விசை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

என் அப்பாவை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரப்பதிவுக்கு அழைத்துச் சென்றேன். அவர் கையெழுத்திட்ட எல்லா தாள்களும் கிழிந்துவிட்டன. அவரால் பேனாவால் எழுதவே முடியவில்லை. நான் கொஞ்சம் கடுமையாகப் பேசினேன். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவர் சொன்னார். “தம்பி அப்பா மண்வெட்டி எடுத்து வேலைசெஞ்சவர். மண்ணு அப்டி வெட்டினாத்தான் வெளையும். பேப்பர் தொட்டாலே சோறுபோடும். அவருக்கு மண்ணோட கடுமைதான் தெரியும்”

அந்தவரி என்னை உலுக்கிவிட்டது. அவர் இன்றைக்கு இல்லை. நேற்று விசை கதை வாசித்தேன். சட்டென்று எல்லாமே புரிந்தது. அப்பாவின் அந்த விசை எதிலுமே என்னிடம் இல்லை என்று தெரிந்து கண்ணீர்விட்டேன். வணக்கம் ஜெ

ஆர்.மாணிக்கம் தங்கசாமி

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். விசை வாசித்து இருபது நாட்களாகியும்,  நேசையனின் அம்மை ஓலைக்காரி என் மனதை விட்டுச் சென்றபாடில்லை. நிஜ வாழ்வில், சில பெண்கள் ஆக்ரமித்துவிடுவதுபோல, புனைவில் வரும் பெண்களும் மனதில் அப்படியே நின்று விடுகிறார்கள். என்னை அல்லது என் வாழ்வை ஏதாவது ஒரு வகையில் பாதித்த பெண்களுக்கென்றே , ‘அவளின்றி நானில்லை’ என்று ஒரு கவிதை வைத்திருக்கிறேன். அவர்களுக்கு அந்தக் கவிதையை, தகுந்த தருணங்களில்,  கொடுக்கும் வழக்கம் எனக்கு உண்டு. ஓலைக்காரி புனைவில் வந்த நாயகி என்றாலும், புனைவில் கூட இறந்துவிட்டவள் என்றாலும், அவளுக்கும் அந்தக் கவிதையை கொடுக்க மனது துடிக்கிறது. இவள் ஒரு வகையில், கி.ரா-வின் ‘இந்த இவள்’ நாயகியை  நினைவு படுத்துகிறாள். கி.ரா-வின் இந்த இவளுக்கும், ஓலைக்காரிக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இருவரும் கணவனை இழந்தவர்கள். அவள் ஊரே மெச்சி சாப்பிடும் சாப்பாட்டை சமைப்பவள். இவளுக்கோ பொங்கிய சோறும் தேங்காய் துவையுலும்தான் தெரியும்.  உழைப்பு என்பதே ஒரு அழகு. ஆதலால், அவர்கள் இருவரும் ஒரே மாதிரி என் மனக்கண்ணில் அழகானவர்களாக, ஆக்ரிமிப்பவர்களாக, ஆகி விடுகிறார்கள். என் உழைப்பு அவர்களது உழைப்பிற்கு நிகர் இல்லை என்று நான் இருமாந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.  அவளது விசை என்னவோ எனக்குத் தெரியாது. அவளைப் போன்றவர்களை அறியும் தோறும் எனக்கு ஒரு விசை கிடைக்கிறது என்றே உணர்கிறேன்.

ஓலைக்காரியை , ஒரு வேளை, என் அப்பாவைப் போன்ற உழைப்பாளி என்பதால், எனக்குப் பிடித்துப் போய் இருக்கலாம். 96 வயதில், அவர் இன்றும் தோட்டத்தில் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பார். மாட்டிற்கு சோழத்தட்டை அறுத்துக்கொண்டிருப்பார். ரோட்டாரமாக இருக்கும் தோட்டம் என்பதால், போகிறவன் வருகிறவன் எல்லாம் வந்து, ‘என்ன நயினா, உங்க சின்ன மகன் அமெரிக்காவிலிருந்து காசு அனுப்பறதில்லையா?’ என்பார்கள். ‘நான் உங்கிட்ட வந்து காசு கேட்டனா, உன் வேலையை பார்த்துக்கிட்டு போவயா’ என்பார் என் அப்பா.

எனக்கு, ‘பாசக்கார பையன்’ என ஊரில் பெயர் உண்டு. இந்தியா வரும் சமயங்களில் , ஆசைஆசையாக உறவினர்களை சென்று பார்ப்பேன். நேசையனிடம் கேட்கும் டீக்கனாரைப் போல, யாராவது ஒருவர் என்னிடம், “அப்பாவுக்குத்தான் விடிவே இல்லை. அவரு பாடுதான் இன்னும் தீரவே மாட்டேன் என்கிறது. அவர சும்மா இருக்க சொல்லலாம் இல்ல’ எனக் கேட்பார்கள். எனது சப்த நாடியும் அடங்கிவிடும்.

சில நாயகிகளை என் மனச்சித்திரத்தில் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஓலைக்காரியும் அப்படித்தான் எனக்கு. ஆதலால், நண்பர்கள் , விசை பற்றி எழுதிய கடிதங்களை வாசிக்கவே இல்லை. எப்பொழுது ஊருக்கு வருவோம், தென்னை ஓலையைப் பார்ப்போம் என்று இருக்கிறது.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

***

குமரித்துறைவி இரு கலைஞர்கள் வான் நெசவு
பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா
முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது
தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்
கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் உடையாள்
பத்து லட்சம் காலடிகள்

முந்தைய கட்டுரைதனிநடிப்பு- பிரசன்னா
அடுத்த கட்டுரைஅம்பேத்கர் உரை- கடிதம்