ஆலயம் எவருடையது?

[திரிபுவனம் கம்பஹரேஸ்வரர் ஆலயம்- பழைய படங்கள்]

அன்புள்ள திரு ஜெயமோகன்,

வணக்கம். கோயில்களையும் அதன் சொத்துக்களையும் அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் நிர்வகிப்பதிலிருந்து விலக வேண்டும் என்றும் அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு குரல் சன்னமாக எழுந்து இன்று ஜக்கி வாசுதேவ் வழியாக பெரிய அளவில் பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.

இந்து மதம் போன்ற நிறுவனமதமல்லாத தொகை மதத்தில் இவர்கள் குறிப்பிடும் “பக்தர்கள்” யார்? என்கிற கேள்வி அந்தரத்தில் நிற்கிறது. நீங்கள் பல முறை பேராலயங்கள் அன்றைய அரசர்கள் மக்களிடம் பெற்ற வரிவருவாயிலிருந்து கொடையளித்து எழுப்பப்பட்டவை என்பதால் அவை சமூகத்தின் சொத்து என கூறியிருக்கிறீர்கள் இந்த நிலையில் ஜக்கி முன்னெடுக்கும் இந்தக்கோரிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அறிய விழைகிறேன்.

நன்றி.

அன்புடன்,

இரா.முருகானந்தம்.

https://madrasreview.com/politics/jaggi-vasudev-the-corporate-preacher-who-wants-to-ruin-kamarajs-dream/

அன்புள்ள முருகானந்தம்,

இந்து ஆலயங்கள் பராமரிப்பு பற்றி குறைந்தது இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருபவன் நான். இந்தத் தளத்திலேயே எப்படிப் பார்த்தாலும் ஐம்பது அறுபது கட்டுரைகள் அவற்றைப் பற்றி எழுதப் பட்டிருக்கும்.

முதலில் தொடங்கவேண்டியது, இந்து ஆலயங்களின் உரிமை எவருக்குரியது என்பதுதான்.  ‘இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டு இடங்களா? வரலாற்றுச் சின்னங்களா?’ என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் இதில் முன்னகர முடியாது.

இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல. அவை வரலாற்றுச் சின்னங்கள், பண்பாட்டு மையங்கள். வழிபாட்டு இடங்கள் என்ற வரையறைக்குள் வைக்கும் போது மட்டும்தான் இந்துக்கள் அவற்றில் முழு உரிமையைப் பெறுகிறார்கள். அவை வரலாற்றுச் சின்னங்கள் என்றால், பண்பாட்டு மையங்கள் என்றால் இந்திய மக்கள் அனைவருக்கும் அதில் உரிமை உள்ளது. பொறுப்பும் உள்ளது. அதற்கப்பால் மானுடகுலத்திற்கே அதில் உரிமையும் பொறுப்பும் உள்ளது.

இன்று தாரசுரம் உட்பட இந்தியாவின் பிரம்மாண்டமான பேராலயங்கள் பல பேணப்படுவதும், மீட்டுக் கட்டப்படுவதும் யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புக்களின் வழியாக உலகமக்களின் கொடையால் என்பதை நாம் மறக்க கூடாது. அவை இந்துக்கள் ‘சாமிகும்பிடும்’ இடங்கள் என்பதனால் அந்நிதி வரவில்லை. அவை மானுடப்பண்பாட்டின் மகத்தான அடையாளங்கள் என்பதனால்தான் நிதி வருகிறது.

