காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?

திரு ஜெயமோகன் அவர்களே

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு “இன்றைய காந்தி” நூலை படித்தேன். காந்தி மக்களை அரசியலுக்கு அழைத்துவந்தார், அரசியலில் பங்கெடுக்க செய்தார், அதுவரை அரசியலிருந்து ஒதுங்கியிருந்தவர்களை ஜனநாயகப்படுத்தினார் போன்ற வரிகளை படித்தபோது,  அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, எவ்வளவு சரியான ஒன்றை செய்திருக்கிறார் என்று மகிழ்ந்தேன்.

ஆனால் அவர் அதை முழுமையாக செய்து முடித்தாரா? மக்கள் அரசியலை புரிந்தவர்களாக இருக்கிறார்களா? அரசியலுக்குள் வந்துவிட்டார்களா? அரசியலில் சரியாக ஈடுபடுகிறார்களா? இக்கேள்விகள் இன்று வலுக்கின்றன.

ஒரு மாநிலத்துக்குள், கோடிக்கணக்கானவர்கள் தங்களை நிரந்தரமாக ஒரு கட்சியுடன் பிணைத்துக்கொள்கிறார்கள், தன்னை அதுவாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். எந்நிலையிலும் அந்த கட்சியையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

வாக்குக்காக கொடுக்கப்படும் பணத்தை வாங்க மறுத்த ஒருவரையாவது பார்த்திருக்கிறீர்களா? எனக்கு இன்னும் பணம் வரவில்லை என்று கொந்தளிப்பவர்களை நிச்சயம் பார்த்திருப்பீர்கள் (ஏழை அல்லாதவர்கள் உட்பட). தனிப்பட்ட நலன், குழு (ஜாதி, மதம், அரசு ஊழியர்) நலன் தாண்டி பொதுநலன் கருதி வாக்களிக்கும் திறன் உண்டா மக்களுக்கு?

காந்தி காலத்திலாவது உண்மையில் அப்படி மக்கள் இருந்தார்களா? இவ்வளவு விரைவில் அப்படி மக்கள் இல்லாமல் ஆகிவிட்டார்கள் என்றால்! அவ்வளவு மேலோட்டமானதா அவர் ஏற்படுத்திய மாற்றம்! இல்லை அது வெறும் மாயையா? அப்படி ஒன்று என்றுமே இருந்தது இல்லையா?

பொதுவெளியில் பேசுவதின் மூலமாகவே, தாங்கள் எவ்வளவு திறன் அற்றவர்கள் என்று அப்பட்டமாக காட்டிக்கொள்ளும் நபர்கள் எல்லாம் எளிதாக தேர்தலில் வென்றுவிடுகிறார்கள்.

சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர், என் பார்வையில் மிகக் கடுமையான உழைப்பாளி, ஆச்சரியப்படத்தக்க உணர்ச்சி சமநிலை கொண்டவர் (பொதுவெளியில் மட்டுமே அவரை பார்த்தவன்) காந்தியை தன் ஆதர்ஷமாக கருதுபவர், மிதவாதி, பஞ்சாயத்து ராஜ்யத்தில் (அதிகார பகிர்வில்) உறுதியான நம்பிக்கை கொண்டவர் (எல்லாம் நான் அறிந்தவரை, அவர் நீங்களும் அறிந்தவரே, உண்மையில் அவர் இப்படிபட்டவராக இல்லாமலும் இருக்கலாம்). சமீபத்தய தேர்தலில் தோல்வியடைகிறார், மக்கள் அவரை ஏற்கவில்லை என்பது ஆச்சர்யமூட்டுகிறது எனக்கு.

இதை பார்கையில் ஒரு மிதவாதியான காந்தியால் எப்படி இவ்வளவு பெரிய தேசத்தின் மக்களை கவர முடிந்தது, தன்னை பின்தொடர வைக்க முடிந்தது, தொடர்ந்து அவர்களை சென்று சேரமுடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மையில் காந்தி அவ்வளவு மக்கள் செல்வாக்கு பெற்றிருந்தாரா அல்லது மிகைப்படுத்தலா? அவர் தேர்தலில் நின்றிருந்தாள் வென்றிருப்பாரா?

