வேதாந்தமும் இறைவழிபாடும்

சாரதாதேவி, சிவகிரி

பக்தியும் தத்துவமும்

உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். சிறுகதைகளின் மூலம் மற்றுமொரு மிகச்சிறந்த வாசிப்புக் காலத்தை அளித்திருக்கிறீர்கள். அதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அனைத்து சிறுகதைகளையும் வாசித்துவிட்டேன் குறிப்பாக வாசகர் கடிதங்களையும். அவை உங்கள் சிறுகதைகளை எந்த எல்லைக்கும் விரித்து செல்லலாம் என்பதையும், தனிப்பட்ட முறையில் என் வாசிப்பை மேம்படுத்திக்கொள்ளவும் உதவியது.

படித்தவற்றில்  ‘மலைபூத்தபோது’ சிறுகதை மனதை மிகவும் நெகிழ வைத்தது. கடுத்தா, பிறுத்தா மற்றும் சிறுத்தா போன்ற மலை தெய்வங்களைப் பற்றி  இப்பொழுது தான் தெரிந்துகொள்கிறேன். நிலம் வாழும் மானுடர் காலப்போக்கில் அத்தெய்வங்களை மறப்பதையும் அவற்றுக்குரிய படையலை நிறுத்துவதையும் இயல்பாய் வாசித்து கடந்து செல்ல முடியவில்லை. சிறுகதையின் இறுதியில் நானும் வேண்டிக்கொண்டேன் ‘பிழையெல்லாம் பொறுக்கவேண்டும். பெற்றவரென்றே கனியவேண்டும்’ என.

இப்புள்ளியில் எனக்கு ஒரு சிறு சந்தேகம் எழுந்தது.  சில வருடங்களுக்கு முன்னர் சடங்குளிலும், பூசைகளிலும் எனக்கிருந்த ஈடுபாடு குறைந்தது. ‘இவற்றின் மூலம் நாம் பெறுவதுதான் என்ன?’ என்ற கேள்வியே மெல்ல அதனிடம் இருந்து ஒரு விலகத்தை உருவாக்கியது. உபநிடதங்களை, இந்து மதத்தின் தரிசனங்களை, தத்துவங்களை படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. எனினும் அதில் இருக்கும் ஈடுபாடு சடங்கு மற்றும் பூசைகளில் வருவதில்லை.

‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ புத்தகத்தில் அத்வைத மரபு பற்றி ஒருவரி வரும். ‘அத்வைத மரபு பக்திக்கு எதிரானது, ஞானமே முக்திக்கு வழி என்று சொல்வது’ என. மேலும் வேதாந்தம் பற்றி படிக்கும்போது அது சடங்குகளுக்கு எதிரானது என்று தெரிந்துகொண்டேன். இவை இரண்டுமே என் சிந்தனைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்ந்தேன்.

அதன்பின்பே உபநிடதங்கள் மற்றும் தரிசனங்கள் பற்றி மேலும் ஆழ்ந்து படிக்க ஆர்வம் எழுந்தது. இந்நிலையில் இருந்தவாறு எவ்வாறு ‘கடுத்தா, பிறுத்தா மற்றும் சிறுத்தா’ போன்ற தெய்வங்களை அணுகுவது? சடங்குகளின் குறியீட்டு தன்மையையும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் சில கட்டுரைகளில் கூறியிருந்தீர்கள். வேறுசில காரணங்களினால் சடங்குகளின் தொடர்ச்சி அறுபடும் சித்திரத்தை நம்மை சுற்றிலும் காண்கிறோம்.

வேதாந்தம் வழிபாட்டுச் சடங்குகளை தவிர்க்கும் நிலையில் இம்மலை தெய்வங்களை அது எப்படி அணுகும்? மறக்கடிக்கப்படும் நிலையில் இருக்கும் இத்தெய்வங்களை மீட்டெடுக்க முயலுமா? அவ்வாறெனில் எப்படி அதை நிகழ்த்தும்? இதை புரிந்துகொள்வதில் எனக்கு சிக்கல் இருக்கிறது. கொஞ்சம் விளக்க முடியுமா?

பி.கு: ‘இந்திய ஆங்கில வாசிப்பு’ என்ற தலைப்பில் எனது கேள்விக்கான தங்களது பதிலை படித்தேன். இதுவரையிலான எனது புரிதலை இன்னும் கூர்படுத்திக்கொள்வதற்கு அது வழிவகுத்தது. மேலும் இந்திய ஆங்கில நாவல்கள், வாசகர்களின் தன்மை, உணர்வுகள், வட்டார இலக்கியம் என பலவாறாக விரிந்துசென்று ஒரு பெருங்சித்திரத்தை அளித்துவிடீர்கள். ஆசிரியருக்கு எனது நன்றிகள்.

