அறிவின்பாதை, கனவின் பாதை- கடிதம்

கனவெழுக!

அன்புள்ள ஜெ

கனவெழுக என்ற கட்டுரையை வாசித்தேன். அதில் வீரபத்ரன் என்னும் எழுத்தாளருக்கு அவருடைய கலை என்பது அறிவார்ந்ததாக தத்துவம் சார்ந்ததாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை எப்படி முடிவுசெய்கிறீர்கள்? அதைவிட பொதுவாக இங்கே இலக்கியம் பற்றிப் பேசுபவர்கள் எல்லாமே கலையை இன்னொசெண்ட் ஆக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். தத்துவச்சுமை இல்லாமலிருக்கும் எழுத்து என்றெல்லாம் சில எழுத்துக்களைக் கொண்டாடுகிறீர்கள். ஆகவே கேட்டேன்.

சம்பத்குமார்

***

அன்புள்ள சம்பத்குமார்,

எழுத்தாளன் எழுத்தினூடாகச் சென்றடையவேண்டியது பிரபஞ்சத்தின், இயற்கையின், மானுட வாழ்க்கையின் உண்மையை. அதை எவ்வகையில் சென்றடைந்தாலும் அது இலக்கியமே. ஆகவே அறிவார்ந்த பேரிலக்கியங்கள் உள்ளன. எளிமையான பேரிலக்கியங்களும் உள்ளன.

ஆனால் காப்பியங்கள் அறிவார்ந்தவையாக மட்டுமே இருக்க முடியும். தத்துவ தேடல் இல்லாத காப்பியம் இல்லை. காப்பியத்தின் தடம்தேடும் நாவலும் அவ்வாறே. ஆழ்ந்த தத்துவ உசாவல் இல்லாத பெருநாவல் இல்லை.

ஒருவருக்கு வாழ்க்கையனுபவங்களும் அதன் கொந்தளிப்பும் கண்டடைதலும் இருந்தால் அவர் வாழ்க்கையைக் கொண்டே இலக்கியம் படைக்கக் கூடும். ஒருவர் தன் கள்ளமின்மையால் இயற்கையுடன் இயைந்திருப்பவராக இருந்தால் அதுவே இலக்கியமாக ஆகக்கூடும்.

அவ்வியல்புகளற்ற ஒருவர் நூல்களினூடாக, அறிவுத்தொகையினூடாக அதேபோல மெய்மையை நோக்கிச் செல்லமுடியும். அதை இலக்கியமாக ஆக்கமுடியும். நான் குறிப்பிட்ட வீரபத்ரன் வெளியுலக அனுபவங்களுக்கு அவருக்கு இருக்கும் தடையைப் பற்றிச் சொன்னார். ஆகவே அவருடையது அறிவுத்தொகையினூடாகச் செல்லும் பயணமாகவும் இருக்கலாம் என்றேன்.

இலக்கியத்திற்குத் தேவை அனுபவம். அந்த அனுபவம் நேரடி வாழ்வனுபவமாக இருக்கலாம். புனைவுகளினூடாகப் பெறும் வாழ்வனுபவமாகவும் இருக்கமால். வாழ்வனுபவமா வெறும் தெரிந்துகொள்ளலா என்பதுதான் முக்கியம். உணர்வுபூர்வ அறிதலா வெறும் தர்க்கபூர்வ அறிதலா என்பதே கேள்வி.

மார்க்யூஸிடம் இருப்பது ஒருவகை உலகம். போர்ஹெஸிடம் இருப்பது இன்னொன்று. மார்க்யூஸிடம் கள்ளமற்ற சிறுவனின் வழி உள்ளது. போர்ஹெஸ் வாழ்ந்ததே நூலகத்தில்தான்

ஜெ

முந்தைய கட்டுரைசோர்பாவும் நித்யாவும்- கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு ஒரு நுழைவாயில்