பேரன்புள்ள திரு. ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம், நலந்தானே? எனக்கொரு சந்தேகம். தமிழில் Modern literature என்பது எந்த வரையரைக்குள் உட்பட்டது ? எல்லைகள் ஏதாவது உண்டா?
பாரதியையும் நவீனம் என்கிறார்கள், திரு. ஜெயகாந்தனையும், தற்போது எழுதும் எல்லாம் நவீன இலக்கியம் என்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் வெவ்வேறு காலகட்டமல்லவா. நான் சந்திக்கும் சிலர், எனக்கு contemporary literature தான் பிடிக்கும் என்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஆங்கில இலக்கியத்தில் உள்ளது போல் தமிழில் ஏதாவது காலவரையறை நவீனத்திற்கு உள்ளதா. நவீன இலக்கியம் பற்றிய தங்களது கருத்துக்கள் அறிய ஆவல்.
என்றென்றும் அன்புடனும், நட்புடனும்
கி.பா. நாகராஜன்
அன்புள்ள நாகராஜன்
இந்த கேள்விக்கான பதில் எல்லா இலக்கிய வரலாற்று நூல்களிலும் உள்ளதுதான், ஆனால் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் வாசகர்களுக்கும் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது.
நவீன இலக்கியம் என்பது நவீன காலகட்டத்திற்குரிய இலக்கியம். நவீன காலகட்டம் என்று நாம் சொல்வது சில அடிப்படைகள் கொண்டது. அவற்றை தோராரயமாக இவ்வாறு வரையறை செய்யலாம்.
அ. ஜனநாயக அரசியல். அதாவது மக்கள் அரசியலில் பங்கேற்றல். அரசியல் மாற்றங்களை மக்கள் தாங்களே முடிவுசெய்தல்.
ஆ. பொதுக்கல்வி. அனைத்து மக்களுக்கும் ஒரேவகையான கல்வியறிவு கிடைப்பது
இ. நவீனத்தகவல் தொழில்நுட்பம். இந்தப் பூமியில் உருவான முதல் நவீன தொழில்நுட்பம் என்பது அச்சுதான். அச்சு இயந்திரமே செய்திகளை மிக விரைவாக அனைவருக்குமாக கொண்டுசென்று சேர்த்தது.
ஈ. நவீன உற்பத்திமுறை. அதாவது கைத்தொழில், கிராமத்தொழில்களுக்குப் பதிலாக மக்கள் கூட்டாக இயந்திரங்களின் உதவியுடன் உற்பத்திகளைச் செய்யும் தொழிற்சாலைகள்.
இந்நான்கும் உருவானதுமே உலகின் முகமே மாறிவிட்டது. அதற்கு முன்பிருந்தவை மன்னரும் மதகுருக்களும் மக்களின் தரப்பை அறியாமலேயே ஆட்சிசெய்த காலம். ஒவ்வொரு தொழிற்குழுவும், இனக்குழுவும் வேறுவேறு கல்விகளைப் பெற்ற காலம். செய்திகள் சென்றடைவது மிகமிகக்குறைவாக இருந்த காலம். உற்பத்தியும் வினியோகமும் மிகக்குறுகிய அளவில், சிறியவட்டத்திற்குள் நிகழ்ந்த காலம்.
ஐரோப்பாவுக்கு பதினெட்டாம்நூற்றாண்டின் இறுதிதான் நவீன காலகட்டத்தின் தொடக்கம். இந்தியாவுக்கு பத்தொன்பதாம்நூற்றாண்டின் இறுதி. நூறாண்டுகள் நாம் நவீனமடைதலில் பின்னடைவு கொண்டிருந்தோம் என்று தோராரயமாகச் சொல்லலாம்.
நவீன காலகட்டத்திற்குரிய இலக்கியமே நவீன இலக்கியம். நவீன காலகட்டத்தின் வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு உருவாகி வந்தது அது. அதன் இயல்புகள் என்னென்ன?
அ. நவீன இலக்கியம் நேரடியாக வாசகர்களால் வாசிக்கப்படுவது. அச்சு ஊடகம் வழியாக நேரடியாக வாசகர்களைச் சென்றடைவது. பண்டைய இலக்கியம் அப்படி அல்ல. அது ஆசிரிய- மாணவ மரபு வழியாகவே கற்கப்பட்டது.