தங்களுக்கு வழிபாட்டுக்குத் தேவையில்லை என்பதற்காக, தங்கள் மதம் மறுக்கிறது என்பதற்காக பாமியான் சிலைகளை பீரங்கி வைத்துத் தகர்த்த தாலிபானின் செயலை உலகம் ஏன் அதிர்ச்சியுடனும் வெறுப்புடனும் பார்த்ததென்றால் அவை அந்நாட்டுக்குரியவை அல்ல, அம்மக்களுக்கு உரியவை அல்ல, மானுடகுலத்துக்குரியவை என்பதனால்தான். அது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாபெரும் ஆலயத்திற்கும் பொருந்துவதே ஆகும். அந்தப் பார்வை மத அரசியல் செய்பவர்களிடம், மதவாதிகளிடம் இல்லை.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் வழிபடுவதற்காக மட்டும் உரியதல்ல. அப்படியென்றால் ஆகம முறைப்படி அங்குள்ள இறைச்சான்னியத்தை வெளியே எடுத்து ஒரு புது ஆலயத்தைக் கட்டி அங்கு வழிபடலாம். அதில் எந்த பிழையும் இல்லை. அது தமிழர்களின் ஈராயிரம் ஆண்டுப் பண்பாட்டின் ஒரு மையம். இந்திய வரலாற்றின் ஒரு அடையாளம். உலகின் கலைச் சொத்து. ஆகவேதான் அது மாற்றமின்றி அழிவின்றி பேணப்படவேண்டுமென்று சொல்கிறோம். அது சிதைவது மானுடத்துக்கு இழப்பு என்று சொல்கிறோம்.

ஆலயங்கள் தங்கள் மதச்சொத்து என்றும், அவற்றைப் பேண வேண்டும் என்றும் சொல்லும் பக்தர்கள் ஆலயங்களை தங்கள் வழிபாட்டின் வசதியின் பொருட்டு இடித்து அழிப்பதையும் உருமாற்றுவதையும் சிதைப்பதையும் நாம் காண்கிறோம். தமிழகமெங்கும் இந்த கண்மூடித்தனமான ‘நுகர்வு’ நடந்துகொண்டிருக்கிறது. ஆலயங்கள் அழிவதற்கு முதன்மைக் காரணமாக அமைவது இதுதான்.

தெளிவான உதாரணம் சொல்கிறேன். திருபுவனத்தில், கம்பஹரேஸ்வரரின் பிரம்மாண்டமான கலையழகு மிக்க ஆலயத்தில்  எந்தக் கலைநயமும் இல்லாமல், எந்த சிற்ப ஒத்திசைவும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் கான்க்ரீட் மண்டபங்களை நீங்கள் பார்க்கலாம். காரணம், அங்குள்ள சரபேஸ்வரர் ஒரு பரிகார தேவதையாக திடீரென்று புகழ்பெற்றார். பல்லாயிரம் வழிபாட்டாளர்கள் சரபேஸ்வரரை வழிபட அங்கு வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கவும், அவர்களுக்கு ஓய்வெடுக்கவுமான இடங்கள் கட்டித்தள்ளப் படுகின்றன.

கான்க்ரீட் கட்டிட அமைப்புகள் ஆலயத்தின் கல்கட்டுமானத்துடன் இணைத்துக் கட்டப்படும்போது உண்மையில் ஒரு நோய்க்கட்டி போல ஆலயத்தை அழிக்கின்றன. கான்க்ரீட் அதிகபட்சம் ஐம்பது அறுபது ஆண்டுகள் நீடிக்கக்கூடியது.  அது கம்பியால் கட்டப்பட்ட ஒற்றைக் கட்டிட அமைப்பு ஆகையால் காலப்போக்கில் மண்ணில் இறங்கிச் சரியும்.

மாறாக கல்கட்டுமானம் கற்களை எடுத்து அடுக்கி வைத்து கட்டப்பட்டது. கல்கட்டுமானத்தின் எடையே அதை ஒன்றாக நிறுத்தியிருக்கிறது. மண்ணில் அழுந்தினாலும் சற்று சரிந்தாலும் அது தன்னை தகவமைத்துக்கொண்டு நிலைநிற்கும்.கான்கிரீட் கட்டிடம் கல்லால் ஆன ஆலயத்துடன் சேர்த்துக் கட்டப்படும்போது கல்லையும் இழுத்து சரிக்கும்.

