எழுதும்போது…

மதிப்பிற்குரிய ஜெ,

சிறுவயதில் இருந்தே எழுதுகிறேன். எட்டு வயதில் முதல் முதலாக பெரியப்பா மகள் திருமணத்திற்கு பரிசாக ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். அக்காவை வர்ணித்து வர்ணித்து எழுதியிருந்தேன். அவ்வளவுதான் நினைவுள்ளது. வரிகள் எதுவும் நினைவில்லை. அது எப்படியோ மொய்ப்பண கவர்களோட சேர்ந்து விட, இரவு பணம் எண்ணிக் கொண்டிருந்த பெண்களிடம் சிக்கிவிட்டது. எல்லோரும் அதை வாசித்து வாசித்துச் சிரித்திருந்தார்கள். அக்கூட்டத்தில் அம்மாவும் இருந்தார், சிரித்துக் கொண்டு.

அக்கா அப்போது ‘ஆமா அவ (என்னைத்தான்) என்னமோ குடுத்தா காலைல’ என்றது. வெளிப்படுத்துதல் என்பது அவமானத்தை தரக்கூடிய ஒன்றாகவே பலவருடங்கள் நினைத்திருந்து எனக்கு மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். உங்கள் ஆக்கங்களை வாசித்த பிறகு அவ்வெண்ணம் இன்னும் உறுதியானது. ‘இப்படிப்பட்ட ஆக்கங்களெல்லாம் இருக்கும் போது நம்முடையவை அவமானத்தையே தரும்’ என்றிருந்தேன்.

பிறகு உங்கள் மூலமாகவே அத்தகு எண்ணங்களிலிருந்து விடுபட்டேன். நீங்கள் அறிந்தும் அறியாமலும் எத்தனையோ மனஉறுதியையும்  தைரியத்தையும் புகட்டி இருக்கிறீர். எனக்குச் சொன்னது போக இப்போது உங்கள் மனைவி திருமதி அருண்மொழி நங்கைக்கு நீங்கள் சொன்ன அறிவுரையையும் நான் எனக்கும் எடுத்துக்கொண்டேன்.

‘எழுதுவதை எழுத்தின் இன்பத்தின் பொருட்டு மட்டுமே செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆணவமும் அங்கீகாரத்தேடலும் ஊடாக வரக்கூடாது. எழுத்தில் மட்டுமே முழுமையாக வாழ்பவர்களே எழுத்தாளர்கள் ஆகிறார்கள். எழுத்தில் புகுந்தால் தனக்கான உலகை உருவாக்கிக் கொள்பவர்கள்.அதன் பொருட்டு வேறெதையும் விட்டு விடுபவர்கள்.’

எவர் குறித்த தயக்கமுமின்றி எழுத முடிகிறது, வெளிப்படுத்தவும் முடிகிறது. உளம் நிறைந்த நன்றிகள்.

ராணி சம்யுக்தா [பிரியதர்சினி]

விடியல்

நகர மறுக்கும் கால்கள்

கதைகள், குறிப்புகள் நன்றாக உள்ளன. மொழி ஒழுக்குடன் உள்ளது. உங்களுக்குரிய அவதானிப்புகள் நுட்பமாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

. ஒருபோதும் நீங்களே எழுத்தை சாதாரணமாக, அலட்சியமாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்ற தொனி எழுத்தில் வந்துவிடக்கூடாது.

ஆரம்பகால எழுத்தாளர்களில் பலரிடம் வரும் ஒரு மனநிலை அல்லது பாவனை இது. நான் ஒன்றும் பெரிதாக எழுதப்போவதில்லை, சும்மா என் அனுபவங்களைச் சொல்லப்போகிறேன் என அவர்கள் தாங்களே நினைத்துக் கொள்கிறார்கள். வாசகர்களிடம் சொல்கிறார்கள். தங்கள் வலைப்பூக்களுக்கு அவர்கள் வைக்கும் பெயர்களும் அவ்வாறே இருக்கின்றன.இதை ஒரு வகை அவையடக்கமாகச் சொல்பவர்கள் உண்டு. மெய்யாகவே தங்கள் தகுதி பற்றிய ஐயத்தால் சொல்பவர்களும் உண்டு.

