பெண்களின் துறவு, ஒரு வினா

கதாநாயகி- கடிதம்-12

அன்புநிறை ஜெ,

இது கதாநாயகிக்கு வந்த சுசித்ராவின் கடிதம் குறித்த கடிதம். மிகத் தெளிவாக கோர்வையாகத் தனது பார்வையை முன்வைத்திருந்தார். கதாநாயகியர் நிரையை வாசித்தபோது “ஆம் இது அப்படித்தானே” என்பதுபோல இயல்பான ஏற்பே எனக்கு இருந்தது என்பதை இந்தக் கடிதத்தை வாசித்ததும்தான்  உணர்ந்து கொண்டேன். இன்றும்கூட பெண் என்பதைக் காரணமாக்கி மறுக்கப்படும் இடங்களின், பாதைகளின் பொருட்டு காரைக்கால் அம்மை போல பேயாகி விடவும், ஒளவை போல இளமையை ஒரு நொடியில் துறந்து விடவும் வழி இருக்கிறதா என்ற எண்ணம் வாராதிருப்பதில்லை. எனவே ஃபிரான்செஸ் பர்னியின் விடுதலை உணர்வை அப்படியே ஏற்றுக்கொண்டது மனம்.

வெண்முரசில் சிகண்டினியை மகனே என்றழைத்து அம்பை சிகண்டியாக்கும் தருணம் பெரிய கொதிப்பை ஏற்படுத்தியது நினைவில் எழுந்தது. அதைத் தொடர்ந்து துரியன், யுவனாஸ்வன், பங்காஸ்வன், விஜயை எனப் பல கதாபாத்திரங்கள் பெண்மையைத் துறப்பதும் ஏற்பதுமாய் வரும்.  பெண்மையென எதைத் துறக்கிறார்கள் அல்லது ஏற்கிறார்கள் என்ற கேள்வி எழும். முன்பொரு கடிதம் அது குறித்து எழுதியிருந்தேன்.

“எதற்காக ஒருவர் இப்படி உடலையும் மனத்தையும் சிதைத்துக்கொள்ள வேண்டும்?” என்ற சுசித்ராவின் கேள்வி உள்ளே ஒலித்துக் கொண்டே இருந்தது. இன்றைய விகடன் பேட்டியில் பாரதி பாஸ்கர் அவர்கள் துறவு போன்ற தேடல் கொண்ட பெண்ணுக்கு இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இந்தியாவில் அதற்கான சாத்தியங்கள் இல்லை குறைந்தபட்சம் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அது சாத்தியாமாகிறது என்ற தங்களின் பதிலைக் காலையில் கேட்டதும், அந்த விடுதலைக்காக இந்த அடையாளத்தை துறக்க சம்மதமே என்ற பதில்தான் தோன்றியது. அது மாபெரும் சமரசம் என்றாலும் அநீதி என்றாலும் துறக்கும் பெண்மைக்கு நிகராக துலாக்கோலின் மறுபுறம் விடுதலை இருக்குமென்றால் அதை செய்யவேண்டி இருக்கிறது.

பெண்ணாகவே இருந்து மானுடனுக்கு சாத்தியமான விரிவை பெண் அடையும் காலம் வேண்டும் எனக் கேட்ட சுசித்ராவுக்கு அன்பும் நன்றிகளும். கனவு மெய்ப்பட வேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும்.

மிக்க அன்புடன்,
சுபா  

அன்புள்ள சுபா,

உண்மையில் இந்தியாவில் பெண்கள் துறவிகளாக அலைந்து திரிய முடியாத நிலைக்குக் காரணம் மதம் சார்ந்த கொள்கைவரையறை அல்ல. மாறாக நடைமுறைப் பிரச்சினைகள்தான். அதாவது சமூக ஏற்பு மற்றும் அதுசார்ந்த உளநிலைகள்தான். புத்தரின் காலகட்டத்தில் இளம்பிக்குணிகள் சாதாரணமாக நாடெங்கும் உலவியிருக்கிறார்கள். சமணத்திலும் பெண்துறவிகள் நிறையவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் பயணங்கள் செய்திருக்கிறார்கள்.