ஐயமுள்ளவர்கள் நேரில் சென்று கம்பஹரேஸ்வரர் ஆலயத்தைப் பார்க்கலாம். ஆலயத்தின் கல்அமைப்பு கான்கிரீட் மண்டபங்களால் இழுக்கப்பட்டு மொத்த ஆலயத்திலும் கல்தூண்களுக்கும் கூரைக்கும் இடையே நீண்ட விரிசல்கள் விழுந்திருப்பதை கண்கூடாகவே பார்க்கமுடியும்.

ஆலய அழிவு என்பது அரசாலோ எதிரிகளாலோ மட்டும் நடத்தப்படுவதல்ல. இன்றைய பக்தர்களாலும் நடத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் திருப்பணி என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெறும் ஆலய அழிவுக்கு நிகராக எந்த அழிவையும் பிறர் எவரும் நிகழ்த்தியதில்லை.

அவற்றுக்கெதிராக ஒரு சிறு குரலைக் கூட நாம் இன்று எழுப்ப முடியவில்லை. எழுப்பினால் ஆலயத்துக்குத் தாங்கள் மட்டுமே உரிமையாளர்கள் என்ற தோரணையில் பக்தர்கள் அதற்கு பதில் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஆலய வரலாறோ, அதன் சிற்பக்கலையோ, அதன் பண்பாட்டு முக்கியத்துவமோ தெரியாது. அக்கறையும் இருப்பதில்லை. அவர்களே தேவைக்கேற்ப உருவாக்கிக்கொண்ட சில சமகாலத் தொன்மங்களே இருக்கும். அவர்களுடையது வெறும் உலகியல் பக்தி, காரியபக்தி மட்டுமே

அவர்களிடம் நீங்கள் வழிபடும் ஆலயம் அவர்களின் ‘திருப்பணிகள்’ மூலம் அழிகிறதென்றால், ‘வழிபடுவதற்குத்தான் ஆலயம் இருக்கிறது, இடிந்தால் இன்னொன்று கட்டிக்கொள்வோம்’ என்ற பதிலை எளிதாகச் சொல்கிறார்கள். சென்ற காலங்களில் நான் ஆலய அழிவு பற்றி எழுதியபோதெல்லாம் எனக்கு அப்படிப்பட்ட பதில்களே வந்தன.

தமிழகம் எங்கும் இதே நிலைதான். பேரூர் ஆலயத்தில் முகப்பில் ஒரு கான்க்ரீட் போர்டிகோ கட்டப்பட்டிருக்கிறது. எதற்கென்று கேட்டால் காரில் வருபவர்கள் மழையில் நனையாமல் இறங்கி ஆலயத்திற்குள் செல்வதற்காகவாம். ஆலயங்களுக்குள் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன.  ஆலயங்களுக்குள் இரும்பு தடுப்புக் கம்பிகள்  அமைக்கப்படுகின்றன. ஆலயத்திற்குள் துளைகள் இடப்பட்டு ஏர்கூலர் வசதிகள் செய்யப்படுகின்றன. சிற்பங்களையே துளைத்து கம்பிகளை நடுகிறார்கள். இவையனைத்தும் உருவாக்கும் ஆலய அழிவுதான் இன்று மிகக் கவலை தரக்கூடியது.

மேலதிகமாக ஒன்றை சொல்லவேண்டுமென்றால் சீரமைப்பு என்ற பெயரிலே மணல் வீச்சு முறைப்படி ஆலயங்களில் சிற்பங்களைத் ’தூய்மைப்’ படுத்துவத்தைச் சொல்லலாம். ஆலயச் சிற்பங்களின் அத்தனை அழகுகளும் செதுக்கு நுட்பங்களும் மழுங்கி மொத்தையாக ஆகி விடுகின்றன. சமீபத்தில் திருவட்டாறு ஆலயத்தில் செய்த மணல் வீச்சு முறைப்படி அனைத்து சிற்பங்களின் மூக்குகளும் மழுங்கிவிட்டன.