இது வாசகர்களிடையே கவனமற்ற வாசிப்பை உருவாக்கும். அவர்கள் எதிர்வினைகளும் அவ்வாறே இருக்கும். நமக்கு நாம் செய்வதில் அகம் ஒன்றாநிலை உருவாகும். காலப்போக்கில் ஆர்வமிழப்போம். ஆகவே எழுதும்போதே தீவிரமாக, முழுவிசையுடன், சாத்தியமான உச்சத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, முழுமையை நெருங்கும்பொருட்டு எழுதுகிறோம் என்று நமக்கே சொல்லிக்கொள்ளவேண்டும்.

ஆ. எழுதும் எல்லா கட்டுரையும் கதையும் அதற்குரிய வடிவை அடைய நம்மால் முடிந்தவரை முயலவேண்டும்.

போகிறபோக்கில் எனக்கு தோன்றியதை எழுதினேன் என நமக்கு நாமே சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நாம் எழுதுவதெல்லாமே தலைமுறை தலைமுறையாக வரும் இந்த மாபெரும் சொல்வெளி நோக்கி என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதில் நம்முடைய சிறந்ததையே முன்வைக்கவேண்டும். கட்டுரையோ கதையோ எதுவானாலும் அதற்குரிய வடிவம் என்ன என்பதை கருத்தில்கொள்ளவேண்டும். பயிலவேண்டும். அதை அடைய முயலவேண்டும். அடைந்தாலொழிய பிரசுரிக்கக் கூடாது. அதுவரை அதை வைத்திருக்கவேண்டும்.

பிளாக் எழுதுவது வழக்கொழிந்தமைக்குக் காரணம் பலர் அதில் எதையும் பிரசுரிக்கலாம் என்பதனால் எல்லாவற்றையும் பிரசுரித்ததனால்தான். அதை ஓர் இதழாகவே நினைக்கவேண்டும். அதில் வெளியாகும் ஒவ்வொரு படைப்பும் நமக்கு நிறைவை அளிக்கும்படி தன் வடிவை அடைந்திருக்கவேண்டும். நாமே அதன் ஆசிரியராகவும் செயல்படவேண்டும்.

இ. ஏதேனும் ஒன்று எழுத்தில் நிகழ்ந்திருக்கவேண்டும்

பெரும்பாலான வலைப்பூக்களில் நினைவுகளே அதிகம் எழுதப்படுகின்றன. அது இயல்பு. நாம் எழுத ஆரம்பிப்பதே நம் நினைவுகளால்தான் ஆனால் நினைவுகளை ‘அப்படியே’ எழுதி வைத்தால் நாம் அவற்றை இழக்கிறோம். அந்நினைவுகள் வழியாக நாம் எதையேனும் அடைந்திருக்கவேண்டும். கண்டடைதல் அப்படைப்பின் உச்சமென, முழுமையென வெளிப்படவும் வேண்டும்.

உதாரணமாக நகரமறுக்கும் கால்கள் என்னும் கதை. அதை ஓர் அனுபவக்குறிப்பாக எழுதியிருக்கிறீர்கள். இளமையின் ஒரு கணத்தில் காலத்தை தேக்கிவிட முயல்வது அனைவருக்கும் உரிய ஓர் ஏக்கம். அதிலும் பெண்கள் அதில் மேலும் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் பொன்னாட்கள் அந்த இளம்பருவத்திலேயே உள்ளன.

அந்த மீள்கையை சித்தரித்துப் பார்க்கிறீர்கள். நினைவும் விழைவும் கலந்த நிலை. ஆனால் அதை எத்தனை தொலைவுக்குக் கொண்டுசெல்லலாம். எது மெய்யாக நடந்தது? எது நினைவிலிருந்து மறைந்தது? எது நினைவில் நீடிக்கிறது? ஏன் அவ்வாறு நிகழ்கின்றன? அந்த வினாக்களை இந்தக்கதை சென்றடையலாம் அல்லவா? அதன் விடையென சிலவற்றை கண்டடையலாம் அல்லவா?

