கடவுள்,தொன்மம்,சில வினாக்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் கடந்த சில நாட்களாக உங்கள் வலைதளத்தில் கீதை, அத்வைதம் குறித்த உங்களது பழைய கட்டுரைகளை படித்து வருகிறேன். எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை, அவ்வளவு தெளிவான விளக்கங்கள். எனினும் சில ஐயங்கள். தெளிவுபடுத்த இயலுமா?

  1. கடவுள்/இறைவன் போன்ற கருதுகோளில் நம்பிக்கை அற்ற சாங்கிய, யோக தரிசனங்களை நாத்திக தரிசனங்கள் என்று சொல்ல முடியுமா?
  2. செயலின்மையை உண்டு பண்ணுவதில் ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று ஒரு இடத்தில் சொல்லி இருப்பதை கண்டேன். ரமணரை விடவா?ஜே.கே பள்ளிகள் அவரது பங்களிப்பு தானே?
  3. கயிலாய மலையை காணும் போது ஏன் உணர்ச்சிவசமாகிறார்கள்? அத்வைதியான உங்களுக்கே அனுபவம் வந்ததாக வாசித்த நினைவு. வெறும் காட்சி வழியாக பிரம்மத்தை உணரும் ஒரு தருணமாக அதை எண்ணுகிறீர்களா?

அன்புடன்

முருகேஷ்

***

அன்புள்ள முருகேஷ்,

அ. கடவுள் இறைவன் போன்றவற்றில் நம்பிக்கையற்று இயற்கையையும் பிரபஞ்சத்தையும் பொருள்முதல் நோக்கு கொண்டு அணுகும் தரிசனங்கள் பல. அவற்றில் சாங்கியத்தின் முதல்வடிவமும், அதன் நீட்சியாக அமைந்த யோகமும், வைசேஷிகமும், அதன் நீட்சியான நியாயமும் முக்கியமானவை.

வேதாந்தம் இறைவனை ஏற்றுக்கொண்டதுதான். அருவமான பிரம்மத்தை அது இறைவடிவாக முன்வைக்கிறது. அதன் உருவ வெளிப்பாடுகளை வழிபடுவதையும் மறுக்கவில்லை.

இவற்றை ‘நாத்திக’ தரிசனங்கள் என்று சொல்ல முடியாது. நாத்திகம் என்பது மறுப்பு. இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்ட தரிசனங்களையே அவ்வாறு சொல்லமுடியும். சார்வாக தரிசனம் அப்படிப்பட்டது.

இறை அல்லது முதற்பொருள் என்னும் முடிவு இல்லாமல் பிரபஞ்சத்தையும் இயற்கையையும் விளக்கும் தரிசனங்களை ஜடவாதம் [பொருள்முதல்வாதம்] லோகாயதம் [உலகியல்வாதம்] பிரகிருதி வாதம் [இயற்கைவாதம்] என்று வரையறுக்கிறார்கள்.

ஆ. ரமணர் தொன்றுதொட்டு இங்கிருக்கும் ஒரு ஞானமரபின் முகம். அது ‘சிந்தையடக்கிச் சும்மா இருப்பதே சுகம்’ என்னும் தரிசனம் கொண்டது.  ஒருமைக்குள் ஆமை போல் புலன்களை அடக்குவது அதன் வழி. ஆனால் அது அனைவருக்கும் உரியது அல்ல. யோகிகளின் பாதை. கடுமையான தன்னொடுக்கம் மற்றும் உலகத்துறப்பினூடாக அடையவேண்டியது அது.ரமணர் அல்லது அவரைப்போன்றோர் சொல்லும் சும்மா இருத்தலென்பது ஒரு யோகநிலை, சாதகர்களுக்குரியது.

ஜே.கிருஷ்ணமூர்த்தி அதை எளிமையாக்கி அனைவருக்கும் சொன்னார். இல்லறத்தோர் உலகியலோர் அனைவருக்கும் அதை ஒரு வாழ்க்கைமுறையாக உபதேசித்தார். ஒழுகிச்செல்லுதல், செயலற்றிருத்தல், எதையும் மாற்றாமலிருத்தல், எதன்மேலும் உள்ளத்தையோ விசையையோ செலுத்தாமலிருத்தல் என அவர் சொன்னது செயலின்மையை உருவாக்கியது. அது உலகியலோருக்கு தீங்கானது

கீதை உச்சத்தில் மோட்சசன்யாச யோகத்தையும் விபூதியோகத்தையும்தான் முன்வைக்கிறது. ஆனால் உலகியலில் செயலின்மை என்பது இந்துமெய்மரபின் வழி அல்ல,

இ. கங்கை, கயிலை,  குமரி, அண்ணாமலை போன்ற ஆறுகள் மலைகள் கடற்துறைகள் போன்றவை நம் ஆழுள்ளத்தை நிறைத்திருக்கும் குறியீடுகள். ஆழ்படிமங்கள் எனலாம். அவை நம் முன்னோரால் பல்லாயிரமாண்டுகாலமாக வழிபடப்பட்டவை. ஆழமான சில விழுமியங்களின், சில உணர்வுநிலைகளின், சில தரிசனங்களின் குறியீடுகள் அவை. ஆகவே அந்த உணர்வெழுச்சி உருவாகிறது.

உலகமெங்கும் எல்லா பண்பாட்டிலும் அந்த குறியீட்டுத்தன்மை இடங்களுக்கும் மலைகளுக்கும் உண்டு. அவற்றை இழந்தால் அப்பண்பாடு தன்னை அழித்துக்கொள்கிறதென்று பொருள்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு ஒரு நுழைவாயில்
அடுத்த கட்டுரை’எடிட்டர்’- கடிதம்