தமிழகம் முழுக்க ஆலயங்களுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆலயத்திலும் மணல் வீச்சு முறைப்படி சிற்பங்கள் மழுங்கடிக்கப் படுகின்றன. அதற்கெதிராக நீதிமன்றம் செல்லும் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் தர்மகர்த்தாக்கள், உள்ளூர் பக்தர்கள் ஆலயம் மணல் வீச்சு முறைப்படி தூய்மைசெய்யப்பட்டு பளிச்சென்றிருப்பதை விரும்புகிறார்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, அரிய சிற்பங்களுக்கு மேல் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. அகோரவீரபத்ரனுக்கு பட்டாபட்டி அண்டர்வேர் அணிவிக்கப்படுகிறது. எண்ணைச் சாயங்கள் கற்சிற்பங்களின் மேல் பூசப்படுவதென்பது அவற்றை அழிப்பதுதான். சில ஆண்டுகளில் அவ்வண்ணங்கள் மங்கி உதிரும்போது தேய்த்து அவற்றை எடுக்கவேண்டியிருக்கும். இரண்டுமுறை தேய்த்த பிறகு அங்கிருப்பது சிற்பமல்ல. இவற்றை எந்த பக்தருடைய கவனத்துக்கும் கொண்டு செல்ல முடியவில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி இந்தியா டுடேயின் ஆசிரியராக இருந்த வாஸந்தி அவர்களிடம் நான் முறையிட்டு இதை மக்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென்று கேட்டேன். அவர் பெருமுயற்சி எடுத்து தமிழகம் முழுக்க அழிக்கப்படும் ஆலயங்களின் புகைப்படங்களை சேகரித்து ஒரு தனி இணைப்பு மலராக வெளியிட்டார்.

அதன் அட்டையிலேயே பதினாறு கைகளோடு நின்றிருக்கும் பத்திரகாளி ஒரு தையல்கடைக்காரரின் கடைக்குள் நிற்கும் ஒரு சிற்பம் இருக்கும். பதினாறு கைகளிலும் அவர் தைத்த துணிகளைத் தொங்கவிட்டிருப்பார் தையல்காரர். அந்த இதழ் வெளிவந்த பிறகு வாஸந்தி எனக்கு தொலைபேசியில் சொன்னார், இந்தியா டுடேயில் வழக்கமாக எந்த ஒரு கட்டுரை வெளியிட்டாலும் குறைந்தது நூறு கடிதங்கள் வரும். சிற்பங்களின் அழிவைப் பற்றி ஐந்து தபால் கார்டுகள் கூட வரவில்லை. இதுதான் தமிழகத்துடைய அக்கறை நிலை.

இந்த  ‘இந்து பக்தர்களிடம்’ , இவர்களைப் பிரதிநித்துவப் படுத்தும் அறங்காவலர்களிடம், அரசியல் குழுக்களிடம், மொத்த ஆலயங்களையும் கொடுப்பதென்பது ஆலயங்களை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளுவதற்கு சமம்தான். ஒருபோதும் அத்தகைய ஒரு செயலுக்கு நான் என்னுடைய ஒப்புதலை கொடுக்கமாட்டேன். அதற்கெதிராக போராடவும் தயங்கமாட்டேன்

ஆலயங்களை அரசு அடிமைப்படுத்தியிருக்கிறது என்று ஓர் இயக்கம் இன்று தொடங்கி இருக்கிறது. அவர்கள் உண்மையில்  ஆலயங்களின் சிக்கல் என்ன என்றே உணர்ந்திருக்கிறார்களா என்பது ஐயத்திற்குரியது.நடைமுறையை அறிந்து, உரிய பண்பாட்டு விழிப்புடன், நிபுணர்களின் ஆலோசனைகளுடன் செய்யவேண்டியவற்றை எளிய கோஷங்களாக ஆக்குகிறார்கள்.

ஆலயங்கள் பேணப்படுவது தமிழகத்தைப் போன்ற ஒரு நிலத்தில் மிகச் சிக்கலான ஒரு பணி. ஏனென்றால் இங்கு பல்லாயிரக்கணக்கில் ஆலயங்கள் உள்ளன. அனைத்தையும் பேணுவதென்பது பெரும் நிதிச்சுமை கொண்டது. ஆனால் அதை அரசு செய்தே ஆகவேண்டும்.

