கீழைத் தத்துவம்- எளிதாக

கீழைத்தத்துவம் தொடக்க நிலையினருக்கு- வாங்க

இனிய ஜெயம்,

சமீபத்தில் வாசகி கிறிஸ்டி அவர்கள் எழுதிய சோபியின் உலகம் நாவல் குறித்த பதிவு ‘இந்த காலக்கட்டம்’ சார்ந்து முக்கியத்துவம் கொள்ளும் அறிமுகங்களில் ஒன்று.  கடந்த ஆண்டு நோய் சூழல் விடுமுறையில் 10 அல்லது +1 முடித்த நிலையில் நின்ற பொது இளம் மனங்களுக்கு ஒரு முக்கிய தருணம் இதை எத்தனை பேர் உணர்திருப்பார்கள் தெரியவில்லை.

கடந்த கால் நூற்றாண்டாக இந்தியக் கல்வி அமைப்பு இறுகி இறுகி வந்து கிட்டத்தட்ட கயிறு பிரி அறுந்து போகும் நிலை. எட்டாம் வகுப்பு துவங்கி பாலர்கள் பொதி கழுதை போல பாடங்களை சுமந்து 10 ஆவது  மதிப்பெண் நோக்கியும், கிடைத்தவுடன் நேரடியாக 12 நோக்கி பொதி கழுதை ஓட்டமும், கிடைத்தவுடன் கல்லூரி பொதி கழுதை என்றாகி, அது முடிந்ததும் வேலை தேடி ஓடி, இடைவெளி கிடைத்தால் வைக்கோல் தின்று கோமியம் குடிப்பது போல, கிரிக்கெட் ஆடி சினிமா பார்த்து பொழுது போக்கி, மொத்தத்தில் ஆத்மீகமாக ஒன்று பிறக்க சாத்தியம் கொண்ட முக்கியமான பருவசூழல் ஒன்றினை எந்த போதமும் இன்றி சோத்துக் கல்விக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய சூழல் இந்த செக்கு மாட்டு தடத்தில் திடீர் உடைப்பை கொண்டு வந்திருக்கிறது. சினிமா வெப் சீரிஸ் கிரிக்கெட்கு வெளியே நுண்ணுணர்வு அழியா வெகு சில மனங்கள் வாசிப்பு நோக்கி திரும்பக் கூடும். அத்தகு மனங்கள் சிலவற்றில் இன்னும் சிறிய எண்ணிக்கை கொண்ட சில மனங்கள் சூழும் துயர் கண்டு  அபூர்வமாக இந்த வாழ்க்கை குறித்து சிந்திக்கவும் வாய்ப்பு உண்டு. அத்தகு தொடக்க நிலையினருக்கு தங்களது வினாக்களை கூர் தீட்டிக்கொள்ள தமிழில் வாய்ப்பு எந்த அளவு உண்டு எனில் (சோபியின் உலகம் போன்ற ஒன்றிரண்டு பிரதிகள் அன்றி) பூஜ்ய சாத்தியமே எஞ்சும்.

முன்னர் தமிழக அரசு வெளியிட்ட பாட திட்டங்கள் போன்றவை இருப்பினும், பாட திட்டம் என்ற வடிவ போதம் கொண்டே அவற்றில் முகத்தில் அடிக்கும் ஒரு அகடமிக் அம்சம் கூடி விடுகிறது. ஆக இவற்றை இரண்டாம் தேர்வாக வந்து சேரும் முன்பான முதல் தேர்வு என தமிழில் ஏதும் இல்லை. இத்தகு சூழலில்தான் சோபியின் உலகம் போன்ற நல்ல மொழியாக்கத்தில் வெளியான புனைவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நாவலுக்குள்  சோபி தான் வாழ்வது யதார்த்த உலகில் அல்ல என்று ஒரு கட்டத்தில் சந்தேகம் கொள்கிறாள், சந்தேகத்தை பின்தொடர்ந்து தான் ஒரு புனைவுகள் கதாபாத்திரமாக சிறைப்பட்டு இருப்பதை கண்டு பிடிக்கிறாள், அப்புனைவு உலகில்  இருந்து வெளியேறி ‘உண்மை’ உலகுக்கு எங்கணம் சோபி மீள்கிறாள் எனும் ஒரு துப்பறியும் நாவலின் சுவாரஸ்யத்துடன் நகரும் புனைவில், அவள் கிரேக்க தொன்மங்கள் துவங்கி, பிளேட்டோ தொடர்ந்து இன்றைய பின்நவீன கால தத்துவங்கள் வரை அறிமுகம் செய்து கொள்கிறாள். (இதிலும் விடுபட்டவராகவே இருக்கிறார் ஆர்தர் ஷோஃபனவர்).

