நம்பிக்கையின் துளிர்-கடிதம்

வணக்கம் ஜெயமோகன்,

என்  பெயர் மனோபாரதி, தங்களை ஒரு முறை மட்டுமே நேரில் சந்தித்துப் பேசி‌ இருக்கிறேன். வெண்முரசு நாவலை ஆடியோ புத்தகமாக யுடிபில் பதிவிடுகிறேன். தங்களின் பிறந்த நாளின் போது மழைப் பாடல் முழுவதையும் பதிவேற்றி விட்டு அதை பிறந்த நாள் பரிசாக அனுப்ப திட்டமிட்டுருந்தேன். ஆனால் என் அம்மாவிற்கு உடல் நலமில்லாததாதல் சென்று பார்த்த சில தினங்களில் எனக்கும் கொரோனா வந்து விட்டது.

நோய் தொற்று காலத்தில் உடன் பிறந்தவர்களிடம் கூட உதவி வரவில்லை. என்னால் என் கணவருக்கும் வந்து விட்டது. இருவருமே மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியில் இருக்கிறோம். இன்று தான் எனக்கு கொஞ்சம் உடல் தேறியுள்ளது. உடல் நலமில்லாத போது, எல்லோரின் மீதும் வெறுப்பும், கோபமும், பொறாமையும் இன்னும் இருக்கும் அனைத்து கெட்ட எண்ணங்களும் மனதில் இருந்து கொண்டே இருந்தது. எல்லோருமே எங்களை கை விட்டு விட்டதை போல

உண்மை அது தான், ஆனால் எனக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எத்தனை சொந்தங்களுக்கு எவ்வளவு செய்தோம்.உடன்பிறந்தோர்கள் அவர்களின் குழந்தைகள் என என் சாம்பாத்தியத்தை எல்லாம் செலவு செய்தேன். எனக்கு திருமணம் ஆகி எட்டு மாதங்கள் தான் ஆகிறது. நான் வாழ ஆசை படும் போது, கடவுள் இப்படி செய்ததை எண்ணி கடவுளின் மீதும் வெறுப்பு, பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் மனதில் இது மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. எத்தனை மருந்துகள், ஊசிகள், பரிசோதனைகள்,  எல்லாம் செய்தும் நான் குணமாவதற்கான வாய்ப்பு சிறிதளவு கூட வரவில்லை.

நேற்றிரவு மனதில் என்னவோ நிகழ்ந்தது, மனம் விட்டு, கண்ணீர் விட்டு அழுதேன், கடவுளே என் கணவரையும், என்னையும் வாழ வையுங்கள் என்று. மற்றவர்களின் மீது இருந்த கோபதாபங்களை எல்லாம் விட்டு விட்டேன்.மன்னித்து விட்டேன். எங்கேயோ நன்றாக இருக்கட்டும் என்று கடவுளிடம் அவர்களுக்காக கூட வேண்டினேன். அதிகாலை 5 மணி அளவில் தான் மனம் அமைதியாக உறங்கினேன். எட்டு மணிக்கு வந்த மருத்துவர், மருந்துகள் வேலை செய்வதாக கூறினார். என் முகம் தெளிவாக இருப்பதாக கூறினார். இன்னும் இரு தினங்களில் வீடு திரும்பிவிடலாம் என்றார். என் கணவரின் உடல் நிலையும் தேறி வருகிறது.

இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் என்னைப் போன்ற பலர், எல்லோருக்கும் எத்தனை செய்தும் நன்றியில்லை என்று எண்ணி, தங்களின் உடல் நிலையை கெடுத்து கொள்வார்கள். முதலில் நாம் வெல்ல வேண்டியது, சுய பச்சாதாபம் மற்றும் மன்னிக்கும் குணம். அது தான் நமக்கு நாமே செய்து கொள்ளும் தன்னறமும் தன்மீட்சியும் என்று நான் உணர்ந்தேன். இது மற்ற யாருக்கேனும் கூட உதவலாம் என்று எண்ணி தங்களுக்கு எழுதுகிறேன். நன்றி….

https://youtube.com/playlist?list=PLvWdiqurBsACId-UV2Fw21VaQoGQpjMjj. _ மழைப் பாடல்

https://youtube.com/playlist?list=PLvWdiqurBsAB03rVav_bjC7WrEAVHV5F0  _ முதற்கனல்

அன்புடன்

மனோபாரதி விக்னேஷ்வர்

***

அன்புள்ள மனோபாரதி,

உங்கள் ஒலிப்பதிவுகளை கேட்டேன். சிறப்பாக உள்ளன. உளம் தோய்ந்து வாசித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

உங்கள் அனுபவங்களை வாசிக்கையில் ஒன்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒன்றைப் பற்றிக்கொண்டு மீண்டு வருகிறோம். எவரும் தளர்ந்துவிடுவதில்லை. கசப்பு, அதிலிருந்து எழும் வீம்பு கூட ஒரு பற்றுகோல்தான்.

ஆனால் உண்மையான நம்பிக்கையும், அதிலிருந்து வரும் தெளிவும் அளிக்கும் மகிழ்ச்சியே மேலானது. நிறைவளிப்பது. இப்போது இயல்புநிலைக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவிசும்பின் வழி- கடிதம்
அடுத்த கட்டுரைவளவதுரையன் – ஆவணப்படம்