ஆலய ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை அளித்தாகவேண்டும். ஆலயப் பராமரிப்பை முறைப்படுத்த வேண்டும்.ஆனால் இங்கே ஆலயங்களுக்கு அரசு பணம் செலவிட்டால் ‘மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது’ என்று கூச்சலிடும் ஒரு கூட்டம் உள்ளது.

மன்னர்களாலும் புரவலர்களாலும் ஆலயங்கள் பேணப்படுவதற்காக அளிக்கப்பட்ட  பெரும்செல்வம் இன்று இல்லை. அரசர்களும் பிறரும் மானியமாக அளித்த ஆலயநிலங்கள் உழுவோருக்கு நிலம் சொந்தம் என்னும் சட்டம் வந்தபோதே பெரும்பாலும் கைவிட்டுச் சென்றுவிட்டன. அதைச் செய்தது அரசு. அதற்கு பதிலாகவே ஆலயங்களை அரசு தன்னிடம் எடுத்துக்கொண்டது. ஆகவே அரசுக்கு ஆலயங்களை தன் பணத்தைச் செலவிட்டு பேணியாகவேண்டிய அறக்கடமை உண்டு.

ஆலயங்கள் பண்பாட்டின் அடையாளங்கள். ஆகவே ஆலயங்களை அரசு நிதி ஒதுக்கி பேணியே ஆகவேண்டும். அது மக்களின் வரிப்பணத்தை மதத்திற்குச் செலவிடுவது அல்ல. ஒரு பண்பாடு தன் தனியடையாளங்களை பேணிக்கொள்வதுதான்.

ஆலயத்தின் சொத்துக்களை தனியார் சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்கு உரிய வாடகையையும் குத்தகையையும் அளித்தாலே ஆலயங்களைப் பேண முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை. அவர்கள் யாரும் ஆலயங்களின் எதிரிகள் அல்ல, பெரும்பாலும் ஆலயபக்தர்களேதான். அவர்களுக்கு அதில் எந்தக் குற்றவுணர்வும் இல்லை.

ஆலயங்களை அரசு  சுரண்டுவதும் உண்மை.  ஆலயங்கள் அதிகாரிகளாலும் அரசால் நியமிக்கப்படும் அரசியல்வாதிகளான அறங்காவலர்களாலும் தங்கள் வசதிக்கேற்ப சுரண்டப்படுவதையும், அழிக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். அதற்கெதிராகக் குரல்கொடுக்கவேண்டும். ஆலயங்கள் முறைப்படி பேணப்படவேண்டும் என்று போராட வேண்டும்

ஆலயங்களில் இருந்து அரசு வெளியேறினால் ஆலயங்களின் பொறுப்பு யாருக்கு வரும்? திருப்பணி என்ற பெயரில் ஆலயங்களை சீரழிக்கும் இந்த மாபெரும் பக்த கும்பல்களிடம் ஆலயங்கள் செல்ல வேண்டுமென்றால் அதைவிட அரசிடமே இருக்கலாம். அரசுக்குக் குறைந்தபட்சம் நீதிமன்றத்துக்குக் கட்டுப்படவேண்டிய கட்டாயமாவது உள்ளது.அதை குடிகள் எவரும் கேள்விகேட்கலாம்.

ஆலயங்கள் வெறும் வழிபாட்டுமையங்கள் அல்ல, பண்பாட்டுச் செல்வங்கள் எனும்போது அனைவருக்கும் பொதுவான பேராலயங்களை எந்த அடிப்படையில் எவரிடம் விட முடியும்? அதற்கான ஜனநாயக அமைப்பு எங்குள்ளது இங்கு? அப்படி ஒரு அமைப்பை உருவாக்குவது, அதில் ஆண்டுதோறும் அல்லது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்களை செய்து முறையான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது எல்லாம் எளிய செயலா என்ன?