நம் சமூகத்தின் ஏற்புநிலை இளம் ஆணை துறவியாக ஏற்கிறது. இளம்பெண்ணை அவ்வாறு ஏற்பதில்லை. அதை ஓர் ‘ஒடுக்குமுறை’ என்றும் ‘பாரபட்சம்’ என்றும் பார்ப்பதெல்லாம் இன்றைய ‘புண்பட்ட பெண்ணிய’ நோக்கு. அப்படி எல்லாவற்றையும் பார்ப்பதன் வழியாக நம்மை நாம் குறுக்கிக்கொள்கிறோம். ‘போராளி’ பிம்பத்துக்கு அது உதவலாம். ஆனால் உண்மையை அறிய சமரசமில்லாத பார்வை தேவை. நாம் செய்துகொள்ளும் முதல்சமரசம் நமது உணர்வுகளுக்கேற்ப உண்மைகளை திரித்துக்கொள்வதே.

இது தொன்மையான ஒரு சமூகம். இதன் மதிப்பீடுகள் பெரும்பாலும் பழங்குடி வேர்கள் கொண்டவை, நவீன முதலாளித்துவ சமூகத்திற்கான மாற்றங்களை அடையாதவை. பழங்குடிச் சமூகங்களில் பெண்கள் குழந்தைகளை பெற்றுத்தரும் செல்வங்கள். ஆகவே அரிதானவர்கள். சென்ற நூறாண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நிலத்திலேயே பெண்ணை கவர்ந்துவருதல் ஒரு ஏற்கப்பட்ட கலாச்சாரமாக, வீரம் மிக்க மணமுறையாக இருந்தது.  இன்றும் பல சாதியினரின் மணச்சடங்குகள் குறியீட்டு ரீதியாகப் பெண்கவர்தலை நடிப்பவைதான்.

பெண்கள் பற்றிய நம் பார்வை பொதுவாக அதுதான். தன் இனக்குழுப் பெண்ணை, அல்லது குடும்பத்துப் பெண்ணை தன் உரிமைப்பொருள் என நினைத்துப் பாதுகாப்பது, பிற இனக்குழுப் பெண்ணை அல்லது குடும்பத்துப்பெண்ணை கவரமுயல்வது என்றே இன்றும் இங்கே சராசரி ஆணின் மனநிலை உள்ளது. அது பல்லாயிரமாண்டுக்காலத் தொன்மை கொண்ட ஒன்று. அது காலாவதியாகும் காலம் மெல்லவே வரும்.

ஆகவே இளம்பெண் தனியாகப் பயணம்செய்வது, தனியாக தவம் செய்வதெல்லாம் ஆபத்தானதாகவே இங்கே இருந்தது, இருக்கிறது. அவள் திறந்துவைக்கப்பட்ட செல்வம் போல. அவள் கைப்பற்றப்படலாம், ஆக்ரமிக்கப் படலாம். இங்கே ஆண்துறவிகள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து திரளாக அலைய முடிகிறது. பெண்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை.

ஆகவே பௌத்தத்தின் தொடக்க காலத்திற்கு பிறகு பெண்கள் வெளியே செல்வதற்கு கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் திரளாகவே செல்லவேண்டும் என்றும், முன்னரே வகுக்கப்பட்ட மடாலயங்களிலேயே தங்கவேண்டும் என்றும், நட்பில்லாத சமூகங்கள் மற்றும் பௌத்த ஆதரவில்லாத மன்னர்கள் ஆளும் நிலங்களுக்குச் செல்லக்கூடாதென்றும் நெறிகள் உருவாக்கப்பட்டன. சமணப் பெண்துறவிகளுக்கு இன்றும் அக்கட்டுப்பாடுகள் உள்ளன.

துறவு பூண்டு தனியாகப் பயணம் செய்யும் ஆணுக்கு இந்த அபாயங்கள் உண்டா? பெண்கள் அளவுக்கு இல்லையென்றாலும் உண்டு. ஒருபாலினச் சேர்க்கையாளர்களால் வன்முறையாகக் கைப்பற்றப்படுதல், வெவ்வேறு  வகையான இரவுக் குற்றவாளிகளால் தாக்கப்படுதல் என பல அபாயங்கள். பெரும்பாலும் எல்லா துறவிகளும் அதைப் பதிவுசெய்திருக்கிறார்கள். எனக்கும் பல அனுபவங்கள் உண்டு.