இந்த வாழ்க்கை குறித்த அத்தனை  அடிப்படை கேள்விகளையும் விவாதிக்க மேலை தத்துவ மரபை இத்தனை சுவாரஸ்யமாக அறிமுகம் செய்து கொள்ளும் ஒரு இளம் மனம் இயல்பாகவே மேலதிக வாசிப்பு வேண்டி, அகடமிக் வடிவத்துக்குள் அந்த வடிவம் தரும் இடர் குறித்த தயக்கம் இன்றி நுழைய முடியும்.

மேலை தத்துவத்தை அணுக தொடக்க நிலையினருக்கு இருக்கும் சோபியின் உலகம் போன்ற சாத்தியங்கள் கீழைத் தத்துவத்தை அணுக இல்லவே இல்லை என்று நினைத்திருந்தேன். மாறாக ஒரே ஒரு அழகிய நூல் உண்டு என்பது கவனத்துக்கு வந்தது. ஜோ லீ கார்ட்டூன்கள் இணைய, ஜிம் பாவல் எழுதி, க. பூர்ணசந்திரன் மொழிபெயர்த்த, அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட,  = கீழைத் தத்துவம்: தொடக்கநிலையினருக்கு = எனும் நூல்தான் அது.

180 பக்கங்களே கொண்ட இந்த நூலில் இந்தியாவின் சிந்துப் பண்பாடு துவங்கி, சைனா, ஜப்பான், திபெத் தலாய் லாமா  முடிய கீழைத் தத்துவ மரபின் ஒரு சிறிய அறிமுகத்தை நிகழ்த்துகிறார் ஜிம். திபெத்திய பான் மதம் அதை உட்செறித்த வஜ்ராயன பௌத்ததுக்கு நூலின் இறுதியில் மிக சில பக்கங்களே அளித்த நிலையில் இந்த நூலின் சரி பாதி, இந்திய தத்துவ மரபுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மீதி பாதியில் பெரும்பான்மை சீன தத்துவ மரப்புக்கும் ஜப்பானிய மரபுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானிய ஷிண்டோ மார்க்கம், ஷியின்கோன் பௌத்தம், ஜென் பௌத்தம், தூய இன்ப பௌத்தம், நிக்கிரேன் பௌத்தம் என ஜப்பானிய தத்துவ மத பண்பாட்டுக் கிளைகளை சுருங்க அறிமுகம் செய்யும் நூல், சீன தத்துவ வரலாற்றை நான்கு பருவகாலங்கள் என உருவகித்து, கன்பூசியஸ்,மென்சியஸ், தாவோயிசம் இவற்றை வசந்த காலம் பகுப்பிலும், சீனாவில் நுழைந்து செழித்த பௌத்தத்தின் வண்ண பேதங்களை கோடை பூக்கும் பருவத்திலும், நவ கன்பூசிய எழுச்சிக்கு வித்திட்ட ஆசிரியர்களை இலையுதிர் காலத்திலும், நவீனம் துவங்கி மாவோ வரையிலான காலத்தை குளிர் பருவத்திலும் வைத்து அறிமுகம் செய்கிறது. ஜப்பானிய ஷிண்டோவின் காமி எனும் ஆற்றல், இந்திய வாமஆசாரம் போல சீனாவில் நிகழ்ந்த இன் யான் என பல சுவாரஸ்யங்கள் வழியே பயணிக்கிறது இந்த பகுதிகள்.

சீன மரபை ருதுசரி பருவ கால பிரிவில் வைத்து அறிமுகம் செய்வதை போல, இந்திய தத்துவ மரபை ஆல மரம் எனும் உருவகம் வழியே அறிமுகம் செய்கிறார் ஜிம். இந்தியப் பண்பாட்டை பனை மரம் போல ஒற்றை வடிவில் அறிய முனைவது பிழை, அது ஆல மரம் போன்றது, சிந்து பண்பாடு துவங்கி, நவீன கால ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி வரை பல்வேறு விழுதுகள் கொண்ட ஆலமரம்தான் இந்தியப் பண்பாடு, அதே சமயம் அந்த ஆலமரம் ஒரே விதையில் இருந்து முளைத்த ஒன்று என்பதையும், கீழை மரபில் மேலை மரபில் இருப்பது போல தத்துவத்தை ‘தனியே’ பிரித்து நிற்கும் ஒன்றாக அறிய முடியாது, அது இங்கே மதப் பண்பாடு எனும் முழுமையின் ஒரு பகுதி என சிறிய குறிப்புகள் வழியே விளக்கி விட்டே முன்செல்கிறார் ஜிம்.