அவ்வாறு ஒரு ஜனநாயக அமைப்பு உருவானால் கூட இன்றைய அரசியல் கட்சிகளும் பெருமுதலாளிகளும் மதத் தலைவர்களும் அந்த அமைப்பைக் கைப்பற்றிக்கொண்டு அதைத் தங்கள் அதிகாரமாக்கிக் கொள்ளமாட்டார்கள் என்று யார் கண்டது? இன்று கூட்டுறவுத்துறை எப்படி இருக்கிறது? அதில் எவர் கோலோச்சுகிறார்கள்?

பிரச்சினை இருப்பது ஆலயங்களைப் பற்றிய மனநிலையில். அவை நம் பண்பாட்டு செல்வங்கள், அவை அழியாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற எண்ணம் நமக்கிருக்க வேண்டும். அது நமக்கு இல்லை என்பதே முதன்மைச் சிக்கல். ஆலயங்கள் பேணப்படவேண்டும் என்ற எண்ணம் முதலில் அவற்றை பயன்படுத்தும் பக்தர்களுக்கு வரவேண்டும். அவை நம் பண்பாட்டுச்செல்வங்கள் என்ற எண்ணம் இந்துமதப் பக்தர்கள் அல்லாதவர்களுக்கும் வரவேண்டும்

தமிழக ஆலயங்களுடன் மத்தியத் தொல்லியல்துறை நிர்வாகத்திலுள்ள ஆலயங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். மத்திய நிர்வாகத்தில் இருக்கும் ஆலயங்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக பேணப்படுகின்றன. அவற்றில் பழுதுபார்ப்போ, திருப்பணியோ நடக்கும் போது ஏற்கனவே அங்கு இருக்கும் அதே சிற்ப அமைப்பில்தான் செய்யப்படுகிறது. அதே கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

[மணற்பாறைக் கல்லால் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தில் கருங்கல் ஊடாக பயன்படுத்தப்பட்டாலே அந்த ஆலயம் சிதைவடைய ஆரம்பிக்கும். திருப்பணிகள் ஆலயம் கட்டப்பட்ட அதே கல்லில் செய்வதை நீங்கள் சாஞ்சியில் இருந்து தாராசுரம் வரைக்கும் பார்க்க முடியும்]

மத்தியத் தொல்லியல்துறை இங்கே வெற்றிகரமாகச் செய்து வருவதை அப்படியே மாநிலத் தொல்லியல்துறையும் செய்தால் போதும். நாத்திகர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பெரும்பாலும் ஆட்சிசெய்யும் கேரளத்திலுள்ள அறநிலையத்துறை ஆலயங்களை பேணும் தரத்திலாவது நம் ஆலயங்கள் பேணப்பட்டால் போதும். அவர்கள் கொண்டுள்ள நெறிகள், வழிமுறைகளை அப்படியே கடைப்பிடித்தால் போதும்.

அரசு ஆலயங்களை விட்டு வெளியேறினால் வெறும் சுயநலமிகளின் கைகளுக்குத்தான் ஆலயங்கள் செல்லும் என்பது இதுவரைக்குமான அனைத்து அனுபவங்களைக் கொண்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வ்வாறு கைமாற்றம் செய்யப்பட்டால் வெறும் வழிபாட்டிடங்களாக மட்டுமே சுருங்கிவிடக் கூடும். வழிபாட்டின் பொருட்டு அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிடக்கூடும். ஏற்கனவே இந்தியாவின் புகழ்பெற்ற பேராலயங்களுக்கு எல்லாம் அந்தக் கதி இருக்கிறது. பூரியோ, உடுப்பியோ, இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்றால் அவை மூர்க்கமாக பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு சீரழிக்கப்படுவதை நாம் காணலாம். அவற்றை ஒரு பூசகக் கும்பல் கைப்பற்றி வைத்து கொள்ளைமையமாக ஆக்கியிருப்பதைக் கண்டு கொதித்துப்போவோம்.