காவல்துறையேகூட துறவிகளிடம் இன்று மிகக்கடுமையாகவே நடந்துகொள்கிறது. தமிழகத்திலும் ஆந்திரத்திலும் அலைந்து திரியும் துறவிகளைப் பிடித்து போலி அடையாளங்கள் உருவாக்கி, குற்றவாளிகளாக்கிச் சிறையிலடைத்து, குற்றக்கணக்கை முடித்துவைக்கும் வழக்கமும் உண்டு. துறவுநிலைகளில் அதைப்பற்றிய எச்சரிக்கைகளை எப்போதுமே குறிப்பிடுவார்கள். அப்படி கைதுசெய்யப்பட்டு ஐந்தாண்டுகள் சிறையில் கழித்த துறவிகளையே எனக்குத் தெரியும்.

அதாவது ஆண்கள் இங்கே கௌரவமாக, பாதுகாப்பாக துறவிகளாக அலைகிறார்கள் என்று இல்லை. அவர்கள் அபாயங்களை பொருட்படுத்துவதில்லை என்பதே உண்மை. சில இடங்களில் அவர்களுக்கு துறவி என்னும் ஏற்பு உள்ளது, பல இடங்களில் இல்லை. அலைந்து திரியும் துறவிகள் ரயிலில் கழிப்பறை அருகே அமர்ந்து டிக்கெட் இல்லாமல் பயணம்செய்வதும், அவர்களை பரிசோதகர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடுவதும் இங்கே இருநூறாண்டுகளாக வழக்கம். ஆனால் அவர்களை ஒவ்வொருமுறையும் கடுமையாகத் தாக்கும் பரிசோதகர்கள் உண்டு, என்னையே ஒருவர் தாக்கியதுண்டு.

ஆண்கள் துறவுபூண்டு வெளியே இறங்கும்போது இதற்கெல்லாம் தயாராகத்தான் செல்கிறார்கள். அப்படிச் செல்லத்துணியும் பெண்ணுக்கும் அதெல்லாம் தடையாக இருக்காது. உதாரணமாக, ஒரு பெண் தன் உடலை தானல்ல என்று எண்ணினால், பாலியல் வல்லுறவுகளை ஒரு பொருட்டென கருதாதவளானால், அவளுக்கு அதன்பின் அஞ்ச ஏதுமில்லை. அந்நிலையில் பெண் இல்லை, மிகத்தீவிரமான உளப்பாதிப்புகளுக்கு உள்ளாகிறாள் என்பதே மிகப்பெரிய சிக்கல்.

இந்திய சமூகத்தில் துறவிகளுக்கான ஏற்பு மிகமிக வேகமாக மறைந்து வருகிறது. 1982ல் நான் அலைந்ததுபோல இன்று அலைய முடியாது. இதை பலவாறாக எழுதியிருக்கிறேன். இன்று இரண்டுவகை மனநிலைகள் உள்ளன. அலையும்துறவிகளை ஞானம்தேடிச் செல்பவர்கள் என்றும், உலகியலாளர்களால் பேணப்படவேண்டியவர்கள் என்றும் எண்ணும் வழக்கம் நமக்கு இருந்தது. நம் மரபு அதற்குக் கற்பித்தது.

அவர்கள் உலகிடம் வேண்டுவது ஒருநாளில் இருவேளை உணவு மட்டுமே. அதை அளிப்பது எந்தச் சமூகத்திற்கும் சுமை அல்ல. எந்தப் பஞ்சத்திலும் இந்தியாவில் துறவிகள் கைவிடப்பட்டதில்லை. பல ஊர்களில் ஊர்த்தலைவர்கள் சாவடிகளுக்குச் சென்று அங்கே எந்த துறவியோ வழிப்போக்கரோ சாப்பிடாமல் இருக்கிறார்களா என்று பார்த்து அன்னமிட்டுவிட்டே உண்ணும் வழக்கம் இருந்தது.