பா – சதீஷ்

***

அன்புள்ள நண்பருக்கு,

‘காந்தியம் இங்கே என்ன செய்தது?’ என்ற கேள்வி வெவ்வேறு காலகட்டத்தில் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு வரலாற்றுத் தருணத்திலும் இந்தியாவின் சூழலை வைத்து ‘காந்தியம் இங்கே தோற்றுவிட்டதா’ என்ற விவாதம் நிகழ்கிறது.

‘காந்தியின் பங்களிப்பு என்ன?’ என்ற கேள்விக்கு, அவர் இந்திய மக்களை அரசியல்படுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லலாம். பல படிகளாக வரலாற்று நோக்கில் விரித்தெடுக்கக்கூடிய ஒரு வரி அது.

இந்தியா ஒரு நிலப்பிரபுத்துவ நாடு. மன்னராட்சி நிலவியது. நாட்டின் பல பகுதிகளில் அரைப்பழங்குடி அரசாட்சிகளும், இன்னும் ஏராளமான பகுதிகளில் பழங்குடி வாழ்க்கைகளும் இருந்த நிலப்பரப்பு. அதன் மீது ஒரு காலனியாதிக்க அரசு அமைந்தது.

அக்காலனியாதிக்க அரசு, உருவாகி வந்த நவமுதலாளித்துவ அமைப்பின் இயல்புகள் கொண்டது. முதலாளித்துவம் அளிக்கும் சில கொடைகளை அது இந்த சமுதாயத்துக்கு அளித்தது. பொதுக்கல்வி, பொதுநீதி, அடிப்படை மனித உரிமைகள் போன்றவை. பழைய நிலப்பிரபுத்துவ அமைப்போடு ஒப்பிடும்போது காலனியாதிக்க நவமுதலாளித்துவ அரசு அளித்த இக்கொடைகள் மிக முக்கியமானவை. மிக அடிப்படையானவை.

காந்தி இந்திய அரசியலுக்கு வரும்போது, அவர் பழைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் தேக்கத்தையும் அதன் விளைவான தீமைகளையும் பார்க்கிறார். அதற்கு மாற்றாக பிரிட்டிஷ் அரசு அளித்த கொடைகளையும் பார்க்கிறார். அவருடைய பங்களிப்பென்பது இவ்விரண்டிலிருந்தும் நன்மைகள் அனைத்தையும் அறிந்து பெற்றுக்கொண்டு இவற்றைக் கடந்த ஒன்றைக் கற்பனை செய்ததில்தான் உள்ளது.

பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பை அன்றைய பல சிந்தனையாளர்கள் செய்தது போல வெறும் சாதிமுறை, வெறும் சுரண்டலமைப்பு, என்று அவர் நிராகரிக்கவில்லை. அல்லது பழமைவாதிகள் செய்தது போல முன்னோர்களின் சொல்வழி அமைந்த ஒரு மாற்றமுடியாத சமுதாய அமைப்பென்றும் எண்ணிக்கொள்ளவில்லை.

மாறாக அதை முன்முடிவுகளின்றி ஆராய்கிறார். பழைய சமுதாய அமைப்பில் இருந்த நன்மையான கூறுகள் என்னென்ன என்பதை தர்க்கபூர்வமாக வகுக்கிறார். பழைய இந்திய நிலப்பிரபுத்துவ முறை ஒரு மையமற்ற சமுதாயத்தை உருவாக்கியிருந்தது என்று அவர் கண்டுகொண்டார். அதை தவிர்க்கமுடியாது என்று புரிந்துகொண்டார்.

இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு கொண்ட பொருளியல் அலகுகளாகவும், தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் சுதந்திரமான சமூகங்களாகவும் இயங்குவதை அவர் கண்டார். அந்த மையமில்லா சமூகத்திரளை வென்று, வன்முறையால் ஒன்றெனத் தொகுத்து பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு தில்லியை மையம்கொண்ட ஒரு வலுவான அரசை உருவாக்கிக் கொண்டிருப்பதை கண்டார். மையப்படுத்தல் உருவாக்கும் ஊழல்கள், மேலாதிக்கங்கள், மாபெரும் இந்தியப்பெருநிலத்தில் அதன் விளைவாக உருவாகும் அநீதிகள் ஆகியவற்றையும் அறிந்தார்

பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து காந்தி அடிப்படையில் பெற்றுக்கொண்டது அந்த மையமற்ற சமுதாய உருவகத்தைத்தான். மத்தியில் ஒரு அரசு,  பாதுகாவலுக்காகவும் ஒரு தொகுப்பு மையமாகவும் திகழ, ஒவ்வொரு அலகும் சுதந்திரத்துடன் தன் தனித்தன்மையைப் பேணி தன் வழிகளைத் தானே கண்டு, தன்னில் நிறைவுற்றிருக்கும் ஒரு சமுதாயத்தை அவர் கனவு கண்டார்.

காந்தி முதலாளித்துவத்தை, அதன் முகமாகிய காலனியாதிக்கத்தை காந்தி நிராகரித்தார். ஆனால், காலனியாதிக்கம் அளித்த நவீனக் கல்வியை, பொதுக்கல்வியை அவர் ஏற்றுக் கொண்டார்.  நவீனத்துவத்தின் முகமென பிரிட்டிஷாரால் முன்வைக்கப்பட்ட நீதிமுறையை அவர் முழுக்க நம்பினார். அத்தனை நீதிமன்றங்களிலும், நீதிமன்றம் என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டு அவர் பேசியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

இந்தியாவை நிர்வாக ரீதியாக ஒருங்கிணைத்த பிரிட்டிஷ் அரசின் கொடையை அவர் அங்கீகரித்தார்.  பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா முழுக்க உருவாக்கிய செய்தித்தொடர்பு, போக்குவரத்துத் தொடர்புகளை அவர் பயன்படுத்திக்கொண்டார். அவற்றை நிலைநிறுத்திக்கொண்டு மேலதிகமான ஒரு சமுதாயத்தை அவர் கற்பனை செய்தார்.

அது ஒரு நவீன ஜனநாயக அரசு. மையமற்ற அதிகாரம் கொண்ட, தன்னிறைவான அலகுகள் கொண்ட ஒரு புதிய வகையான அரசு. அந்தக் கனவை மக்களுக்கு அளிக்கவேண்டும் என்றும், அந்த உரிமைகளைக் கோருபவர்களாக மக்களை ஆக்கும்பொருட்டு குடிமைப்பயிற்சி அளிக்கவேண்டும் என்றும், அந்தவகையான பொருளியலமைப்பில் வாழும்பொருட்டு அவர்களுக்கு கிராமியவாழ்க்கைப் பயிற்சி அளிக்கவேண்டும் என்றும், அத்தகைய அரசுகளை உருவாக்கும் பொருட்டு மக்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்க வேண்டுமென்று அவர் எண்ணினார். அவருடைய மொத்த அரசியல் செயல்பாடும் அதை சார்ந்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கு 1918-ல் அவர் வரும்போது ஏற்கனவே ‘ஹிந்து ஸ்வராஜ்யம்’ எழுதிக் கையில் வைத்திருந்தார். அடுத்த முப்பதாண்டுகளில் அவருடைய பணிகள் அனைத்தும் அந்த முதற்கனவிலிருந்துதான் தொடங்குகின்றன. அந்த இலக்கை நோக்கி நகர்வதற்கு முதலில் மக்கள் தங்கள் சமூக உரிமை, பொருளியல் உரிமை ஆகியவற்றைப் பற்றிய தன்னுணர்வை அடைய வேண்டுமென அவர் நினைத்தார். ஆகவேதான் ஒத்துழையாமை போராட்டம் போன்ற பொருளியல் உள்ளடக்கம் கொண்ட போராட்டங்களை ஒருங்கிணைத்தார்.