செய்யவேண்டியவை என்ன? அரசை வெளியேற்றிவிட்டு வேறுசிலரிடம் ஆலயங்களை ஒப்படைப்பதெல்லாம் நடைபெறப்போவதில்லை. நடைபெறவும்கூடாது. ஆனால் ஆலய நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கலாம். அதில் அரசுத்தரப்புடன் ஆன்மீகத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அறிவுஜீவிகள், சிற்பிகள் ஆகியோரும் இடம்பெறலாம். அந்தக் கண்காணிப்புக்குழு ஓர் ஆணையம் போலச் செயல்படலாம். அதற்கு சட்டபூர்வமான அதிகாரங்கள் வழங்கப்படலாம்.அத்தகைய குழுவுக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகத்தில் ஆலயங்கள் இருப்பதுதான் சரியானது.

இன்று நம் ஆலயங்களைப் பற்றி விழிப்புணர்வு உருவாக வேண்டியிருக்கிறது. நமது ஆலயங்கள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் வந்து பார்த்து செல்வதற்கானவை அல்ல. அவற்றின் கட்டமைப்போ அவற்றின் பொருட்களோ அதற்குரியவை அல்ல. பல ஆலயங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அவற்றை ஒருநாளைக்கு பல்லாயிரம் பேர் வந்து பார்த்து செல்வது என்பது அந்த ஆலயங்களை விரைவிலேயே அழிவுக்குக் கொண்டு செல்வது.  திருவிழாக்களின்போது பல்லாயிரக்கணக்கானவர்களை ஆலயத்துக்குள் அனுமதிப்பது ஆலயத்தை அழித்து மகிழ்வதேதான்.

முதன்மையாகச் செய்ய வேண்டியது தமிழகத்தின் புகழ்பெற்ற ஆலயங்களில் வருகையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். உதாரணமாக மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் நாளொன்றுக்கு பத்தாயிரம் பேர் வருகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம். அக்கூட்டத்தை கட்டுப்படுத்த ஊழியர்கள் இல்லை. ஆகவே கம்பித்தடுப்புகளால் நிறைந்துள்ளது ஆலயம். ஆலயத்தில் பெரும்பகுதி நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான சிற்பங்களை இன்று பார்க்கவே முடியாது.

இன்று இணையம் இருக்கிறது, ஒருநாளைக்கு காலையில் ஐந்நூறு, மாலையில் ஐந்நூறு என்று ஆயிரம் பேரை மட்டும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அனுமதிக்கலாம். அவர்களிடம் ஆயிரமோ இரண்டாயிரம கட்டணம் வாங்கலாம். ஒரு சினிமாவுக்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்பவர்கள் மெய்யான பக்தர்கள் என்றால் ஆலயத்திற்கும் செலவழிப்பார்கள்.

தமிழகத்தில் பல ஆயிரம் ஆலயங்கள் இருக்கின்றன. சில ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் குழுமும்போது சில ஆலயங்களில் ஆண்டுமுழுக்க எவருமே வருவதில்லை. அனைத்து ஆலயங்களுக்கும் இணையாக பக்தர்களை செல்ல வைப்பதற்கு, ஒவ்வொரு ஆலயத்திலும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதே சிறந்த வழி.

அதற்கான ஒரு இணையதளத்தை உருவாக்கலாம். அதில் எல்லா ஆலயங்களுக்கான தகவல்களும் இடம்பெறச் செய்யலாம். அந்தச் செய்தியின் அடிப்படையில் எல்லா ஆலயங்களுக்கும் மக்கள் செல்ல ஆரம்பித்தாலே ஒட்டுமொத்தமாக ஆலயங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கூடுமே ஒழிய குறையாது. ஆலய வருமானமும் பெருகும். ஒரே ஆலயத்தில் மிதமிஞ்சிய நெரிசல் ஏற்படுவதும் அழிவு ஏற்படுவதும் குறையும்.

