தெய்வீகனின் கதை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நான் தமிழ்ச்சிறுகதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி முன்பு எழுதிய ஒரு குறிப்பை நினைவுகூர்கிறேன். அவர் தமிழர்கள் உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழ்வதைப்பற்றி எழுதியிருந்தார். அவர்களிடமிருந்து வெறும் நஸ்டால்ஜியாக்கள் வந்துகொண்டிருந்தன. சுந்தர ராமசாமி தாழ்ந்து பறக்கும் தமிழ்க்கொடி என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அடுத்த அலையில் ‘வேடிக்கைபார்க்கும்’ கதைகள் வரலாயின. புலம்பெயர்ந்த நாட்டின் விசித்திரங்களை வியந்தோ கேலி செய்தோ எழுதப்படும் கதைகள் அவை. அதற்குப்பிறகுதான் அ.முத்துலிங்கம் எழுதலானார். அப்போதுதான் புலம்பெயர்ந்த கதைகள் மேலெழுந்தன. தமிழ்க்கொடி மெய்யாகவே பறந்தது

சென்ற இடத்தின் வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களை வெறுமே அவதானிப்பது மட்டுமன்றி அவர்களை அடையாளங்களும் படிமங்களுமாக்கி ஒரு யூனிவர்சல் பார்வையை அடைவதைத்தான் கலைநயம் மிக்க புலம்பெயர்ந்த கதைகள் செய்யவேண்டும். அத்தகைய கதைகளில் ஒன்று தெய்வீகனின் புலரியில் மறைந்த மஞ்சள் கடல்.

இக்கதையின் வலிமையே அதன் காட்சிவெளிச் சித்தரிப்புதான். “மயானத்தின் வாயிலுக்கு வந்தபோது, கறுப்பு பொலீத்தீன்களால் மூடிக்கட்டிவிட்டது போல, உள்ளே உயரமாக நின்றுகொண்டிருந்த மரங்கள் அடர்ந்த அச்சத்தைத் தந்தன” என்ற வரி அளிக்கும் துணுக்குறல் கலையில் மிக முக்கியமானது. வரவர ஃபேஸ்புக் குறிப்புகள் போல நுட்பமில்லாமல் நக்கலும் நையாண்டியுமாக செயற்கையாக எழுதப்படும் கதைகளில் பெரும் சலிப்பை அடைந்துவிட்டேன். இந்தக்கதையின் இந்த ஒரு வரியே எனக்கு ஒரு தனி கவிதைபோல. இன்று எழுத்தாளர்களிடம் நாம் எதிர்பார்ப்பது இதையெல்லாம்தான்.

“காலை வேளைகளில் சமைத்து விடாதே! காற்று அருகிலுள்ள குடிமனைகளை நோக்கி வீசும் நேரமது. மயானத்திலிருந்து கறிவாசனை வந்தால், பயந்து போவார்கள். பின்னேரங்களில் காற்று எதிர்திசையில் காட்டுப்பக்கமாக வீசும். அப்போது பிரச்சினை இல்லை” என்ற வரியை இன்னொரு உதாரணமாகச் சொல்வேன். மயானத்தில் இருந்து மாமிசவாடை எழுவது இந்தியாவில் சகஜம். அங்கே அது பிசாசின் வாசனை.

அந்த ஜப்பானியப் பெண், அவள் அடைந்த ஜென்மாந்தர அன்னியத்தன்மை, அவள் அன்னையென வந்து அணைத்துக்கொள்ளும் மென்மை, கனவுக்கும் நனவுக்குமென ஊடாடும் அந்த சூழல் எல்லாமே இதை ஓர் அருமையான கதையாக ஆக்குகின்றன.

இன்றைக்கு நாம் வாசிக்கும் பெரும்பாலான கதைகள் எளிய லௌகீக – அரசியல் புத்திக்கு உரியவையாக உள்ளன. அந்த புத்தியால் எழுதவும் படுகின்றன. ஆனால் எனக்கு இலக்கியமென்பதே வண்ணங்கள் முயங்கிக் கலைந்து உருவாகும் ஓவியம்போல ஒரு மயக்கநிலையை உருவாக்குவதற்குரியதுதான். செய்திகள், அறிக்கைகள் எல்லாம் உருவாக்கும் அதீதமான தெளிவை உடைப்பதற்குத்தான் கலை. புகைப்படத்துக்கு மாற்றாக நவீன ஓவியம் வந்ததுபோல.

ஆகவே தெளிவான துல்லியமான மொழி இருந்தாலே அந்தக்கதை சலிப்பை அளிக்கிறது. மொழி உருகி மயங்கும் அனுபவம் எதையும் அந்த எழுத்தாளன் தொடவில்லை, அவன் லௌகீகத்தையே சமையல் செய்கிறான் என்று தோன்றிவிடுகிறது. இந்தக் கதையில் அந்த மயானம் எனக்கு லௌகீகமான அனைத்தையும் கடக்கும் ஒரு பெரிய படிமமாக உள்ளது.

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெ,

தெய்வீகனின் கதை சமீபத்தில் வாசித்த அழகிய ஆக்கங்களில் ஒன்று. போரிடும் ஈழம் என்னும் மாபெரும் மயானத்தில் இருந்து இன்னொரு மயானத்துக்குச் சென்றவனின் கதையில் இருக்கும் அங்கதம் ஆழமானது.

உன் மண்ணில் வாழும் வரைக்கும்தான் உன் அடையாளம் என்பது உனக்கு அகங்காரம். இன்னொரு மண்ணில் அது வெறும் ஆபரணம்.

என்றவரியில் கதை ஒரு முழுமையை அடைகிறது. மீண்டும் மீண்டும் வாசிக்கச்செய்யும் ஒரு எடைமிக்கச் சோர்வு இக்கதையில் உள்ளது

ஆர்.ரவீந்திரன்

புலரியில் மறைந்த மஞ்சள்கடல்
முந்தைய கட்டுரைகீழைத் தத்துவம்- எளிதாக
அடுத்த கட்டுரைஅந்திக்கு எதற்கு செந்தூரம்?