சோர்பாவும் நித்யாவும்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

சோர்பா என்னும் கிரேக்கன் படித்து முடித்துவிட்டு, உங்கள் தளத்தில் அந்த புத்தகத்தை பற்றி வந்துள்ள கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு இடத்தில, நித்யாவிற்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் சோர்பா எனவும், அவரின் மாணவன் ஒருவருக்கு சோர்பா என்று பெயர் வைத்ததாகவும் சொல்லி இருந்தீர்கள்.சிறிது விந்தையாக இருந்தது. சோர்பா ஒரு ஹெடோனிஸ்ட். நித்யாவிற்கு சோர்பா மேல் ஏன் ஓர் ஈர்ப்பு இருந்தது என்று யோசித்தபோது ஒருவாறாக புரிந்து கொள்ள முடிந்தது.. நித்யா என்றுமே வறட்டு வேதாந்தத்தை நிராகரித்தவர்.. நீங்கள் சோர்பா என்னும் கிரேக்கன் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று சொல்லியிருந்தீர்கள். இருந்தாலும் கேட்க வேண்டும் என்று தோன்றியது.

என்றும் அன்புடன்

தத்தா பிரசாத்

 

அன்புள்ள தத்தா,

நித்யா ஹிப்பி இயக்கத்துடன் நெருக்கம் கொண்டிருந்தவர். நடராஜகுருவுக்கும் ஹிப்பி இயக்கத்திடன் அணுக்கம் உண்டு. அவர்கள் ஹிப்பிகளை வகுக்கப்பட்ட நெறிகளில் இருந்து மேலே செல்பவர்கள், படைப்பூக்கம் கொண்டவர்கள் என்று நம்பினார்கள். அவர்களின் தன்வரலாறுகளில் ஹிப்பிகளைப் பற்றிய அவர்களின் எண்ணங்கள் உள்ளன.

ஹிப்பிகளின் நூல் என்ற அளவிலேயே ஒரு காலத்தில் சோர்பா தி கிரீக் வாசிக்கப்பட்டது. ஹெடோனிஸம் என்பது ஒரு தத்துவச் சொல். அதைக்கொண்டு சோர்பாவை அறுதியாக வகுத்துவிட முடியாது. சோர்பா ஒரு கட்டற்ற வாழ்க்கைப் பயணி, அவ்வளவுதான். அந்தச் சுதந்திரம் ஆன்மிகமானது. அவன் எய்தியதென்ன என்பது இரண்டாம் கேள்வி. அவ்வழி ஏற்கத்தக்கதா என்பது மூன்றாம் கேள்வி. முதல் கேள்வி அவன் சுதந்திரமானவனா என்பது. சுதந்திரமே ஆன்மிகப்பயணத்தின் முதல் நிபந்தனை.

அவ்வகையில் சோர்பா நித்யாவுக்கு பிடித்தமான கதாபாத்திரம்

ஜெ

zor
முந்தைய கட்டுரைகாந்தி: காலத்தை முந்திய கனவு
அடுத்த கட்டுரைஅறிவின்பாதை, கனவின் பாதை- கடிதம்