்  அவதானிப்பு மட்டுமே. ஆனாலும் அதிலுள்ள கூர்மை, அது வாசகனில் அளிக்கும் வியப்பும் ஏற்பும் காரணமாக அது மேற்கோளாகிறது. அது அப்படைப்பின் மீதான வாசிப்புக்கு மட்டுமே சான்று.

ஜெ

முந்தைய கட்டுரைமாடத்தி – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘சொல்வளர்காடு’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்