உதாரணமாக அந்த நிகழ்வுகள் மெய்யாக நிகழ்ந்தபோது சற்றும் கவனிக்கப்படாத ஒன்று இப்போது முழுமையான நினைவாக ஆகிவிட்டிருக்கிறது. அன்று வாழ்க்கையை நிறைத்திருந்த ஒன்று முற்றாகவே மறைந்துவிட்டிருக்கிறது. அந்த தேடல் வழியாக சென்றடையும் விடைதானே எழுத்தின் இலக்காக இருக்கமுடியும்?

ஆனால் ஐந்து மணி அலாரத்தை அமர்த்திவிட்டு இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் என்று தூங்கியபோது வந்த கனவு என ஒரு பொறுப்புதுறப்பை போட்டு அதைக் கடந்து செல்கிறீர்கள். அதாவது அத்தனை வாய்ப்புகளையும் தவிர்க்கிறீர்கள். அதைத்தான் எழுதுபவர் ஒருபோதும் செய்யக்கூடாது. அதிலுள்ள தயக்கம், தன்னம்பிக்கைக் குறைவு எழுத்துக்கு எதிரானது.அத்துடன் அந்த அனுபவத்தை நீங்கள் மீண்டும் எழுதமுடியாதபடி இழந்தும் விடுகிறீர்கள்.

ஒருபெண் தன் கல்லூரிநாட்களுக்கு திரும்பிச் சென்றால் என்ன நிகழும் என்பது புனைவுக்கான ஒரு வாய்ப்பு. ஒரு கரு. அதை யதார்த்தமாக காட்டலாம் – மெய்யாகவே ஒரு மறுசந்திப்பு நிகழ்கிறது. அதை புனைவினூடாக உருவாக்கலாம். ஒரு அம்னீஷியாநோயால் ஒருத்தி நினைவை இழந்து அந்த 18 வயதுக்குச் சென்று விடுகிறாள். அல்லது ஒரு ஹிப்னாட்டிச சிகிழ்ச்சையில் அவள் அந்நாட்களை மீட்டு எடுக்கிறாள்…

ஆனால் கண்டடைதல் என ஒன்று நிகழவேண்டும். அதுவரை அந்தக் கருவை மீளமீள எழுதவேண்டும். முயன்றுகொண்டே இருக்கவேண்டும். கண்டடைதல் அளித்த நிறைவே அதை வெளியிடும் எண்ணத்தை அளிக்கவேண்டும். அக்கண்டடைதல் உங்களுக்குரியதாக இருந்தால் அது இலக்கியமே.

இ. ஒரு வாசக – விமர்சகச் சுற்றத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும்

இன்றைய சூழலில் இயல்பாக வலைப்பூக்களுக்கு வாசகர்கள் வருவதில்லை. அதை வாசிக்கவும் விமர்சிக்கவும்கூடிய நட்புகளை நட்புக்குழாம்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும். விவாதக்குழுமங்கள், இலக்கிய உரையாடல் அமைப்புக்களில் ஈடுபட்டு அங்கே இணையான உள்ளங்களைக் கண்டுகொள்ளவேண்டும்

எழுத்து என்பது நம் தன்வெளிப்பாடு. ஒரு தியானம். அதன் வழியாக விடுதலை. ஆனால் நாமே நிறைவுறும்படி அது நிகழ்கையிலேயே அது நம்மை விடுவிக்கிறது. அதற்கு நாம் அதற்கு நம்மை முழுதுற அளிக்கவேண்டும். அதனூடாக நாம் முன்னகரவேண்டும்.

தொடர்ந்து எழுதுங்கள். எழுதுபவருக்கு அமையும் விடுதலை ஒன்றுண்டு.

ஜெ

முந்தைய கட்டுரைவளவதுரையன் – ஆவணப்படம்
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் வாஷிங்டன் டி.சி திரையிடல் நிகழ்வு