அரசியல் சார்ந்த தன் உரிமைகளைக் கோரும், அதற்க்கென போராடும் ஒரு திரளாக இந்தியாவைக் கட்டமைத்தார். அதை வன்முறையின்றி நிகழ்த்த வேண்டுமென்ற அவருடைய கனவு மிக முக்கியமானது. அதைப் பற்றி நேரு எழுதும்போது “இந்தியாவைக் கவ்வியிருந்த அச்சத்தில் இருந்து மக்களை விடுவித்தார்” என்கிறார். அதற்கு முன் நடந்த வன்முறைப் போர்களினால் ஒடுக்கப்பட்டு பஞ்சத்தால் அடிபட்ட மக்களுக்கு போராடும் அடிப்படை மனநிலையில்லாமல் ஆகியிருந்தது. சிறு வெற்றிகள் வழியாக அவர் அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தார். தங்களுக்கு உரிமைகள் இருக்கின்றன, அதற்காகப் போராட வேண்டுமென்ற செய்தியைத்தான் முதல் பதினைந்து ஆண்டுகள் இந்திய சமுதாயத்திற்கு அவர் ஊட்டினார்.

அதன் பிறகு இந்தியாவில் ஒரு நவீன ஜனநாயக செயல்பாடுகள் தொடங்கவைத்தார். தேர்தல் அரசியல் என்ற ஒன்றை இங்கு பிரிட்டிஷார் அறிமுகம் செய்த போது அதில் ஈடுபட்டு, வென்று ஜனநாயக நிறுவனங்களை, இணையரசுகளை நடத்தும் நிர்வாக அனுபவங்களை இந்தியர்கள் பெறச் செய்தார். இவ்விரண்டும்தான் காந்தி இந்தியாவுக்கு அளித்த ஜனநாயகப் பயிற்சி.

இவ்வாறு அவரளித்த அரசியல்படுத்துதலை மூன்று அலகுகளாகப் பிரித்துக் காட்டலாம்.

அ. உரிமைகளுக்காகப் போராடும் மனநிலையை அளித்தல்.

ஆ. சிவில் சமூகமாகத் தங்களைத் தொகுத்துக் கொள்ளும் பண்பை அளித்தல், அதன் பொருட்டே ஆலய நுழைவு, தீண்டாமை ஒழிப்பு, கிராமப் பொருளியல் ஆகியவற்றை அவர் உருவாக்கினார்.

இ. நிர்வாகத்தில் பயிற்சி.

இவ்வாறு அரசியல்படுத்தப்பட்ட சிலகோடி மக்களால்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா இன்றும் ஒரு  ஜனநாயக நாடாக இருப்பது அன்றடைந்த அந்தப் பயிற்சியினால்தான்.

இந்தியாவோடு சுதந்திரம் பெற்ற நாடுகளில் பெயரளவிலேயே ஜனநாயகம் இருக்கக் கூடிய நாடுகள் எவையென்று பாருங்கள். அவை  ஜனநாயகப் பயிற்சி பெறாத, அரசியல்படுத்தப்படாத மக்களால் நிகழ்த்தப்படும் அரசுகள். அரசியல்படுத்தப்படாத மக்களுக்கு வரலாற்றுக் கொடையாக சுதந்திரம் கிடைக்குமென்றால் அது சர்வாதிகாரத்துக்குத்தான் செல்லும் என்பதற்கு பாகிஸ்தானும், பர்மாவும், மலேசியாவும் இன்னும் ஏராளமான கீழைநாடுகளுமே சான்று.