இரவில்  உண்பதற்கு முன் ஊர்ச்சாவடிக்குச் சென்று அங்கே எவரும் இல்லையென்றாலும் கைகளைத் தட்டி நாற்புறமும் நோக்கி “இரவுணவு இல்லாத எவரேனும் உண்டா?”என்று கேட்டபின்னரே உணவுண்ணவேண்டும் என்னும் வழக்கம் சமீப காலம்வரைக்கும் கூட இருந்தது. குறிப்பாக வேளாளர், தேவர் சாதியினரிடையே.

[ஆச்சரியமான சில செய்திகள் உண்டு. பெரும்பஞ்சங்களில் அலையும் துறவிகள் அன்னம் அளிப்பவர்களாக உருமாறினர். பிச்சை எடுத்து கஞ்சித்தொட்டிகள் திறந்தனர். தமிழகத்தின் மாபெரும் உணவு வள்ளல் ஒரு துறவிதானே?]

ஆனால் சில தலைமுறைகளாக அலையும் துறவிகளெல்லாம் சோம்பேறிகள், திருடர்கள் என்னும் மனநிலை இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இடதுசாரி அமைப்புகள், ஊடகங்கள் அனைத்தும் இணைந்து இதைத் திட்டமிட்டு உருவாக்குகின்றன. அவ்வப்போது சிக்கிக்கொள்ளும் சில போலிச்சாமியார்களை முன்வைத்து உருவாக்கப்படும் இந்தப் பிம்பம் உள்நோக்கம் கொண்டது. ஒப்புநோக்க மேலும் கூடுதலாக கிறிஸ்தவத் துறவிகள் பற்றிய அச்செய்திகள் வருகின்றன. ஆனால் அவர்களைப் பற்றிய அப்பிம்பம் கட்டமைக்கப்படவில்லை என்பதைக் கவனியுங்கள்.

சுரண்டித் தின்னும் அரசியல்வாதிகளையும் வெற்றுக்கூச்சலாளர்களையும் எல்லாம் ஏற்றுக்கொண்டு கொண்டாடும் நம் ‘முற்போக்கு’ கும்பலுக்கு உணவன்றி வேறேதும் கோராமல், பெரும்பாலும் கண்களுக்கே தென்படாமல் வாழும் துறவிகள் ஒட்டுண்ணிகளாகவும் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படவேண்டியவர்களாகவும் தெரிகிறார்கள். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று, ஆண்டுக்கு ஒரு நூல்கூட படிக்காமல், தினசரி ஒருமணிநேரம் வகுப்பில் உழப்பிவிட்டு சுற்றிவரும் கல்லூரிப்பேராசிரியர்கள் துறவிகளை ‘சமூகத்தின் செல்வத்தை சுரண்டி வாழ்பவர்கள்’ என எழுதும் கேவலம் இங்குள்ளது.

அந்த மனநிலையை அவர்கள் கடுமையாகப் பரப்புவதனால் சமூகத்தில் துறவிகளுக்கான ஏற்பு மறைந்துவருகிறது. கேரளம், தமிழகம், ஆந்திரத்தில் மிகக்குறைந்துவிட்டது. இன்று வட இந்தியாவிலும் மறைந்து வருகிறது. இன்று நகரங்கள் எல்லாம் துறவிகளுக்கு எதிரானவை. ரயில்களில் அவர்களை ஏளனம் செய்பவர்களை அடிக்கடி காண்கிறேன். அவர்கள் பெரும்பாலும் அமைதியாகக் கடந்துசெல்கிறார்கள்.

துறவிகளை பொதுவெளியில் கேலிசெய்து அவமதிப்பவர்கள் அறிவுஜீவிகள் என பாவனை காட்டி மகிழ்கிறார்கள். துறவிகள் கடுமையாக தாக்கப்படும் பல வீடியோக்களை நாம் யூடியூபில் பார்க்கலாம். தாக்கியவர்களே பதிவுசெய்து வலையேற்றியவை அவை. தாக்கப்பட்டவர் அடையாளமற்றவர், புகார்சொல்லாத அன்னியர், சமூகத்திற்கு வெளியே வாழும் தனியர் என்பதனால் தண்டனை இல்லாமல் அதைக் கொண்டாடுகிறார்கள்.