இப்படிக்கு,

சூர்ய பிரகாஷ்

அன்புள்ள சூர்யப்பிரகாஷ்,

அத்வைதம் ஒரு வழிபாட்டு முறை அல்ல. ஒரு மதநம்பிக்கை அல்ல. ஒரு தத்துவ நிலைப்பாடுகூட அல்ல. அதை ஒரு மெய்த்தரிசனம் என்றுதான் சொல்லவேண்டும்.   “இங்கனைத்திலும் இறை உறைகிறது. அவ்விறை நானே. இறை ஒன்றே உண்மை, பிறிதனைத்தும் அதன் மாயத் தோற்றங்களே” எனும் அடிப்படை தரிசனம் அது.

ரிக் வேதத்தின் இறுதியெனத் திரண்டு வந்தது இது. ஆகவே அது வேதமுடிபுக் கொள்கை [வேதாந்தம்]. அந்த முழுமுதலை பிரம்மம் என்கிறார்கள். ஆகவே அதை பிரம்மவாதம் என்கிறார்கள். பிரம்மத்தை அனைத்தையும் ஆற்றி அமையும் பரமபுருஷன் என்னும் முதல் தன்னிலை என உணர்கிறார்கள். ஆகவே புருஷதத்துவம் என்கிறார்கள், பிரம்மமும் பிரபஞ்சமும் வேறுவேறல்ல என உணர்வதனால் அதை இரண்டின்மைவாதம் [அத்வைதம்] என்கிறார்கள்.

இது இந்திய சிந்தனை முறையின் ஒரு உச்சவெற்றியாகத் திகழ்கிறது. இந்தியாவின் அனைத்துச் சிந்தனை முறைகளிலும் அத்வைதத்தின் செல்வாக்கு உண்டு. இந்தியாவின் அனைத்து மக்களின் சிந்தனைகளிலும் அத்வைதம் ஏதேனும் ஒரு வகையில் ஊடுருவி இருக்கும். ஓர் எளிய விவசாயி தன் தோட்டத்தில் நட்டு வளர்த்த ஒரு செடி முளைவிடுவதைப் பார்த்து தெய்வம் எழுகிறது என்று சொல்லும்போது, தன் பசு கன்றிடும்போது தெய்வம் பிறந்திருக்கிறது என்று உணரும்போது அவன் உள்ளிருந்து இயங்குவது அத்வைதமே.

அத்வைதம் இந்து மரபின் அடிப்படையான ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என ஆறு. அவற்றில் உத்தர மீமாம்சமே வேதாந்தம் எனப்படுகிறது. வேதாந்தம் பிற அனைத்து சிந்தனைகளுடனும் உரையாடும்தன்மை கொண்டது. பிற நான்கு விரல்களையும் எளிதாகத் தொடும் கட்டைவிரல் அது என்று நாராயண குரு ஒருமுறை கூறினார்.

சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் ஆகிய நான்கு சிந்தனைகளையுமே வேதாந்தம் மாற்றியமைத்திருக்கிறது.  சாங்கியம் புருஷன் என்னும் கருத்தை உள்வாங்கிக்கொண்டு சேஸ்வர சாங்கியம் (இறைசேர் சாங்கியம்) என்று தன்னை மாற்றிக்கொண்டது. யோகம் அதன் அடிப்படையில் ஒரு இறைநிலை அடையமுயலும் செயல்பாடாக மாறியது. வைசேஷிகமும் நியாயமும் வேதாந்தத்தின் அடிப்படையான தத்துவங்கள் [பொருட்களின் கருத்தியல் இருப்புநிலைகள்] என்னும் கொள்கையை ஏற்றுக்கொண்டன.

வேதாந்தமும் சாங்கியதில் இருந்தும், யோகத்தில் இருந்தும், நியாயத்தில் இருந்தும், வைசேஷிகத்தில் இருந்தும் அனைத்து முதன்மைப் பார்வைகளையும் உள்ளிழுத்துக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டது. சாங்கியத்தில் இருந்து அது பிரகிருதி – புருஷன் என்னும் இருமையைப் பெற்றுக்கொண்டது. யோகத்தில் இருந்து ஒருங்கிணைவுப் பார்வையை எடுத்துக்கொண்டது. வைசேஷிகத்தில் இருந்து தன்மாத்திரை போன்ற கருத்துக்களை எடுத்துக்கொண்டது. அவ்வாறாக பின்னர் இந்து மதம் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக தொகுப்பு கொண்ட இந்த ஞானத்தொகையின் மையச் சரடாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. அச்செயல் நிகழும் முதன்மை நூல் கீதை என்பதனால் அது முக்கியமானது.