இந்தியாவின் கோடானுகோடி மக்களை வெறும் முப்பதாண்டுகளில் அரசியல்படுத்துவதென்பது சாதாரண விஷயமல்ல. ஓர் எளிய கருத்தை பலகோடி பேருக்குக் கொண்டுசென்று சேர்ப்பதென்பது இன்றைய செய்தியுகத்திலேயே பெரும் பணி. காந்தி செய்தது அன்றைய மக்களுக்கு முற்றிலும் அன்னியமான, அவர்கள் அறிந்தே இராத நவீன ஜனநாயக விழுமியங்களை அவர்களுக்குக் கற்பித்தது

சென்ற முப்பதாண்டுகளில் அவ்வாறு இந்தியா முழுக்க என்ன பொதுவான கருத்துக்கள் கொண்டுசென்று சேர்க்கப்பட்டுள்ளன என்று பாருங்கள். எழுபதுகளில் சூழியல் சார்ந்த சில விழிப்புணர்வுக் கருத்துக்கள் மக்களிடையே கொண்டுசெல்லப்பட்டன. மக்கள் அவற்றை கொஞ்சமேனும் புரிந்துகொள்ள நாற்பதாண்டுகள் ஆயின. எண்பதுகளில் மிகைநுகர்வு பற்றிய கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்ல ஆரம்பித்தோம். நாற்பதாண்டுகளாக பெரிய அளவில் சென்று சேரவே இல்லை.

இவற்றோடு ஒப்பிடும்போது 1918-லிருந்து 1948-க்குள் முப்பதாண்டுகளில் இந்தியாவுடைய கோடானுகோடி மக்களுக்கு ஜனநாயகம் என்பதைப்பற்றி, அரசில் தங்களுடைய பங்களிப்பைப்பற்றி ஒரு புரிதலை உருவாக்குவதற்கு ஒரு தனிமனிதரால் இயன்றதென்றால், அது எவ்வளவு பெரிய சாதனை!

அந்த மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக மன்னனை தெய்வம் என்று வழிபட்டவர்கள். ‘திருவுடை மன்னன் திருமால்’ என்று நினைத்தவர்கள். உரிமை என்ற ஒன்று இருக்கிறதென்றே அறியாதவர்கள். பழங்குடிச் சிற்றூர்களில் இருந்து நகரங்கள் வரை பரந்திருக்கும் பலதரப்பட்ட மக்கள் அனைவரிலும் அரசென்பது தங்களுக்கானது, தங்களால் தேர்ந்தெடுக்கப்படுவது, தங்கள் நன்மைக்காக செயல்படவேண்டியது, தங்களுடைய பிரதிநிதியாக நிலைபெறுவது என்ற செய்தி, வெறும் முப்பதாண்டுகளில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.

அதுதான் காந்தியின் சாதனை. இந்தியாவின் மக்கள் அரசியல்படுத்தப்பட்டதன் வழியாக உலகத்தின் மக்கள்தொகையில் ஏறத்தாழ ஆறில் ஒரு பகுதியை அவர் அரசியல்படுத்தியிருக்கிறார். இந்த அரசியல்மயமாதல் இன்று வரைக்கும் கூட சீனாவில் நிகழவில்லை. உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒருபகுதி அரசியல் என்றால் என்ன, அரசியல் உரிமை என்றால் என்ன, குடிமைப் பண்பென்றால் என்ன என்று தெரியாமலேயே இன்று வரை வாழ்ந்துகொண்டிருக்கிறது. காந்தியின் இடம் என்ன என்பதை அந்த ஒப்பீட்டின் வழியாக நீங்கள் அறியலாம்.

சுதந்திரத்துக்குப் பிறகு என்ன நிகழ்ந்தது? அரசியல்படுத்தப்பட்ட அந்த மக்கள் எங்கே? அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள். அவர்களின் அடுத்த தலைமுறை இங்கு இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின்போது அந்த அரசியல் இலட்சியவாத அரசியலாக இருந்தது. இன்று அது தன்னல அரசியலாக மாறிவிட்டது. தன்னல அரசியல் என்று சொல்லும்போது அது ஒருபடி குறைவானது என்று நான் எண்ணினாலும் கூட இலட்சியவாத அரசியல் மட்டுமே இருக்கவேண்டுமென நான் கருதவில்லை. ஒரு ஆதிக்கத்தின் கீழிருக்கும்போது இருக்கும்  இலட்சியவாதம், தன்னாட்சியின் கீழ் இல்லாமல் போவது இயல்பே.