இன்றுள்ள இந்துத்துவ அரசியலும் அரசியலுக்குப் பயன்படாத துறவிகள் தேவையற்ற குப்பைகள் என்று பார்க்கும் மனநிலையை கொண்டுள்ளது. ஏளனங்களையும் வசைகளையும் காணமுடிகிறது. எத்தகைய துறவியானாலும் தங்கள் அரசியலை ஏற்காதவர் என்றால் அவரை இழிவு செய்யவும் வசைபாடவும் இந்துத்துவர் தயங்குவதில்லை. சமீபத்தில் ஓர் இந்துத்துவ அறிவுஜீவி நித்ய சைதன்ய யதியை இழிவு செய்து எழுதியிருந்தார். நித்ய சைதன்ய யதியை நான் முன்வைக்கிறேன் என்பதனால்.

இன்று சிற்றூர்களிலேயே அலையும் துறவிகளுக்குச் சற்றேனும் ஏற்புள்ளது. அங்கும் அவர்கள் திருடர்கள் என தாக்கிக் கொல்லப்படுவது அடிக்கடி நிகழ்கிறது. பல ஆயிரமாண்டுகளாக இந்தியாவெங்கும் பரவியிருந்த ஞானத்தேடிகளினாலான ஒரு பேரியக்கம், மானுடகுலத்திற்கே ஓர் அரிய நிகழ்வு எனக் கொள்ளத்தக்க ஒன்று, இப்போது மெல்லமெல்ல மறைகிறது. இனி அது உருவாகப்போவதுமில்லை.

உடலை ஒடுக்குதல் அல்லது மறைத்தல் குறித்தும் சொல்லவேண்டும். இந்து, பௌத்த, சமண மதங்களில் உடலழகை இல்லாமலாக்குதல், உடலை ஒறுத்தல் என்பது ஆண்களுக்கும் நெறியாக முன்வைக்கப்பட்டது. துறவிகள் எவ்வகையிலும் உடலை அழகுபடுத்திக்கொள்ளலாகாது. காஷாயம் என்னும் காவியுடையே அதற்குரியதுதான். சடையும் தாடியும் முடியும் வளர்த்தல், மொட்டையடித்துக்கொள்ளுதல் போன்று உடலழகை மறைத்துக்கொள்ளும் செயல்கள் துறவுடன் இணைந்திருந்தன. இன்றும் அவ்வாறே.

ஏனென்றால் உடல்வழியாக தான் வெளிப்படலாகாது, உடலை வைத்து தன்னை பிறர் மதிப்பிடலாகாது என்பதுதான். ‘கால்நடைகள் கொழுத்தால் அழகு, துறவி மெலிந்தால் அழகு’ என்று பழமொழி ஏதோ வடிவில் எல்லா இந்திய மொழிகளிலும் உள்ளது. அதன் உட்பொருள் இதுவே. ஆகவே துறவுபூணும் பெண்களுக்கு மட்டும் உடலொடுங்குதல் உள்ளது என்பதில்லை. அது துறவின் ஆதாரநெறியென்றே இங்கே கொள்ளப்பட்டது.

இத்தனை தடைகளையும் கடந்து செல்லும் ஆற்றல் அசாதாரணமான ஆளுமைகளுக்கு உண்டு. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் போன்ற துறவிகள் இயல்பாக வீடுதுறந்து அலையவும் காடேகி தவம் செய்யவும் இயன்றிருக்கிறது.