இந்து மதம் என்பது இந்தியா முழுக்க இருந்த வெவ்வேறு வழிபாட்டு முறைகளும், ஆசாரங்களும், மெய்த்தரிசனங்களும் ஒன்றை ஒன்று கண்டடைந்து, உரையாடி, ஒன்றை இன்னொன்று நிறைவு செய்து, நீண்ட காலப்பயணத்தினூடாக தன்னைத் தொகுத்துக் கொண்டு உருவானது. அதற்கு வெவ்வேறு காலகட்டங்கள் இருக்கின்றன. வேத வேள்விப் பண்பாடு பிற வழிபாடுகளை உள்ளிழுத்துக்கொண்டதை நாம் அதர்வ வேதத்திலேயே காண்கிறோம். அதன்பின் ஆலய வழிபாடை அது தன்னுள் எடுத்துக்கொண்டது.  இந்தியா முழுக்க இருக்கும் பழங்குடிப் பண்பாடு வழிபாடுகள் அதற்குள் சென்றமைந்தன. பேரரசுகளின் காலகட்டத்தில் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்னும் ஆறு பெரும் மதங்களாக அது வளர்ச்சியடைந்தது.

பின்னர் பக்தி காலகட்டத்தின் பிற்காலத்தில் அது சைவம், வைணவம், சாக்தம் என்னும் மூன்று மதங்களாகியது. இன்று சைவமும் வைணவமும் இந்து மதத்தின் இருவேறு முகங்களாக நிலை கொள்கின்றன. சைவத்திலும் வைணவத்திலும் பெருந்தெய்வங்கள் வழிபடப்படும்போதே ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு துணைத்தெய்வங்கள், பழங்குடித் தெய்வங்கள் அதில் இணைப்பு பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

இந்து மதத்தின் பேராலயங்கள் அனைத்துமே ஆலயத்தொகைகள்தான். ஒரு ஆலயத்திற்குள் பல்வேறு தெய்வங்கள் அமைந்திருக்கின்றன. அவை  வெவ்வேறு காலகட்டத்தில் இங்கே மரபுக்குள் நுழைந்தவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. சென்ற ஐம்பது ஆண்டுகளுக்குள் சுடலை மாடன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் இந்த மைய மரபுக்குள், மைய ஆலயங்களுக்குள் நுழைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். இன்னும் இருநூறு முன்னூறு ஆண்டுகளில் இதுவரை நாம் கண்டிராத தெய்வங்கள் கூட இந்த ஆலயத்தொகைகளுக்குள்  இடம்பெறக்கூடும். இவ்வாறுதான் இந்துமதம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சைவம், வைணவம் என்ற இரு பெருமதங்களுக்கும் பொதுவானதாகவும், அவற்றின் அடிப்படைத் தத்துவக் கட்டமைப்பை உருவாக்கக் கூடியதாகவும் வேதாந்தமே இருக்கிறது. வேதாந்தம் பௌத்தத்துடனும் ன்னர் தன்னுடன் தானேயும் விவாதித்து தன்னை பலவாறாகப் பெருக்கிக்கொண்டது. அவ்வாறு வேதாந்தத்தில் இருந்து அத்வைதம் ஒரு தனித் தரிசனமாக எழுந்தது. அத்வைதமே ஆறு மதங்களுக்கும் பொதுவான தரிசனமாகியது. இன்று ஸ்மார்த்த மரபின் அடிப்படை தரிசனம் அத்வைத வேதாந்தமே. ஆறு மதங்களுக்கும் பொதுவான பூசனை முறை அவர்களுடையது.

வைணவர்களின் விசிஷ்டாத்வைதம், அத்வைதத்துடன் முரண்பட்டு எழுந்த ஒரு வேதாந்தப் பிரிவு. பிறிதொரு வைஷ்ணவப் பிரிவாகிய துவைதமும் மத்வரால் வேதாந்தத்துடனும்  விசிஷ்டாத்வைதத்துடனும் முரண்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு வேதாந்தப் பிரிவுதான்.

ஆகவே வேதாந்தம் இந்துமதத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் உள்ளமைந்த சாராம்சமாக உள்ளது. வேதாந்தத்துடன் நேரடி உறவற்றது என்று தோன்றுவது சைவ சித்தாந்தமும் கேரளத்தின் சாக்த தாந்த்ரீக மரபும். ஆனால் அவ்விரண்டும் கூட வேதாந்தத்துடன் முரண்பட்டு விவாதித்து தங்களை முழுமைப்படுத்திக் கொண்டவையே.

