ஒரு பண்பாட்டின் வேர்கள் அதில் உருவாகி வந்திருக்கும் தனித்தன்மை கொண்ட கலைவடிவங்களில் உள்ளன. தமிழகத்துக்கு தெருக்கூத்து, கேரளத்திற்கு கதகளி போல. சினிமா அப்படி அல்ல. அது ஒரு சர்வதேசக் கலை. அதன் அழகியல் உலகளாவியது. அதுவே அதன் சிறப்பு. அந்த சர்வதேசக்கலையை எப்படி ஒவ்வொரு பண்பாடும் தன்வயப்படுத்திக் கொள்கிறது என்பதில்தான் அப்பண்பாட்டின் நிலைகொள்ளலும் வளர்ச்சியும் உள்ளது.
கேரளத்தின் முதன்மைக் கலையாக கேரளமக்களின் உள்ளத்தில் கதகளியை நிலைநிறுத்தியதில் சினிமாவுக்கு பெரும் பங்குண்டு. தொடர்ச்சியாக சினிமா கதகளியை தன் பாடல்கள் வழியாக, பின்புலமாக கதகளியை நிறுத்துவதன் வழியாக பொதுமக்களின் நினைவில், உளவியலில் நிலைநாட்டிக்கொண்டே இருக்கிறது.
மோகன்லால் நடித்து ஷாஜி என் கருண் இயக்கத்தில் வெளிவந்த வானப்பிரஸ்தம் இந்திய-பிரெஞ்சு கூட்டுத்தயாரிப்பு. கேன் திரைவிழாவில் முதலில் திரையிடப்பட்டது. கலைஞனுக்கும் அவன் கலைக்குமான உறவை பேசும் படைப்பு இது. அர்ஜுனனாக வேடமிடும் குஞ்ஞிகுட்டனில் அர்ஜுனனை மட்டுமே காதலிக்கும் அரசகுலப்பெண், தன் அர்ஜுனனைக் கொல்ல தன்னை எதிர்மறைக் கதாபாத்திரமாக உருமாற்றிக்கொள்ளும் குஞ்ஞிக்குட்டன் என பல நுண்ணிய தளமாறுதல்களைக் கொண்ட படம்.
கதகளியை பகைப்புலமாக கொண்ட கலைப்படங்களில் களியச்சன் ஃபரூக் அப்துல் ரஹ்மான் இயக்கியது. மனோஜ் கே ஜயன் மைய வேடத்தில் நடித்தார். மலையாளத்தின் முதன்மையான கற்பனாவாதக் கவிஞரான பி.குஞ்ஞிராமன் நாயர் எழுதிய களியச்சன் என்னும் கதைக்கவிதையை ஒட்டி எழுதப்பட்டது.
பி.குஞ்ஞிராமன் நாயருக்கும் அவருடைய ஆசிரியரான வள்ளத்தோள் நாராயணமேனனுக்குமான உறவின் ஒரு சித்திரமே களியச்சன் கவிதையில் உள்ளது என விமர்சகர்கள் கருதுகிறார்கள். கதகளி நடிகன் அவனை கலைஞனாக ஆக்கிய ஆசிரியனை எதிர்கொள்ளும் இருளும் ஒளியும் கொண்ட உறவே இக்கதையின் கரு. குருவை மிஞ்சினாலொழிய சீடனுக்கு தனி அடையாளம் இல்லை என்பது ஓர் இரும்புவிதி. குருவை மிஞ்சும் வழி என்பது குரு காட்டியதாக இருக்கவேண்டும் என்பதில்லை. அந்நிலையில் குருவை எதிர்க்கவேண்டியிருக்கிறது. அது தன்னுள் இருக்கும் ஆழ்ந்த நல்லியல்பை, இலட்சியத்தை எதிர்ப்பதுதான். தன்னைத்தானே சிதைத்துக்கொள்வதுதான்.
குருவிடமிருந்து விலகி, தன்னைத்தானே வெளியேற்றிக்கொண்டு, ஆணவத்தின் தனிமையின் இருண்டபாதைகளில் அலையும் கதகளிநடிகனின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது களியச்சன். குருவே ஒருவகையில் தந்தையுமாகிறார். ஆகவே அது தந்தைமகன் உறவும்கூட.குறியீடாகவேனும், கொள்கையளவிலேனும் ஒரு தந்தைக்கொலை [Patricide] செய்யாமல் ஒருவனுக்கு மீட்பில்லை. அந்த குற்றவுணர்விலிருந்து மீள்வது மறுபிறப்பு.
வினீத் நடிக்க வினோத் மங்கரா இயக்கிய காம்போஜி ஒரு கதகளி நடிகனின் வாழ்க்கையைப் பற்றிய படம். கதகளி அதில் பின்னணியாகவே உள்ளது.