சுதந்திரம் கிடைத்த உடனேயே இங்குள்ள மக்கள் இனம்,வட்டாரம், மொழி, மதம்,சாதி சார்ந்து தங்கள் உரிமைகளுக்காக முண்டியடிக்கத் தொடங்கினர். அதற்கான அரசியல் இங்கு உருவாகி வந்தது. அதுவே நாம் இன்று காணும் அரசியல். இது பங்கீட்டின் அரசியல். இதில் காந்திகால அரசியல் நெறிகளுக்கு இடமில்லை.

இந்த அரசியலிலும் காந்தி உருவாக்கிய  ஜனநாயக குடிமைக்  கூறுகள்தான் இன்றுவரைச் செயல்படுகின்றன. இலட்சியவாத அரசியலென்பது சமூகத்திற்கு தன் பங்களிப்பை அளிப்பது, அடைவதைவிட தியாகத்தால் மதிப்பிடப்படுவது. தன்னல அரசியல் என்பது உரிமைகளைப் பெறுவது, அதன் பொருட்டு அணிதிரள்வது, அதன் பொருட்டுப் போராடுவது என்ற நெறி கொண்டது. இன்று நிகழ்வது அதுதான்.

இது ஒரு முரண்பட்ட குழம்பிய சூழலை இந்தியாவுக்கு அளித்திருக்கிறதென்று மேலோட்டமாகத் தோன்றும். ஆனால் இப்போராட்டம்தானே ஜனநாயகம்! இவ்வாறுதானே இது இயங்க முடியும்! இந்தப் பிரம்மாண்டமான தேசத்தில் ஒவ்வொரு பிரிவும் தன்னுடைய உரிமைக்காக, தன்னுடைய நலனுக்காக ஆயுதமின்றிப் போராடுமென்றால், அப்போராட்டத்தின் சமரசத்தினால் இங்கு அதிகார மாற்றங்களும், அதிகார சமநிலைகளும் நிகழுமென்றால் அதுதானே ஜனநாயகம்!

இலட்சியவாதத்துடன் ஒப்பிட்டு, இன்று தன்னலம் வந்துவிட்டது ஆகவே காந்தி தோற்றுவிட்டார் என்பதல்ல உண்மை. இன்றைய தன்னல அரசியலில் இருக்கும் ஜனநாயகப் பண்புகளும் காந்தி பயிற்றுவித்தவைதான். தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரி உண்ணாவிரதமிருக்கும் ஒரு குழுவும், விவசாய உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று சொல்லி சத்தியாகிரகம் இருக்கும் ஒரு குழுவும், தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று சொல்லி போராடும் குழுவும் காந்திய வழிகளைத்தானே கைக்கொள்கின்றன? அனைவருமே காந்தியைத்தானே முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறார்கள்

பல ஆண்டுகளாக பெரும் போர்கள் நடந்த தேசம் இது என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் இன்னொரு பகுதியுடன் மோதி ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. ஒன்று இன்னொன்றைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது வெறும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு. அதிலிருந்து எழுந்து ஒரு ஜனநாயகக் கட்டமைப்புக்குள் ஒவ்வொரு விசையும் மற்றவற்றுடன் மோதி தன் உரிமைகளுக்காகப் போராடுவதென்பது இயல்பான ஜனநாயக செயல்பாடுதான்.

ஜனநாயக அரசியல் என்பது அதன் உயர்கொள்கைகளின்படி மட்டுமே நிகழும் ஒன்று அல்ல. அது பல்வேறு நடைமுறை வாய்ப்புகளால், சூழல் கட்டாயங்களால் நிகழ்வது. ஜனநாயகத்தின் அடிப்படை மக்கள் அனைவருமே தங்கள் உரிமைகளைக் கோரிப் பெறுவது. அவ்வாறு கோரும்பொருட்டு திரள்வது. அது இனம், மொழி, மதம், சாதி என்னும் அடையாளத்தால் திரள்வதாக அமையலாம். அதுவும் ஜனநாயகச் செயல்பாடுதான். ஆனால் கொள்கைகளின் அடிப்படையில் திரள்வதே உயர்ந்தது, முன்னுதாரணமானது.