ஆ பண்டைய இலக்கியம் அனைவருக்கும் உரியதாக இருக்கவில்லை. அது கல்வியை தன் வாழ்க்கையாகக் கொண்டவர்களுக்கு உரியது. அதாவது கல்விமான்களே இலக்கியத்தைக் கற்றனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் இலக்கியத்தைக் கற்கவில்லை
இ.நேரடியாக மக்களிடம் பேசும்தன்மை கொண்டிருந்தமையால் நவீன இலக்கியம் அதற்குரிய வடிவை தேர்வுசெய்தது. பண்டிதர்களால் ரசிக்கப்பட்ட பூடகப்பேச்சுக்கள், வடிவச்சிக்கல்கள், மொழிவிளையாட்டுக்களை அது தவிர்த்தது.
ஈ. நவீன இலக்கியம் மக்களிடம் பேசுவது. ஜனநாயகம் மக்களின் அதிகாரம். ஆகவே நவீன ஜனநாயகத்தின் ஊடகமாக நவீன இலக்கியம் அமைந்தது. பண்டைய இலக்கியம் அடிப்படையான அறவிழுமியங்களையும் தத்துவங்களையுமே பேசும்.நவீன இலக்கியம் அரசியலையும் சமூகப்பண்புகளையும் நேரடியாகப் பேச ஆரம்பித்தது.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
இந்நான்கு அம்சங்களையும் கருத்தில்கொண்டால் தமிழில் நவீன இலக்கியத்தின் தொடக்கம் என்பது பாரதியில் இருந்து என்று கருதலாம். நவீன இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் பாரதி முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார். அவர் காலகட்டத்தில் இருந்த மாம்பழக் கவிசிங்கராயர் போன்றவர்களெல்லாம் பண்டைய இலக்கியமரபைச் சேர்ந்தவர்கள்.
நவீன இலக்கியம் அச்சு ஊடகத்தில் வெளிவந்தமையால் உரைநடை மையப்போக்காக உருவாகியது. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற வடிவங்கள் உருவாயின. இந்த ஒவ்வொன்றிலும் முன்னோடிகள் தமிழில் உள்ளன. நாவலுக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா, ராஜம் அய்யர் ஆகியோர் முன்னோடிகள். சிறுகதைக்கு வ.வெ.சு.அய்யர் முன்னோடி. இவர்களனைவரும் நவீன இலக்கியத்தின் முன்னோடிகள்.
இவர்களின் காலத்தைக் கொண்டு பார்த்தால் 1880 முதல் 1925 வரையிலான காலகட்டம் நவீன இலக்கியத்தின் தொடக்க காலகட்டம். அதன்பின் 1950 வரையிலான காலகட்டம் வளர்ச்சிக் காலகட்டம். இன்றுவரையிலான இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக நவீனக் காலகட்டம் என்கிறோம்.
சமகால இலக்கியம் [contemporary literature] என்பது நவீன இலக்கியத்திலுள்ள நிகழும் தலைமுறை காலம். பொதுவாக ஒருவர் தான் வாழும் காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை சமகால இலக்கியவாதிகள் என்றும் அவர்களின் எழுத்தை சமகால எழுத்து என்றும் சொல்லலாம்.அது அவருடைய தெரிவு. அதை அனைவருக்குமாகப் பகுக்க முடியாது.
இதனுடன் குழப்பிக்கொள்ளக்கூடாத ஒரு சொல் உண்டு. நவீனத்துவம் [modernism] என்பது முற்றிலும் வேறு. நாம் பேசிக்கொண்டிருப்பது நவீனத்தன்மை [,modernity] நவீனக் காலகட்டம் [modern period] பற்றி. இது புதியகாலம் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் கலைச்சொல். ஆனால் நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட உலகப்பார்வையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கலைச்சொல்.
எதிலும் தனிமனிதப்பார்வையைக் கொண்டிருத்தல், தர்க்கபூர்வ அணுகுமுறைமேல் நம்பிக்கை, கச்சிதமான புறவயமான மொழிநடைமேல் நம்பிக்கை, இலக்கியத்தை அதன் வடிவ அழகால் மதிப்பிடுதல், உலகளாவிய பொதுக்கருத்துக்கள் மேல் நம்பிக்கை கொண்டிருத்தல் போன்ற சில பார்வைக்கோணங்களைக் கொண்ட ஒரு காலகட்டத்தை விமர்சனரீதியாக நவீனத்துவம் என்கிறார்கள். அது காலப்பிரிவினை அல்ல, உள்ளடக்கம் சார்ந்த பிரிவினை
ஜெ