எல்லா மேலை சிந்தனையாளரும் வந்து இடரும் ஆரிய வந்தேறி கருத்தியலை ( ஜிம்முக்கே அந்த சார்பு இருந்திருக்கும் என்று நூலின் சில இடங்கள் வழியே யூகிக்க முடிகிறது) அந்த கருத்தியல் எவ்வாறு உருவானது என்ற சமன் கொண்ட சிறு விளக்கத்துடன் துவங்குகிறார் நூலாசிரியர். ‘படையெடுத்து வந்த வெறுப்பை உமிழும் ஆரிய  நாடோடிகள்’ என்ற சிறப்பான யூகம் நிலைபெற தொல்லியல் சான்றுகள் ஏதும் இல்லை என்பதை குறிப்பிடும் ஜிம், மொழிக் குடும்பம் எனும் ஆய்வுகள் வழியே எவ்வாறு இந்த கருத்தாக்கம் நிலை பெற்றது என்பதை சுருங்க விளக்குகிறார். சிந்துப் பண்பாட்டை ‘படையெடுத்து’ வந்த ஆரியர் அழித்தனர் எனும் கருதுகோள் தொடர் ஆய்வுகள் வழியே எவ்வாறு மெல்ல பின்வாங்கிக் கொண்டிருக்கிறது என விளக்கிய பிறகே, இந்தியப் பண்பாட்டின் சான்றுகள் ரீதியான தத்துவம் நோக்கிய  முதல் அசைவுக்கு வேத காலம் வளர்ந்த வகைமை சொல்கிறார். வேதங்கள் அதன் விளக்கங்கள், திரண்டு வந்த பிரம்மம் எனும் கருதுகோள், அதை விவாதித்து வளர்த்தெடுத்த உபநிஷத், அதன் பின்னான சமண பௌத்த எழுச்சி, ஆறு தரிசனங்கள், தாந்த்ரீகம்,பின்னர் பக்தி இயக்கம் வழியே நிகழ்ந்த சைவ வைணவ எழுச்சி, முகமதிய, கிறிஸ்துவ மதங்களின் நுழைவு, சீக்கிய மதத்தின் துவக்கம், மறுமலர்ச்சி கால விவேகானந்தர் துவங்கி நவீன கால ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வரை, இந்திய தத்துவ மரபை அதன் வழிபாடு, சடங்குகள், நம்பிக்கைகள் பின்னிப் பிணைய நிற்கும் அதன் வகைமையை விளக்குகிறார் ஜிம்.

எதிர்மறைக் கூறுகளில் (இந்தியாவின் அந்நியப் படையெடுப்பு அழிவுகள், சீனாவின் மாவோயிஸ அழிவுகள் போல) கவனம் செலுத்தாமல் நேர்மறை கூறுகளில் மட்டுமே அழுத்தம் கொடுத்து இந்த அறிமுகத்தை நிகழ்த்தும் ஜிம், இந்தியா, சீனா, ஜப்பான், திபெத் என தத்துவ ஓடை நிலம் கடக்கும் போதெல்லாம் அந்தந்த நிலம் சார்ந்த அழகிய நிலச் சித்தரிப்பு வர்ணனை ஒன்றின் வழியே வாசகனை அழைத்துப் போகிறார்.  சின்னச் சின்னப் பத்திகள் வழியே அமைந்த நூல். அதிகபட்சம் ஒரு பக்கத்துக்கு மூன்றே பேரா. எனும் வடிவம் மிகுந்த வாசிப்பின்பம் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