அவ்வாறு செய்தால் ஆகமங்களுக்கும் சிற்ப முறைகளுக்கும் விரோதமாக ஆலயங்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் கம்பித்தடுப்புகள், மாபெரும் உண்டியல்கள், சற்றும் அழகுணர்வில்லாத குளிர்விக்கும் அமைப்புகள், தீயணைக்கும்  அமைப்புகள் போன்ற பலவற்றை நீக்கிவிடலாம். ஆலயங்களைத் தொன்மையான அழகுடன் பேணலாம். ஆலயம் செல்பவர்கள் நெரிசலில் சிக்காமல், தரிசனம் செய்ய வாய்ப்பின்றி அலைமோதாமல், நிறைவாக முழுமையாக இறைவழிபாடு செய்து மீளலாம்.

அவ்வண்ணம் வருகையாளர் கட்டுப்படுத்தப்பட்டால் இன்று  ஆலயங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சிற்ப அழிவுகள் தடுத்து நிறுத்தப்படும். இன்று அல்லது நாளை இப்படி ஒரு தீர்வை எடுத்தே ஆகவேண்டும். இல்லையேல் இந்து ஆலயங்கள் அழிவுக்கு செல்வதை எவராலும் தடுக்க முடியாது.

பராமரிக்கப்படாத, கைவிடப்படாத ஆலயங்கள் இருக்கின்றன. அந்த ஆலயங்களைப் பராமரிப்பதற்கு ஒரு பொது நிதியை உருவாக்கலாம். அதற்கு மக்களிடம் இருந்து நன்கொடைகளை வரவழைக்கலாம். அந்நிதியை கண்காணிப்புக் குழு வழிகாட்டலின் பேரில் ஆலயங்களை சீரமைக்க ஒரு அறக்கட்டளையைக் கொண்டு செலவிடச்செய்யலாம்.கண்காணிப்புக்குழு ஆலயங்களுக்கு குவியும் நிதி ஆலயப்பராமரிப்புக்கு மட்டும் பயன்படும்படி அரசிடம் கட்டாயப்படுத்தலாம். அதன் வழியாக அத்தனை சிற்றாலயங்களையும் முறையாக சீரமைத்துப் பராமரிக்கலாம்.

ஆலயத்துக்காக ஒருங்கிணைந்த ஒரு நீதி நிர்வாக அமைப்பை உருவாக்கலாம். ட்ரிபியூனல் போன்ற அதிகாரத்துடன். அந்த நீதி நிர்வாக அமைப்பினூடாக வெவ்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அரசு சொத்துக்களை மீட்கலாம். நிலுவையில் இருக்கும் அரசு வருவாய்த் தொகைகளை செய்யலாம். அவற்றை ஆலயத்தை பழுது பார்க்க பயன்படுத்தலாம்.

தர்க்கபூர்வமாக யோசிக்கும் எவரும் செய்யக்கூடுவது இதுதான்.  மாறாக ‘அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு’ என்று கூக்குரலிடுவது ‘இதில் உள்ளே வருவது யார்? எவர் பொறுப்பில் ஆலயங்கள் செல்லப்போகின்றன?’ என்ற கேள்வியை மட்டுமே எழுப்பும். ஆலயங்கள் வழிபாட்டுக்குரியவை மட்டுமே என்ற வரையறை ஆலயங்களின் உரிமையாளர்களான இந்தியர்களை, உலகக் குடிமக்கள் அனைவரையும் வெளியே செலுத்துவதும் அவ்வகையில் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகும்.

இன்றைய தேவை ஆலயத்தைப் பற்றிய விழிப்புணர்வு. ஆலயத்திற்குச் சேவைசெய்வதற்கான உளநிலை.அதற்குப் பதிலாக ஆலயத்தின் மீதான அதிகாரத்துக்காக குரல்கொடுக்கிறார்கள்.

ஜெ

திருபுவனம் கம்பஹரேஸ்வரர் ஆலயம் பற்றி

https://drbjambulingam.blogspot.com/2016/10/blog-post_22.html

=======================================================

ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்

சிற்பப் படுகொலைகள்…

வாழும் சிற்பங்கள்

நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்

நமது கட்டிடங்கள்

மணல்வீச்சு

சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்

சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்

முந்தைய கட்டுரைலீனா மணிமேகலையின் ’மாடத்தி’ – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம்- விர்ஜீனியா