வெகுஜனப் படங்களில் கதகளியின் பண்பாட்டுச்சூழலை யதார்த்தமாக வெளிப்படுத்திய படம் என ரங்கம் சொல்லப்படுகிறது. மோகன்லால், சோபனா நடிக்க ஐ.வி.சசி இயக்கிய படம். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியது. கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த நல்ல பாடல்களுடன் ஒரு பெரிய வெற்றிப்படம் இது.
கதகளிக்கான கலாசதனம் என்னும் அமைப்பை நடத்தும் கருணாகரப் பணிக்கர் அவருடைய முதன்மை மாணவனாகிய அப்புண்ணி, பணிக்கரிடம் பயிலும் நடனமணியாகிய சந்திரமதி, கருணாகரப் பணிக்கரின் மகன் மாதவன் ஆகியோரின் கதை இது. உணர்ச்சிகரமான ஒரு முக்கோணக் காதல்கதை. ஆனால் நுட்பமாக இதிலுள்ளது துரோணர் -அர்ஜுனன் – அஸ்வத்தாமன் கதைதான்.
இந்தப் படத்தில் கேரளத்திலுள்ள அரசு உதவிபெறும் சிறிய கதகளிப் பயிற்றுநிலையங்களின் நிலையும் அங்குள்ள பண்பாட்டுச்சூழலும் மிக யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. கதகளி நடிகர்கள் இன்றைய உலகுடன் சம்பந்தமில்லாத ஒரு பழைய உலகில் வாழ்பவர்கள். அந்த கள்ளமின்மையை, அதன் கொந்தளிப்பையும் உக்கிரத்தையும் மோகன்லால் அற்புதமாக நடித்துக் காட்டியிருக்கிறார்.
லோகிததாஸ் எழுத சிபி மலையில் இயக்கிய கமலதளம் படத்திலும் மோகன்லால் கதைநாயகன். இதிலுள்ளது வள்ளத்தோள் நிறுவிய கலாமண்டலம் போன்ற பெரிய அமைப்பு. அதற்கு பெரிய நிதி வருகை உள்ளது. ஆகவே அரசு நியமிக்கும் தாளாளரே அதன் முதன்மை அதிகாரம் கொண்டவர். அது ஒருவகை அரசு நிறுவனம். அரசு நிறுவனங்களிலுள்ள அத்தனை ஊழல்களும் பொறுப்பின்மையும் அங்கும் உண்டு.
கலை என்றால் என்னவென்றே தெரியாத அரசியல்வாதி அதன் பொறுப்பாளராகிறார். அவர் அத்தனை கலைஞர்களும் தன்னை வணங்கவேண்டுமென எதிர்பார்க்கிறார். கலைஞர்கள் கலைநிமிர்வு கொண்டவர்களே ஒழிய போராட்டக்காரர்களோ துணிவானவர்களோ அல்ல. ஆகவே அவர்கள் குமுறுகிறார்கள்.
அச்சூழலில் நிகழும் கொலை, அதன் பழி, அதிலிருந்து வெளியேறும் கதைநாயகன் என விரியும் கதை கதகளியை பின்னணியாகக்கொண்டு நிகழ்கிறது. குடிகாரனாகிய கதகளிக் கலைஞராக மோகன்லால் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதகளி சம்பந்தமான படங்களில் பெரும்பாலும் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. அவர் அடிப்படையில் கதகளி ரசிகர். ஒரு மேடையில் கதகளி மேதை கலாமண்டலம் கோபியின் கால்தொட்டு வணங்கி அவர் தன் இருக்கையில் அமர்ந்ததைக் கண்டேன். மலையாள நடிகர்களில் கதகளியை ஆடிக்காட்டவும் தெரிந்தவர் அவரே.
பிரபலக்கலையில் மரபு நிலைநிறுத்தப்படுவதென்பது ஒரு பண்பாட்டியக்கத்தின் அடிப்படைத் தேவை. தில்லானா மோகனாம்பாள், கொஞ்சும் சலங்கை போன்ற படங்கள் நாதஸ்வரம் பற்றி தமிழகம் முழுக்க இருந்த ஒட்டுமொத்தப் பார்வையையே மாற்றியமைத்தன. ஆனால் இன்று தமிழ்ச்சூழலில் அத்தகைய ஏற்பு மரபுக்கலைகளுக்கு இல்லை என்றே தோன்றுகிறது
[ மேற்குறிப்பிட்ட படங்களின் சப்டைட்டில் கொண்ட பதிப்புகள் ஹாட்ஸ்டாரில் கிடைக்கின்றன]