நான் பலமுறை எழுதிய ஒன்று, நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் முன்னால் ஒருமுறை நரிக்குறவர்களின் உரிமைப்போராட்டத்தைக் கண்டேன். எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் அவர்கள் அப்படி தங்களுக்கென உரிமை என சில உண்டு என்றே உணராமல் இருந்திருக்கிறார்கள்! இன்று அதை அதிகாரத்தின் வாசல்முன் வந்து நின்று கேட்கிறார்கள் என்றால் அது ஜனநாயகத்தின் வெற்றி அல்லவா? அந்த ஜனநாயகத்தின் அடிப்படைகளைத்தான் காந்தி இங்கே பயிற்றுவித்தார்.

அந்த ஆர்ப்பாட்டத்தை கண்டுசெல்லும் ஒருவன் எத்தனை பழைமைவாதியாக இருந்தாலும் அவர்கள் அப்படி கோரக்கூடாது என்று இன்று சொல்லமாட்டான். தனக்கும் கோருவான், அவ்வளவுதான். அந்த மனநிலையையே இந்தியா சென்ற நூறாண்டுகளுக்குள்தான் அடைந்திருக்கிறது. அதுதான் காந்தி மக்களை அரசியல்படுத்தினார் என்பதன் பொருள்.

இன்றைய ஜனநாயகம் இலட்சியவாத ஜனநாயகம் அல்ல, தன்னல ஜனநாயகம். இதில் தன் உரிமைகளை வென்று தருபவர்களை, தங்களுக்கு உலகியல் நன்மைகளை ஈட்டித்தருபவர்களை மக்கள் தேர்வுசெய்கிறார்கள். அதன்பொருட்டே குழுவாக, கூட்டமாகச் செயல்படுகிறார்கள். இங்கே இலட்சியவாதம் தேர்தலில் வெல்லும் மதிப்பு கொண்டதாக இல்லை.

ஜனநாயகத்தில் சிக்கல்கள் உண்டு. உலகம் முழுக்க அவை உணரப்படுகின்றன. அடையாள அரசியல், பணஆதிக்கம் ஆகியவை முதன்மையான நோய்க்கூறுகள். சமீபகாலமாக கட்டற்ற ஊடகம் உருவாக்கும் சிக்கல்கள். இன்று அவை மக்களால் பொறுப்பற்று பயன்படுத்தப்படுகின்றன. விளைவாக கருத்துருவாக்கம் நிகழாத வெற்று அலையாக செய்தியூடகம் ஆகிவிட்டிருக்கிறது. நாளை அரசு சமூக ஊடக வெளியை முழுக்க கையகப்படுத்துமென்றால் அது ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் கருத்துருவாக்கத்தையே அழிக்கும்.

இவ்வாறு, ஜனநாயகத்திற்கு பல நோய்க்கூறுகள் உள்ளன. புதியவை எழுகின்றன. அவற்றுக்கெல்லாம் ஜனநாயகத்தை அளித்த முன்னோடிகள்தான் பொறுப்பு என்றால் நாம் செய்யவேண்டியது என்ன? காந்தி மக்களை அரசியல்படுத்தி ஜனநாயகத்தை அளித்தார். அதை மக்கள் நழுவவிட்டு நுகர்வில், ஊழலில் திளைத்தால் காந்தி அதற்குப் பொறுப்பா என்ன?