இந்த விறுவிறுப்பான வாசிப்புக்கு துணை நிற்கும் மற்றொரு அம்சம் இந்த அறிமுகம் கைக்கொள்ளும் கதை சொல்லல் முறை. ஆலிஸ் , அவளது கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லும் கம்பளிப்புழு உடன் அவள் பயணிக்கும் அற்புத உலகம் எனும் கற்பனைக்குள் பின்னப்பட்ட கதை, சில விளக்கங்களை புன்னகையை விட்டு விட்டு மறையும் பூனைஅளிக்கிறது. சில விளக்கங்களை தொப்பிப் பைத்தியம் அளிக்கிறான். குறிப்பாக சமணத்தின் சப்த பங்கி. சப்த பங்கி என்றால் என்று புழு ஆரம்பிக்கும் முன்பே, “நான் சொல்றேன்…அத நான் சொல்றேன்” என ஓடி வருகிறான் தொப்பி பைத்தியம். யோகத்தின் வழியே கிடைக்கும் அட்டமா சித்தி எனும் வரிசையில் உடலை மிக சிரிதாக்குவது, மிக மிக பெரிதாக்குவது என்பதையெல்லாம் புழு விளக்கும் போது, ஆலிஸ் புரியுது மேல சொல்லு எனும் போது, வாசகருக்குள் முன்னர் படித்த ஆலிஸ் கதையில் வரும் ஆலிஸ் மருந்து குடித்து சிறிதாவது, கேக் தின்று பெரிதாவது போன்ற சித்திரங்கள் வந்து இணைந்து கொண்டு புன்னகையை வரவழைக்கிறது.

சுவாரஸ்யமான இந்த தத்துவ அறிமுக நூலின் சுவாரஸ்யத்துக்கு மற்றொரு முக்கிய காரணி ஜோ லீ. அவரது கார்ட்டூன்கள் ஒட்டு மொத்தமாக இந்த நூலின் வடிவமைப்பையே வேறு தரத்துக்கு உயர்த்தி, ‘இன்றைய காலத்துக்கான’ நூல் என்று இந்த நூலை மாற்றி விடுகிறது. இந்த வடிவம் தமிழில் இன்னும் பெரிதாக பின்பற்றப்படாத, பின்பற்றப் பட்டால் மிக நேர்த்தியான வாசிப்பு அனுபவத்தை வழங்க வல்லது. ஜோ லீ யை இந்த நூலின் இணை ஆசிரியர் என்றே சொல்லி விடலாம் என்பதை போல நூல் நெடுக அவரது முத்திரைகள். அஸ்வமேத யாகத்தின் பாலியல் சடங்கு சார்ந்த விவரனை வருகையில், ‘என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க’ என்ற ரீதியில் முறைக்கிறது ஒரு குதிரை, யானையை உதாரணமாக கொண்டு சப்த பங்கி அறிமுகம் செய்யப் படுகையில், ஒரு யானை தலையில் கை வைத்து விசனமாக உட்கார்ந்து இருக்கிறது. தலைக்குள் இப்போ  நான் யார்தான்யா எனும் கேள்வி, இத்தனையோடு அது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்க்க முயலுகிறது. அந்த கண்ணாடியின் அளவோ அரை அடிக்கு அரை அடி. இப்படி நூல் நெடுக ஆங்காங்கே ஜோ லீ ன் பஞ்ச் இந்த நூலின் தனி அழகு.

ஆலிஸ் வழியே ‘வினவும் கலை’யை கற்றுக் கொடுக்கும் இந்த நூல், புழுவின் சித்தரிப்பு வழியே பௌத்தம் இந்தியாவில் முளைத்து, கிளை விரித்து, சீனா ஜப்பான் திபெத் எல்லாம் பரவி, இதழ் இதழாக, சென் பௌத்தம்,தூய இன்ப பௌத்தம், வஜ்ராயன பௌத்தம் என்றெல்லாம் மலர்ந்து செழிக்கும் சித்திரத்தை பிரமாதமான பல பௌத்த உருவகங்கள் வழியே அதற்கான ஜோ லீயின் சித்திரங்களுடன் விவரிக்கிறது.

ஒரு பண்டைய நகரத்துக்கு சுற்றுலா செல்லும் முயற்சியின் முதல் அடியாக நாம் திறந்து பார்க்கும் சுற்றுலா நில வரைபடம் நமக்கு எதை அளிக்குமோ அதற்கு இணையானது இந்த கீழைத் தத்துவ அறிமுக நூல், ஜிம் பாவல், ஜோ லீ கூட்டணியை மிக இலகுவான மொழிநடையில் தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் பூர்ணசந்திரன். தீவிரமான ஒன்றை அந்த தீவிரம் குன்றாமல் எந்த எல்லை வரை விளையாட்டுக்கு உரிய சுவாரஸ்யத்துடன் எழுத முடியும் என்பதை, அது அளிக்கும் உவகையை ஒவ்வொருவரும் வாசித்து  அறிய வேண்டிய நூல்.

கடலூர் சீனு

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு
முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 15
அடுத்த கட்டுரைதெய்வீகனின் கதை- கடிதங்கள்