வேதாந்தத்தைப் பொறுத்தவரை பிரம்மவாதமே முதன்மைக்கொள்கை . உருவற்றதும், விவரணைக்கு அப்பாற்பட்டதும், அறிவுக்கு எட்டாததும், இங்குள்ள அனைத்தும் ஆனதும், பிறிதொன்றிலாததுமான பிரம்மமே அதன் மைய தரிசனம். ஆகவே பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்களே இங்குள்ள அனைத்தும். ஆகவே இங்குள்ள எதை வழிபட்டாலும் அது பிரம்ம வழிபாடே ஆகும். எந்த தெய்வத்தையும், எந்த பொருளையும் உள்ளுணர்ந்தவன் பிரம்மசொரூபம் என்று சொல்லிவிடலாம்.

வேதாந்தம் சாமானியம், விசேஷம் என்று எப்போதும் அறிதல் நிலைகளை, வழிபாட்டு நிலைகளை பிரித்துவிடுகிறது. சாமானிய தளம் என்பது உலகியல் சார்ந்தது, தர்க்கவியல் சார்ந்தது, அன்றாடம்  சார்ந்தது. விசேஷம் என்பது அதற்கென்றே உரிய தனித்த நிலை. விசேஷ நிலையில் இங்கு பிரம்மம் மட்டுமே உள்ளது, பிற அனைத்தும் மாயை. ஆனால்  சாமானிய தளத்தில் இங்குள்ள அனைத்துமே தெய்வம்தான்.

“ஈசோவாஸ்யம் இதம் சர்வம்” [இங்குள அனைத்திலும் இறையுறைகிறது] என்று  சொல்லும்போது, புல்லிலும் பூண்டிலும் பிரம்மமே இருக்கிறது என்னும்போது, ஒருவர் எதை பிரம்மம் என்றெண்ணி வழிபடுகிறாரோ அது பிரம்மமேதான் என்றுதான் பொருள். அது இறையேதான். ஆகவே எந்த வகை வழிபாட்டுக்கும் வேதாந்தம் எதிராக இருக்க வாய்ப்பில்லை. எல்லா வழிபாடுமே பிரம்ம வழிபாடுதான் என்றுதான் அது சொல்லும்.

எங்குமுள இறை ஒன்றே, மனிதர்கள் அதைப் பல பெயரிட்டு அழைக்கிறார்கள் என்று ரிக்வேதம் சொல்கிறது. சாந்தோக்ய உபநிஷதம் வெவ்வேறு உவமைகள் வழியாக இந்த ஒருமை தரிசனத்தை அளிக்கிறது. அனைத்து ஆறுகளும் கடலை சென்றடைவது போல அனைத்து வழிபாடுகளும் பிரம்மத்தை சென்றடைகின்றன. ஆகவே வேதாந்தத்திற்கு உவப்பற்றதாக ஒரு வழிபாட்டுமுறை இருக்க வாய்ப்பில்லை.

ஒருவர் சாமானிய நிலையில் வழிபாடுகளையும் சடங்குகளையும் ஏற்கவும் விசேஷநிலையில் அவற்றுக்கு அப்பாற்பட்டவராக செல்லவும் இயலும். நாராயணகுரு ‘அறிவில் அறிவென அமைதல்’தான் வீடுபேறு என முன்வைத்தவர். அவருடைய தத்துவநூல்கள் அனைத்தும் அதையே பேசுகின்றன. ஆனால் அவர்தான் சிவன் முதல் சாரதாதேவி வரை தெய்வங்களை பதிட்டை செய்து ஆலயங்களை அமைத்தார். காளிநாடகம், சுப்ரமணிய அஷ்டகம் போன்ற பக்திக்கவிதைகளை இயற்றினார்

அன்றாடப்பிரார்த்தனைக்காக நாராயணகுரு இயற்றிய ‘தெய்வமே காத்துகொள்க கைவிடாது இங்கு எங்களை’ என்னும் பாடல் புகழ்பெற்றது. “அன்னமும் வஸ்திரமும் போன்றவை குறையாமல் எங்களுக்கு அருள்க’ என்ற பிரார்த்தனையே அதிலுள்ளது.

வேதாந்தம் அதன் பிரம்மதரிசனத்தால் ஒரு பொற்பட்டுநூலாக இந்தியாவின் பல்லாயிரம் வழிபாட்டுமுறைகளை, நம்பிக்கைகளை, ஆசாரங்களை, தெய்வங்களை ஒன்றென இணைத்தது. அதையே நாம் இந்து மதம் என அழைக்கிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைகடவுள்,தொன்மம்- கடிதம்
அடுத்த கட்டுரைகி.ரா, கஞ்சிக்கிழங்கு- லோகமாதேவி