கிரெக்- ஒரு கடிதம்

ரிச்சர்ட் பார்லெட் க்ரெக் , சில எண்ணங்கள்- பாலசுப்ரமணியம் முத்துசாமி

அன்புள்ள ஜெ

நான் ஒரு விஷயத்தை அடிக்கடி உணர்வதுண்டு, இனிமேல் நம்மால் இந்தியக் காந்தியவாதிகளின் கோணத்தில் காந்தியைப் புரிந்துகொள்ள முடியாது என்று.

இந்தியாவில் இன்று காந்தியை அணுகிப்பேசுபவர்களில் ஒருசாரார் செயல்வீரர்கள். அவர்களால் காந்தியை ஆய்வுநோக்கிலே அணுகமுடியாது. அவர்களுக்கு காந்தி ஒரு வழிகாட்டித் தெய்வம். அவர்கள் காந்தியைப் பக்தியுடன் பின் தொடர்பவர்கள். அவர்களில் பெரும் சாதனைகளைச் செய்தவர்கள் பலர் உண்டு. சுந்தர்லால் பகுகுணா போல. ஆனால் அவர்களின் வாழ்க்கை வழியாகவே நாம் காந்தியை அணுகமுடியும். காந்தியைப் புரிந்துகொள்ள அவர்களின் சொற்களால் பயனில்லை.

இன்னொரு சாரார் காந்தியைப் பற்றிப் பேசும் வாய்ச்சொல்லாளர்கள். அரசியலிலும் அறிவுத்துறைகளிலும் காந்தியைப் பற்றிப் பேசுபவர்கள். அவர்களுக்கு காந்தி ஒரு சரித்திரபிம்பம். அவர்களுக்கு காந்தியை முழுக்க ஆராய்ந்து அறியும் அறிவுத்திறனோ பொறுமையோ இல்லை.திரும்பத்திரும்ப காந்தி பற்றிய ஜார்கன்களை உற்பத்தி செய்பவர்கள் இவர்கள்தான். உதாரணம் காந்திகிராம் போன்ற அமைப்புக்களிலிருந்து காந்தியைப் பற்றிப் பேசுபவர்கள்.

இன்னொரு சாரார் இன்று திடீரென்று காந்தியைப்பற்றிப் பேச ஆரம்பித்திருப்பவர்கள். காந்தியை நொறுக்கிவிட்டு இன்று இந்துத்துவம் அரசியலைக் கைப்பற்றியிருக்கிறது. இன்றைய சூழலில் சாதிமதப் பேதங்களுக்கு அப்பால் நின்று அரசியலைப் பேச காந்தியே உகந்த பொது அடையாளம் என்பதனால் காந்தியைப் பேசுகிறார்கள். அ.மார்க்ஸ் போன்றவர்கள் உதாரணம். இவர்களுக்கு காந்தி வெறும் கருவி மட்டுமே. காந்தி சொன்னபடி இவர்கள் தங்கள் சாதி, மத, இன, மொழிவெறிகளை கடந்தவர்கள் அல்ல. காழ்ப்பரசியலை கைவிட்டவர்களும் அல்ல.

இச்சூழலில் இங்கே என்றும்போல காந்தியைப்பற்றிய எதிர்மறைப்பேச்சுக்கள்தான் நிறைந்திருக்கின்றன. காந்தியை வசைபாடுவதென்பது நாம் நம்முடைய சொந்த காழ்ப்புகளை மறைத்துக்கொள்ளத்தான். எந்தக் காழ்ப்பும் முற்போக்கு, புரட்சிகரம் என்றெல்லாம் முத்திரைகுத்திக்கொண்டுதான் வரும். காந்தியை அவதூறு செய்பவர்கள் நிறைந்திருக்கும் சூழல் இது.

இன்று அடுத்த தலைமுறையினரிடம் காந்தியைப்பற்றிப் பேசும்போது அவர்களின் தர்க்கபூர்வமான கேள்விகளை எதிர்கொள்ள இந்திய காந்தியர்களின் சொற்களால் இயலவில்லை. உலக வரலாற்றுப் பின்னணியில், தத்துவநோக்கில், காந்தியின் சொற்களைக்கொண்டு ஆதாரபூர்வமான ஒரு சித்திரத்தை அளிக்கவேண்டியிருக்கிறது. அது பலசமயம் நம்மால் இயல்வதில்லை.

இச்சூழலில் காந்தியை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருப்பவை மேலைநாட்டு ஆய்வாளர்கள் எழுதிய நூல்கள்தான். லூயி ஃபிஷர் எழுதிய காந்தியைப் பற்றிய நூல்தான் எனக்கு உண்மையில் காந்தியை பற்றிய சித்திரத்தை அளித்தது. அதன் பின் பல நூல்கள்.

பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்கள்அறிமுகம் செய்த ரிச்சர்ட் பார்லெட் கிரெக் எழுதிய காந்தி பற்றிய நூல் அறிமுகம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. அந்நூலும் காந்தியை பற்றி காய்தல் உவத்தல் இல்லாமல், இன்றைய  சிந்தனைக்கு ஏற்ப காந்தியை ஆய்வுசெய்திருப்பார் என நினைக்கிறேன்,

பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்கள் இன்றும் காந்தியவழியில் வெற்றிகொண்ட பலரைப்பற்றி எழுதிய இன்றையகாந்திகள் நூலும் மிக முக்கியமான ஒன்று. அவருக்கு என் நன்றிகள்

ஆர்.என்.ராமகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஷோஷா – காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைமரபுக்கலையும் சினிமாவும்