துறவுபூண்டு தனியாக அலைவதற்குப் பெண்ணுக்கு இங்கே சுதந்திரம் உண்டா என்ற கேள்விக்கான விடை இது. துறவி அல்லாத பெண்கள் தனியாக அலைய முடியுமா? சூழலை கணித்து, போதிய எச்சரிக்கையுடன் பயணம் செய்வது இன்று மிக இயல்புதான். நம் தோழமையைச் சேர்ந்த செல்வராணி தனியாக லடாக் வரை பைக்கில் பயணம் செய்து மீண்டார். நாங்கள் ஸ்பிடி சமவெளியில் பயணம் செய்தபோது ஜே.கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஓர் இளம் ஆசிரியை பேருந்திலேயே ஆறுமாதங்களுக்குமேல் பயணம் செய்து இறுதியாக அங்கே வந்து சேர்ந்திருந்தார்.

இன்று இணையுள்ளம் கொண்ட பெண்கள் சிறிய குழுக்களாகப் பயணம் செய்வது நடக்கிறது. அதற்கான இணையக்குழுக்கள் உள்ளன. வருங்காலத்தில் அத்தகைய பயணங்களுக்கான வாய்ப்புகள் பெருகும். இன்றுள்ள ஒரே சிக்கல், இந்தியா என்னும் இந்தப்பெரிய தேசம், மக்கள்தொகை மிகுந்த இந்நிலப்பரப்பு, முழுமையாக அரசின் சட்டப்பாதுகாப்புக்குள் கண்காணிப்புக்குள் இல்லை என்பதே. குற்றக்குழுக்கள் எங்கும் உள்ளன.

ஒப்புநோக்க ஐரோப்பா போன்ற சிறிய, மக்கள்தொகை குறைந்த நாடுகள் அரசுக்கண்காணிப்பு, கட்டுப்பாடு இருப்பதனால் பாதுகாப்பானவை. ஆனால் சென்ற சில ஆண்டுகளாக ஃபிரான்ஸ் இத்தாலி முதலிய நாடுகள் தனியாகப் பயணம்செய்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, மிக ஆபத்தானவையாக ஆகிவிட்டிருக்கின்றன.

கடைசியாக, இங்கே ஒருவர் அறிவுத்துறையில் ,மெய்யியல் துறையில், சேவைத்துறையில் பணியாற்றி வெற்றிபெற பாலியல் அடையாளத்தை துறந்தாகவேண்டுமா? காந்தியின் அழைப்பை ஏற்று நேரடியாக பழைய நிலப்பிரபுத்துவச் சூழலில் இருந்து அரசியலுக்கு வந்த பல லட்சம் பெண்கள் இருந்தனர். சிறைசென்றனர், தொலைதூரச் சிற்றூர்களுக்குச் சென்றனர், அமைப்புகக்ளைக் கட்டி எழுப்பினர். உங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அவ்வண்ணம் பெருவாழ்வு வாழ்ந்த ஒரு பெண்ணின் வீடு இருக்கும்.

எத்தனை முகங்கள்! நினைவிலிருந்தே நூறு பெயர்களை என்னால் உடனடியாகச் சொல்லமுடியும். அவர்கள் எல்லாம் பெண்ணுடலை துறந்தா அவ்வண்ணம் எழுந்தனர்? அவர்களுக்கெல்லாம் பேருருக்கொண்டு எழ பாலியல் தடையாக இருந்ததா? ஒரு பெண் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனோ அருணா ராயோ ஆக பாலியல் என்ன தடை அளிக்கிறது?

தடைகள் உள்ளன, குடும்பமும் சமூகமும் அளிக்கும் தடைகள். அதைவிட நம் தன்னலமும், நம் ஆசைகளும் ,அச்சங்களும் அளிக்கும் தடைகள். அவை ஆண்களுக்கும் உண்டு. அத்தடைகளை கடந்து எழுபவர்களாலேயே சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

உலகில் இருசாரார் உள்ளனர். சாதனையாளர்கள், சாதனை படைக்க தடையாக இருப்பவற்றை பட்டியலிட்டுக்கொண்டு வாழ்ந்து முடிபவர்கள்.

ஜெ

செங்கோட்டை ஆவுடையக்கா பாடல்கள்

***

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள்
பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா
முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது
தேவி எழுகதிர்

 

முந்தைய கட்டுரைசிறுகதைகள்-செந்தில் ஜெகன்னாதன்,திருச்செந்தாழை
அடுத்த கட்டுரைகார்கடல்