காந்தியை ஏற்றுக்கொண்ட முந்தைய இலட்சியவாத தலைமுறையால்தான் இந்தியாவின் ஜனநாயக அடித்தளம் உருவாக்கப்பட்டது. காந்தி சுட்டிக்காட்டினார் என்பதனால்தான் நேரு இந்தியாவால் முழுமையாக ஏற்கப்பட்ட தலைவராக ஆனார். இந்தியாவை குடியரசாக நிலைநாட்டும் அரசியல்சட்டத்தை, அரசியலமைப்புகளை உருவாக்கினார்.

எண்ணிப்பாருங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இந்திய அரசால் அளிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும்பான்மையினரான மக்கள் ஏன் அதை எதிர்க்கவில்லை? உண்மையில் எதிர்த்திருந்தால் எந்த அரசாவது அளித்திருக்க முடியுமா? ஏன் எதிர்க்கவில்லை என்றால் அது காந்தி அளித்த வாக்குறுதியின் நிறைவேற்றம், அன்றைய மக்கள் காந்தியை ஆதர்சமாக நினைத்தவர்கள். அன்றிருந்தது இலட்சியவாத அரசியல்.

இன்று தலித் ஒதுக்கீட்டை ஒரு இரண்டு சதவீதம் உயர்த்தட்டும் ஓர் அரசு. இன்றைய தன்னல அரசியலில் அத்தனை தலித் அல்லாத சாதியினரும் கிளம்பி கிழித்து குதறிவிடுவார்கள். காந்தி உருவாக்கிய அரசியல்மயமாதல் என்றால் என்ன என்று அப்போது புரியும்.

இன்றும் இந்தியாவில் லட்சியவாத செயல்பாடுகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான காந்தியர்கள் உள்ளனர். தகவலறியும் சட்டத்தில் இருந்து ஊழலுக்கெதிரான போர் வரைக்கும் காந்தியர்கள் தான் இங்கே ஒருங்கிணைக்கிறார்கள். இந்தியாவின் சுற்றுச்சூழல் இயக்கம் முழுக்க முழுக்க காந்திய வழிகளைப் பின்பற்றித்தான் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இந்தியாவுடைய மைய அரசின் வரம்பில்லா அதிகாரத்துக்கே தளைகட்ட அதனால் இயன்றிருக்கிறது.

இன்று இந்தியாவில் இருக்கும் அத்தனை சூழலியல் சட்டங்களும்,  பாதுகாப்புகளும் காந்திய வழிகளால் அடையப்பட்டவையே. இந்தியாவின் தனிமனித உரிமைகள் அனைத்தும் காந்திய வழிகளால் அடையப்பட்டவை. தகவல் அறியும் சட்டம் போன்ற இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் சுதந்திர இந்தியாவிலேயே காந்திய வழிமுறைகளால் வெல்லப்பட்டவை.

அவை தனிமனித சாதனைகள் அல்ல. ஒருவர் காந்திய வழிமுறையை எடுத்து முன்வைக்கும்போது, அவர்களுக்கு ஆதரவாகத் திரளும் மக்கள்களில் காந்தி வாழ்கிறார். அவர்கள்தான் காந்தியால் பயிற்றுவிக்கப்பட்ட, காந்தியால் அரசியல்படுத்தப்பட்ட மக்களின் வாரிசுகள். பாபா ஆம்தேவுக்கோ, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதானுக்கோ கூடும் கூட்டமென்பது அதுதான்.

பிற எந்த நாட்டை விடவும் இந்தியாவில் அந்தத் திரள் இன்று அதிகம். அவ்வகையில் உலகத்துக்கே அது ஒரு முன்மாதிரி. உலகின் மிக அதிக மக்கள் தொகை மிகுந்த ஒரு தேசம், உலகின் வேறுபாடுகள் மிகுந்த ஒரு தேசம், பொருளியல் நிறைவடையாத ஒரு தேசம், இன்னும் ஜனநாயகமாக நீடிப்பது காந்தி பயிற்றுவித்த அரசியலால்தான்.

ஜெ

காந்தி என்ன செய்தார்?

முந்தைய கட்டுரைவிகடன் பேட்டி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி: காலத்தை முந்திய கனவு